சம்பவம் - 1
அந்தப் பெண்ணின் பெயர் ஷீலா தங்கம். ரொம்ப யுனிக்கான பெயர். இந்தப் பெயருள்ள பெண்ணை அதற்கு முன்னும், அவரை அறிந்ததற்குப் பின்னும் நான் பார்த்ததேயில்லை. பெயருக்கேற்ற மாதிரியே ஷீலா, தங்கம் போல் தகதகவென ஜொலித்தார். ஒரு இளம்பெண் அப்படி ஜொலித்தால், என்ன நடக்கும்? அதிலும் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் மாணவர்கள் கல்வியிலும், காதலிலும் சிறந்தவர்கள்.
பல பேர் காதல் அம்பு விட்டாலும், செழியன் எய்த அம்பு மட்டுமே ஷீலா தங்கத்தை சரியாக தைத்தது. அவர்கள் காதலித்தார்கள். என்னைப் போன்றவர்கள் ராமாயணம், மகாபாரதம் ரேஞ்சில் அவர்களது காதல் கதையை பேசித் திரிந்தோம். யாருக்கு என்ன முடிகிறதோ அதைத்தானே செய்ய முடியும்?
நான் ஷீலா தங்கத்தின் முகத்தை தூரத்தில் பார்த்ததோடு சரி, பக்கத்தில் வந்தால் தலையைக் கவிழ்ந்து கொள்வேன். அப்படி ஒரு கூச்சக்காரப் பையன் அந்த காலகட்டதில். ஒவ்வொரு கால கட்டத்திலும் என் கூச்சத்தின் தன்மை மாறி வந்திருக்கிறது... அதை விடுங்க, இங்கு நான் சொல்ல வந்த முக்கியப் பாயிண்ட் என்னன்னா, அந்த ஷீலா தங்கத்துக்கும் எனக்கும் ஒரு மேட்டரில் தொடர்பு இருந்தது. அப்படி ஒரு மேட்டர் இருந்ததுன்ற விஷயமே ஷீலா தங்கத்துக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாதுன்குறதுதான் இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.
அந்த மேட்டர் என்னன்னா - என் எண்ண அலைகள் ஏதோ ஒரு வகையில் ஷீலா தங்கத்தைப் பாதித்தது. நான் அதைத் தற்செயலாகத்தான் உணர்ந்தேன்.
ஒரு நாள் காலை ஏனோ அந்தப் பெண் இந்த நிற உடையில்தான் வருவார் என்று தோன்றியது. அட ஆச்சரியம் - அந்த நிற உடையில்தான் வந்தார். கொஞ்சம் அதிசயமாக இருந்தது. ஆனால் அந்த தற்செயலை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சீக்கிரமே மறந்து விட்டேன். ஒரு மாதம் போயிருக்கும். திடீரென்று ஒரு நாள், மறுபடியும் ஷீலா தங்கம் - சேலை நிற நினைவு - அட, அதே நிறம்! இப்போது நான் நிறைய யோசித்தேன். தற்செயல் ஒருமுறை நிகழலாம், மறுமுறை மறுமுறை நிகழுமா? நிகழ்ந்தது.
திடீரென்று ஏதாவது ஒர் இடத்தில், பஸ்ஸில், மணீஸ் கார்னரில், ஒரு முறை மருத்துவமனையில் கூட, அந்தப் பெண்ணை பார்க்கப் போகிறேன் என்று தோன்றும்... பார்த்து விடுவேன். துவக்கத்தில் இது எப்படி, ஏன் நிகழ்கிறது என்று குழப்பமாக இருந்தது. அப்புறம் அந்தக் குழப்பம் பழகி விட்டது.
ஏதோ ஒரு அலைவரிசையில் எப்படியோ ஒத்துப் போன எண்ண அலைகளின் விளையாட்டுதான் அது என்று அன்று நம்பினேன்... இன்றும் நம்புகிறேன்... நம்புவேன் இனிமேலும்!
(செழியன் - ஷீலாத்தங்கம் கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கான பின் குறிப்பு இது. செழியனுக்கும், ஷீலாத்தங்கத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது. செழியன் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். ஷீலாத்தங்கமும் இன்னொரு ஆணை மணந்து கொண்டார். எனவே, முடிவு -சுபம்!)
