Tuesday, April 25, 2006

கட்டிப்புடி வைத்தியம்



வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல் நடத்தும் கட்டிப்புடி வைத்தியத்தைப் பார்த்தபோது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தோன்றி இருக்கும்...எனக்கு, அட, இது நமக்கு 20 வருஷத்துக்கு முன்பே தெரியுமே என்று தோன்றியது.

கட்டிப்புடி வைத்தியத்தைப் பற்றி எனக்குச் சொல்லித் தந்தவர் துறவறம் பூண்ட ஒரு கிருத்துவச் சகோதரர். கிருத்துவ விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த நாங்கள் இப்படி துறவறம்பூண்டவர்களை brothers என்று அழைப்போம். பிரிவுத்துயரில் விடாமல் அழுது கொண்டிருந்த தமிழரசி அக்காவை கட்டிப்பிடிக்குமாறு என்னிடம் சொல்லியதன் மூலம் எனக்கு கட்டிப்புடி வைத்தியத்தை (ஆனால் அப்போது அவர் அதற்கு கட்டிப்புடி வைத்தியம் என்ற பெயரையெல்லாம் சொல்லவில்லை) அறிமுகம் செய்து வைத்தவர் பிரதர் ஜான். 20 வருஷத்துக்கு முந்திய பதின்ம வயதின் ஒரு குற்றால மாலையில் அவர் அப்படிச் சொன்னதும், எனக்கு தீயில் மிதித்த மாதிரி இருந்தது . நான் மனதில் நினைத்தேன்..." அடப்பாவி, இவரெல்லாம் ஒரு சாமியாரா!"


நான் படித்த பள்ளியில் ஒரு மாணவர் இயக்கம் இருந்தது. அதில் தலைமைத்துவம் பற்றியும், சகோதரத்துவம் பற்றியும் சொல்லித் தந்தார்கள். சின்ன வயதில் எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. மனதை ஒரு white board மாதிரி வைத்திருக்கும் பழக்கம். உங்கள் திறமைக்குத் தக்கவாறு நீங்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் அதில் எழுதிக் கொள்ளலாம். அந்த குணம் மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களுக்குப் பிடித்திருந்தது. +2 படிக்கிற பசங்களைக் கூட தவிர்த்து விட்டு என்னை முன்னிலைப் படுத்தினார்கள்.

ஒரு சிறுவனின் சிந்தன ஆற்றலை வளர்க்க அவர்கள் கையாண்ட விஷயங்கள் அந்த வயதில் பிரமிப்பளித்தன. உதாரணத்திற்கு, ஒரு இருட்டறையின் மத்தியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பார்கள். இதை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை சொல்லுங்கள் என்பார்கள். சொல்லுவோம். தன்னை அழித்து உலகுக்கு ஒளி தருது மெழுகுவர்த்தி என்பான் நண்பன். தன்னை அழிக்காமல் தொடர்ந்து ஒளி தந்தால் இன்னும் நல்லா இருக்குமே என்பேன் நான். இப்படிப்போகும் கருத்துப் பகிர்வு.

ஆணும் பெண்ணும் கூச்சங்கள் ஒதுக்கி சகோதரத்துவத்துடன் பழக வேண்டுமென்று கற்றுக்கொடுத்தது இயக்கம். பொதுவாக இந்த இயக்கத்தின் கூட்டங்கள் துவங்கும்போது, ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களை கலந்து உட்கார வைக்க ஏற்பாட்டாளர்கள் ஒரு விளையாட்டு உத்தி வைத்திருந்தார்கள். அதன்படி, நாங்கள் அமர்ந்திருக்கிற பென்ச்சுகளை சுவர் ஓரமாக ஒட்டிப் போட்டுவிட்டு, அறையின் மத்தியில் நின்று கொள்வார் ஏற்பாட்டாளர்.

ஒரு கதை சொல்லுவார் ...

"எங்க ஊர்ல புயல் வந்துச்சாம்..அது செருப்பு போட்டவங்களை எல்லாம் தூக்கிட்டுப் போயிடுச்சாம்" என்பார். உடனே செருப்பு போட்டிருப்பவர்கள் எல்லாம் இடம் மாறி உட்கார வேண்டும். அதற்குள் ஏற்பாட்டாளர் ஒரு இடத்தை பிடித்துக் கொள்வார். ஒரு நபருக்கு இடம் இல்லாமல் போகும். அவர் சொல்வார் " எங்க ஊர்ல ஒரு புயல் வந்துச்சாம்.. அது வாட்ச் கட்டுனவங்களை எல்லாம் தூக்கிட்டுப் போயிடுச்சாம்" என்று சொல்வார்.

