Tuesday, April 12, 2005

ஆதிகுமணன் என்றொரு மலேசியநண்பன்

மலேசிய மக்களின் நேசத்திற்குரிய மலேசிய நண்பன் நாளிதழின் ஆலோசனை ஆசிரியர் ஆதிகுமணன் மறைந்து விட்டார். தமிழ்உலகம் திறன்மிக்க தன் செல்லப்பிள்ளைகளில் ஒன்றை இழந்து நிற்கிறது.

இந்தியத்தமிழனான நான், 1996-97ம் வருடங்களில் மலேசியாவில் பணிபுரிந்தபோது ஆதிகுமணன் என்ற அற்புதமனிதரை அறிந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தது. உலகில் முதல் முதலாக தமிழ் எழுத்தாளர்களுக்கென்று தனியாக ஒரு கட்டிடம் வாங்கி, அந்தக்கட்டிடத்தின் திறப்பு விழாவை கோலாலம்பூர் பக்கமிருந்த பத்துகேவ்ஸில் நடத்தியபோது மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவரான ஆதிகுமணனை முதல்முதலில் பார்த்தேன்.

பளிச்சென்ற புன்னகை, சினேகம் ததும்பும் கண்கள், இளமை கொப்பளிக்கும் துள்ளல் நடையென வெள்ளை வேட்டி சட்டையில் நடந்துவந்த ஆதிகுமணன் சட்டென்று மனசுக்குள் போய் உட்கார்ந்து கொண்டார். அவரை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் வாய்த்திருக்கும். அந்த விழாவில் தெளிவான உறுதிமிக்க குரலில் அவர் பேசப்பேச, அந்த மனிதர் ஏன் வெற்றியாளராக, எல்லோராலும் விரும்பப்படுபவராக இருக்கிறார் என்ற உண்மை பிடிபடத் துவங்கியது.

ஆதிகுமணனின் இயற்பெயர் குமணபூபதி. அவரது தந்தை பெயர் ஆதிமூலம். அவரும் திராவிட இயக்கங்களில் பிடிப்புள்ள ஒரு தமிழ்த் தொண்டர்தான். தமிழ்நாட்டின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு மலேசியாவின் தமிழ்மலர் நாளிதழில் துணையாசிரியராக பணியில் சேர்ந்தபோது குமணபூபதி-ஆதிகுமணன் ஆனார். கொஞ்ச காலத்திற்குப்பின் வானம்பாடி என்ற வார இதழின் ஆசிரியராக பொறுபேற்றார். அந்த வார இதழின் விற்பனை சாதனை அளவை எட்டுவதற்கு கவர்ச்சிமிக்க ஆதிகுமணனின் எழுத்தும், அவரது அயராத போராட்ட உணர்வும் காரணமானது. ஒரு தமிழ் வார இதழ் 40 ஆயிரம் பிரதிகள் விற்றது இன்றும் மலேசியாவில் சாதனையாகக் கருதப்படுகிறது.

காலம் அவரை வானம்பாடியிலிருந்து வெளியேற்றி, தமிழ் ஓசையின் பொறுப்பாளராக்கியது. அதிகார வர்க்கத்தின் நிர்பந்தங்களுக்கு, கண்முன் கட்டி தொங்க விடுப்படும் ஆசை கேரட்களுக்கு சலனப்படாமல், நேர்மையான பத்திரிக்கையாளராக ஆதிகுமணன் சந்தித்த சோதனைகள் ஏராளம்.ஒரு கட்டத்தில் தமிழ்ஓசையும் இழுத்து மூடப்பட்டது. சோர்ந்தா விடும் சிங்கம்?

சிலிர்தெழுந்து ஆதிகுமணன் எழுப்பிய கோட்டைதான் " மலேசிய நண்பன் " நாளிதழ்.
அதன் துவக்ககாலம் முதல், இன்றுவரை மலேசியநண்பன் - மலேசியத்தமிழ் சமூகத்திற்காக, அதன் உரிமைகளுக்காக, விழிப்புணர்வுக்காக, வாழ்க்கை வளமைக்காக குரல் கொடுக்கும் போர்வாளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வார ஞாயிறும், ஆதிகுமணன் " ஞானபீடம்" என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். மலேசிய மக்களிடையே சின்னப்பொறியாக விழுந்து, காட்டுத்தீயாக பிரபலமடந்த பகுதி அது.

