கிள்ளான் உறங்கத் துவங்கியிருந்த ஒரு ராத்திரி.
மனோகரன் நண்பனைச் சந்தித்துவிட்டு காப்பார் போக பஸ்ஸிற்காக காத்திருந்தான். ஐந்தடி இரண்டங்குல உயரம், சிவந்த நிறம், கொஞ்சம் வழுக்கை கொஞ்சம் தொப்பை இரண்டும் கலந்த கலவைதான் மனோ. இந்த மனோவின் இப்போதையத் தேவை காப்பார் போக ஒரு பஸ்.
ஓரமாய் ஒரு ஒற்றை சாப்பாட்டுக்கடை இருந்த அந்த நிறுத்ததில் அவனைத் தவிர யாருமே பஸ்ஸிற்கு காத்திருக்கவில்லை.இப்போதெல்லாம் மக்கள் சீக்கிரமே தூங்கி விடுகிறார்கள் என்று மனோ நினைத்துக் கொண்டான். அவனை மேலும் எதையும் நினைக்க விடாமல் ஒரு பஸ் அவனை உரசியபடி வந்து நின்றது.
"கோலாசிலாங்கூர்?" என்றார் கண்டக்டர். " இல்லை... காப்பார்" என்று சொல்லி அவன் உள்ளே ஏற டிரைவர் பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு ஒற்றை சாப்பாட்டுக் கடையில் தே தாரெக் (ஆற்றப்பட்ட தேனீர்) சாப்பிட இறங்கிப் போனார். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை வந்து டங்கு டங்குன்னு ஆடுச்சாம் என்றிருந்தது மனோவிற்கு.
பஸ்ஸின் உள்ளே ஒளிவிட்டுக் கொண்டிருந்த ஒற்றை டியூப் லைட் இருட்டை விரட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. ஏ.சிக் குளிர் திறந்த கதவுகளின் வழி வெளியே ஓடிக் கொண்டிருந்தது. யோசிப்பதற்கு வசதியாக பஸ்ஸின் பின்புறம் ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டான் மனோ. அவனைத் தவிர அந்த பஸ்ஸில் டிரைவர் சீட்டிற்கு சற்று பின்தள்ளி ஒரு சீனப்பெண் மட்டும் முதுகு காட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான் மனோ. முடிவில் சிரித்துக் கொண்டான். பத்து நிமிடங்களில் டிரைவரும், கண்டக்டரும் ஏறிக் கொள்ள பஸ் இரண்டே பயணிகளோடு புறப்பட்டது.
ஐந்து நிமிடம் கண்டக்டர் பங்களாதேசிகள் பற்றி டிரைவரிடம் பேசிவிட்டு மனோவிடம் வந்தார். " எங்க போறீங்க?"
"தோக்முடா"
இரண்டு ரிங்கிட் வாங்கி, டிக்கெட் தந்துவிட்டு மறுபடியும் பங்களாதேசிகள் பற்றிப்பேசப் போய்விட்டார். மனோவை ஏதோ ஒரு குழப்பமான உணர்வு தாக்கியது. யாரோ முதுகை தொடாமல் துளைப்பது மாதியான உணர்வு. திடீரென ஏன் இந்த உணர்வு? சட்டென்று திரும்பிப்பார்ததான் மனோ.
அங்கே...
கடைசி வரிசையில் மையமாக "அவன்" !
மனோவின் மனதில் அதிர்ச்சி அலைகள் ஓடி ஓய்ந்தது. யாரிவன்? எப்படி இங்கு வந்தான்? மனோ பஸ்ஸில் ஏறியபோது பின் இருக்கைகளில் அவனைத்தவிர யாரும் இருக்கவில்லை. அவன் அமர்ந்த பிறகு பின்பக்க அல்லது முன்பக்கக் கதவுகள் வழி எந்தப் புதுப் பயணியும் ஏறவில்லை. பிறகு எப்படி இவன்?
"அவன்" கடைசி இருக்கையில் அமர்ந்து மனோவை பார்வையால் துளைத்தான். மனோ சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். எப்படி வந்த்திருப்பான்? மனோவிற்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. அவன் கதவு வழியாக உள்ளே வரவில்லை.
மனோ மனதை திடப்படுத்திக் கொண்டு மறுபடியு திரும்பிப்பார்க்க முற்பட்ட தருணத்தில் அவன் கைக்கு எட்டும் தூரத்தில் நின்றிருந்தான். அவன் உடலில் இருந்து ஏதோ ஒரு மணம் வீசியது - சந்தன வாசம் மாதிரி!