இப்படி தொடர்ந்து ஒருவரே மூன்று முறை மாட்டும் வரை ஆட்டம் தொடரும். ஆட்டத்திம் முடிவில் யார் மாட்டுகிறார் என்பது வேறு கதை. ஆனால், இந்த விளையாட்டு முடியும்போது ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் கலந்து உட்கார்ந்திருப்பார்கள்.

ஒரு தலைப்பைக் கொடுத்து, குழுக்கள் பிரித்து கருத்துக்கள் எழுதி வந்து வாசிக்கச் சொல்வார்கள். அதை மறுத்தோ, ஒட்டியோ கருத்துப் பறிமாற்றம் நடக்க விவாதங்கள் சூடாகும்: சுவையாகும்.

ஒவ்வொரு ஊரிலும், கிருத்துவப் பள்ளிக்கூடங்களிலும் இந்த இயக்கம் உண்டு. மாநில ரீதியான தலைமை உண்டு.மாநில ரீதியான கூட்டங்களும் உண்டு. அப்படி மாநில அளவில் குற்றாலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்தான் தமிழரசி அக்காவைப் பார்த்தேன்.எங்கள் பள்ளியை பிரதிநிதித்து 4 பேர் போயிருந்தோம். 2 அக்காக்கள், ஒரு அண்ணன் & நான். அதாவது போனவர்களிலேயே நான்தான் சின்னப்பையன்.

சற்று ஒதுக்குப்புறமாக இருந்த பழைய பங்களாவில் நடந்த அந்த குற்றால கேம்பிலும் நான்தான் சின்னப்பையன். 10,11,12வது படிக்கிற அண்ணன்மார்கள், அக்காமார்கள் மத்தியில் 7வது படிப்பவன் "சோட்டு' பையன்தானே? ஏற்கனவே பள்ளியில் நடந்த இயக்கக்கூட்டங்களில் எதைப்பற்றியும் கருத்து சொல்கிற அல்லது மறுப்பு சொல்கிற பயிற்சி பெற்றிருந்ததால், குற்றாலக் கேம்பிலும் அதே காரியத்தை தைரியமாக செய்ய முடிந்தது.

அட, சின்னப்பையன் இவ்வளவு தைரியமாக பேசுகிறானே விஷயம் எல்லோரையும் ஈர்த்திருக்க வேண்டும்... அப்படித்தான் தமிழரசி அக்காவும் என்னிடம் வந்து பேசினார்... எந்த ஊர், குடும்ப விவரங்கள் என விசாரித்து அன்பு காட்டினார்.

அந்த கேம்பில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அது - சாப்பிடும்போது யார், யார் தட்டிலிருந்து வேண்டுமானாலும் சாப்பாடு எடுத்து சாப்பிடலாம் அல்லது உங்கள் உணவை அடுத்தவர் தட்டிலும் போடலாம். அந்த ஏற்பாடு சகோதரத்துவ மனப்போக்கை தவிர்க்கும் கோடுகளை எடுத்தெறிந்ததை அனுபவிக்கும்போது உணர முடிந்தது.

இந்த ஏற்பாட்டால் நிகழ்ந்த மற்றொன்று என்னவென்றால்... சின்னப்பையனான நான் அங்கிருந்தவர்களின் விளையாட்டுப் பொருளானேன். ஒருமுறை கூட எனது உணவை நான் எடுத்து சாப்பிட முடியாமல் போனது. நான் சாப்பிடுவது முழுக்க மற்றவர்கள் தரும் அல்லது மற்றவர்கள் ஊட்டி விடும் உணவாகவே இருந்தது. சந்தடி சாக்கில் "டேய்... அந்த அக்கா உனக்கு ஊட்டி விடுற மாதிரி எனக்கும் சாப்பாடு ஊட்டி விடுவாங்களான்னு கேளு" என்று அன்பாக நலம் விசாரித்த அண்ணன்மார்களும் இருந்தார்கள். ஏதோ புரிகிற மாதிரி இருக்கும் ஆனால் முழுசாக புரியாது. அந்த வயசு அப்படி!

