Wednesday, December 10, 2008

கவிஞர் நா.முத்துக்குமாரும், சிங்கப்பூர் தேசிய நூலகமும் (நாலு வார்த்தை-009)




"விழி உனக்குச் சொந்தமடி, வேதனைகள் எனக்குச் சொந்தமடி..." என்ற பாடல் வரி தேய்ந்த ரிகார்டு மாதிரி உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது ஓரிரு மாதங்கள். அந்த பாடல் வந்த படம் 7G ரெயின்போ காலனி என்ற விவரம் அறிந்து கொண்டேன். பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் என்றும் தெரிந்து கொண்டேன். "விழி உனக்குச் சொந்தமடி, வேதனைகள் எனக்குச் சொந்தமடி..." என்ற வரி பல கதைகளின் சில சம்பவங்களைக் கண்முன் கொண்டு வந்து காட்டிக் கொண்டிருந்தது. "காட்டிலே காயும் நிலவைக் கண்டு கொள்ள யாருமில்லை" என்ற சோகம் கூட ஒரு இரவில், நீண்ட சாலையின் ஆட்களற்ற தனிமையில் வானம் பார்க்க நிறுத்தியது என்னை. நா.முத்துக்குமாரைப் பார்க்க ஆசைப்பட்டேன்.

செல் நம்பர் வாங்கி, சிங்கப்பூரிலிருந்து நா.முத்துக்குமாரை அழைத்துப் பேசினேன். மிக எளிமையான மனிதராக இருந்தார். அந்த எளிமை இன்னும் பிடித்தது. எப்படியாவது அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வர வேண்டுமென்று தோன்றியது. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம், பாலு மீடியா என்ற முக்கோண சங்கமத்தில் முத்துக்குமார் சிங்கப்பூர் வருவதென்றும், தேசிய நூலகத்தில் "திரைப்படப் பாடல்களும், இன்றைய தமிழ் இலக்கியமும்" என்ற தலைப்பில் அவர் பேசுவதென்றும் முடிவானது. எல்லா ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்தன. விசா ஒரு பிரச்சனையில்லை என்று நம்பினேன். ஆனால் அதுதான் தலைபோகிற பிரச்சனையானது. Chennai Travel agent, on line visa application-ல் முத்துக்குமார் பெயரை எழுத்துப்பிழையோடு கீ இன் செய்து வைக்க, நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்பாக, விசா rejected. எல்லா விளம்பரங்களும் செய்யப்பட்ட நிலையில், என் மனநிலையை யூகிப்பது மிக சுலபம். அங்கே இங்கே ·போன் பேசியும், தேசிய நூலக அதிகாரி சென்னை சிங்கப்பூர் ஹைக்கமிஷனருக்கு ·பேக்ஸ் அனுப்பியும்- ஒரு வழியாக நிகழ்ச்சிக்கு முதல் நாள் காலையில் விசா வாங்கி, மதியம் ·பிளைட் பிடித்து இரவு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நா.முத்துக்குமார்.

அன்றைய தின இரவு, சிங்கப்பூர் வானொலி 96.8-ல் முத்துக்குமார் கொடுத்த பேட்டி சுவையானதாக இருந்தது. தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டவில்லை அவர். தமிழை சரியாக உச்சரிக்காத பாடகர்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்றார். எனக்கும், பேட்டியெடுத்துக் கொண்டிருந்த தீபனுக்கும் தூக்கிவாரிப் போட்டது. அது Live Programme. ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், மறுநாள் தேசிய நூலக நிகழ்ச்சியில் சரியான கூட்டம். அதற்கு அந்த பேச்சுதான் காரணமா என்று தெரியவில்லை. 100 பேருக்கும் மேல் நின்றபடி நிகழ்ச்சியை ரசித்தார்கள். தனது 'தூர்' கவிதை, மனுஷ்யபுத்திரனின் 'கால்கள்' கவிதை போன்றவற்றை மேற்க்கோள்காட்டி எளிமையாக அவர் உரையாற்றிய விதம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. என்ன, மற்ற நிகழ்ச்சிகள் நேரத்தை சாப்பிட்டுவிட, அவருக்கான நேரம்தான் போதவில்லை.

சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 வருட இறுதியில், ஆண்டின் ஆகச் சிறந்த தமிழ்ப் பாடலைத் தேர்ந்தெடுக்கும். கடந்த 3 வருடங்களாக கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல்கள்தான் சிறந்த பாடல்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கவிஞர் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இதோ.. இந்த வருடமும் 100 பாடல்களை அடையாளம் காட்டி, அதிலிருந்து சிறந்த பாடலை தேர்ந்தெடுக்கச் சொல்லியிருக்கிறது ஒலி 96.8. இந்த முறையும் கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல் முதலிடத்தைப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். அப்படி அவரது பாடல் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும் நா.முத்துக்குமார் கவலைப் பட காரணமில்லை. ஒரு போட்டியில் எப்போதுமே முதலிடம் என்பது சாத்தியமில்லாத விஷயம். ஆனால், ஓடிக் கொண்டிருப்பது முக்கியம்.கண்ணதாசன் - வைரமுத்து வரிசையில் அடுத்து இடம் பிடிக்க இருக்கும் இளைய தலைமுறைக் கவிஞர் இவர்தான் என்று எப்போதுமே எனக்குள் இருக்கிறது நம்பிக்கை. அதே நம்பிக்கை ஆயிரம், பல்லாயிரம் தமிழ் நேயர்களிடமும் இருப்பதால்தான் அவரது பாடல்கள் சிங்கப்பூர் மண்ணில் ஹாட்ரிக் அடித்திருக்கின்றன.