" நான் உங்கள் பக்கத்தில் உட்காரலாமா?" என்று அவன் கேட்டபோது அந்தக்குரலில் மிகுந்த பெண்மைத்தனமும், வசிய வாசமும் இருந்தது.
இவ்வளவு இடம் வெற்றாக இருக்க ஏன் என்னை ஒட்டி உட்கார வேண்டும்? ஆனால் மனோவின் உதடுகள் கட்டுபாடு தளர்ந்து 'உட்காரலாம்' என்றது.
'உங்கள் பெயர்'
'மனோ'
'மனோகரன்தானே?' மனோ திடுக்கிட்டான்.
'ஆ...ஆமாம்'
'எங்கே போகிறீர்கள்'
'தோக் முடா'
'தோக்முடா என்றால்...?'
'அது ஒரு இட்த்தில் பெயர்'
'நான் ஒன்று உங்களிடம் கேட்கலாமா'
'கேளுங்கள்'
'நீங்கள்...நீங்கள் எப்படிப் பிறந்தீர்கள்?'
மனோ சட்டென்று முகம் மாறினான்.ஆத்திரமாய் ஏதோ சொல்ல முற்பட..."அவன்" முகம் பார்த்ததும் கோபம் அடக்கி, 'என் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் செய்து கொண்டதால்'
'அம்மா அப்பா என்றால் என்ன.. கல்யானம் என்றால் என்ன?'
என்னய்யா கேள்வி இது.. மறை கழன்ற கேஸோ?
'அம்மா என்றால் என்னைப் பெற்றெடுத்தவர். அப்பா என்றால் என்னை வலர்து விட்டவர். கல்யாணம் என்றால் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்தச் செய்யப்படும் ஒப்பந்தம்'
'அப்படியென்றால் நீங்கள் மாத்திரைச் சேர்க்கையில் பிறக்கவில்லையா?'
'எ..ன்...ன..து?'
'மன்னிக்கவும். உளறி விட்டேன். வாழ்க்கை என்று சொன்னீர்களே அது எப்படி இருக்கும்?'
மீ கோரெங் போல இருக்கும் என்று சொல்ல வேண்டும்போல் ஆத்திரம் வர, மனோ அதை அடக்கிக் கொண்டான்.
'அதைச் சொல்ல முடியாது. அனுபவித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்'
'அப்படியா.. பரவாயில்லை. அந்த வாழ்க்கையில் என்னவெல்லாம் இருக்கும் என்று சொல்ல முடியுமா?'
'அதில் எல்லாம் இருக்கும். அன்பு, பாசம், உயர்வு, தாழ்வு, கோபம், சோகம், காதல், மோதல், பிரிவு...இப்படி எல்லாமே இருக்கும்'
'அன்பு என்றால் என்ன?' என்றான் அவன். மனோவிற்கு ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.'தெரியலடா நாயே' என்று பதில் சொன்னான்.
'நண்பரே...நீங்கள் என்னை மிருகத்தின் பெயர் சொல்லி அழைக்கிறீர்கள். சொல்லுங்கள்... அன்பு என்றார் என்ன?'
'என் தாய், நான் உறங்கியபின் கொசுக்கடிக்ககூடாது என்று போர்வை போர்த்தி விடுவாளே... அதற்குப் பெயர்தான் அன்பு'
'சரி, காதலென்றால் என்ன?'
'எனக்கு ஜோதிகா மேல் இருப்பது.. அவருக்கு சூரியா மேல் இருப்பது, என்மேல் இல்லாதது'
'புரியவில்லை...'
'காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படுவது'
'எதற்காக?'
'வேறு எதற்கு... தோல்வியடைந்தபின் கவிதை எழுதத்தான்'
'கவிதையா?'
'ஆமாம்...
காற்றிலே காயும் நிலவை
கண்டு கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி
அலை கரையைக் கடந்த பின்னும்
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி
என்று சோகம் கொப்பளிக்கப் புலம்புவது!'
'நீங்கள் எழுதியதா?'
'நானெங்கே எழுத... 7G ரெயின்போ காலனி படத்துக்காக கவிஞர் நா.முத்துகுமார் எழுதியது'
'காதலிக்காமல் இதை எழுத முடியாதா?'
'முடியும்... ஆனால் அதில் உயிர் இருக்காது'
'அப்படியென்றால் நீங்கள் ஜோதிகாவைக் காதலித்து கல்யாணம் செய்து குழந்தை பெற்று அந்தக் குழந்தைக்கு கொசுக்கடிக்கும்போது ஜோதிகா அன்போடு போர்வை போர்த்திவிட்டு வாழ்வதுதான் வாழ்க்கை.சரியா?'