தமிழரசி அக்கா சாப்பாடு நேரத்தில் மற்றவர்கள் என்மீது உரிமை கொண்டாடுவதை முழுக்க தவிர்க்க நினைத்து முடியாதபோது, கோபப்படுவார். " நீ என் தம்பி இல்லை...போ" என்று சொல்லி சாப்பிடாமல் இருப்பார். நான் தேடிப்போய் அவரை சாப்பிட வைப்பேன். பொறாமை என்பது கூட அதீத அன்பின் இன்னொரு வடிவம்தானே?

அந்த முகாமில் இரவு நேரங்களில் நாங்கள் தங்கியிருந்த பங்களாவின் மேல்தளத்தில் ஜெபம் நடக்கும்.

தரையில் கம்பளம் விரித்து, கூட்டமாக அமர்ந்து, ஜெபிப்போம். அப்படி ஒரு ஜெபநேரத்தில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த தமிழரசி அக்கா என் தோள்களில் அவரது கைகளை மடித்து வைத்து அதில் அவரது தலையை சாய்த்துக் கொண்டார். அவ்வளவு பேர் அமர்ந்திருக்கும் ஒரு ஜெபக்கூட்டத்தில் அவர் காட்டிய அன்பு, அன்யோன்யம் எனக்கு சங்கட்டமாக இருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது மாதிரி ஒரு உணர்வு. நிமிர்ந்து பார்த்தால்...என்னை கூட்டிக் கொண்டு போயிருந்த பிரதர் ஜான் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை இழையோடிக் கிடந்தது. அவர் முகத்தில் அந்தநாள் வரை அப்படி ஒரு புன்னகையை பார்த்ததில்லை. சல்மாவின் கவிதைகள் மாதிரி, எல்லாம் புரிந்த மாதிரியும், ஆனால் எதுவும் புரியாத மாதிரியுமான ஒரு புன்னகை.

பாதிரியார் "ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னதும், கிடைத்தது சாக்கென்று படக்கென எழுந்து எதிர்பட்டவர்களிடம் எல்லாம் சமாதானம் சமாதானம் என்று சொல்லிக் கொண்டே கீழ்தளத்துக்கு ஓடி விட்டேன். அப்படி ஓடி வந்தது சரியா தவறா என தீர்மானிக்க இயலாத உணர்வுகள் உள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்க, இரவு சாப்பாட்டின்போது தமிழரசி அக்கா போகிற போக்கில் " ஏன் ஓடிப்போயிட்ட? " என்று மட்டும் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை.

இரண்டு நாட்கள் சர்ரென்று ஓடிப்போனது. அந்த இரண்டு நாட்களும் தமிழரசி அக்காவின் அன்பை தெரிவிக்கும் சம்பவங்கள் பல உள்ளடக்கியதாக இருந்தது. அவர் வீட்டில் அவர் ஒரே பிள்ளையாம். ஆண்வாரிசே கிடையாதாம். "உன்னை மாதிரி ஒரு தம்பி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?" என்றார். எனக்கும் அவர் மாதிரி ஒரு அக்கா இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

முகாம் முடிந்து - ஒரு ஞாயிறு எல்லோரும் அவரவர் ஊருக்குக் கிளம்பினோம்.

ஏனென்று தெரியவில்லை... எனக்குள் உருண்டையாய் ஒரு சோகம் மேல் எழும்பி வந்து தொண்டையை அடைத்தது. தமிழகத்தின் ஏதேதோ மூலைகளில் இருந்து வந்த பலரும், சட்டென்று நண்பர்களாகி பழகி உணர்வுகள் பகிர்ந்து சட்டென்று பிரிவது சோகமளித்தது. அங்கிருந்தவர்களில் யாரும் மற்றவரை வாழ்நாளில் இன்னொரு முறை பார்ப்போமா என்ற நிரந்தரமின்மை இன்னும் இதயத்தை அழுத்தியது.

பலரது முகத்திலும் சோகத்தின் சுவடுகள் ஓடியபடி இருக்க, சிலர் என் முன் கண்கலங்கவும் கண்டேன். அப்போதுதான் பிரதர் ஜான் என்னை அழைத்தார்.

"சொல்லுங்க பிரதர்"

"தமிழரசி உன் ·பிரண்டுதானே?"

"ஆமாம். தமிழரசி அக்கா என்னோட ·பிரெண்டுதான்!"