ஒரு தனிமனிதராக, தன்மீது பாசமுள்ள தம்பிகளின் துணையோடு தமிழ் சமூகத்திற்காக ஆதிகுமணன் சாதித்த விஷயங்கள் ஏராளம்.
ஒருமுறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் சரவணன் என்ற தமிழ் இளைஞர் பெருநடை ( long distance walking ) பிரிவில் மலேசியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்தார். அவர் தமிழர் என்ற காரணத்தாலோ என்னவோ, அரசில் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. பொங்கியெழுந்த ஆதகுமணன் தனது பத்திரிக்கையில் இது பற்றி எழுத, ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொடுத்தார்கள் நம் மக்கள். ஒரு தரமான காரை சரவணனுக்கு வாங்கித் தந்து, அதில் அவரை கோலாலம்பூர் வீதிகளில் பவனி வரச்செய்து அழகு பார்த்துதான் ஓய்ந்தார் ஆதிகுமணன்.

இன்னொரு சம்பவமும் நினைவில் இருக்கிறது.....

1997-ல் மலேசிய அரசாங்கம் சீனர், மலாய்காரர், இந்தியர் என பல இனத்தவரும் அடங்கிய குழு ஒன்றை எவரெஸ்டில் ஏற அனுப்பி வைத்தது. முதல் முறையாக நடக்கும் மலேசிய முயற்சி என்பதால், பத்திரிக்கைகள் அந்தக்குழுவின் ஒவ்வொரு அடியையும் விரிவாக எழுதி பரபரப்பூட்டின. மக்களும் ஆர்வமாக அந்தக்குழு எவரெஸ்டில் ஏறிவிடுமா என்று கவனித்து வந்தார்கள். உயரம் கூடக்கூட ஒவ்வொருவராக கழண்டு கொள்ள, குழுவின் அடர்த்தி குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் எவரெஸ்டை எட்டி மலேசியக் கொடியை நட்டது 2 பேர். மோகன் தாஸ் மற்றும் மகேந்திரன். இரண்டு பேருமே தமிழர்கள். எவரெஸ்டை எட்டி சாதனை செய்தது தமிழர்கள் என்ற விஷயம் தெரிந்ததும், மொத்த ஆர்பாட்டமும் அடங்கிப் போய்விட, அவர்களுக்கு விழா எடுத்து தங்கச்சங்கிலி போட்டு பாராட்டி அழகு பார்த்ததும் ஆதிகுமணன்தான்.

சமீபத்தில் இலங்கையின் கரையோரங்களை சுனாமி அரித்தபோது, சத்தமின்றி நீண்டது ஆதிகுமணனின் நேசக்கரம். எங்கெல்லாம், எப்போதெல்லாம் தமிழர்கள் துயர் அடைகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்காக துடித்தது ஆதிகுணனின் இதயம்.

ஒரு வருடத்திற்கு முன்பு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உலகப்பத்திரிக்கையாளர்களை சந்திக்க முடிவு செய்தபோது, மலேசிய நண்பன் சார்பில் சுகுமாரன் ( அக்கினி ) இலங்கை சென்றார். ( அவரை பிரபாகரன் தனித்து சந்திக்க வாய்ப்பளித்தது பற்றி சுகுமாரன் பின்னாளில் தன் கட்டுரையில் குறிப்பிட்டார் ).

மலேசியாவில் எந்த ஒரு தமிழ் நூல் வெளியீட்டு விழாவும் பெரும்பாலும் இரண்டு பேர் தலைமையில்தான் நடக்கும். ஒருவர் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரான டத்தோஸ்ரீ சாமிவேலு, இன்னொருவர் மக்களின் நேசத்திற்குரிய ஆதிகுமணன். இவர்கள் இருவருமே தலைமையேற்பதோடு நின்று விடாமல், கணிசமான தொகை தந்து தமிழ் நூல் அச்சிடும் செலவை ஈடுகட்டி தமிழைக்காக்கும் புரவலர்களாக இருந்தது மலேசிய இலக்கிய உலகம் அறிந்த ரகசியம்.