'அப்பாடா... ரொம்ப சரி'
'ஒருவேளை தோல்வியடந்தால் கவிதையென ஒன்று எழுதுவீர்கள்'
'வெரிகுட்.ரொம்ப ரொம்ப சரி. சரியாகப் புரிந்து கொண்டாய்'
'இதில் எனக்குப் புரியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. நீங்களும் ஜோதிகாவும் கல்யாணம் செய்து கொள்கிறீர்கள் சரி. ஆனால் குழந்தையை எப்படி உண்டாக்குகிறீர்கள். மாத்திரை மூலம் அல்ல என்று சொல்லி விட்டீர்கள்.அப்படியென்றால் எப்படி?'
கேலியாகப் பட்ட இந்தக்கேள்வியால் கோபப்பட்ட மனோ அவனை தீவிரமாக முறைத்தான்.'சொல்லுங்கள்...நீங்கள்.. குழந்தை...' மனோ கை நீட்டி அந்தப் பேச்சை நிறுத்தினான். ' என்னால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது'
"அவன்" விழிகளை உருட்டி மனோவை விநோதமாகப் பார்த்தான். இரவுப் பூனை மாதிரி அந்த விழிகள் பளபளத்தது.
'சரி.. அது கிடக்கட்டும். கோபம் என்றால் என்ன?'
'நான் உன்னை முறைத்தேனே... அந்த உணர்வுக்குப் பெயர்தான் கோபம்'
'புரிகிறது...நீங்கள் எத்தனை வருடத்துக்கு ஒரு முறை மாத்திரை சாப்பிடுவீர்கள்?'
'சாப்பிடுவோம்...காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு இப்படி சகலவிதமான நோய்கள் வரும்போதும் மாத்திரை சாப்பிடுவோம். வருடத்திற்கு நாலைந்து கிலோவாவது தேறும்'
'காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு என்றால்?'
'போச்சுடா...ஏய்...உண்மையைச் சொல்... உனக்குத் தெரியாது?'
'தெரியாது நண்பரே'
மனோ ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தான். இவன் யார்? நான் ஏன் இவன் கேட்டும் பைத்தியக்காரத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அவனிடமிருக்கும் எந்த விசை என்னை இயக்குகிறது. வேண்டாமென்று நினைத்தாலும் ஏன் வாய் பதில் பேசி விடுகிறது? பேசினான்.
'தலையென்றால், இதோ.. என் வாய் பேசுகிறதே அது இருக்கும் இடம் தலை. இதோ, சட்டை போட்டு மூடியிருக்கிறேனே இந்தப்பகுதியின் பெயர் வயிறு.போதுமா?'
'வலியென்றால்..'
'நான் உன்னை ஓங்கி அறைந்தால் உன் கன்னத்தில் சுர்ரென்று உறைக்குமே அதற்குப் பெயர் வலி. இந்த பஸ் ரோட்டில் ஓடுவதற்குப் பதில் உன்மீது ஓடினால் அப்போது ஏற்படுமே அதற்குப் பெயர் வலி.'
'ம்.. ஆக நீங்கள் மாத்திரை உணவு சாப்பிடுவதில்லை?'
'மடையா, மாத்திரையை உணவாக சாப்பிட முடியுமா? சாப்பிட நிறையப் பொருள்கள் இருக்கின்றன. மீ கோரெங், வடை, பாயாசம். கே எ·சி சிக்கன், நேசமிக்க பெண்ணின் அழகிய உதடுகள்...இப்படி!"
'சரி, மீ கோரெங், வடை, பாயாசம். கே எ·சி சிக்கன், நேசமிக்க பெண்ணின் அழகிய உதடுகள் போன்றவற்றைச் சப்பிட்டபிறகு என்ன செய்வீர்கள்?'
'ஓய்... அந்தக் கடைசி விஷயத்தை விட்டுவிடு. அது சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.'
'சரி, விட்டு விடுகிறேன். சொல்லுங்கள், என்ன செய்வீர்கள்?'
'சாப்பிட்ட பிறகுதானே? ஏதாவது வேலை செய்வோம்'
'வேலையென்றால்?'
'பெரிய்ய லொள்ளுய்யா உன்னோட. வேலையென்றால் தெருக்கூட்டுவது, தொழிற்சாலைகளில் காடி தயாரிப்பது, காய்கறி விற்பது, பஸ் நிலையங்களில் பெண்களை 'சரக்கு' என்று சொல்லி கிண்டலடிப்பது..இப்படி பல முக்கியமான வேலைகள்'
'எனக்குப் புரியவில்லை...'