"தமிழரசி உனக்கு அக்காவா, ·பிரெண்டா?"

"தமிழரசி அக்கா ·பிரெண்டுதான், அக்காவும்தான்..."

"சரி அதை விடு...உனக்கு தமிழரசி பிடிக்கும்தானே?"

"ரொம்ப பிடிக்கும் பிரதர்..."

"அப்போ... தமிழரசி அழுதா உனக்கு பிடிக்காதுதானே..."

"அய்யய்யோ பிரதர்... தமிழரசி அக்கா அழுவுறாங்களா?"

"ஆமாம். அரைமணி நேரமா தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டு இருக்கா"

"அய்யோ, இந்த அக்கா இப்படித்தான் பிரதர், சரியான அழுமூஞ்சி. அய்யய்யோ இப்போ என்ன பிரதர் செய்றது..."

"அந்த அழுகையை நிறுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கு"

"என்ன வழி பிரதர்?"

"தமிழரசியை கட்டிப் பிடிச்சு கன்னத்தில் ஒரு முத்தம் கொடு"

20 வருஷத்துக்கு முந்திய பதின்ம வயதின் ஒரு குற்றால மாலையில் அவர் அப்படிச் சொன்னதும், எனக்கு தீயில் மிதித்த மாதிரி இருந்தது . அப்போதுதான் நான் மனதில் நினைத்தேன்..." அடப்பாவி, இவரெல்லாம் ஒரு சாமியாரா!"

"அய்யோ...என்ன பிரதர் சொல்றீங்க.. அதெல்லாம் என்னால் முடியாது"

"இது ஒன்னும் தப்பில்லை. கட்டிப்பிடிக்கிறது ஒரு ஆறுதல். முத்தம் கொடுக்கிறது நம்ம அன்பை வெளிப்படுத்திற முறை"

"ம்ஹ¤ம்...அதெல்லாம் என்னால முடியாது. என்னை விட்டுடுங்க பிரதர்"

அதற்குமேல் பிரதர் ஜான் என்னை எதுவும் வற்புறுத்தவில்லை. தீராத கண்ணீரோடு எனக்கு விடை கொடுத்தார் தமிழரசி அக்கா. பஸ் ஏறியதும் யாரும் பார்க்காத ஒரு தருணத்தில் நான் என் கண்களை துடைத்துக் கொண்டேன்."மன்னிச்சுக்கங்க தமிழரசி அக்கா... இதான் என்னால முடிஞ்சது..."

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பார்க்கும்போது தமிழரசி அக்காவிற்கு என் நினைவு வர நியாமில்லை. ஆனால் பிரதர் ஜான் பார்த்திருந்தால், " நான் 20 வருஷத்துக்கு முன்னால் சொல்லிக் கொடுத்தும், ஒரு பயந்த குழப்பமிக்க சிறுவனால் பயன்படுத்த முடியாத சிகிச்சை முறைதான் இது" என்று நினைத்திருப்பார்.

23 comments:

- யெஸ்.பாலபாரதி said...

அப்பு...இவ்வோளோவு பெரிசா.. பதிவு போட்டா.. எப்ப படிச்சு முடிக்கிறதாம்.
படிச்சுட்டு பொறவு வாரேன்.

ஜோ/Joe said...

அருமை!

நன்மனம் said...

பாலு, கைவசம் நெறிய கதை(அனுபவம்) இருக்கு போல!!! கதையையும், எழுத்து நடையையும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்

பாலு மணிமாறன் said...

Thank You for your Fast & Swift Comments JO & SRIDAR!!!

பொன்ஸ்~~Poorna said...

அட.. இதெல்லாம் நல்லா இருக்கே.. நாங்க படிச்ச ஸ்கூல்ல, ஏன் ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு ஒரு கி.மீ. சுற்றளவுல, பொண்ணுங்களும் பசங்களும் பேசிக்கவே கூடாது.. பேசிக்கிறாங்களா, இல்லை புக் பரிமாற்றம் நடக்குதான்னு பாக்க ஒரு ஸ்குவாட் வேற போட்டிருப்பாங்க..

எங்க வீட்டச் சுத்தி இருந்த நிறைய பள்ளிகள்ள அப்படித்தான்..

இது போன்ற இயக்கம் கூட தமிழ்நாட்டுல இருக்குன்னு தெரிஞ்சிக்க நல்லா இருக்கு...

பாலு மணிமாறன் said...

