Monday, January 23, 2006

ஒரு சிங்கப்பூர் (பற்றிய) கவிதை

மாலைக்கும் இரவுக்கும் மத்தியில் ஒரு மயக்க நேரம்.
பழமையும், புதுமையும் பொத்திக்கிடக்கும் தேக்கா
விட்டு புகிஸ் எம்ஆர்டி நோக்கி நடக்கும் கால்கள்....

என்னைக்கண்டதும் சாலையோர புற்களின் சன்ன
முகத்தில் சின்னப்புன்னகை.என்ன என்றது எனது
பார்வை.

முகத்தில் முள்ளாய் முடி. சவரம் செய்ய சமயமில்லையா?
எங்களைப்பார்...முறைதவறாமல் முடிவெட்ட மனிதர்கள்.
உன்னைப்போல் அநாதை இல்லை நாங்கள் - என்றன
புற்கள்.

என்ன இது எள்ளல் என எட்டி நடந்தேன்.சட்டை
தொட்டு சடசடத்தது காற்று.

உசுப்பி விட்டால் ஓட்டமெடுப்பது, இல்லையென்றால்
ஓய்ந்துகிடப்பது, உன்னைப்போல் இல்லை நான்.
களைக்காமல் சுற்றும் கால்கள் எனக்கு. மனிதர்களுக்கு
தீயெரிக்க, மூச்சிரைக்க முழுசாய் என் தயவு தேவை -
என்று காதில் முணுமுணுத்தது.

மூச்சிரைத்தது.முகம் துடைத்து நடந்தேன். சிக்னல்
சிவப்பாய் சிரித்தது.

என்ன அவசரம் ? ஓட முடியாது நீ...உன்னை
ஒழுங்குபடுத்தத்தான் நான். ஒழுங்குபடுத்துதல்
மட்டுமல்ல...பச்சை, மஞ்சள், சிவப்பு என ஒழுங்காய்
இயங்குதல் என் வழக்கம்.நீ எப்படி? - என்று கேட்டு
கண்ணடித்தது.

படபடத்து நடந்து பாலம் தொட்டேன்.பாலத்தின்
பாதம் தொட்டு படபடப்பற்ற அழுக்கு ஆறு. என்னைப்
பார்த்ததும் சலசலத்தது.

ஆறு எனது இயற்பெயர். அழுக்கு ஆறு என்பது
ஆளாளுக்கு என்னை அழுக்காக்கிவிட்டு நீங்கள் இட்ட
புனைப்பெயர்.இருந்தாலும் உங்களையெல்லாம்
சுத்தம் செய்வதே சுகம் எனக்கு - என்று சொல்லி
உடல் சிலிர்த்தது.

வேகமாய் நடந்து தொட்டேன் புகிஸ் எம்ஆர்டி. ரயிலின்
கதவுகள் திறக்கக் காத்திருந்தேன். உச்சத்திலிருந்து
ஒரு சத்தம். மேலே சிசிடிவியின் விழிகள் சிரிப்பாக...

இப்போதாவது என்னைப் பார்த்தாயே...பலபல இனங்கள்
பலபல மனங்கள் தினமும் படிப்பது என் பழக்கம்.
அக்கம் பக்கத்தையோ, அடுத்த வீட்டையோ அணுகிப்
பார்த்ததுண்டா நீ? தான் தவிர்த்து, நாம்
உணர்ந்ததுண்டா? - அம்பாய் என்னிடம் கேள்வி.

வந்து சேர்ந்தது எம்ஆர்டி. நழுவி உள்புகுந்தேன்.
விழுந்த வினாக்களின் வெப்பத்தில் வேர்த்திருந்தது
மனசு. நியாயம் சுட்டது. அமர்தல் நலம் என்றன
கால்கள். வெற்றிருக்கை தேடியது விழி.

அதோ ஒரு இருக்கை... அசந்து அமர விரைந்தேன்.
உற்றுப்பார்த்த இருக்கையின் உதடுகள் என்னிடம்
ஏதோ சொல்ல எத்தனிக்க...எதற்கு வம்பென
பயணம் முழுதும் நின்றே சென்றேன்.!

3 comments:

Unknown said...

Antha kadasi varigalil kalakki vitteergal...

சிங். செயகுமார். said...

கண் மொழி கதை சொன்னதா?
என் மானம் தன் மானம்
எல்லாம் சேர்ந்து எனக்குள்ளும்
என்னை கட்டியதா?
சொல் வார்த்தை
சொல்லாத கை வார்த்தை
மெல்ல பிரியும் இதழ் வார்த்தை
இதையும் மிஞ்சியதே
கதை சொன்ன கண் வார்த்தை

பாலு மணிமாறன் said...

Nandri Dev & Jeyakumar !!!