Wednesday, April 26, 2006

தற்கொலை : சில ரகசியக்குறிப்புகள்

ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்து இன்றைய தேதிக்குள் தற்கொலை சார்ந்ததான மூன்று விஷயங்களை கேட்டேன் : பார்த்தேன் : படித்தேன்!

கேட்டது : சின்னத்திரை நடிகை வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதை சன் தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன். எவ்வளவு உற்சாகமான, தன்னம்பிக்கையை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்துகிற பெண்... எப்படி பெண்ணே உனக்கு முடிந்தது இப்படி ஒரு முடிவு?

பார்த்தது : நாகரிகத்தின் சகல கூறுகளையும் தாங்கிய சிங்கப்பூரில், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஒரு இளம் ஜோடியை நேரில் பார்த்தேன் : பேசினேன். தூக்க மாத்திரையின் தாக்கத்திலிருந்து விடுபடாமல் நின்றிருந்த அவர்களை அறைய வேண்டுமென்கிற அளவு கோபம் வந்தது. அறையவில்லை. அட பைத்தியக்காரர்களா.. உயிர் என்பது என்ன அவ்வளவு சின்ன விஷயமா? என்ற கேள்வியை மட்டுமே முன் வைத்தேன்.

படித்தது : கவிஞர் மனுஷ்ய புத்திரன் நடத்தும் "உயிர்மை" மாத இதழில் நகர் சார்ந்த தற்கொலைகள் பற்றிய அவரது கவிதையை படிக்க நேர்ந்தது. நவீனத்துவ வாசத்தோடு எழுதப்பட்ட, எல்லோருக்கும் புரிகிற மாதிரியான, அவரது நெடுங்கவிதை அது. அதை உங்களோடு இங்கு பகிர்வது ... தற்கொலை தப்பான விஷயம்: அதன் மீதான ஆக்கப்பூர்வமான கருத்துப் பறிமாற்றம் நல்ல விஷயம் என்ற எண்ணத்தில்தான்.

( மனுஷ்ய புத்திரன் சிங்கப்பூர் வருகிறார். அவருக்காக 3 நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறேன். அதை இனிமேல்தான் அவருக்கு மின்னஞ்சலில் சொல்ல வேண்டும். அதற்கு முன் உங்களிடம் சொல்லி விட்டேன்! இனி உங்களுக்கான கவிதைக் கதவு திறக்கிறது! )


உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள்

நெடுங்கவிதை : மனுஷ்ய புத்திரன்

0.01:
லாட்ஜ்களில் தற்கொலை
செய்து வருபவர்களில்
எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு
அதிகரித்து வருவதாகவே
காவல்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன

0.02:
முப்பதிலிருந்து நாற்பத்தைந்து
வயதிற்குள்
பெரும்பாலான
லாட்ஜ் தற்கொலைகள் நிகழ்கின்றன

0.03:
இளைஞர்களும் யுவதிகளும்
பெரும்பாலும் வீடுகளில்
அல்லது
தமக்கான பிரத்யேக விடுதிகளிலேயே
தற்கொலை செய்துகொள்கிறார்கள்
லாட்ஜ்களில் இறப்பவர்கள்
தமக்கான எல்லா பிரத்யேக இடங்களையும்
உபயோகிக்க முடியாமல் போனவர்கள் என
கருதப்படுகிறது

0.04:
லாட்ஜ்களில் தற்கொலை
செய்துகொள்பவர்கள்
தற்கொலை செய்துகொள்ளும்
நோக்கத்துடன் ஒரு அறையைப்
பதிவு செய்யும்போது
பதிவேடுகளில் அளிக்கப்படும்
பொய்யான பெயர்களும் முகவரிகளும்
யாராலும் தீர்க்க முடியாத
ரகசியக் குறிப்புகளாகத் திகழ்கின்றன

0.05:
லாட்ஜ்களில் தற்கொலை செய்துகொள்பவர்கள்
தங்களது மரணத்தில் அந்தரங்கத்தைப் பேணுகிறவர்களாகவும்
லாட்ஜ்களின் கறைபடிந்த விரிப்புகளின்மீது
இறந்துபோவதன் மூலம்
தம்முடைய நினைவின் கறைகளை
துடைத்துக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்

0.06:
தனியாக தற்கொலை செய்துகொள்பவர்கள்
அநேகமாக மின் விசிறியில்
தூக்கிட்டுக் கொள்கிறார்கள்

0.07:
ஜோடிகளாக தற்கொலை செய்துகொள்பவர்கள்
மதுபானங்களில் விஷம் கலந்து அருந்துவது
வழக்கமாகிவிட்டது

