Monday, February 28, 2005

ஏதேனும் விட்டுச்செல் !

முதுகு வளைந்த கேள்விக் குறிகள்
மதிக்கப்படுவதில்லை.

நிமிர்ந்த ஆச்சரியக் குறிகளை
தென்றல் கூட முறித்து விடும்.

நிழல் என்ற அடைப்புக்குறிக்குள்
புல்கூட வளர்வதில்லை.

மரணம் என்ற முற்றுப் புள்ளியை
விரும்பியது யார் ?

நீ வினாக்குறியா ?
ஆச்சரியக்குறியா ?
அல்லது அடைப்புக்குறியா ?

ஏதாவது ஒன்றாய் இருக்கலாம்.
தப்பில்லை.

கூட்டலும் கழித்தலும்தான்
வாழ்க்கை.

சமன் செய்து பார்க்கையில்
மீதமாக வேண்டாம் பாவங்கள்.

வெற்று என்ற பெயரும் வேண்டாம்...
முற்றுப் புள்ளியாயேனும்
முடிந்து போ !

6 comments:

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

கேள்விக்குறிகள் சிந்தனையைத்தூண்டுமன்றோ ? ?
அதன் வழி ஆச்சரியங்கள் கொடுக்கும் ஆக்கங்கள் வரும் ! !
( அதாவது முறியாத ஆக்கங்கள் )
முற்றுப்புள்ளியைப் பிடிக்கும் எனக்கு . .

நான் என்ன குறியா?
ம்,.. நிச்சயம், தற்குறியில்லை : ) : )
மேல் சொன்ன எல்லாக்குறியும்தான்,..

அன்புள்ள பாலு மணிமாறன்,
நல்ல சிந்தனை,..

தொடர்ந்து எழுதுங்கள்.
இன்னும் உங்களின் கவிதைகளைப்படிக்கத் தாருங்களேன்,..

அன்புடன், ஜெ

Vijayakumar said...

பாலு அண்ணே (அப்பாவி சோழன் - கரெக்டா?)

இப்போது தான் கண்ணுற்றேன் உங்கள் பதிவை. முதலில் என் வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பதிவுக்கு. சம்பிளுக்கு ஒரு பதிவைப் படிச்சேன். அருமை அண்ணாச்சி. சிங்கை திரும்பியதும் முழுவதும் படிக்கிறேன். நான் படிச்சி பிடிச்ச கட்டாயம் பின்னூட்டமில்லாம போக மாட்டேன்.

Chithran Raghunath said...

I couldn't read your BIG comment in my blog page ("manitham enappaduvathu yaadhenil" blog). If anything important pl. write a mail to me

பாலு மணிமாறன் said...

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி , ஜெயந்தி, விஜய் !

உங்கள் பின்னூட்டமே ஒரு கவிதை மாதிரி இருக்குங்க ஜெ...

Planning பற்றிய பதிவிற்கு நீங்கள் பின்னூட்டமிட்டதா ஞாபகம் விஜய்... எப்போ சிங்கப்பூர் வாரீங்கோ?

ஈழநாதன்(Eelanathan) said...

அன்பின் மணிமாறன்.உங்கள் பதிவை ஆரம்பித்திலிருந்தே படித்து வருகிறேன்.சிங்கைத் தமிழ் இலக்கியம் பற்றி சில விவாதங்களில் ஈடுபடவும் தகவல்களை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லவும் விருப்பமுண்டு இன்னும் கொஞ்சநாள் ஊன்றிக் கவனித்துவிட்டு வருகிறேன்.நீங்கள் தொடருங்கள்.கவிமாலை நிகழ்வில் மலேஷிய எழுத்தாளர் சை.பீர்முகமது கலந்துகொண்டதாக அறிந்தேன் நீங்களும் போயிருப்பீர்கள் நிகழ்வைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்

பாலு மணிமாறன் said...

அன்புச்சகோதரர் ஈழநாதன் அவர்களுக்கு...

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. சிங்கை இலக்கியத்திற்கான ஆக்கப்பூர்வமான சங்கதிகள் எதுவானாலும் சேர்ந்தே செய்வோம். கவிமாலைக்குப் போயிருந்தேன். உலக இலக்கியங்களையெல்லாம் தொட்டுச் சென்ற சை.பீர்முகம்மதின் பேச்சை பனசை நடராஜன் தமிழ்முரசிற்காக நகலெடுத்திருக்கிறார். விரைவில் இப்பதிவில் அதை இடம் பெறச்செய்கிறேன்...