Sunday, December 21, 2008

ஒலி 96.8 என்ற தமிழ்த் தோழன் (நாலு வார்த்தை-022)

சிங்கப்பூர் வானொலி, 'ஒலி 96.8'-ன் நேயர்களின் மனதுக்கு மிகப் பிரியமான படைப்பாளர் குமாரி விமலா சமீபத்தில் திருமதி.விமலாவாக ஆகிவிட்டார். சிம்ரன் மற்றும் ஜோதிகா திருமணம் செய்துகொண்ட பொழுது தமிழக இளைஞர்கள் எப்படித் தவித்துப் போனார்களோ, அதற்கு சற்றேறக்குறைய சமமான அளவில் சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களும் இந்தத் திருமணத்தால் தவித்துப் போனார்கள். அவர்கள் மனதில் ஊதி, ஊதி பெருத்துக் கொண்டிருந்த கனவு பலூன் படாரென்ற சத்தத்தோடு வெடித்து விட்டது. ஏனோ தெரிவதில்லை, சில ஆண்கள் அல்லது சில பெண்களின் திருமணம், சில ஆண்கள் மற்றும் சில பெண்களின் மனதுக்குள் விவரிக்க முடியாத சோகத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அடர்ந்த சோகத்திலும் 'அம்மா விமலா...நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்மா...நல்லா இருக்கணும்' என்று செவாலியர் சிவாஜி மாதிரி அந்த இளைஞர்கள் மொத்தமாக வாழ்த்தியது, விமலாவின் பிரபலத்தைச் சுட்டுகிறது; அவர் மீது சிங்கப்பூர் நேயர்கள் கொண்டுள்ள அபிமானத்தைக் காட்டுகிறது. விமலா, சிங்கப்பூர் வானொலி மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் மக்களுக்கிடையில் உள்ள காலகால நெருக்கத்தின் சமீபத்திய அடையாளம். 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் ஒலி 96.8, மக்களின் வாழ்வின் முக்கிய தருணங்களில் ஏதேனும் சிலவற்றில் இடம் பிடித்திருக்கிறது.

சிங்கப்பூர் பற்றிய எனது முதல் ஞாபகத்திலும் ஒலி 96.8-ற்கு முக்கிய இடம் உண்டு. ஒரு 1995ம் வருடத்திய இருட்டில் நான் முதல்முதலாக சிங்கப்பூர் மண்ணில் கால் பதித்தபோது, என்னை தாமான் ஜூரோங்கில் உள்ள குடியிருப்பிற்கு அழைத்துச் செல்ல, கம்பேனிக் கார் காத்திருந்தது. அகன்ற சாலைகள், அதை இரண்டாகப் பிரிக்கும் இரும்புத் தடுப்புகள், அழகான ஒழுங்குபடுத்தப்பட்ட மரங்கள், தலைமுடி வெட்டப்பட்ட செடிகள், உயர்ந்த விளக்குக் கம்பங்கள், அதிலிருந்த வடித்து சாலையை நிறைத்துக் கொண்டிருந்த மஞ்சள் வெளிச்சம், முதுகு முழுக்க சிவப்பு விளக்குகளோடு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள்... நிஜமாக நான் பட்டிக்காட்டான், ஆ..வென்று வாய் பிளந்து பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்திருப்பேன்? வானத்தில் மிதந்து கொண்டிருந்த என்னை பூமிக்குக் கொண்டுவந்தது சிங்கப்பூர் வானொலிதான். காருக்குள் ஏதோ ஒரு திரைப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த இசை, ஸ்டீரியோ எ·பெக்டில் காருக்குள் பரவி என்னுள் நுழைகிறது. அந்த காரில் தூவப்பட்டிருந்த நறுமணம் புலன்களில் சிலிர்க்கிறது...வெளியே ஒரு சொர்க்க பூமி...உள்ளே ஒரு இசை சிம்மாசனம்...ஒரு அரசன் மாதிரி நவீன ரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த இரவு, பல ஆயிரம் பயணங்களைக் கடந்தும் மனசிலிருக்க, சிங்கப்பூர் வானொலி முக்கிய காரணம். இப்படி சில முக்கியமான தருணங்களை ஒவ்வொரு சிங்கப்பூர் தமிழரின் வாழ்க்கையிலும் தந்திருக்கிறது ஒலி 96.8.