0.08:
மணிக்கட்டில் நரம்பை வெட்டிக்கொண்டு
பெருகும் தம் குருதியில் மிதப்பவர்களின்
கண்களில் மரணபயம் படிவதே இல்லை

0.09:
தனியாக தற்கொலை செய்துகொள்பவர்கள்
அநேகமாக தங்கள் துணிகளை ஒழுங்காக மடித்து வைத்துவிட்டே
தற்கொலை செய்து கொள்கிறார்கள்

0.10:
பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும்போது
தங்கள் உள்ளாடைகளை கவனமாக அணிந்து கொள்கிறார்கள்

0.11:
ஜோடியாக இறப்பவர்கள்
புணர்ச்சிக்குப் பின்போ அல்லது
நிர்வாண நிலையிலோ இறந்திருந்தால்
அதை வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் மீதான
ஒரு பழிவாங்குதலாகவே நாம் கருத வேண்டும்

0.11 A:
அத்தகைய ஒரு காட்சியை
தான் பார்க்க நேர்ந்தது
வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத
சுயநிந்தனையைத் தருவதாக
பாரடைஸ் லாட்ஜ் உரிமையாளர்
சிவஞானம் தெரிவிக்கிறார்

0.12:
லாட்ஜ்களில் தற்கொலை செய்துகொள்பவர்கள்
தங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல
என்று எழுதி வைப்பது
ஒரு நல்லெண்ண நடவடிகையே அன்றி
எந்த விதத்திலும் நம்ம்முடைய பொறுப்புகளிலிருந்து
நம்மை விடிவிப்பதாகாது

0.13:
கடன்தொல்லை அல்லது
கள்ளக் காதல் தொடர்பான
போலீஸ் அறிக்கை காரணங்கள்
லாட்ஜ்களில் இறப்பவர்களின் மர்மத்தை
நிரந்தரமாக மூடிவிடுகின்றன

0.14:
லாட்ஜ்களில் இறப்பவர்களில்
பலர் உரிமை கோரப்படாமலேயே
மின்மயானங்களில் எரியூட்டப்படுகிறார்கள்

0.14 A:
தன் சாவுச் செலவுக்கு
இந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
என எழுதப்பட்ட குறிப்புகளையும்
தன் அனுபவத்தில் கண்டிருப்பதாக
தலைமைக் காவலர் நாச்சிமுத்து தெரிவிக்கிறார்

0.15:
லாட்ஜ்களில்
நிகழும் மரணம் தரும் தனிமை
இந்த வாழ்க்கையின் தனிமையே தவிர
அது மரணத்தின் தனிமை அல்ல
என ஒரு நவீன கவிஞர் எழுதியிருப்பது
இங்கு முற்றிலும் பொருத்தமானது

0.16:
மூன்று மாதங்களுக்கு முன்பு
தனது அறையில் தற்கொலை செய்துகொண்ட
ஒரு பெண்
தனது கடைசி இரவில்
'நீ கடைசியாக
எப்போது வீட்டிற்குப் போனாய்'
என்ற கேள்வியை திருப்பத் திரும்பக் கேட்டதாக
முருகன் லாட்ஜ் ரூம்பாய் செல்லப்பாண்டி
தெரிவிக்கிறார்

(செல்வி.G.மஞ்சுளா எம்.ஏ(சமூகவியல்) தனது M.Phil பட்டத்திற்காக 'நகர்சார் தற்கொலைகளில் நவீன உளவியலும் சமூக எதார்த்தமும்' என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வேட்டிலிருந்து எடுக்கப்பட்டசில குறிப்புகள்)

9 comments:

நன்மனம் said...

பாலு, திரு.செழியன் அவர்களின் மரணம் என்னை பாதித்த நிகழ்வுகளில் ஒன்று,

இன்றலவும், திறமை வாய்ந்த மனிதருக்கு தக்க நேரத்தில் பேச யாரும் இல்லையா என்ற கேள்வியே எதிரோலித்துக்கொண்டிருக்கிறது.

மரணம் இயற்கை தந்த வரம் அந்த வரத்திற்கு காத்திருப்போம்.

ஸ்ரீதர்

Anonymous said...

ஐயா,
இதை கவிதை என்று குறிப்பிட்டதால் கவிதை என்று அறிந்தேன். எழுதியர் பெயரைப் பார்த்தேன்.
புகழ் பெற்ற கவிஞர் என்று பெயர் எடுத்தவர். ஆக, இது கவிதையா என்றுக் கேட்க இயலாது. இரண்டொரு வாரங்களுக்கு முன்பு திரு. ஆசிப் மீரான் அவர்கள் எழுதிய கவிதை பற்றி கட்டுரையை நீங்கள் படித்தீர்களா?
தற்கொலைப் பற்றிய தங்களின் ஆதங்கத்தை திசை திருப்பியதற்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
ரமணி

ஸ்ருசல் said...