ஆதிகுமணனை மிக அணுகிப்பார்க்கிற வாய்ப்பு அவ்வப்போது எனக்கு வாய்த்ததுண்டு. ஒவ்வொருமுறையும் அவர் மீதான மரியாதையை அதிகரிக்க வைத்த சந்திப்புகள் அவை. எழுத்தின் மூலம் எனக்கும் அவருக்கும் பரிட்சயம் இருந்தாலும், சை.பீர்முகம்மதின் "பெண்குதிரை" மற்றும் " கைதிகள் கண்ட கண்டம்" நூல் வெளியீட்டு விழாவில்,ஆதிகுமணன் தலைமை தாங்கிய விழாவில், எனக்கும் இடம் கிடைத்தபோதுதான் - அது அணுக்கமானது. காப்பாரில் நான் முன்னின்று நடத்திய மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதந்திர சிறுகதைத் திறனாய்வில் அவரை மறுமுறை சந்தித்தேன். அதன்பின் எந்த நிகழ்வில் சந்தித்தாலும் என்னை பெயர் சொல்லி அழைத்து அன்பு பாராட்டினார் ஆதிகுமணன்.

1997ன் இறுதியில் கோலாலம்பூர் செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில் "எங்கே நீ வெண்ணிலவே" என்ற எனது சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஆதிதான் தலைமை தங்கினார். அன்று அவர் ஆற்றிய உரை இன்னும் என் ஞாபகத்தளங்களில் ஊடாடிக்கொண்டே இருக்கிறது.

பின்பு 1998ல் நான் பணி நிமித்தம் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்து இங்கு நிரந்தரவாசியாகி விட்டாலும், மலேசிய இலக்கிய உலகினுடனான உறவு நீடித்தே வந்தது. ஒருமுறை, ஒரு மலேசிய மாதஇதழுக்காக அவரை பேட்டி கண்டேன். பலருக்கும் கிடத்திராத வாய்ப்பு அது. அரசியல், இலக்கியம், தனி வாழ்க்கை என பரந்து விரிந்த அப்பேட்டியில் எதையும் ஒழித்துப் பேசவில்லை அவர். அந்தப்பேட்டி நெஞ்சுரமிக்க, நேர்மைத்திறன் மிக்க ஒரு பத்திரிக்கையாளரை எனக்கு அறிமுகப்படுத்தியது. ஆதிகுமணன் என்ற மனிதர்மீது எனக்கிருந்த மரியாதை இன்னும் அதிகமானது.

சிங்கப்பூரில் தங்கிவிட்டதால் சமீபகாலங்களில், ஆதிகுமணனனோடான தொடர்புகள் குறைந்து விட்டாலும், பத்திரிக்கைகள் வாயிலாக அவரைப்பற்றி தொடர்ந்து வாசித்தே வந்தேன்.சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது, ஆதிகுமணன் சீரியஸாக நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து மீண்டு விட்டதாகக் கூறினார். அப்பாடா என்ற உணர்வு ஏற்பட்டது. ஆதிகுமணன் இல்லாத மலேசியாவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்னால். ஆனால், விதியின் கரவலிமையை வென்றது யார்?

இன்று ஆதிகுமணன் என்ற சாதனை சரித்திரம் தன் பக்கங்களை நிறைவு செய்து கொண்டது. " விழுந்தாலும் விதையாக விழ வேண்டுமென்று " ஆதிகுமணன் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த அற்புத மனிதர் தான் விழுவதற்கு முன்பே ஏராளமாக விதைத்துவிட்டார் என்பதே உண்மை. அந்த விதைகள் தமிழ் இலக்கிய மலராக, செடியாக, கனி கொடுக்கும் மரங்களாக மலேசியாவெங்கும் பரவிக் கிடப்பதை வரலாறு பதிவு செய்து கொண்டிருகிறது....இனியும் பதிவு செய்யும். அந்தப்பதிவின் பக்கமெல்லாம் ஆதிகுமணன் பெயர் இருக்கும்!

14 comments:

அன்பு said...

ஒரு நல்ல மனிதரைப்பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றியும், பாராட்டுக்களும்.

இளங்கோ-டிசே said...

மலேசியா நண்பன் பற்றிக் கேள்விபட்டிருக்கின்றேன். உங்கள் பதிவு வாசித்தபின்தான் ஆதிகுமணனின் விரிந்த செயற்பாட்டை விளங்கிக்கொள்ளமுடிந்தது. அவ்வளவு இவரைப்பற்றி எனக்குத் தெரிந்திராவிட்டாலும், தமிழால் மிக நெருக்கமாயிருக்கின்ற ஆதிகுமணனின் இழப்பில் துயருறும் நண்பர்களுடன் நானும் இணைந்துகொள்கின்றேன்.

பாலு மணிமாறன் said...

நன்றி அன்பு & டி.சே.தமிழன்.

ஆதிகுமணன் ஒரு சகாப்தம். எதிர்காலம் அவரை இன்னும் இன்னும் அதிகம் பேசும்.

Vijayakumar said...

