நேற்று முன்தினம் என் வாழ்வில் மூன்று விஷயங்கள் நிகழ்ந்தன. அவை எந்தவிதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. அவையாவன : 1.BCA Academy-யில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட course-ல் கலந்து கொண்டேன். 2. Singapore Flyer இயந்திரக் கோளாறினால் நின்றுவிட, அதிலிருந்த 173 பேரும் ஆறு மணி நேரத்துக்கு மேல் சிக்கி சிரமப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டேன் 3.சாருநிவேதிதாவின் இணையப்பக்கத்தில் தீராநதிக்கு அவரளித்த பேட்டியைப் படித்தேன். தொடர்பற்ற இந்த மூன்று விஷயங்களில் இருந்த தொடர்பு நேற்றுதான் மனதில் தைத்தது.
இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து சிங்கப்பூரில் புதிய கட்டுமானத்துறை வரையறைகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதுபற்றிய 4 நாள் course ஒன்றின் இரண்டாம் நாள் வகுப்பில் நேற்று முந்தினம் கலந்து கொண்டேன். எந்த ஒரு விபத்தும் நமக்கு நிகழாதவரை அது மிகவும் துக்ககரமானது என்ற விஷயம் நமக்கு உரைப்பதில்லை. ஆனால் அத்தகைய விபத்துகளின் வலி எனக்குத் தெரியும். அதை இரண்டு முறை அனுபவித்ததுண்டு. 1992-ம் வருடம் காசிக்குப் பக்கத்திலுள்ளஅன்பாராவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, உடன் பணியாற்றிய நண்பனொருவன் 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு உடல் செயலிழந்து போனான். அதே இடத்தில் பணியாற்றிய இன்னொரு நண்பன், சில வருடங்களுக்குப் பிறகு, வேறொரு கட்டுமானப் பணி விபத்தில் உயிரிழந்ததாகக் கேள்விப்பட்டேன். நிகழவே நிகழாது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது நிகழ்ந்து விடுபவைதான் - விபத்துகள்! நேற்று முந்தினம் ஒரு சீன விரிவுரையாளர் confined space பற்றி பாடம் எடுத்தார். காற்றோட்டமற்ற பூட்டிய அறை கூட confined spaceதான் என்றார். அப்போதுதான் பாடம் நடந்து கொண்டிருந்த அறையை உற்றுப் பார்த்தேன். ஜன்னல்களே இல்லாத, False ceiling போடப்பட்ட அறை. ஜன்னல்கள் இல்லை என்பதை அந்த நொடிவரை நான் உணரவில்லை. "இந்த அறையின் கதவைப் பாருங்கள். அது half hour rated fire door" என்றார் விவுரையாளர். அதாவது அந்த அறைக்குள் நெருப்பு ஏற்பட்டால் அது வெளியே பரவாமலும்,வெளியில் ஏற்படும் தீ உள்ளே வராமலும் தடுத்து விடும் சக்தி வாய்ந்தது அந்தக் கதவு.இவை ஏன் என் பார்வையில் பட்டு மனதில் பதியவில்லை? நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்களைப் பற்றி நமக்குள் இருக்கும் அலட்சிய மனோபாவத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் 'சிங்கப்பூர் ·பிளையரைப்' பற்றிய செய்தியும் வந்து சேர்ந்தது.