Tuesday, December 09, 2008

வை.திருநாவுக்கரசு, ஒரு சில நினைவுகள் (நாலு வார்த்தை-008)

வை.திருநாவுக்கரசு என்ற பெயர் சிங்கப்பூர் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான பெயராக இருந்தது. 'இருந்தது' என்று சொல், இப்போது அப்படி இல்லை என்பதையோ அல்லது இப்போது அவர் இல்லை என்பதையோ உணர்ந்த்தியிருக்கும். சில வாரங்களுக்கு முன் தனது 80களில் மறைந்து விட்டார் வி.டி.அரசு. தமிழ்முரசு நாழிதளின் முன்னாள் ஆசிரியர்.

1995-ம் ஆண்டு நான் முதல்முதலாக சிங்கப்பூர் வந்தபோது, தமிழ்முரசு தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டது. அப்போது அவர்தான் அதற்கு ஆசிரியர். ஒரு முறை சற்றே சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவம் ஒன்றைக் கதையாக்கி அனுப்பியிருந்தேன். அதில் நான் பயன்படுத்தி இருந்த சொற்றொடர் ஒன்றை அப்படியே எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அவர் ஒரு ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். நல்லவேளை...ஒரு பெரிய blunder-ல் இருந்து தப்பித்தேன். பின்நவீனத்துவம், உடலிலக்கியம் என்ற பேச்செல்லாம் இல்லாத அந்தக் காலத்தில், அந்தக் கதையை type set செய்த பெண் 'உங்க ·பிரெண்ட் என்ன இவ்வளவு அசிங்கமா எழுதுறாரு' என்று என் நண்பனிடம் கேட்டாராம். அதுவே அன்று எனக்குக் கிடைத்த அதிகபட்ச பாராட்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், சவால்மிக்க விஷயங்களை வெளியிடும் துணிச்சல் அவருக்கு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

1999-ல் அவரை நேரில் சந்திக்கவும், அவரோடு நெருங்கிப் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வருடம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதைப் பற்றி தமிழ்முரசில் எழுதலாம் என்ற யோசனை. நேரில் வரச் சொன்னார். சென்றேன். சாந்தமான புன்னகை என்று சொல்வார்களே, அந்தப் புன்னகையோடு வரவேற்றார். அவரிடமிருந்த அதீத சுத்தமும் கவனத்தை ஈர்த்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பே அணிகளைப் பற்றிய அலசல், நட்சத்திர விளையாட்டு வீரர்களைப் பற்றிய write up என்று எழுதச் சொன்னார். ராத்திரியெல்லாம் கிரிக்கெட் பார்த்து, காலையில் எழுதி ·பேக்ஸ் செய்து, ஏறக்குறைய 60 நாட்கள் சிரமகதியில் போனது வாழ்க்கை. ஆனால், முடித்து விட்டேன். ·போன் செய்து, வாய்ப்புக்கு நன்றி சொன்னேன். "நான்தான் நன்றி சொல்லனும், ஏன்னா, எந்த ஒரு வேலையும் துவங்குவது சுலபம். இறுதிவரை செய்து முடிப்பதுதான் கடினம்" என்றார் அவர். 1500 சிங்கப்பூர் வெள்ளிக்கான காசோலையையும் அனுப்பி வைத்தார். அதுதான் வை.திருநாவுக்கரசு.

பிறகு சிலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம், சகவயதுத் தோழனிடம் பேசுவதுபோல் சகஜமாகப் பேசுவார். திராவிட இயக்கங்களின் மேல் அவருக்கு இருக்கும் பாசம் அந்தப் பேச்சில் வெளிப்படும். தமிழவேள் கோ.சாரங்கபாணியோடு பழகியது, சிங்கப்பூர் தேசத் தந்தை திரு.லீ.குவான் யூவுடனாக அவரது நட்பு பற்றியெல்லாம் பேசுவார். ஒரு முறை லீ குவான் யூ அவரை அழைத்து, 'இப்போதெல்லாம் இந்தியாவில் காசு கொடுத்து டாக்டர் சீட்டு வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்டாராம். இவரும் தயங்கியபடி, "ஆமாம்" என்றாராம். அதற்கு, "அப்படி டாக்டருக்குப் படித்த ஒருவர், நாளை உங்களுக்கோ, எனக்கோ சிகிச்சையளிக்க நேர்ந்தால் நம் கதி என்னாவது?" என்ற மறுகேள்வி பட்டென்று வந்ததாம் திரு.லீ குவான் யூ அவர்களிடமிருந்து.எவ்வளவு நியாமான கேள்வி. அப்படிப்பட்ட தலைவர்களின் பாரட்டைப் பெற்றவர் வை.திருநாவுக்கரசு. அவரது இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப யாரால் முடியும் என்ற கேள்வி எழுமானால், அதற்கு பதில், இன்றைய நிலையில் வெறும் மெளனமாக மட்டுமே இருக்கும்.

