Thursday, March 31, 2005

இக்கவிதையைப் படிக்கலாம்: கண்ணீர் வேண்டாம்!

துளிர்த்துக் கொண்டே இருக்க
நீ விடிந்து கொண்டே இரு.

வளர்ந்து கொண்டே இருக்க
என்னைப் பிடுங்கி நடு.

வாழ்ந்து கொண்டே இருக்க
உன் கைக்குட்டையை பரிசளி.

தேய்ந்து கொண்டே இருக்க
என்னை நிலவாக்கி
நிமிர்ந்து பார்.

நெகிழ்ந்து கொண்டே இருக்க
விழிக்குளத்தில் தேக்கு
ஒரு துளி நீர்.

நடந்து கொண்டே இருக்க
உன் வாயால் ஒரு
கவிதை சொல்.

கிழிந்து கொண்டே இருக்க
என்னை குப்பையாக்கு.

வடிந்து கொண்டே இருக்க
உன்னை தாளாக்கி
என்னை எழுது.

தெரிந்து கொண்டே இருக்க
வினாவாக என்னை
மாற்றிக் கொள்.

மறந்து கொண்டே இருக்க
நீ நானாகி விடு.

இறந்து கொண்டே இருக்க
இன்னொரு முறை சிரி.

இதில் எதையும் செய்ய இயலாதா?
அப்ப சரி....
மரியாதையாய் என்னை
காதலித்து விடு !

3 comments:

நாலாவது கண் said...

பாலு மணிமாறன்

காதலிக்கு இப்படியெல்லாம் தண்டனை தரக்கூடாது? ;-)

- சந்திரன்

Vijayakumar said...

//மரியாதையாய் என்னை
காதலித்து விடு !//

ரொம்ப தான் மிரட்டுகிறீர்கள். சேது ஸ்டைலா?

கவிதை நல்லாயிருக்கு.

அன்பு said...

பாலு எழுதிக்கொண்டே இருக்க...
நாங்கள் படித்துக்கொண்டே இருக்க(வாவது)

நீ மரியாதையா காதலிக்காமல்,
பாலுவின் காலை வாரிவிடு:)