சிங்கப்பூர் ·பிளையர் மாலை 4 மணியளவில் திடீரென்று நின்று விட்டதென்றும், அதில் 173 பேர் உள்ளனர் என்றும் சொன்னது வானொலி. சிங்கப்பூர் பெருமை கொள்ளும் கட்டமைப்புகளில் ஒன்று சிங்கப்பூர் ·பிளையர். லண்டனின் புகழ்பெற்ற Londen Eye-யை விடப் பெரியது. இந்த வருடம் மார்ச் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டது. 15 மீட்டர் உயர கட்டிடத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் இந்த giant wheel-ன் சுற்றளவு 150 மீட்டர். 28 பேர் பயணம் செய்யக்கூடிய 28 அறைகள் கொண்டது இந்த ·பிளையர். இந்த அறைகள் capsules வடிவில் இருப்பதால், அந்தப் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஒரு சுற்று சுற்றிவர 30 நிமிடம் தேவைப்படும். அதன் உள்ளிருந்து சிங்கப்பூரின் அழகை இரவு விளக்கொளியில் ரசிப்பது அற்புதமான அனுபவமாக அமையக்கூடும்...சீக்கிரமே போய்ப் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இப்படியொரு கோளாறு. ஏற்கனவே இரண்டு முறை இப்படிப்பட்ட பிரச்சனைகள் நேர்ந்து அவை சீக்கிரமே சரி செய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த முறை அதிலிருந்தவர்கள் 6 மணி நேரம் அந்த capsulesகளுக்குள் சிக்கிக் கொண்டார்கள். எனக்கு சட்டென்று அந்த capsules-ம் ஒரு confined space-தானே என்று தோன்றியது. அந்த வீல் சுற்றுவதை நிறுத்தி விட்டாலும், ஏ.சி, இண்டர்காம் போன்ற மற்ற சேவைகள் முறையாக செயல்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன. அப்பாடா, தப்பித்தார்கள் மக்கள். இந்த செய்திகளை இணையத்தில் படித்தபடியே சாருநிவேதாவின் இணையப்பக்கத்தில் போய் நின்றேன்.
வலைப்பூவில் சூடாக விவாதிக்கப்படும் மனிதராக சாரு இருப்பதால், ஏன் அந்தச் சூடு என்று அறிந்துகொள்ளும் முகமாக நிகழ்த்தப்பட்ட வருகை அது. சாருவின் எழுத்துக்களை அவ்வப்போது படித்ததுண்டு. ஆனால், எதையும் முழுமையாக படித்ததில்லை. அவர் எழுத்தின் சுவாராஸ்யம் அதற்குக் காரணமில்லை. ஏதாவது ஒரு கவனச்சிதறல் எப்படியாவது நிகழ்ந்து கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன் சாரு சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு வந்திருந்தார். அப்போதும் பார்க்க வாய்க்கவில்லை. ஆனால், சிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி புஷ்பலதா அவரைப் பற்றி நல்ல படியாகச் சொன்னார். சாருவின் இணையத்தளத்தில் அவரது பேட்டிகளைத்தான் படித்தேன். தீராநதியின் பேட்டி தீராத சுவாஸ்யத்தோடு நீண்டது. அந்தப் பேட்டியைப் படிக்கும்போது வடிவேலின் 'கைப்புள்ள' கேரக்டர் மனதுக்குள் வந்து வந்து போனதன் காரணம் தெரியலில்லை. அவர் தன்னை ஒரு குழந்தை மாதிரி என்று சொல்லியிருந்தார். ஆனால், அவரது பதில்களில் கூடுதல் பட்சம் நேர்மையிருந்ததாகத் தோன்றியது. அவரது தர்க்கங்களில் உண்மையிருக்கிறதோ இல்லையோ, ஒருவித அப்பாவித்தனமும், புத்திசாலித்தனமும் இருப்பதாகவும் தோன்றியது. ஓரிடத்தில் அரண்மனைகளைப் பற்றிச் சொல்லும்போது "அங்கு பல் துலக்கும் இடம் , உப்பரிகை , நீச்சல் குளம் , குளியலறை எல்லாம் இருக்கும். ஆக்ரா கோட்டையில் மீன்காரன் ஒருவன் அரண்மனைக்குள்ளாகவே யமுனை நதியோடு மீன் கொண்டுவர ஒரு இடம் இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாட , இசைக் கச்சேரிகள் நடத்த இப்படி பல இடங்கள் இருக்கிறது. ஆனால் , எங்கும் கக்கூஸ் மட்டும் இல்லை " என்று எழுதியிருந்தார். அடக் கொடுமையே, வகுப்பறையின் ஜன்னல்களைக் கவனிக்காத மாதிரி, அரண்மனைகளில் இதையும் கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று தோன்றியது. சட்டென்று யோசனை சிங்கப்பூர் ·பிளையருக்கு மாறியது. அங்கும் அதே பிரச்சனைதானே இருந்திருக்கும்... ஆறு மணிநேரம் என்பது குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கும் எவ்வளவு சிரமத்தைத் தந்திருக்கும்...ஒரு capsule-லில் சிக்கிக் கொள்பவர்களின் இயற்கை உபாதைகள் பற்றி எந்த பாதுகாப்பு விதிமுறைகள் கவலைப்பட்டிருக்கப் போகிறது - அந்த விதிமுறையின் பெயர் சாருநிவேதிதா என்று இல்லாத பட்சத்தில்! தொடர்பில்லாத மூன்று விஷயங்களுக்குள் ஏதோ ஒரு தொடர்பு இருக்க முடியும் என்பதை யோசிக்க ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவு பதிவு போடாமலே தூங்கி விட்டேன்!