Monday, December 08, 2008

சானியாவிலிருந்து சாய்னாவிற்கு...(நாலு வார்த்தை-007)


சில மாதங்களுக்கு முன்பு வரை, சாய்னா என்ற பெயரைச் சொல்லும்போதெல்லாம் மக்கள் அதை சானியா என்று மொழிமாற்றம் செய்து புரிந்து கொண்டார்கள். இது பழைய நிலை. இன்று சாய்னா நெஹ்வால் என்ற பெயர் மக்களுக்கு நன்றாகத் தெரிகிறது. சமீபத்தில் World Junior Badminton Championships-ஐ வென்றுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த 18 வயது பேட்மிட்டன் வீராங்கனையைக் கொண்டாடத் தயாராகி வருகிறது இந்தியா.

இந்தியா கிரிக்கெட் பைத்தியம் பிடித்த தேசம். அந்த தேசத்திலிருந்து கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டுகளில் சர்வதேசச் சாதனையாளர்கள் உருவாவது அதிசயம், அபூர்வம். அப்படி உருவானாலும், அவர்கள் துருப்பிடித்த விளையாட்டு அமைப்புகளின் உதவி துளியும் இன்றி பெற்றோரின் பல ஆண்டுகால தியாகத்தில் உருவானவர்களாகத்தான் இருக்கிறார்கள். சாய்னாவும் அப்படித்தான். அவரது தந்தை ஹர்விர் சிங் ஒரு விஞ்ஞானி. அவரது சம்பளத்தில்தான் சாய்னாவின் சர்வதேசப் பயணம் துவங்கியது. புகழ்பெற்ற கோச்சான முகமது அரி·பால் சிறுவயதில் பயிற்சியளிக்கப்பட்ட சாய்னாவின் சமீபத்திய வெற்றிகளுக்குக் காரணமாக இருப்பவர் All England Open Badminton Championships பட்டம் வென்ற கோபிசந்த்.

2008 சாய்னாவின் பேட்மிட்டன் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஆண்டு. சர்வதேசப் போட்டிகளில் முக்கியமான வெற்றிகளும், ஊடகங்களின் கவனமும் கிடைத்த ஆண்டு. Chinese Taipai Open போட்டியில் முதல் வெற்றி கிடைத்தது. தொடர்ந்து 2008 Commenwealth Youth Games மற்றும் World Junior Batmitton Championships-ல் வெற்றிகளைப் பெற்றார். ஆனால், பெய்ஜிங் ஒலிப்பிக் போட்டியில் அவர் கால் இறுதிப் போட்டிவரை முன்னேறியதுதான் இந்திய மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. வெண்கலப் பதக்கம் நூலிழையில் தவறியது. அது மட்டும் கிடைத்திருந்தால், சாய்னா இன்னும் பரவலான கவனத்தைப் பெற்றிருப்பார். ஆனால், அவரது தொடர் முன்னேற்றம் உலகின் பெரும் பணக்காரரான மிட்டல் நடத்தும், Mittal Champions Trust-ஆல் கவனிக்கப்பட, அவர்களது பொருளாதார ஆதரவு சாய்னாவிற்குக் கிடைத்திருக்கிறது.

இன்றைய தேதியில், சாய்னா உலகத்தர வரிசையில் 10வது இடத்தைப் பிடித்து விட்டார். இந்த ஆண்டின் துவக்கத்தில் உலகத்தர வரிசையின் Top 25-ல் இடம் பிடிப்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி அவர், 10வது இடத்தைப் பிடித்திருப்பது அந்தப் பெண்ணின் அயராத உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. சீனர்கள், தென்கொரியர்கள், இந்தோனேசியர்கள், மலேசியர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் பேட்மிட்டனில், ஒரு இந்தியப் பெண் சாதிக்கத் துவங்கியிருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். மற்ற 18 வயதுப் பெண்களைப் போல், ஒரு சினிமாவிற்கோ, தோழிகளோடு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கோ நேரமில்லாமல் பேட்மிட்டன், பேட்மிட்டன் என்று ஓடிக் கொண்டிருக்கும் சான்யாவின் அடுத்த இலக்கு Top 5! அதையும் எட்டுவார் ; அதற்கு மேலும் செல்வார் என்று விளையாட்டு வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

Sunday, December 07, 2008

"நாம்" சிங்கப்பூர் காலாண்டிதழ் (நாலு வார்த்தை-006)


சிங்கப்பூர் சிறிய நாடு. இங்கு வாழும் தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், "தமிழ்முரசு" என்ற நாளிதழ் 50 ஆண்டுகளாக இயங்குவதற்கு அது ஒரு தடையாக இருக்கவில்லை. தமிழவேள் கோ.சாரங்கபாணியால் துவங்கப்பட்டது தமிழ்முரசு. தற்போது Singapore Press Holdings (SPH) என்றழைக்கப்படும் பொதுக்குடையின் கீழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழி பத்திரிக்கைகளைப் போல் வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இயங்கி வருகிறது. சினிமா சார்ந்த "இந்தியன் மூவி நியூஸ்" சிங்கப்பூரில் நீண்டநாள் தாக்குப் பிடித்திருக்கும் இன்னொரு தமிழ் மாதப் பத்திரிக்கை. இவற்றைத் தவிர மற்ற பத்திரிக்கைகளால் நிலைத்து நிற்க முடியவில்லை - அவ்வப்போது தோன்றி மறையத்தான் முடிந்தது. இந்திரஜித்தால் துவங்கப்பட்ட "திசைகள்" மாத இதழ் தரமானதாக இருந்தாலும் நிலைக்க முடியாமல் போனதற்கு, தரத்திற்கும் மேல், இன்ன பிற விஷயங்கள் தேவைப்பட்டது காரணமாக இருக்கலாம்.