'அதோ பஸ் ஓட்டுகிறாரே அவர் செய்வதுகூட வேலைதான்'
'சரி, எதற்காக வேலை செய்ய வேண்டும்?'
மனோ தவித்துப் போனான். வெளியே தெரு விளக்குகள் மனோவின் பரிதவிப்பைப் பார்த்து சிரித்தபடி நகர்ந்து கொண்டிருந்தன.
'வேலை செய்யாவிட்டால் பஸ்ஸில் போக ஒரு வெள்ளி அறுபது காசு, தே தரெக் குடிக்க காசு இதெல்லாம் யார் தருவார்? காசு வேண்டுமென்றால் உழைக்க வேண்டுமய்யா'
'உங்கள் தலைவர் தரமாட்டாரா?'
'எங்கள் தலைவர் வாய்ப்புகளைத்தான் தருவார்.அதைப்பயன்படுத்தி முன்னேற வேண்டியது எங்களது வேலை. அவனவன் திறமையைப் பொறுத்து, சம்பாத்தியத்தைப் பொறுத்து, ஸ்டார் தியேட்டரில் சினிமாவிற்கோ, ஷா ஆலம் ஸ்டேடியத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கோ போகலாம்.'
'இசையென்றால்?'
'ஐயோ, சாமி, இவன் இம்சை தாங்க முடியலையே' என்று மனோ கவுண்டமணி ஸ்டைலில் புலம்புவதைப் பார்த்துவிட்டு கண்டக்டர் 'என்னங்க, ஏதாவது பிரச்சனையா?' என்றார். 'பிரச்சனைதான், ஏதாவது ஒரு பாட்டுப் போடுங்க சார்.'
'சுட்டும் விழிச்சுடரே, சுட்டும் விழிச்சுடரே' என்று வடிந்தது இசை.
'இதோ, இதுதான் இசை, இதுதான் பாட்டு, போதுமா?' அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்.
'புரிகிறது.நீ என்ன கேட்கப் போகிறாய் என்று புரிகிறது. பாட்டு என்றால் என்ன? அதுதானே!'
அவன் ஆச்சரியமாக 'அதுதான்' என்றான்.மனோ கை கூப்பினான். 'ஐயா, இதற்குமேல் எனக்குப் பொறுமையில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடு'. அவன் ஏதோ சொல்ல முற்பட்டான். அதற்குள் காப்பார் வந்து விட்டது.
மனோ"அவன்" இறங்குவானா என்று ஆவலாய் கவனித்தான்.இறங்கவில்லை. ஒரு மலாய் இளைஞன் ஏறிக் கொள்ள பஸ் மறுபடியும் கிளம்பியது.
இன்னும் ஐந்து நிமிடத்தில் தோக்முடா வந்துவிடும். மனோ மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாகக் கேட்டான்.
' ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி பேசுகிறாயே..உண்மையைச் சொல், நீ எந்த பைத்தியக்கார மருத்துவமனையைச் சார்ந்தவன்?'
'என்ன நண்பரே...'
'எந்த பைத்தியக்கார மருத்துவமனையில் இருந்து தப்பி வந்தாய் என்று கேட்டேன்'
அவன் கொஞ்ச நேர யோசனைக்குப்பின் சொன்னான், 'நண்பரே...உண்மையில் நான் ஒரு செவ்வாய்கிரகவாசிதான்'
'இதோ பார்யா..எல்லாம் என் நேரம். உன்னை மாதிரி ஒரு பைத்தியத்துகிட்ட மாட்டி நொந்து நூலாகனும்னு விதி.அப்படி இப்படி பேசி கடைசியில் என்னையே முழு பைத்தியக்காரனாக்கி விட்டாய்.'
'நம்புங்கள் நண்பரே.. உண்மையில் நான் ஒரு செவ்வாய்க்கிரகவாசிதான். சிலகாலமாக மனிதர்கள் எங்களுக்கு அனுப்புகிற செய்திகளும், எங்களது கிரகத்தைப் பற்றி அறியச் செய்கிற முயற்சிகளையும் பார்த்துவிட்டு எங்கள் தலைவர் ஒரு குழு அமைத்து மனிதர்கள் மீதான சோதனையை நடத்தி வருகிறார். நானும் அதில் ஒரு அங்கம். எனக்குக் கொடுக்கப்பட்ட பணி - மனிதப் பொறுமையின் எல்லையை சோதிப்பது.