உங்கள் கருத்தோடு பலருக்கும் உடன்பாடு இருக்கும் என்பது நிச்சயம் பொன்ஸ்.

எந்த ஊடகங்களில் தாக்கமும் இல்லாத (வயலும் வாழ்வும் போடும் கருப்பு-வெள்ளை தூர்தர்ஷன்கூட அப்போது இல்லை) 70களில் இறுதியில் ஒரு துறவியால் இப்படி யோசித்திருக்க முடிகிறது என்பது எனக்கு இன்றும் ஆச்சரியமளிக்கும் விஷயம்தான்.

ஜோ/Joe said...

//எந்த ஊடகங்களில் தாக்கமும் இல்லாத (வயலும் வாழ்வும் போடும் கருப்பு-வெள்ளை தூர்தர்ஷன்கூட அப்போது இல்லை) 70களில் இறுதியில் ஒரு துறவியால் இப்படி யோசித்திருக்க முடிகிறது என்பது எனக்கு இன்றும் ஆச்சரியமளிக்கும் விஷயம்தான்.//

பாலு,
எனக்கு இதில் ஆச்சரியமில்லை..நீங்கள் குறிப்பிடும் Brother என்பவர் குருவானவர் ஆவதற்கு முந்தைய நிலையில் இருப்பவர் .அவர் இறையியல் கல்லூரியில் இறையியல் ,உளவியல் ,பிற மதங்கள் ,இன்னும் பல பொதுப்படையான பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நவீன் ப்ரகாஷ் said...

திரும்பவும் என்னை டிரவுசர் போட வைத்து விட்டீர்கள் பாலு :)

ஆழமான உணர்வுகளை அழகாக புணைந்து தந்திருக்கின்றீர்கள் !

Bharaniru_balraj said...

அருமயான நடை. பாராட்டுகள்.

70 களில் ஒரு துறவி கொஞ்சம் வித்த்யாசமாக சிந்தித்திருகிறார். ஆணால் ஆதி காலத்திலிருந்தே இந்தப் வைத்தியம் இருந்திருக்க வேண்டும். கிராமங்களில், ஏன் நகரங்களில் கூட இந்த பண்பாடு வெளிப்படுவதை பார்க்கலாம். துக்கமோ, சந்தோஸமோ ஒருவரை ஒருவர் கட்டித்தழுவுதல் இயற்கை. நானிருக்கிறேன், கவலை வேண்டாம் என்று மென்மையாக் உணர்த்தல்.

இன்னும் நல்ல பதிவுகள் தருக?

பாலு மணிமாறன் said...

நீங்கள் சொல்வது மிகச்சரி ஜோ.

அவர்கள் துறவறம் ஏற்பதற்கு முன் தக்க கல்வியால் தங்களை தயார் செய்துவிட்டுதான் வருகிறார்கள்.நான் எனது பள்ளி வாழ்க்கையில் குறைந்தது 50 துறவிகளோடாவது பழகியிருக்கிறேன். அவர்களில் யாரிடமும் பார்த்திராத சிந்தனை இது. நீங்கள் சொல்வது போல் கனிந்த துறவிகள் குறுகிய நோக்கு தவிர்த்து சிந்திப்பதில் ஆச்சரியமைல்லைதான்.

பாலு மணிமாறன் said...

சிங்கப்பூரில் நாங்கள் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் டிரவுசர்தான் போடுகிறோம் நவீன் ! :))

உங்கள் அன்புக்கு நன்றி !

பாலு மணிமாறன் said...

உண்மைதான் பால்ராஜ்... தென்கிழக்குச்சீமையில் மரண வீடுகளில் இந்த கட்டிப்பிடித்தலும், "கவலை வேண்டாம்... நானிருக்கிறேன்" என்ற உணர்வு பகிர்தலும் இயல்பாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. போரில் வென்று வருபவர்களை மாரணைத்து வரவேற்கும் சங்ககாலக் கலாச்சாரம் பற்றியும் படித்தபடிதான் இருக்கிறோம்...

தாணு said...

ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு ஸ்பரிசம் உணர்த்தும் என்பது உண்மை. எங்க ப்ராக்டீஸில்கூட கைபிடித்து பல்ஸ் பார்த்து, அவயங்களின் அவஸ்தையை தொடுதல் மூலம் தெரிந்து கொள்ள நேரும் சந்தர்ப்பங்களில் அந்த நோயாளியின் ரெஸ்பான்ஸ் மிக நெகிழ்வானதாக இருக்கும்.
`வசூல் ராஜா' படத்தின் கட்டிப்பிடி வைத்தியம் ஒரு மேல்நாட்டு மருத்துவ இதழில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது- ஆனால் `முன்னாபாய்' படம்தான் மேற்கோள்.