இன்றைய சிங்கப்பூர்ச் சூழலில் ஒரு தமிழ் காலாண்டிதழ் நடத்துவதற்குக் கூட தொலைநோக்கும், திட்டமிடலும், தளராத மனதிடமும், வலுவான பொருளாதாரமும் தேவைப்படுகிறது. எல்லா செயல்களின் வெற்றிக்குப் பின்னும் இருக்கும் அடிப்படைப் பண்புகள்தான் இவை. பத்திரிக்கையில் அக்கறை கொண்டு தொடர்ந்து பங்களிக்கக் கூடிய திறன்மிக்க எழுத்தாளர்கள், பன்முகத்தன்மை கொண்ட படைப்புகள், ஈர்க்கின்ற வடிவமைப்பு, உள்ளூர் மக்கள் அந்த பத்திரிக்கையோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு, தமிழ் அமைப்புகளின் ஆதரவு, விளம்பரதாரர்களின் அரவணைப்பு, தீவிரமான விநியோகக் கட்டமைப்பு போன்றவற்றின் மீது கட்டப்படுகிறது ஒரு பத்திரிக்கையின் வெற்றி. இந்த வரையறைக்குள் அடங்கும் தமிழ்ப் பத்திரிக்கைகள் சிங்கப்பூரில் இருக்கின்றனவா? அவை வரும் வாய்ப்பிருக்கிறதா? காலத்தின் கைகளில் பதில்.

சின்னபாரதி, பாண்டித்துரை போன்ற இளைஞர்கள் சிங்கப்பூரில் தனிச்சுற்றாக, நண்பர்களுக்காக, "நாம்" என்ற காலாண்டிதழை நடத்துகிறார்கள். மற்றவற்றைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால், அவர்களது இலக்கியத் துணிச்சலைப் பாராட்டுவது அவசியம். "ஏதேனும் ஒரு இலக்கு அல்லது போக்கிடம் இல்லையென்றால், ஏன் நடக்க வேண்டும்?" என்பது இந்திரஜித்தின் கேள்வி. இலக்கிருக்கிறது - எனவே, இந்த இளைஞர்கள் நடக்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்று மூன்று நாடுகளின் பங்களிப்பால், ஒரு Rojak மாதிரி சுவைக்கிறது "நாம்" இதழ். அய்யப்ப மாதவன் போன்ற அனுபவசாலிகளின் எழுத்து அரவணைக்கிறது என்றால், அறிவுநிதி போன்ற இளைஞர்களின் எழுத்து நம்பிக்கையளிக்கிறது. மலேசியத் தமிழ் இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இருப்பவர்களில் மிக முக்கியமானவரான கே.பாலமுருகன் "நாம்" இதழோடு கை கோர்த்திருப்பது ஆரோக்கியமான சூழல்.

நாம் 3வது இதழில் "அவர்கள் தங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் போகும் வழியைப் பார்த்து பிரமிப்புடன் அதைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர். என்ன செய்ய வேண்டுமென்றால், தான் தானாக இருக்க முயற்சித்தாலே போதுமானது." என்ற வரிகள் இருக்கின்றன. அற்புதமான வரிகள். உண்மைதான்...அவனாக இவனாக இல்லாமல், அவன் வழியில் இவன் வழியில் செல்லாமல், நாம் நாமாக இருப்பதுதானே நமக்கு சுகம்? இவர்கள் வெகுதூரம் செல்வார்கள் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. நாமும் நீட்டுகிறோம் ஆதரவுக்கரம்!

Saturday, December 06, 2008

இளையராஜா, வைரமுத்து - சில Ifs and Buts! (நாலு வார்த்தை-005)



இளையராஜா. இந்தப் பெயர் புகுந்து வெளியேறாத தமிழ் உதடுகள் இருக்க முடியுமா? முடியும் என்று நீங்கள் சொன்னால், உங்கள் வயது பத்துக்குள்தான் இருக்க வேண்டுமென்று எளிதாகச் சொல்லி விடலாம். 70களில் தவழத் துவங்கிய இந்தத் தென்றல் துயர் வியர்வையை துடைக்கும் இசைச் சாமரமாக வீசிக் கொண்டிருக்கிறது இன்னும். இதுவரை எத்தனை ஆயிரம் பாடல்கள். பொங்கி வழிந்த எத்தனை இசைக்கோர்வைகள். ஒரு நொடி மெளனத்திற்குப் பின், திரையில் பல வயலின்களின் ஒலியோடு எத்தனைமுறை இசையாக வெடித்திருப்பார் இவர்; ஒரு சின்ன புல்லாங்குழலின் ஓசையில் எத்தனைமுறை நம் மனதை பிசைந்திருப்பார். இசையின் சர்வதேசக் கூறுகளை கரைத்துக் குடித்திருக்கும் விமர்சகப்புலிகள் இளையராஜாவை எப்படி வேண்டுமானாலும் உரசிப் பார்த்துக் கொள்ளட்டும். ஒரு தமிழக கிராமத்தில் ஜனித்து, உலக கிராமத்தின் பிரஜையாக பயணித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் தமிழர்களுக்கு அவர் தமிழ் அடையாளம்.