சிறிது காலத்திற்கு முன்புவரை அழகிய பாண்டியன் அதன் தலைவராக இருந்தார். அவரே படைத்த 'வானம் வசப்படுமே' என்ற, சாதனை மனிதர்களைப் பற்றிய தன்முனைப்புத் தொடர், பலரையும் வலுவாகச் சென்று சேர்ந்தது. பின்னர் புத்தக வடிவிலும் வெளிவந்தது. ஒலி 96.8 தற்போது தீபன் மற்றும் கீதாவின் வழிகாட்டலில் வெற்றி நடைபோடுகிறது. பழைய, புதிய முகங்கள் கலந்த கலவையாக இருப்பதே ஒலி 96.8ன் பலம். நிகழ்ச்சிகள் பிரிவு, செய்திப் பிரிவு என்று இரண்டு பிரிவாக இயங்குகிறது ஒலி. நிகழ்ச்சிகள் பிரிவில் தீபன், பாலா, ரெ.சோமசுந்தரம், பிரேமா, மீனாட்சி சபாபதி, பாமா, ர·பி போன்ற முதல் தலைமுறையும், திருச்செல்வி, விமலா, விஜயா என்ற அடுத்த தலைமுறையும் கலந்து, சமூக அக்கறையும், பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்த சுவையான நிகழ்ச்சிகளைப் படைக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளில் மீனாட்சி சபாபதியின் தமிழுணர்வு பளிச்சென்று வெளிப்படுவதை நேயர்கள் உணர்வதுண்டு. செய்திகள் பிரிவில் செ.பா.பன்னீர் செல்வம், எஸ்.பீட்டர், பொன்.மகாலிங்கம் போன்றோர் சபா.முத்து நடராஜனோடு சேர்ந்து இயங்குகிறார்கள்.

சமையல் செய்தபடி வானொலி கேட்கும் பெண்களும், காரோட்டியபடி வானொலி கேட்போரும், வேலையிடத்தில் வானொலியின் இசைப் பின்னணியில் பணியாற்றுவோரும் ஒலி 96.8ன் நிரந்தர நேயர்கள். மகாபாரத்தை வானொலி நாடகமாக்கிய பெருமையும் 'ஒலி'க்கு உண்டு. பலவருடங்களுக்கு முன் ஒலிபரப்பான மகாபாரதம் இப்போது மறு ஒலிபரப்பாகிறது. Curise பயணம், ஆஸ்திரேலியப் பயணம் போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் நேயர்களோடு அணுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது ஒலி. அது புதிய தலைமுறை படைப்பாளர்களைத் தொடர்ந்து உருவாக்கி வரும் விதம் எதிர்காலம் பற்றி நம்பிக்கையளிக்கிறது. தமிழை சிங்கப்பூர் இளையர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஒலி 96.8ன் பங்கு மிக, மிக முக்கியமானதாகும். "வெறும் சொற்களோடுதான் வேலை செய்கிறோம் என்று சில சமயம் அலுப்பு ஏற்படும். ஆறுதல் தருவது - எல்லாம் முடிந்த பிறகு சொல் மட்டுமே மிஞ்சும் என்று சர்ச்சில் சொன்ன சொல்!" என்று தன்னைப் பற்றிய குறிப்பில், ஒலி 96.8ன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் இந்திரஜித் (தற்போது அவர் ஒலி 96.8லிருந்து வெளியாகி விட்டார்). உண்மையில் ஒலி 96.8 என்பது வெறும் சொல் மட்டுமல்ல, சிங்கப்பூர்த் தமிழர்தம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம்.

ஒலி 96.8ன் இணையப் பக்க முகவரி :
http://www.oli.sg/

விமலாவின் வலைப்பூ முகவரி :
http://davimcicode.blogspot.com/

1 comment:

வடுவூர் குமார் said...

சிங்கை வாழ் தமிழரின் வாழ்வில் இது ஒரு அங்கம்.
நானும் 1995யில் தான் வந்தேன்.