Pot"tea" kadai said...

நெகிழ்ச்சியாயிருந்தது!

மஞ்சூர் ராசா said...

கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது என்பது இன்றளவும் நம்மால் முடியாத ஒரு காரியம் என்பதுதான் உண்மை நிலை.

எனக்கென்னமோ முத்து படம் ஞாபகம் வந்தது.

சிங். செயகுமார். said...

டவுசர் காலத்து கனவுகள் இன்னும் வருமா.....
ஆவலுடன்
சிங்.

Unknown said...

Different,yet effective incident.This is not possible in many places even today

துளசி கோபால் said...

தூய நட்புணர்வை இப்படிக் கட்டிப் புடிக்கறது, சரி வேணாம்ப்பா.... ச்சும்மா கையைப் பிடிச்சுக்கறது இப்படி
வெளிப்படுத்தமுடியும்தான். ஆனா நம்ம ஊரிலே எதுக்கெடுத்தாலும் ஒரு கட்டுப்பாடுன்னு கையைக் கட்டிப்
போட்டுருதேங்க.

Anonymous said...

ungal pathiu padikumbothu en hostel valkai nabagam varukirathu, ungaludaiya rasuvai konna paya pathivil comment potten but publish agalai, nanum royappanpattila aloysiusla padithen, unmaila antha school nalla mark vankugira studentdai uruvakkukiratho ellaiyo nalla sinthikira manasai uruvakkukirathu

- யெஸ்.பாலபாரதி said...

என்னையும் பழைய காலத்திற்கு அழைத்துப்போனது.
உங்களுக்கு தமிழரசியக்கானா... எனக்கு கல்யாணியக்கான்னு ஒருத்தர்.
அவரை என் அக்காவாகவே மாற்றி எழுதுன ஒரு கவிதை இருக்கு. அது பொறவு.

பாலு மணிமாறன் said...

தாணு - தொடு உணர்வின் மூலம் நமது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அடுத்தவருள் ஊடுருவுதல் என்பது சாத்தியம் என்ற கருத்து நம்பிக்கைக்குரியதே!

பொட்"டீ"க்கடை - நன்றி நண்பரே!

மஞ்சூர் ராசா - மஞ்சூருக்கு வெளியே அதெல்லாம் நிகழ்ந்துதான் கொண்டிருக்கிறது என்கிறார் உங்களது கமெண்டை படித்த ஒரு நண்பர்!!!! :)))

சிங்.ஜெயா - தொடர்ந்து டிரவுசர் காலத்து நினைவுகளைப் பதிந்தால் என்னை "ராமராஜன்" என்று நினைத்துவிடும் அபாயம் இருக்கிரது சிங்.

செல்வன் - "MANY PLACES" என்ற உங்களது கூற்று உண்மைதான்!!!

துளசி கோபால் - கட்டு மீறியவர்கள் படும் பாட்டைப் பார்த்துதான் நம்ம ஆளுங்க இன்னும் விடாம கட்டுப்பாட்டைப் புடுச்சு தொங்கிக்கிட்டிருக்காய்ங்க போல இருக்கு நம்ம ஆள்ங்க துளசி அக்கா!

MR.ANONY - ஒரு நிஜப்பேருல வந்து இந்த கமெண்டைக் கொடுத்திருந்தீங்கன்னா நல்ல இருந்திருக்குமே ராசா.......

பாலபாரதி - உங்கள் கல்யாணியக்கா கதையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் பாலா

- யெஸ்.பாலபாரதி said...

தலிவா... அது கத இல்ல... கவித... {நானேதான் சொல்லிக்கனும்}
:)

பாலு மணிமாறன் said...

முத்து - உங்கள் கருத்துக்கு நன்றி ! ஆண்கள் கட்டி அணைப்பதை அனுமதித்த இதிகாசங்களும், இலக்கியங்களும் நட்பு ரீதியான அல்லது பாசரீதியான ஆண் - பெண் ஆறுதல் அணைப்பை அனுமதித்ததா என்பது எனக்குத் தெரியவில்லை!