நம் மகிழ்ச்சியில், சோகத்தில், தனிமையில், காதலில் ஒரு ஓரமாக இளையராஜா எப்போதும் இருக்கவே செய்கிறார். சந்தனக்கடத்தல் வீரப்பன் நடமாடிய பில்லூர் அணைக்கட்டு காட்டுப்பகுதியில் "கேட்டேளா இங்கே" என்று சிறுவர்களாக குதித்திருந்ததும், "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என சப்பாணியாக அலைந்திருந்ததும், "பூங்காற்று திரும்புமா" என்று உருகியிருந்ததும், "இஞ்சி இடுப்பழகி" என்று நெகிழ்ந்திருந்ததும், இளையராஜாவின் இசையால் சாத்தியமாகி இருக்கிறது. மேகமூடமான ஒரு சென்னை நாளில், நண்பர்களோடு கூட்டமாக மோட்டர் சைக்கிளில் மெளண்ட் ரோட்டில் பயணித்து தேவி காம்ப்ளக்ஸில் "தளபதி" பட முதல்காட்சியைப் பார்த்து "ராக்கம்மா கையத் தட்டில்" பலநூறு விசில்களுக்கிடையில் பிரமித்திருந்தது ஒரு வண்ணச்சித்திரமாக இன்னும் மாட்டிக்கிடக்கிறது மனச்சுவர்களில். இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு சித்திரத்தை மாட்டி விட்டிருக்கின்றன இளையராஜாவின் இசைக்கரங்கள்.

பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து என்ற ஜாம்பவான்களின் சேர்க்கை தமிழ்த் திரையுலக வரலாற்றில் அற்புத அத்தியாயம். ஒரு 40 கிலோமீட்டர் சுற்றளவில் ஜனித்த அவர்கள் எட்டிய மைல்கள்கள் எத்தனை..எத்தனை! மற்றவர்களைப் போல், நானும் யோசிப்பதுண்டு. அவர்கள் மட்டும் பிரியாமல் இருந்திருந்தால்? இப்படிப்பட்ட ifs and buts உலக சரித்திரத்தில் ஒரு கோடி உண்டு. அந்த ifs and buts - ல் இவர்களும் சிக்கிக் கொண்டது தமிழகக் கலையுலகிற்கு நேர்ந்த பேரிழப்பு.

பாரதிராஜா, வைரமுத்தை நான் ஒருமுறைக்கு மேல் நேரில் சந்தித்ததுண்டு; பேசியதும் உண்டு. ஆனால், இளையராஜாவை சந்தித்ததில்லை. சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் புதல்வி ஜனனியின் திருமணம் மலேசியாவில் நடந்தபோது அதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.சில அடி தூரத்தில்தான் கவிப்பேரரசு வைரமுத்து நின்று கொண்டிருந்தார். அவரையும் அழைத்து அருகில் நிறுத்திக்கொள்ள ஆசைப்பட்டது மனம். அது நடக்கிற காரியமா? இப்போது யோசிக்கும்போது, முயன்று பார்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது. ஒருவேளை வைரமுத்து ஒத்துக் கொண்டிருந்தால்... ஆனால், பாருங்கள் - இப்படிப்பட்ட ifs and buts இருப்பதுதானே வாழ்க்கையின் சுவாரஸ்யம்? இளையராஜா இன்னொரு சுற்று வருவாரா, வைரமுத்துடன் இணைவாரா என்பதும்கூட இனிமையான Ifs and buts-தான்!

Friday, December 05, 2008

சுப்ரமணிய ராஜூவும், தனுஷ்கோடி மாமாவும்! (நாலு வார்த்தை-004)

எல்லாம் மங்கலாகத்தான் ஞாபகம் இருக்கிறது. சுப்ரமண்ய ராஜூவின் கதைகள். ஏறக்குறைய 20 - 25 வருடங்களுக்கு முன்பு வாசித்தது. அதை வாசித்தது கம்பத்து தாத்தா வீட்டில். கம்பத்திலிருந்து உத்தமபாளையம் போகும் வழியில் தோட்டத்திற்கு மத்தியில் இருக்கிறது தாத்தா வீடு. அந்தத் தோட்டத்தில் வாழை, கரும்பு, சோளம் என்று காலத்திற்கேற்ப பயிர் செய்யப்படும். தோட்ட மத்தியில் அகன்ற, ஆழமான கிணறு உண்டு. நாலைந்து மாமாமார்களும் உண்டு. மதுரை பாஷையில் சொல்வதென்றால் - ஒவ்வொருத்தரும் பாசக்கார பயலுவ.