சம்பவம் - 2
இது ஷீலா தங்கம் சங்கதிக்கு வெகுமுன்னால், நான் ராயப்பன்பட்டி அலோசியஸ் ஹாஸ்டலில் படித்த காலத்தில் நிகழ்ந்தது.
அங்கு ஒரு பழக்கம். ராத்திரி ஸ்டடி நேரம் முடிந்ததும் தூங்கப்போவதற்கு முன்னால், ஜெபம் சொல்ல வேண்டும். எல்லோரும் எழுந்து நின்றதும், எங்கள் முதுகிற்குப் பின்னால் நிற்கும் வார்டன் யார் யார் ஜெபம் சொல்ல வேண்டுமென்று வரிசையாக பெயர் சொல்லுவார். அவர்கள் சொல்ல வேண்டும். அப்படி ஜெபம் சொல்ல வேண்டியவர்களின் எண்ணிக்கை 5 என்று நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
அப்போது வார்டனாயிருந்தவர் பிரதர் ராயப்பன்.
அந்த குறிப்பிட்ட நாளில், பிரதர் ராயப்பன் முதலில் சைமனைதான் ஜெபம் சொல்லச் சொல்வார் என்று தோன்றியது . பிரதர் அழைக்கிறார் ...
"சைமன் ஜெபத்தைத் தொடங்கு"
ஹை...இதென்ன நான் நினைத்த மாதிரி அழைக்கிறாரே.. சைமன் ஜெபம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முருகேசன் பெயர் மனதில் ஓடுகிறது.
"அடுத்து முருகேசன்"
என்னால் நம்ப முடியவில்லை.ஆனால் நம்ப வேண்டியிருக்கிறது. ஆக, அடுத்தது ராஜேந்திரன்தான் என்று மனதில் தோன்ற , பிரதர் ராயப்பனும் "ராஜேந்திரன்" என்கிறார்.
அது எப்படி நிகழ்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அடுத்து நான் நினைக்கும் பெயரைத்தான் பிரதர் ராயப்பன் அழைப்பார் என்பது தெளிவாக, விவேகானந்தனை நினைக்கிறேன்.
அவனையே ஜெபம் சொல்ல அழைக்கிறார்.
விவேகானந்தன் ஜெபம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இது தற்செயலாக நடக்கும் நிகழ்வுதான் என்று என்னை நம்ப வைக்க காரணங்கள் தேடுகிறேன். சரி, என் பெயரை நினைத்துக் கொள்கிறேன். அதை பிரதர் அழைக்காவிட்டால், இப்போது நடந்தது தற்செயலென்றாகி விடுமில்லையா?
" கடைசி - மணிமாறன்" என்கிறார் பிரதர் ராயப்பன். எனக்கு பேசமுடியாதபடி தொண்டை அடைத்துக் கொள்கிறது. மறுபடியும் பிரதர் பெயர் சொல்லி அழைக்கிறார். ஒருவாறு தட்டுத் தடுமாறி சொல்லி முடிக்கிறேன் ....
இந்த சங்கதி எப்படி நிகழ்ந்தது என்று அன்று எனக்குப் புரியவில்லை. ஷீலா தங்கம் விஷயம் நிகழ்ந்தபோதுதான் இதன் அர்த்தம் விளங்கியது. ஆனாலும், 200 பேர் இருக்கிற ஒரு ஸ்டடி ஹாலில் 5 பேர் நாம் நினைக்கிற வரிசைப்படி அழைக்கப்படுகிற சாத்தியப்கூறின் permutation and combination களைப் பற்றி யோசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
எது எப்படியோ, இப்போதெல்லாம் எனக்கு இந்தப்பிரச்சனைகள் கிடையாது. வாழ்க்கையைப் ப்ற்றி யோசிக்கவே நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் எந்திர வாழக்கையில் இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் எங்கிருக்கிறது நேரம்?