பாலு,

ஆதிகுமணன் என்ற நல்ல மனிதரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்துள்ளீர்கள்(எனக்கு).இதை படிக்கும் போது அவர் இழப்பு ஈடுகட்ட முடியாதென தெரிகிறது. அவருடைய லட்சியங்கள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்.

பாலு மணிமாறன் said...

அவரை பற்றி எழுத இன்னும் எவ்வளவோ விஷயங்கள் உள்ளது விஜய். அவரை அருகிலிருந்து நீண்டநாள் பார்த்த ,மலேசிய நண்பன் சுகுமாரன் போன்ற, யாராவது சீக்கிரமே அவரைப்பற்றிய புத்தகத்தை எழுதுவார்கள் என்ற நம்புகிறேன்.

பாலு மணிமாறன் said...

ஆதிகுமணனனைப் பற்றி அடுத்த கவிமாலையில் கருத்து பகிர்ந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார் பிச்சினிக்காடு இளங்கோ. அதில் ஆதிகுமணனைப் பற்றி இன்னும் அதிகமாக அறிய வாய்ப்பிருக்கும் பனசை!

meenamuthu said...

ஆதிகுமணன் மறைவிற்குப்பிறகு தனக்கும் ஆதிகுமணனுக்குமான ஆரம்பகால சம்பவங்களை நினைவுப் படுத்தி அருமையான கட்டுரை
ஒன்றை நண்பனில் எழுதியுள்ளார்!அவரின் நீண்டகால நண்பர் அக்கினி அவர்கள்.

அவரின் மறைவு நம் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற ஓர் உணர்வு!.

அன்பு
மீனா

பாலு மணிமாறன் said...

ஆதிகுமணனின் இடத்தை நிரப்பக்கூடியவராக என் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாரும் தெரியவில்லங்க மீனா...ஆனால் ஒரு பத்திரிக்கையாளராக அவர் விட்டுச்சென்ற இடத்தை அக்கினி, "தென்றல்" வித்யாசாகர் போன்றவர்கள் நிரப்ப முடியும் என்று தோன்றுகிறது

Arul said...

நேற்றுவரை வெறும் பெயராக என் மனதில் நின்ற ஆதிகுமணனை ஒரு மாமனிதராக அடையாளம் காட்டிய பதிவுக்கு நன்றி!

Anonymous said...

மலேசியாவிற்கு வெளியே அதிகம் அறிமுகமில்லாத ஆதிகுமணனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

Anonymous said...

Aadhi Kumanan endre peyarai mariyadayodu Malaysia tamizhargal ucharipadai parthu adisayam adaindhirukkiraen..ungal padhivu Yem pondre India tamizharukku oru kan thiravu..Nandri.. - J.Vijay

meenamuthu said...

நாளை மறுநாள் 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு ஜாலான் டெம்ப்ளர்,
பெட்டாலிங் ஜெயா,தோட்ட மாளிகயில் ஆதிகுமணன் அவர்களுக்கு டத்தோ சுப்ரா இரங்கல் கூட்டம் தலைமையில் நடக்க இருக்கிறது.(இரங்கல் உரை)வைரமுத்து கலந்துகொள்கிறார். மலேசியநண்பன் ஆதரவோடு மலேசிய எழுத்தாளர்சங்கம் இதனை நடத்துகிறது. உங்களுக்கு இது விபரம் தெரியுமா பாலு?ஆதிகுமணன் மேல் இத்தனை
மதிப்பு வைத்திருக்கும் உங்களைப் போன்றோர் அவசியம் இதில் கலந்து கொள்ளவேண்டும்.

அன்புடன்
மீனா.

meenamuthu said...

டத்தோ சுப்ரா தலைமையில் இரங்கல் கூட்டம் நடக்க இருக்கிறது.

மன்னிக்கவும் வார்த்தைகள் இடம் மாறிவிட்டது

அன்புடன்
மீனா.

பாலு மணிமாறன் said...

தற்போது சிங்கப்பூர்வாசியாகி விட்டதால் - கோலாலம்பூர் நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத நிலை. நாளை ( 24/04/05 ) நிங்கப்பூரில் ரெ.கார்த்திகேசு அவர்களோடு ஒரு சந்த்திப்பிற்கு ஏற்பாடாகி இருக்கிறது. அதில் ஆதிகுமணனுக்கு அஞ்சலி செலுத்த எண்ணம். கோலாலம்பூர் நிகழ்வைப்பற்றி - முடிந்தால் - விரிவாக எழுதுங்கள் !