தனஷ்கோடி மாமா புத்தகங்களை பைண்டு செய்வதில் வல்லவர். அவர் பைண்டு செய்து வைத்திருந்த சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் புத்தகங்கள் அறிமுகம் செய்த உலகத்தை தோட்டத்து வரப்புகளில் உட்கார்ந்தபடி, காக்காய்களின் இடைவெளிவிட்ட கரைதல் களுக்கிடையில் படிப்பது சுகமான அனுபவமாக இருந்தது. கடலில் பாய்மரக் கப்பல்களில் பயணிப்பதும், எதிரிகளிடம் வாளைச் சுழற்றுவதும், இளவரசியின் வனப்பை தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்து பிரமிப்பதும் சாத்தியமானது. தனஷ்கோடி மாமாவின் கால் சற்று ஊனம். தாங்கித் தாங்கிதான் நடப்பார். அவ்வப்போது வலிப்பு வருமென்று சொல்வார்கள். நான் பார்த்ததில்லை. ஒருநாள் தனுஷ்கோடி மாமா கிணற்றில் விழுந்து இறந்து போனார். யாருமற்ற ஒரு வெயில் நாளில் கிணற்றருகில் நின்று கொண்டிருந்தபோது, வலிப்பு வர, உள்ளே விழுந்தவர் காப்பாற்ற ஆளின்றி இறந்து விட்டாரென்று சொன்னார்கள். அவரது மரணத்தை விட, அந்த மரணம் நேர்ந்த விதம் நீண்டநாள் வலித்தது.

அவரது மரணத்திற்குப்பின் ஒரு விடுமுறை நாளில் அவரது பெட்டியை குடைந்து கொண்டிருந்தபோதுதான் சுப்ரமண்ய ராஜுவின் சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் புத்தகத்திற்கிடையில் அது எப்படி வந்தது அல்லது ஏன் வந்தது என்ற கேள்வி அந்தக் கதைகளில் பயணித்த தருணங்களின் எழுந்து கொண்டே இருந்ததது. அது வேறு உலகம். சந்தன வாசனையும், வியர்வை வாசனையும் சமவிகிதத்தில் கலந்து நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும் உலகம். நுணுக்கங்களும், நுணுக்க மீறகளை அனுமதிக்கும் விதிகளும் நிறைந்த உலகம். அதை தனுஷ்கோடி மாமா படித்திருப்பாரா என்று வெகுநாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதேபோல் - வெகுநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்து கொண்டேன், சுப்ரமண்ய ராஜூவும் ஒரு ஸ்கூட்டர் விபத்தில் இளம் வயதிலேயே இறந்து விட்டாரென்று.

Thursday, December 04, 2008

ஜொலிப்பார்களா தமிழக கிரிக்கெட் வீரர்கள்? (நாலு வார்த்தை-003)

தமிழக கிரிக்கெட் வீரர்களை துரதிர்ஷ்டம் பல வடிவங்களில் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருப்பது காலகாலமாக நடந்து வருகிறது. சமீபத்திய உதாரணம் சுப்ரமணியன் பத்ரிநாத். வெங்கட்ராகவனும், ஸ்ரீகாந்தும் அதற்கு விதிவிலக்கு. ஓரிரு ஒருநாள் விளையாட்டுப் போட்டிகளோடு பத்ரிநாத் ஓரம் கட்டப் பட்டிருப்பதை துரதிர்ஷ்டம் என்று சொல்லாமல், வேறெப்படிச் சொல்ல? எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் யுவராஜ் விளையாடக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஸ்ரீனிவாசன், எல்.சிவராமக்கிருஷ்ணன், டபிள்யூ.வி.ராமன், வெங்கட்ரமணா, படானி என, ஓரிரு போட்டிகளோடு சரித்திரமாகிவிட்ட தமிழக வீரர்களின் பட்டியல் வெகு நீளமானது.

சமீபத்திய வரவுகளான தினேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் இன்னும் பல வருடங்களுக்கு விளையாடக் கூடும். தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதும், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மை. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. பார்க்கலாம் - இனிமேல் கிடைக்கும் வாய்ப்புகளை என்ன செய்கிறார் என்று. முதுகு சார்ந்த பிரச்ச்னைகளில் இருந்து மீண்டு வந்திருக்கும் பாலாஜியின் சமீபகால பந்து வீச்சு பரவசமளிக்கிறது. இப்படியே பந்து வீசினார் என்றால், சீக்கிரமே அவரை இந்திய அணியில் பார்க்க முடியும்.

தற்போது தமிழக ரஞ்சி அணியில் விளையாடுபவர்களில் 18 வயது துவக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்திற்கும், வலது கை சுழல்பந்து வீச்சாளர் அஷ்வினிற்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் ஜோசியம் சொல்கிறார்கள். டபிள்யூ.வி.ராமன் தற்போது தமிழக அணியின் கோச்சாக இருக்கிறார். அவர் புத்திசாலி. இடது கை பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கி, துவக்க ஆட்டக்காரராகத் தன்னை உருமாற்றிக் கொண்டவர். ரஞ்சிக் கோப்பையை வெல்லக் கூடிய அணியாக தமிழக அணியை அவர் உருமாற்றுவாரா? Keep Watching!