இப்போது எனது ஏண்ண அலைகள் என்ன சாதிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்றேனே .... இன்னும் ஐந்து நிமிடத்தில் பஸ் வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் நின்றிருப்பேன்... கால் வலிக்கும்... பஸ் வரவே வராது. முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரம் கழித்து சாவகாசமாக வந்து வெறுப்பேற்றும். இத்தகைய "வலிய சக்தியுடையவையாக" மாறி விட்டன எண்ண அலைகள். ஒருவேளை பஸ் டிரைவர்களுக்கும் நமக்குமான எண்ண அலைகள் ஒத்துப் போவதில்லையோ என்னவோ...
அடுத்தமுறை பஸ்ஸிற்காக காத்திருக்கும்போது நீங்களும் உங்கள் எண்ணங்களின் சக்தியை சோதித்துப் பார்க்கலாம். பாருங்கள்... பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்று சொல்லுங்கள்!!
6 comments:
ஆகா.. பாலு, இது மாதிரி எனக்கு நடந்திருக்குங்க.. சில பேரை முதல் முதலா பார்க்கும் போது, அவங்க பெயர் இப்படித் தான் இருக்கும்னு நினைப்பேன்.. கொஞ்ச பேர்கள் மட்டும் தான் அப்படித் தோணும். தற்செயலாக யாராவது அவர் பெயரைக் கேட்பாங்க. நான் நினைத்த பெயர்களாகவே இருக்கும். இப்போ எல்லாம் நடக்கிறது இல்லைங்க.. படிக்கிற காலத்துல நடந்தது..
இப்போ சமீபத்துல எங்க கம்பனில பிரஞ்சு கத்துக்க கோர்ஸ் நடத்தினாங்க.. அதிசயமா, எனக்கும் அந்த டீச்சருக்கும் ஒரே எண்ண ஓட்டம்.. இன்றைக்கு இந்தப் பகுதி சொல்லிக் கொடுப்பாங்க என்று நினைப்பேன், நடக்கும். இன்றைக்கு இப்படி ஒரு விளையாட்டு வைத்தால் நன்றாக இருக்கும் என்பேன், அப்படியே நடக்கும்.. அவங்க கிட்ட ஒரு நாள் சொன்னேன். அதற்குப் பிறகு எல்லா அலையும் தீர்ந்து போச்சு.. அவங்க கிட்ட சொல்லும் வரை தான் நடந்தது...
நீங்க பொள்ளாச்சியா?பொள்ளாச்சில எந்த இடம்?நான் கோயமுத்தூர்.பொள்ளாச்சியில் முக்கால்வாசி இடங்களுக்கு போயிருக்கிறேன்
எனக்கு ஒரு பொண்ணோட அண்ணன் வந்து உங்களை செம வாங்கு வாங்குறதா ஒரு எண்ண அலை வருகுது..?
இதைப்பற்றி என்ன சொல்லுறீங்க பாலு..? :)
எல்லோரோட வாழ்க்கையிலும் ஏதவது ஒரு கால கட்டத்தில் இது மாதிரி நிகழ்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது பொன்ஸ். ஆனால் அதை "அட" என்ற சின்ன ஆசரியத்தோடு மறந்து விட்டிருப்போம்.
உங்கள் ஃபிரென்ச் கோர்ஸ் அனுபவங்களுக்கு ஒரு :)))
உங்களை மாதிரியே - தமிழக மின் வாரியத்தில் வேலை செய்த எனது தந்தையோடு தமிழகத்த்தின் பல பாகங்களுக்கும் போயிருக்கிறேன் செல்வன்.
என் சித்தப்பா அட்டகட்டியில் இருந்தபோது, பொள்ளாச்சியில் படித்தேன். அதுவும் விடுதியில்தான்!!
இது மாதிரியே உங்களுக்கு மேலும் மேலும் எண்ண அலைகள் வர வாழ்த்துக்கள் நிலவு நண்பன்!!
:))
அடி வாங்கிறது ஓ.கேதேன். ஆனால் நீங்கள் அந்த பெண் யார் என்பதை சீக்கிரம் சொல்லி விடுங்கள். அது தெரியா விட்டால் தலையே வெடிச்சிடும் போல இருக்கு!!
Post a Comment