இந்த சில நிமிடங்களில் நான் உங்களிடம் சேகரித்த செய்திகள் ஏராளம். சாதாரண மனிதப் பொறுமையிலும் மூன்று மடங்கு உயர்ந்தது உங்கள் பொறுமை.
உங்களோடு பேசியதில், பழகியதில் மகிழ்ச்சி. உங்களைப்பற்றி, ஜோதிகா பற்றி, நா.முத்துக்குமார் கவிதை பற்றி எங்கள் தலைவரிடம் எடுத்துச் சொல்வேன். ஜோதிகா மீதான உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள். வருகிறேன். மீண்டும் சந்திப்போம்' என்று "அவன்" சொன்ன அந்த விநாடி பஸ் தோக் முடாவில் நின்றது. மனோ அவனை விநோதமாகப் பார்த்தபடி கீழிறங்க முற்பட்டான்.
அப்போதுதான் அந்த் அதிசயம் நிகழ்ந்தது.
திடீரென பஸ்ஸின் கீழ்ப்பாகம் இரண்டாக பிளந்து கொள்ள உள்ளிருந்தவர்கள் உதிர்ந்து விழுந்தார்கள்...அந்த "அவன்" தவிர!
பஸ் மெல்ல மேல் எழத்துவங்கியது...தரையிலிருந்து ஒரு அடி, இரண்டு அடி, மூன்று அடி.... போதுமான உயரம் மேல் எழுப்பியதும் பிளந்த பஸ்ஸின் அடிப்பாகம் மறுபடியும் ஒட்டிக் கொள்ள, அந்த கோலாசிலாங்கூர் பஸ் ராக்கெட் வேகத்தில் ஆகாயத்தை நோக்கிப் பறக்கத் துவங்கியது.
அதை அந்த தோக்முடா இருட்டில் மனோ, ஒரு சீனப்பெண், ஒரு மலாய் இளைஞன், பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் அதிர்ந்து போய் வேடிக்கை பார்த்து நின்றார்கள் என்று நான் சொன்னால் தமிழ்மணம் வாசகர்ளாகிய நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
9 comments:
கிள்ளான் என்றால் என்ன?
நன்றாக பயத்தை கிளப்புகிறீர்கள் நண்பரே.
ரசித்தேன்.
ஸ்ரீதர்
கிள்ளான் ஒரு ஊரின் பெயர் பொன்ஸ்
நன்றி ... ஆனால் நகைச்சுவையென்று வரிசைப் படுத்தியிருந்தேன்... பயத்தைக் கிளறுவதாகச் சொல்கிறீர்கள் :)))
நல்லா கிளப்புறீங்க பீதிய!!!! கதை அருமை சார்!
//'எனக்கு ஜோதிகா மேல் இருப்பது.. அவருக்கு சூரியா மேல் இருப்பது, என்மேல் இல்லாதது'//
இத விட காதலுக்கு யார் விளக்கம் குடுக்க முடியும்.. எங்கயோ போய்டீங்க!!! ஆக மொத்தம் நட்ச்சத்திர வாரம் களை கட்டுதுங்கோ!!!
ப்ரசன்னா
கிள்ளான்ல எங்க பறக்கிற பஸ் ஸ்டாண்ட் இருக்குன்னு .............
'எனக்கு ஜோதிகா மேல் இருப்பது.. அவருக்கு சூரியா மேல் இருப்பது, என்மேல் இல்லாதது'
ஜோதிகா மீதான உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஓ.. ஏதோ புது வார்த்தை என்று நினைத்து விட்டேன் :)
கதை ரொம்ப நன்றாக வந்திருக்கிறது.. இன்றைக்கு எங்கள் கம்பனி பஸ்ஸில் உட்கார்ந்து வரும் போது எங்கே பறந்துவிடுமோ என்று முன்னே பின்னே பார்த்துக் கொண்டே ஏறினேன்..
பயத்தைக் கிளப்புவது போல் தான் சார் இருக்கு :)
பிரசன்னா, பொன்ஸ் வாக்குமூலத்தின் படி இந்தக் கதையை "பீதிக்கதை" என்றே வரிசைப்படுத்திக் கொள்கிறேன் ... :)))
சிங்.ஜெயா... அந்த ஸ்டேட்மெண்ட் என்னுடையது அல்ல... கதாநாயகர் மனோவுடையது ! :)))
நன்றி பிரசன்னா, பொன்ஸ் & சிங்.ஜெயக்குமார்!
Post a Comment