7 comments:
//தொடர்பில்லாத மூன்று விஷயங்களுக்குள் ஏதோ ஒரு தொடர்பு இருக்க முடியும் என்பதை யோசிக்க ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவு பதிவு போடாமலே தூங்கி விட்டேன்! //
ஹ....ஹ.......ஹ.........
கட்டுமானத்துறையில் விபத்து என்பது முழுவதும் தவிர்க்கமுடியாதது.சிங்கையில் நான் வந்த போது இருந்ததற்கும் நான் வெளியேறிய போது இருந்ததற்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை கண்டேன்.அதை அவர்கள் அனுகிய முறை...வித்தியாசமாக இருந்தது.
முதலில் சரியான விதிமுறைகள்,தப்பு நேர்ந்தால் தண்டனை எல்லாவற்றையும் விட தொழிலாளர்களுக்கு அடிப்படை தேர்ச்சி அதுவும் அவரவர் தேசங்களிலேயே என்று ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்களை வரவழைத்துக்கொண்டார்கள்.இதற்கு சில காலம் பிடித்தாலும் நேர்மையான அனுகுமுறையை பார்த்து வியந்திருக்கிறேன்.
கட்டுமானத்துறையில் புது வேலை ஆரம்பிக்கும் முன்பு Risk analysis report என்ற ஒன்றை கொடுக்கவேண்டும் அதில் எம்மாதிரியான விபத்துக்கள் ஏற்படலாம் அதற்கு என்ன முன்னெச்சரிக்கை முறை மேற்கொள்ளப்படும் என்று ஒப்பந்தக்காரர் சொல்லவேண்டும்.அது சரி என்ற பட்சத்தில் அனுமதி அளிக்கப்படும்,அம்முறை Flyer யில் செய்யப்படவில்லையா? அல்லது கை மீறிய செயலா என்பது விசாரணையில் தெரியும்.இம்மாதிரி சமயங்களில் manual ஆக கீழே இறக்கமுடிகிற மாதிரி வசதி இருக்கனுமே!!
நிச்சயமா..வாழ்க்கை என்பதே தொடர்பில்லா விடயங்களை இணைப்பதுதான்..
SUREஷ் said...
//ஹ....ஹ.......ஹ.........//
:)))
இந்த ஹ....ஹ-வை எப்படி மொழி பெயர்ப்பது SUREஷ் ?
சரியான கேள்வி குமார். பொதுவாக Risk Accessment செய்திருப்பார்கள். Potental Hazards-ஐ பட்டியலிட்டு அதை எதிர்க் கொள்வதற்கான வழிமுறைகளையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஆனால், சிங்கப்பூர் ·பிளையரில் என்ன விதமான பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கே தவறு நிகழ்ந்தது என்ற விஷயம் மெல்ல வெளிவரத்தான் போகிறது...
நானும் உங்கள் கருத்துக்காரந்தான் 'டொன்'லீ
தங்களது பகிர்வுக்கு நன்றி!
நான் "அவசரநிலை விழிப்பு" பயிற்சிக்கு ஜுரோங் தீவிற்குச் சென்றிருந்தேன். அப்போது என் கண்ணுக்கு எட்டியதை இங்கே எழுதி இருக்கிறேன்.
http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_24.html
Post a Comment