Thursday, March 09, 2006

ரசிச்ச பாட்டு நாலு

1. " செண்பகமே, செண்பகமே"

........ 80 களில் இறுதியில், எத்தனையோ இரவுகளில் என் இதயம் பிழிந்திருக்கிறது இந்தப் பாடல். " எள்ளுப்பூ நாசிப்பத்திப் பேசிப் பேசித் தீராது...உம் பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது " என்ற வரிகளை உச்சரிக்கையில் மனோவில் குரல் நெகிழ, நெகிழ - கேட்க்கும்போதெல்லாம் - அதில் வழுக்கி, வழுக்கி விழுந்து விடுகிறது மனசு ......


2. " பூங்காற்று திரும்புமா... என் பாட்டை விரும்புமா"

......... பச்சைக்கம்பளம் விரித்த ஒரு கிராமத்து வெளியில் - ஆதரவற்ற அநாதையாக - ஓடைகளில், ஒற்றையடிப் பாதைகளில், சிறகு விரிக்கும் தென்னந்தோப்புகளில், ஓய்ந்திருக்கும் செம்மண் குளக்கரையில் ஓடியபடி இருக்கும் இந்த ஓசை - இன்றும்கூட, என்னை வந்து சேரும்போதெல்லாம்... தன்னைத் தந்து விட்டு என்னை வாங்கிக் சென்று விடுகிறது......


3. "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்"

......... TMSன் குரலில் சாகா வரம் பெற்ற பாடல்கள் பல்லாயிரம். இந்தப்பாடலின் இடையில் வரும் " உனக்கான என் பாடல் ஒலிக்கின்றது..அதில் ஏதேதோ எண்ணங்கள் இருக்கின்றது " என்ற வார்த்தைகள் எ·கை உருக்கும் தீயாக நம்மை வார்த்து - வடிவமைத்தும் விடுகின்றன. நம் வாழ்வில் இடையிடையே வந்து போகும் ஏதேதோக்களின் சாயலோடு, உறக்கங்களிலும், கனவுகளிலும் கூட ஒலிக்கும் பாடல் இது.


4. "கண்பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை..."

...... உலகக் காதலர்களில் ஏக்கமெல்லாம் சேர்ந்து ஒலித்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வைக்கிற பாடல் இது. அவள் விழியும், அதனால் வரும் வலியும் ஒவ்வொரு காதலனும் உணர்ந்ததுதான். ஆனால், " விழி உனக்குச் சொந்தமடி... வேதனைகள் எனக்குச் சொந்தமடி" என்ற வரிகளைக் கேட்கும்போதோ...அட, நாம் சொல்ல நினைத்து வார்த்தைகளின்றி தவித்த விஷயத்தை இந்தக் கவிஞன் எப்படி இவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் என்று வியப்புக்கல் மீது கால் இடறி விழுந்தே விடுகிறோம். விழ்ந்த நம்மை பரிதாபமாகப் பார்த்தபடி கடந்து போய் விடுகின்றன வரிகள்.

No comments: