Monday, March 13, 2006

இங்கு இப்படியாக இலக்கியம்

ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்
சுஜாதா, பாலகுமாரன்
இன்னும் எவர் எவரோ

நூலக அடுக்குகளில் வரிசையாக
எத்தனையோ நாளாய்
என்னோடு பேச....

மன்னிக்கவும்.

ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு.

ஒரு மணி நேர இண்டர்னெட்டில்
பிரான்ஸ் தேசத்துப் பெண்ணோடு
பில் கிளிண்டன் பற்றிப்பேச
இன்னும் இருப்பதோ இருபதே நிமிடம்!

எங்கே போய்விடும் இலக்கியம்?
பேசலாமே பின்னொருநாள்!

Saturday, March 11, 2006

எனும் நண்பர்களே.....


எம்.ஆர்.டி பயணங்களில்
உட்கார இடமிருந்தும்
நிற்கும் என்னை
உற்றுப் பார்ப்பதேன்
மனிதர்கள்?
நிற்பது பிடிப்பவர்கள்
நிற்கலாம்தானே?

ஞாயிற்றுக்கிழமைகளில் -
தேக்காவீதிகளை
தேய்ப்பதும்..
ஆர்ச்சர்ட் ரோட்டை
அளப்பதும்..
திரையரங்கு வாசலை
மொய்ப்பதும்தான்..
இளமையின் அடையாளமா?
உறக்கம் பிடிப்பவர்கள்
உறங்கலாம்தானே?

இளமையில் காதல்
அவ்வளவு அவசியமா?
பெண்மீது
பூப்பதுமட்டுமா காதல்?
சன்னலில் கிளைகள் நீட்டும்
இளம்பச்சை மரத்தின் மீது
என்னுள்ளே பூப்பதற்கும்
இந்தப் பெயர்தானே?

நீங்கள் நீங்களாய்
இல்லாமல் இருக்கலாம்...
நான் நானாய்
இருப்பது தவறா
?

Friday, March 10, 2006

மறைந்து, மறைந்து போன ஒரு பதிவு!



இரண்டு, மூன்று தடவை இந்தப்பதிவை வலைப்பூவில் போட்டுவிட்டேன். ஆனால். .. காணாமல், காணமல் போய் விடுகிறது. இந்த முறையாவது, இது இப்படியே இருக்க...எல்லா ஆண்டவர்களும் அருள் புரிவார்களாக!!!!!


இன்றைய திரைப்படப் பாடல்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் உண்டு.இருந்தாலும் அவற்றை நாம் நம்மையறியாமல் கேட்ட படியோ,முணுமுணுத்தபடியேதான் இருக்கிறோம்.

அத்தகைய பல பிரபலமான பாடல்களைசமீபத்திய திரைப்படங்களில் எழுதி வரும் இளம் பாடலாசிரியர், கவிஞர்நா.முத்துக்குமார். அவர் கலந்து கொண்ட இலக்கிய பல்சுவை நிகழ்ச்சி சென்ற25/02/06 அன்று மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூர் விக்டோரியா ஸ்ட்ரீடில்அமைந்துள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம் மற்றும் பாலு மீடியாமேனேஜ்மெண்ட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.திரு விஷ்ணு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்நூலக வாரிய மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா.

தொடர்ந்து 'சுட்டும் விழிச்சுடரே', 'காதல் யானை வருகிறதே'பாடல்களுக்கும், திரு அமலதாசன் வரிகளுக்கு திரு குணசேகரன் இசையமைத்துநான்கு மொழிகளுள் முதலாவதாக வென்ற "சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே"பாடலுக்கும் நிறைவான நடனவிருந்து படைத்தனர் கவிதாகிருஷ்ணன் குழுவினர்.அதன்பின் மாணவர்கள்பங்கேற்ற "திரைப்பட பாடல்களால் சமுதாயத்துக்கு நன்மையா? தீமையா?" என்றகலக்கல் பட்டிமன்றம் நடைபெற்றது.

' நான் ஆணையிட்டால்,' 'தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பழைய பாடல்கள்காலம் கடந்து வாழவில்லையா? ' நல்ல பேரைவாங்க வேண்டும் பிள்ளைகளே' போன்ற பாடல்கள் குழந்தைகளுக்கு நன்னெறிகளைபோதிப்பதாகதானே உள்ளது. இன்றைய திரைப்படங்களிலும்,கவித்துவம் நிறைந்த'காதல் கடிதம் தீட்டவே', தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும்'காலையில் தினமும்கண்விழித்தால் நான் கைதொழும்' போன்ற பாடல்கள் நிறைய உள்ளனவே. எனவே அன்பை, கருணையை, மனித நேயத்தை வளர்க்கிறதுதிரைஇசைப் பாடல்கள் என்று வாதிட்டனர் " நன்மையே" என்ற தலைப்பில் பேசிய அணியினர்.

'கட்டிப்புடிக் கட்டிப்புடிடா' போன்ற விரசப் பாடல்களும், 'சோடாபாட்டில்கையில' போன்ற வன்முறைப் பாடல்களுமே அதிகமாகஉள்ளன. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிப் பாடல்களில் தமிழ்ச்சொற்கள் உண்டா?தமிழ்ப்பாடல்களில்தான் 'கண்ணும் கண்ணும் நோக்கியா?', 'ஷக்கலக்க பேபி',என்றெல்லாம் 'கலப்படம்' செய்கிறார்கள். பரவாயில்லையென்று இவற்றைவிட்டுவிட்டால் நன்னீர் குளத்தில் நஞ்சை கலந்தது போலாகி விடும் என்றுவேடிக்கையாக தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர் "தீமையே" என்றஅணியில் பேசியோர்.

நடு நடுவே தன் நகைச்சுவைப் பேச்சால் கலகலப்பூட்டிய நடுவர் திரு சேவகன்மாணவர்களின் சிறப்பான பேச்சை கேட்டு'சிங்கையில் தமிழ் தழைத்து வாழும் என்ற நம்பிக்கை வலுக்கிறது' என்றார்.மேலும் 'ராக்கம்மா கையத்தட்டு' என்ற துள்ளாலோசைப்பாடலிலும் 'குனித்த புருவமும்' என்ற ஏழாம் நூற்றாண்டு இலக்கியம்இருக்கிறதே! `ஏ குட்டி' போன்ற பாடல்களையும்தமிழ்ப்பாடலைச் சிதைக்கும் தமிழ்த் தெரியாதோர் பாடும் பாடல்களையும்அன்னப்பறவையென ஒதுக்கி விடுங்கள். 'இன்னிசை பாடிவரும்' என்ற பாடலில்'காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை' என்ற அறிவியல் செய்தி,'ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாடலில் 'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு' போன்றதத்துவக் கருத்துக்கள் நிறைந்து கிடக்கன்றன. அந்தாதிப் பாடலாக அமைந்த கண்ணதாசனின் 'வசந்தகால நதிகளிலே','கண்ணோடு காண்பதெல்லாம்' போன்றஇலக்கிய நயம் கொணட எண்ணற்ற நல்ல பாடல்களைக் கேளுங்கள்" என்று கூறி"திரைபடப் பாடல்களால் சமுதாயத்துக்குநன்மையே" எனத் தீர்ப்பளித்தார்.

கவிஞர் நா.முத்துக்குமாரைப் பற்றிய அறிமுகஉரை நிகழ்த்தினார்சிவஸ்ரீ.சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8-ல் 2005-ம் ஆண்டுமுதலிடத்தைப் பிடித்த 'காதல் வளர்த்தேன்' என்ற பாடலையும், 2006-ம் ஆண்டுமுதலிடத்தைப் பிடித்த 'சுட்டும் விழிச்சுடரே' என்ற பாடலையும் எழுதியவர் திரு நா.முத்துக்குமார்.

இவர் எழுதிய 'உனக்கென இருப்பேன்', என்ற பாடல், தான் சென்ற கார் ஓட்டுனரைகண்கலங்க வைத்ததென்றும், தமிழ் சரளமாக பேச முடியாதவர்களும், "உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களன்றோ" என்று பாடுவதையும் சுவைபடக் கூறினார்.'காட்டிலே காயும் நிலவை' என்றும் 'அய்யர் பொண்ணு மீன் வாங்க வந்தா'என்றும் எல்லாவிதமான பாடல்களையும் எழுதத் தெரிந்தவர். 'புலி வளர்க்ககாடும் காசும் இல்லாததால் நாங்கள் நாய் வளர்த்தோம்' போன்ற நல்லகவிதைகளையும் படைத்துள்ளார்" என்ற சிவஸ்ரீ இணையம் உட்பட பெரும்பாலும்பாடலாசிரியரின் பெயர்கள் குறிப்பிடப் படுவதில்லை என்ற ஆதங்கத்தையும்வெளிப்படுத்தினார்.

'திரைப்படப் பாடல்களும் இன்றைய தமிழ் இலக்கியமும்' என்ற தலைப்பில் பேசியகவிஞர் நா.முத்துக்குமார் தான் மூன்றாவதுவகுப்பில் படிக்கும் போது கவிதை எழுதியதாகக் கூறினார்."காஞ்சிபுரம்சொந்த ஊர். எனது வீட்டில் சுமார் மூவாயிரம் புத்தகங்கள் இருந்தன. நிறையநேரம் நூல் வாசிப்பதிலேயே செலவிடுவேன். அப்போதும் 'திரைப்படப் பாடல்களால்நன்மையா? தீமையா?' என்ற பட்டிமன்றத்தில் நானும் பேசியிருக்கிறேன்.ஆசிரியர் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய் என்று கேட்டதற்கு'விஞ்ஞானியாவேன்' என்று சொன்னேன். ஆனால் இப்போது எதிர்பாராத விபத்தாகபாடல் எழுத வந்துவிட்டேன்" என்று தனதுநினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சொந்த மண்ணைப் பிரிந்தவன் பாடுவதுபோல் அமைந்த 'திரைகடல் தாண்டி வந்துதிரவியம் தேடுகின்றோம்' என்ற பாடலில்'செல்லம் கொஞ்சி நம்மைக் கடிக்க வரும் கொசுக்கள்" போன்ற யதார்த்தமும்ஏளனமும் நிறைந்த வரிகளை திரு முத்துக்குமார்வாசிக்கையில் பலத்தக் கைத்தட்டலைப் பெற்றார்.."வேப்பம்பூ மிதக்கும்எங்கள் வீட்டுக் கிணற்றில்' என்ற எனது 'தூர்' கவிதையை கையாண்ட எழுத்தாளர்சுஜாதா, கவிஞர் அறிவுமதி, இயக்குனர் பாலுமகேந்திரா போன்றோர் மறக்கமுடியாதவர்கள்" என்றார்.

நல்ல பாடல்கள் பிறப்பது இயக்குனர் உள்ளிட்டோரின் கைகளிலும் உள்ளது. எழுதசுதந்திரம் கொடுத்ததால்தான் இயக்குனர் பாலாவுக்கு "ஓராயிரம் யானை" என்றபாடலும், இயக்குனர் செல்வராகவனுக்கு "கண்பேசும் வார்த்தைகள்" என்றபாடலும், இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு,"உனக்கென இருப்பேன்" என்றபாடலும் எழுத முடிந்தது. மோசமான பாடல்கள் என்று நீங்கள் நினைப்பதைகேட்காதீர்கள். அவ்வாறு நீங்கள் நிராகரித்தாலே அதுபோன்ற பாடல்கள்வெளிவருவது குறைந்து விடும்.

" வானத்தைப் போல திரைப்படத்தில் வரும் 'எங்கள் வீட்டில் எல்லா நாளும்'என்ற பாடல் மெட்டில் சிறுவன் பாடுகிறான்."எங்கள் வீட்டில் எல்லா நாளும் இட்லிதான்,தொட்டுக் கொள்ள கெட்டுப் போனசட்னிதான்"..இப்படி எல்லோருக்குள்ளுமே ஒருகவிஞன் இருக்கிறான்."மனுஷ்யபுத்திரன், தபூசங்கர் போன்ற பலருடையகவிதைகளையும் பிடிக்கும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான நீண்ட பாரம்பரியம் கொண்ட இலக்கணத்தைபின்பற்றி எழுத வேண்டி உள்ளது. நம் மரபும் வாழ்வும் பாடலோடு இணைந்த மரபுஎன்பதால் திரையிசைப் பாடல்களை அழிக்க முடியாது."என்று நம்பிக்கையூட்டிநிறைவு செய்தார் திரு நா.முத்துக்குமார்.

கவித்துவமிக்க, சுருக்கமான செய்திகளோடு நிகழ்ச்சியை சிறப்பாகவழிநடத்தினார் கவிஞர் பாலு மணிமாறன்.தரமிக்க தமிழ் இலக்கியநிகழ்ச்சிகளுக்கு தங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்பதை அரங்கு முழுக்கத்திரண்டிருந்த கூட்டம் நிருபித்தது

Thursday, March 09, 2006

ரசிச்ச பாட்டு நாலு

1. " செண்பகமே, செண்பகமே"

........ 80 களில் இறுதியில், எத்தனையோ இரவுகளில் என் இதயம் பிழிந்திருக்கிறது இந்தப் பாடல். " எள்ளுப்பூ நாசிப்பத்திப் பேசிப் பேசித் தீராது...உம் பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது " என்ற வரிகளை உச்சரிக்கையில் மனோவில் குரல் நெகிழ, நெகிழ - கேட்க்கும்போதெல்லாம் - அதில் வழுக்கி, வழுக்கி விழுந்து விடுகிறது மனசு ......


2. " பூங்காற்று திரும்புமா... என் பாட்டை விரும்புமா"

......... பச்சைக்கம்பளம் விரித்த ஒரு கிராமத்து வெளியில் - ஆதரவற்ற அநாதையாக - ஓடைகளில், ஒற்றையடிப் பாதைகளில், சிறகு விரிக்கும் தென்னந்தோப்புகளில், ஓய்ந்திருக்கும் செம்மண் குளக்கரையில் ஓடியபடி இருக்கும் இந்த ஓசை - இன்றும்கூட, என்னை வந்து சேரும்போதெல்லாம்... தன்னைத் தந்து விட்டு என்னை வாங்கிக் சென்று விடுகிறது......


3. "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்"

......... TMSன் குரலில் சாகா வரம் பெற்ற பாடல்கள் பல்லாயிரம். இந்தப்பாடலின் இடையில் வரும் " உனக்கான என் பாடல் ஒலிக்கின்றது..அதில் ஏதேதோ எண்ணங்கள் இருக்கின்றது " என்ற வார்த்தைகள் எ·கை உருக்கும் தீயாக நம்மை வார்த்து - வடிவமைத்தும் விடுகின்றன. நம் வாழ்வில் இடையிடையே வந்து போகும் ஏதேதோக்களின் சாயலோடு, உறக்கங்களிலும், கனவுகளிலும் கூட ஒலிக்கும் பாடல் இது.


4. "கண்பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை..."

...... உலகக் காதலர்களில் ஏக்கமெல்லாம் சேர்ந்து ஒலித்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வைக்கிற பாடல் இது. அவள் விழியும், அதனால் வரும் வலியும் ஒவ்வொரு காதலனும் உணர்ந்ததுதான். ஆனால், " விழி உனக்குச் சொந்தமடி... வேதனைகள் எனக்குச் சொந்தமடி" என்ற வரிகளைக் கேட்கும்போதோ...அட, நாம் சொல்ல நினைத்து வார்த்தைகளின்றி தவித்த விஷயத்தை இந்தக் கவிஞன் எப்படி இவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் என்று வியப்புக்கல் மீது கால் இடறி விழுந்தே விடுகிறோம். விழ்ந்த நம்மை பரிதாபமாகப் பார்த்தபடி கடந்து போய் விடுகின்றன வரிகள்.

Tuesday, February 28, 2006

சங்கிலிப்பதிவில் நான்

இந்தத் தொடரில் என்னையும் மாட்டி விட்ட devற்கு கோடானகோடி நமஸ்காரங்களுடன் நான் சொல்வதெல்லாம் கீழே இருக்கிறது ..........

Four jobs I have had:

1. சின்ன வயதில், கூளையனூர் ஊர்த் திருவிழா சமயம் தோட்டதில் இருந்து வாழைத் தாரை வெட்டி வந்து கடமையே கண்ணாக வாழைப்பழம் விற்றது.

2. டிப்ளோமா முடித்து பொலிகாளை மாதிரி ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு காலையில், கம்பம் மாமாவின் ரி·பிரிஜிரேஷன் கடையில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தபோது, "உன்னால் சொந்தத் தொழில் செய்ய முடியாது" என்று அவர் சவால் விட, அன்று இரவே மதுரையில் இருந்து வாங்கி வந்த stationaries கொண்டு, அவர் தந்த இடத்தில் கடை போட்டு லாபம் பார்த்தது.

3. சுயமாக வேலை தேடி சென்னை வந்தபோது carewell homes என்ற கம்பெனியில், என்னென்னவோ வேலையெல்லாம் பார்த்தது.(கேபிள் டிவி புதிதாக வந்த காலம் அது. kadar Nawaz Khan ரோட்டிலிருந்த ஒரு பங்களா வீட்டில் கேபிள் கனெக்ஷன் கொடுக்கப் போனபோது, அங்கிருந்த சேச்சி, கனெக்ஷன் கொடுக்கணும் என்று ரொம்ப உள்ளே கூட்டிக் கொண்டு போக அரண்டு போய் ஓடி வந்து, சீக்கிரமே வேலையை விட்டு விட்டேன்)

4. 1992 முதல் இன்று வரை வட இந்தியா முதல், மலேசியா வரை பல இடங்களில் எலக்டிரிக்கல் கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் வாழ்க்கை நடத்துவது!


Four movies I would watch over and over again:

1. சதி லீலாவதி (அட..நம்ம பாலு மகேந்திரா எடுத்ததுங்க!)
2. முதல் மரியாதை
3. தர்மத்தில் தலைவன்
4. தில்லானா மோகனாம்பாள்
(இங்கிலீஷ் படமெல்லாம் நமக்கு அம்புட்டு புரியாதுங்கோ...)


Four places I have lived (for years):

1. எண்ணூர் ( கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகில் )
2. ராயப்பன்பட்டி ( St.Aloysious Hr.Sec.School Hostel )
3. பொள்ளாச்சி ( Nachimuthu Polytecnic - இறந்துபோன லட்சுமனன் காதலித்த அஜிதா நீ எங்க இருக்க?)
4. வாரணாசிக்கு பக்கத்தில் அன்பாரா, மலேசியாவின் காப்பார் மற்றும் 10 வருடத்திற்கு மேலாக சிங்கப்பூர்.


Four TV shows I love to watch:

1. ஹார்ஷா போக்ளே வர்ற show எல்லாம்
2. மெட்டி ஒலி ( முதல் நாள் பார்த்துமே சொன்னேன் - இது நிச்சயம் வெற்றி பெறும்னு! )
3. அது மட்டும் ரகசியம் ( சமீப காலத்தில் ஜவ்வடித்த போதும்.. ரசிக்கிறேன்!)
4. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரலில் தில், தில், மனதில் (படைப்பவர் - சிங்கப்பூர் "ரவி பெர்னாட்" கலைச்செல்வன்)


Four places I have been on vacation:

1. சின்ன வயசில இருந்து அடிக்கடி - சுருளித்தீர்த்தம்
2. மலேசியாவின் பிரேசர் ஹில்
3. அதே மலேசியாவின் பங்கோர் தீவு
4. இந்தோனேசியாவின் பாதாம் தீவு


Four of my favourite foods:

1. அதாங்க .. சிக்கன் பிரியாணி
2. இரவென்றால் - சப்பாத்தி
3. முன்னாடியெல்லாம் இடியாப்பம்... இப்போ புட்டு
4. தக்காளி சாதம்


Four sites I visit daily:

1. www.cricinfo.com
2. http://us.rediff.com
3. www.its.uci.edu/~jaykay/leander.html
4. www.thamizmanam.com


நான் tag செய்ய நினக்கும் 4 பேரை ஏற்கனவே மற்றவர்கள் tag செய்திருக்கக் கூடும் என்பதால், tag செய்வதை தவிர்த்து விடை பெறுவது உங்கள் , உங்கள் , உங்கள் ..........................

Monday, February 27, 2006

விசிட்டிங் கார்டு மாதிரி கவிதை புஸ்தகம் தந்த கதை



சிங்கப்பூர் வரவிருந்த கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி அறிந்து கொள்வதற்காக அவரது புத்தகங்களை சிங்கப்பூர் நூலகத்தில் இருந்து இரவல் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். "நியூட்டனின் மூன்றாவது விதி" என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் - நா.முத்துக்குமாரின் முந்தைய தொகுப்பான " பட்டாம் பூச்சி விற்பவனில்" தன்னை பாதித்த வரிகள் என்று கந்தர்வன் கீழ்வரும் வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்....

"பொண்டாட்டி தாலியை
அடகு வச்சு
புஸ்தகம் போட்டேன்
தாயோளி
விசிட்டிங் கார்டு மாதிரி
ஓசியில் தர வேண்டியிருக்கு "

பட்டென்று நிறுத்தி முகத்தில் அறைந்த வரிகள்.

இதை படித்துவிட்டு வலி தாங்காமல் கந்தர்வன் ஐம்பது ரூபாய் அனுப்பி வைத்தாராம். நானோ "பட்டாம் பூச்சி விற்பவனை" நூலகத்தில் இருந்து எடுத்துப் படிக்கக்கூடாது என்றும், எங்காவது காசு கொடுத்து வாங்கிப்படிக்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன்.

சிங்கப்பூர் வானொலி 96.8ன் நேர்காணல் முடித்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு ராத்திரியின் 11 மணியில் அந்தக் கவிதை பற்றி முத்துக்குமாரிடம் கேட்டேன். மெலிதாக சிரித்தபடி பாலச்சந்தர் அதைப் படித்துவிட்டு 500 ரூபாய் அனுப்பி வைத்த கதையைச் சொன்னார்.

புகழ் பெற்ற அவரது "தூர்" கவிதையை அவரது குரலில் கேட்க வாய்த்தது. ஒரு ஆழ் கிணற்றிலிருந்து மேல் எழும்பி வருவது மாதிரியான குரலில் அந்தக் கவிதை சோடியம் விளக்குகளின் ஓட்டதின் மத்தியில் நெஞ்சில் சோகம் அப்பிச் சென்றது.

மறுநாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்த பெரிய கூட்டத்தில் தரமான தமிழ் மற்றும் உலகக் கவிதைகளை அடையாளம் காட்டி அற்புதமாகப் பேசினார் கவிஞர் நா.முத்துக்குமார்.

கூட்ட முடிவில், நண்பர் பனசை நடராஜன் அருகில் வந்து என் காதில் கிசுகிசுத்தார் ...

" நா.முத்துக்குமார் கொண்டு வந்த புஸ்தகமெல்லாம் விற்றுப் போச்சாம். இன்னும் ஏதாவது புஸ்தகம் இருக்கா?"

ஒப்பிடல் மனசு


தூசற்ற விரைவுச்சாலைகளை
விழிநோக்கும் வேளையில் ஏன்
உன் அழகிய கால்களின்
வழுகிய தடங்கள்
அலையுது நெஞ்சில்?

ஒடித்த சோளத்தை
உன் உள்ளங்கைகளில்
நசிய நசுக்கியதும்...
பச்சைப்பால் மணம்போவதற்குள்
புசிக்குமாறு சிணுங்கியதும்...
எழுவதேனோ நினைவுகளில்?

கே.எ·சி கோழியை
குத்தியோ பிளந்தோ
தீவிரமாக தின்று தீர்க்கையில்
எதற்கு இந்த ஞாபகங்கள்?

Friday, February 24, 2006

கதவின் சில ஜன்னல்கள்


சில நிமிடங்களுக்கு ஒருமுறை
வந்துபோகும்
ரெயிலென
வந்துபோகும் உன் நினைவுகள்....

ஒவ்வொரு முறையும்
நீ இறங்கிக் கொள்கிறாய்
நான் ஏறிக்கொள்கிறேன்.

உட்கார்ந்தோ, நின்றோ...
கர்ப்பிணிப் பெண் அல்லது
முதியோருக்கு இடம் தந்தோ...

சமமாக சாலைகளில் ஓடி
ஏதாவது நிறுத்தத்தில்
தேங்கிப்போகும் வாகனங்களை
பார்வையால் பிசைந்தபடியோ...

அப்பயணம் நிகழ்ந்து விடுகிறது.

இன்னும் சிறிது நேரத்தில்
ஏதேனும் ஆங்கிலக் குரலில்
வந்துவிடலாம்
நானிறங்கும் 'அடுத்த நிறுத்தம்'.

இம்முறை
வழக்கம் போல்
நீ இறங்கிக்கொள்வாய்
வழக்கம் மாறி
நானும் இறங்கிக் கொள்வேன்...

போகும் ரெயிலின்
மூடிய கதவுகளுக்குப்பின்
போகும் நம்மை பார்த்தபடி
நடந்து போகலாம் நாம்!

Thursday, February 23, 2006

நனைவு நினைவுகள்

ஞாபத்தில் ஒட்டுவதில்
வெயிலை வென்று விடுகிறது
மழை.

எத்தனையோ
மழை ஞாபகங்கள்...
வெயில் ஞாபகங்கள்
வெகு சிலவே.

இன்று மழை நாள்.

நீர் விரல்கள்
ஞாபகம் கிளறியது.

புத்தகப்பை தோள்வலிக்க
நீர் தொட்டுப் பார்த்திருந்த
பள்ளிகால மழை...

குடைகீழ் நான் நடக்க
ஓரளவு நனைந்தபடி
வார்த்தைகளோடு
உடன் நடந்த தந்தை...

எதிரெதிர் நிறுத்தங்களில்
நானும் அவளும்.
மழையிடம் மட்டும்
காதலைச் சொல்லியபடி
நான்...

அடந்த ரத்தம் மெலிந்து பரவ
தெருவோர மழையில்
பிணமாய்ப் போன
யார் பெற்ற மகனோ...

ஞாபத்தில் ஒட்டுவதில்
வெயிலை வென்று விடுகிறது
மழை.

குடை மறந்த என்னை
ஜன்னல் -
மழை பார் என்றது.

நனைவதென முடிவு.
அப்புறம் எதற்குக் குடை?

இந்த மழையில்
நடைபாதைப் புற்களே
முளைக்காத போது
முளைக்கவா முடியும் நான்?

நனைவதே நல்லது...
முளைக்கலாம்
சில நினைவுகள்!

Sunday, February 19, 2006

வேறானவனின் நாளை

எல்லோரும்
எதிரியாவதும்

எதிர் வருவதெல்லாம்
அன்பாவதும்


கனக்கும் சிறுகற்கள்
கன மலையில்
காற்றாவதும்

முறிந்த சிறகாவதும்
நானே சிறகாவதும்

நேற்று நானானதும்
இன்று வேறானதும்

வேறெது நிகழ்த்தும்
வேர்பிடிக்கும் காதலன்றி?

அல்ல அவளென் காதலி...
என் நாளையின் நம்பிக்கை!