சில வாரங்களாக
அந்தக் கிழவரைக் காணவில்லை.
கறுப்புக் கண்ணாடியும்
கை தள்ளு வண்டியில் அமர்ந்த அவருமற்று
வெறுமையாய்த் தெரிகிறது எனது தளம்.
வண்டியைத் தள்ளிச் செல்லும் பணிப்பெண்
சப்தமெழுப்பிச் செல்லும் சப்பாத்தோடு
இன்னும் நடந்தபடிதான் இருக்கிறாள்
லிஃப்டிற்காக
ஒருசேர காத்திருக்கையில் ஓரவிழிகளில்
அந்த கருப்புக் கண்ணாடிக்குப்
பின்னிருக்கும் விழிகளின் உணர்வுகளை
கற்பனை செய்ய வாய்ப்பற்ற காலைகள்
வெறுமையளிக்கின்றன.
ஏதேனும் ஒரு மகன் / மகள்
நாட்களுக்கு அழைத்திருக்கலாம்…
வாரங்கள்?
சிலநாட்களில்
பணிபெண்ணையும்
காணவில்லை.
வாரங்கள் சில முன்
புளோக் தாழ்வாரத்தில் கூடிய கூட்டமும்
உறக்கமற்ற அவர்களின் இரவுப் பேச்சும்
உதித்து மறைந்த தற்காலிக கழிப்பிடங்களும்
அந்த கறுப்புக் கண்ணாடிக்காரரின்
இறப்பைச்சொன்னது இப்போது புரிகிறது.
மாநகரங்களில் -
பக்கத்து வீட்டுக்காரரின் மரணம்கூட
வாரங்களுக்குப்பின் தான் அறிய முடிகிறது…
இப்போதும்
லிஃப்ட் எனது தளம்வரும் அவகாசநேரத்தில்
கறுப்புக் கண்ணாடிக்குப்பின் பார்த்திராதவிழிகளை
கற்பனையில் பார்த்திருக்கிறேன்…
கண்களற்ற உலகத்திற்கு
இழுத்துச் செல்ல
வந்து விடுகின்றன
லிஃப்டுகள்!
No comments:
Post a Comment