மலேசிய மக்கள்ஓசையின் முன்னாள் ஆசிரியர் திரு.குரு (நாலு வார்த்தை-002)

திரு.குருசாமியை எப்போது முதல்முதலாக சந்தித்தேன் என்று ஞாபகமில்லை. சந்தித்தேன். பழகினேன். இருந்த அவர் இல்லாமல் போன வருத்தங்களோடு இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். குருசாமி - மலேசிய வாரஇதழ்களான "வானம்பாடி" "மக்கள் ஓசை" போன்றவற்றின் முன்னாள் ஆசிரியர். சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். சிலர், சில நீக்க முடியாத பிம்பங்களை நம்முள் விட்டுச் செல்வார்கள். அந்த வகையில், குறும்புத்தனம் கலந்த அவரது புன்னகை இன்னும் என்னுள் இருக்கிறது ; இனியும் இருக்கும். அவர் மக்கள் ஓசையில் பணியாற்றிய காலத்தில் எனக்கு "வாரம் ஒரு இளமைக்கதை" எழுதும் வாய்ப்பை வழங்கினார். 15 வாரங்கள் போன அந்த இளமைத் தொடர் "அப்பாவிச் சோழன்" என்ற புனைப்பெயருக்கு மலேசியத் தமிழ் வாசகர்களிடம் பரவலான பார்வையைப் பெற்றுத்தந்தது.

குருசாமி - எழுத்தாளர்களுக்கு வரம்பில்லா சுதந்திரத்தைத் தந்தவர்; வாசகர் கடிதங்களை இலக்கிய தரத்துக்கு உயர்த்தியவர்; எங்கேயும், எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர்; வார்த்தைகள் காயப்படக் கூடாது என்ற கவலைப் பட வைக்கும் தொனியில் பேசுபவர். வழுக்கையில் அவரளவு அழகாக இருந்த வேறு ஒரு ஆண்மகனை நான் இதுவரை சந்திக்கவில்லை. அவரது நகைச்சுவை உணர்வு மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு ஒன்று.

1996ம் வருட ஜூன் மாத மலேசியச் சிறுகதைத் திறனாய்வை காப்பாரில் நானும், நண்பர் தண்ணீர்மலையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆதிகுமணன் தலைமை தாங்கினார். பல எழுத்தாளர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள். எழுத்தாளர் பீர்முகமதைக் கிண்டலடிப்பதென்றால் குருசாமிக்கு அவ்வளவு ஆசை. குருசாமி மைக்கைப் பிடித்ததும், எதிர்பார்த்தது போலவே அங்கிருந்த சை.பீர்முகமதைப் பற்றி பேசத்துவங்கினார். "ஒரு முறை பீர்முகமது தனது நண்பரைப் பார்க்கப் போனார். அவர்கள் பேசத் துவங்கினார்கள். பீர்முகமது அவரது நண்பரை வாயைத் திறக்க விடவே இல்லை. தானே பேசிக் கொண்டிருந்தார். 'நான் அதை செய்தேன். இதை செய்தேன்' என்று தன்னைப் பற்றியே மணிக்கனக்கில் பேசி நண்பரை தாளித்து விட்டார். பொறுமை இழந்து நண்பர் நெழியத் துவங்கினார். அதைப் பார்த்த பீர் அவரிடம் "ஸாரி, நானே தொடந்து பேசி உங்களை சிரமப்படுத்தி விட்டேன். நீங்கள் வாயைத் திறக்கவே இல்லை. நீங்கள் ஏதாவது பேசுங்கள்" என்று சொல்ல, நண்பர் நிம்மதிப் பெருமூச்சு விட, சை.பீர்முகமது நண்பரிடம் கேட்டாராம், "சரி, சொல்லுங்கள். நீங்கள் என் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?".

இனி யார் செய்வார் சை.பீர்முகமதை இப்படிக் கேலி?

Tuesday, December 02, 2008

அதிகாலை அலாரமாய் சன் டி.வி (நாலு வார்த்தை-001)

ஒவ்வொரு நாள் காலையும், காபி, டீ, இல்லாமல் என்னை எழுப்பும் சன் டி.வியின் பாடல்கள். அலாரம் போல் அவஸ்தை தரும் வஸ்து இல்லை. சத்தம் சற்று அதிகமென்றால் குறைத்துக் கொள்ளலாம். முற்றிலுமாக அணைக்க வேண்டிய அவசியமில்லை. பிடித்த பாடலென்றால், ஊர் உறங்கும் அதிகாலையில், பழைய பாடல்கள் எழுப்பி விடும் பழைய நினைவுகளோடு கண் மூடியபடி நாமும் நடக்கலாம்.