தகவலுக்கு நன்றி.

// செல்வி.G.மஞ்சுளா என்.ஏ(சமூகவியல்) தனது M.Phil பட்டத்திற்காக'நகர்சார் தற்கொலைகளில் நவீன உளவியலும் சமூக எதார்த்தமும்' என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வேட்டிலிருந்து எடுக்கப்பட்டசில குறிப்புகள்) ///

பாலு,

இந்தக் கட்டுரை எங்கு கிடைக்கும் எனச் சொல்ல முடியுமா?

நன்றி.
ஸ்ருசல்.

பாலு மணிமாறன் said...

ஸ்ரீதர் - பிரியத்திற்குரியவர்களின் மரணத்தை நம்ப முடிவதில்லைதான்...பிடிக்காதவர்களின் மரணத்தைக்கூட பெரும்பாலும் வரவேற்கவே முடிவதில்லை!

Mr.Anony - உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன் ரமணி. மதித்தலும், உடன்படுதலும் வெவ்வேறு விஷயங்கள்தானே?

ஸ்ருசல் - மனுஷ்ய புத்திரனை "உயிர்மை" அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்கலாம் நீங்கள். முயலுங்கள்... முடியாதபட்சம், கட்டாயம் நான் உதவுகிறேன்

Anonymous said...

உயிர்மையில் படித்தபோதே பாதித்தது இக்கவிதை. அந்த சின்னப்பெண்ணின் மரணம் என்னையும் உலுக்கிவிட்டது. நீண்ட நாட்களுக்கு யார் வைஷ்ணவி என்று தெரியாமல் தான் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன். நேற்று தான் ஏதோ வலைதளத்தில் அவளது புகைப்படத்தை பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. அந்த துறுதுறு முகம் கண்ணிலேயே இருக்கின்றது.

Muthu said...

எனக்கும் தற்கொலை செய்து கொண்ட நண்பனின் தூக்கி சென்ற அனுபவம் உண்டு. கண்ணெதிரே என்கைகளில் உயிர் விட்ட அவனின் மரணம் மிக வலியான அனுபவம். அதை பற்றி எழுத பலமுறை முயன்று முடியாமலேயே போயிற்று. சில வரிகளுக்கு மேல் எழுத வரவில்லை. என்றைக்கோ அவன் போய்விட்டான். இன்னும் என் பல இரவுகள் அவனால் தூக்கமின்றி கழிகின்றன.

விஷம் அருந்தியர் படும் வேதனையையும் அவர்களுக்கு செய்யும் வைத்தியத்தை அருகிலிருந்து பார்த்தவர்கள் அதை இறுதிவரை மறக்க முடியாது.

பாலு மணிமாறன் said...

சித்தாரத் - உங்களைப் போலதான் நானும் உணர்ந்தேன். சில பேரைப் பார்க்கும்போது, அவர்களால் தற்கொலையைப் பற்றியெல்லாம் சிந்திக்க முடியுமா என்று கூட நினைக்க முடியாது - வைஷ்னவியும் அந்த ரகம். அவரது மரணம் ஒரு மறக்க முடியாத சோகம்!

பாலு மணிமாறன் said...

சோழநாடான் - உறவினர்களின் மரணங்களைக்கூட ஏற்க முடிகிற மனது நண்பர்களில் மரணங்களை ஏற்க முடியாமல் தவித்து விடுகிறது..உங்கள் அனுபவம் , மிக வருத்தமளிக்கிறது. வலியை வார்த்தைகளில் வடிக்க முடியாதுதான்!

சல்மா அயூப் said...

இன்றைய தினமலரில் ஒரு செய்தி வந்திருக்கிறது.

நடிகை வைஷ்ணவி பலரால் செக்ஸ் டார்ச்சர் செய்யப்பட்டார் என்றும், அதை அவரால் குடும்பத்தினரிடம் கூட சொல்ல இயலாத சூழலில் இறந்தார் என்றும் ஒரு பெண் இயக்கம் போலீஸிடம் புகார் கொடுத்திருக்கிறது.

இது உண்மையாக இருக்குமா?

மேலும், பலப்பல நடிகைகள் விஷயத்தில் இதுதான் நடக்கிறது என்றும் நிறைய பேர் எய்ட்ஸால் பாதிக்க பட்டு விட்டார்கள் என்றும் அவரால் சொல்லப்பட்டது.