இன்று காலையும் சன் டி.விதான் எழுப்பியது. "தேவதாஸ¤ம் நானும் ஒரு ஜாதிதானடி","குயிலப் புடிச்சு கூண்டிலடச்சு" என்று ஒரு காலத்தில் வானொலியிலும் மனதிலும் பலமுறை ஒலித்த பாடல்கள் வரிசை பிடித்து நின்றன. "மைக்" மோகன் கோலோச்சிய 80களின் ஞாபகங்கள் வந்தன. சன் டி.வியில் போடாத ஒரு பாடலின் ஞாபகமும் கூடவே வந்தது. வந்ததன் காரணம் தெரியவில்லை. அதிகாலை - காரணம் தெரியாத பலவற்றை அசை போட ஏதுவான நேரம். பொள்ளாச்சியும், அங்கு பார்த்த "கடலோரக் கவிதைகள்' படமும், குடையோடு நடந்துபோன ரேகா டீச்சரும், சத்யராஜின் சற்று பெரிய பற்களுக்குப் பின் ஒளிர்ந்த சங்கும், அசை போட வாய்த்தது இன்று.

நாளையும் காலை வரும். சன் டி.வி பாடல்கள் வரும். என்னோடு நடக்கும் நினைவுகளும் உடன் வரும்.

Monday, December 01, 2008

கவிதையை ஒளித்த கைகள்




நடந்து செல்வது சுகம்.
நேசத்திற்குரியவர்களோடு
கைகோர்த்து நடப்பது அதிசுகம்!

வாழ்க்கை நெடுக...
கை கொடுக்கின்றன கைகள்

ஏதோ சில கைகள்
நட்ட மரங்களின் நிழல் மடிதான்
வெயிலுக்கு வேடந்தாங்கலாகின்றன.

ஏதோ சில கைகள்
பம்பாயில் சுட்ட குண்டுகள்தான்
ரத்தம் குடிக்கும் ராட்சசப் பற்களாகின.

தடுமாறும்போது தடுத்துப்பிடிக்க
கரங்கள் இல்லையெனில்
காயப்படும் முகங்கள்.

கொடுப்பதற்கு கைகள் வேண்டும்.
ஏதும் இல்லையெனில்
இரப்பதற்கும் கைகள் வேண்டும்.

புகைப்படம் எடுப்பதற்கும் கைகள்.
சுவரில் புகைப்படமானவர்களுக்கு
மாலை இடுவதற்கும் கைகள்.
மாலை தொடுப்பதற்கும் கைகள்.
மலரைப் பறிப்பதற்கும் கைகள்.

மலர்ச்செடி நடுபவையும் கைகள்.
மண்ணைத் தொடுபவையும் கைகள்.
ஆறடி மண்ணில்
ஆடி அடங்கியவனின் குழியில்
கடைசியாக கைபிடி மண்ணை
இடுபவையும் கைகள்.

கல்லை கடவுளாய் வடிப்பவை கைகள்.
வடித்த கடவுளைத் தொழுபவைக் கைகள்.
அளவுக்கு மீறி சோதிக்கும் கடவுளைத்
தூக்கி எறிவதும் அந்தக் கைகளே.

கற்கள் எப்போதும் தங்களைக்
கடவுளாக்கச் சொன்னதில்லை.
காரிகையாக்கவும் சொன்னதில்லை.
உண்மையில் அவை கைகளின்
கட்டளைக்குக் கட்டுப்படும்
அடிமைகள்...
படிக்கட்டுகளாய்
கால்மிதி படுவதற்கும் சம்மதிக்கும்
கடைநிலை அடிமைகள்.

ஞாபகத்திற்கும் கைகள் உண்டு.
பழைய நினைவுகளை அவை ஓயாமல்
அழித்துக் கொண்டே இருக்கின்றன.
கனவுகளுக்கும் கரங்கள் உண்டு.
சிதறிக் கிடக்கும் பழைய நினைவுகளை
சேகரித்து அவை எரித்துக் கொண்டே
இருக்கின்றன!

எல்லா இடங்களையும் எட்டிப் பார்க்க
எந்தக் கைகளாலும் முடிவதில்லை.
அம்மாவின் கைகளில் குழந்தைக் குளியல்.
மணமாகிவிட்டால் மனைவி கையால்
அக்கறைக் குளியல்.
இடைபட்ட காலத்திலோ...
இடது, வலது - இரண்டு கைகளுக்கும்
எட்டாத இடமாகவே இருக்கிறது
முதுகின் மத்தி!

காதல்வயப்பட்டவர்கள் சொல்லும்
பொய்களையெல்லாம் கவிதையாக
வரிசைப்படுத்தும் வகையிலும்..
காதலில், கைகள் முக்கியம்.

உலகத்தில் ஆகச் சிறந்த கைகள் எவை?

அருசுவை உணவு தரும் அந்தக் கைகளா..
அழுகை துடைக்கும் ஆதரவுக் கைகளா...
உடுக்கை இழக்கையில் ஓடிவரும் கைகளா...
கொடுத்துச் சிவந்த வள்ளலின் கைகளா...
உழுது சிவந்த உழவனின் கைகளா...
உறுபிணி அகற்றும் கருணைக் கைகளா...
பேரிடர் துயரில் உதவும் கைகளா...

இப்படி வரிசை கட்டின கைகள்.

இறுதியில் உணர்ந்தேன்...
தன்னலம் மறந்து, பிறர்நலம் காக்க
பட்டென்று நீள்வது எந்தக் கைகளோ
அந்தக் கைகளே உயர்ந்த கைகள்.

உற்றுப் பார்ப்போம்.
எந்தக் கைகள்.. இந்தக் கைகள்?