இன்னும்
பறவைகளின் கூடுகளுக்கு
மறுப்பு சொல்லுவதில்லை மரங்கள்
எவரும் தம்மை எண்ணிமுடிக்காத
கோபத்தில் உச்சியில் விழுந்த
நட்சத்திரங்கள் உண்டா?
பக்கத்தில் இருப்பவனின்
உறக்கம் கெடுக்காமல் தொலைபேசும்
கருணைக்குரல்கள் காண்பீர் தினம்
எதிர்வரும்போது
அறிமுகமற்றவரிடமும் புன்னகைக்கும்
கிழவிகளற்ற வீதிகள் ஏதும் இல்லை
இருபது வருட பழையவிசிறியின்
விழாத நம்பிக்கை மீது
உறக்கமும் வண்ணக்கனவுகளும்
சாத்தியமாகிறது
தெருப்பூனைகள் யாரோ இடும் உணவில்
வெட்டுண்ட காதின் உயிர்ப்போடு
உலா வருகின்றன
ஒரு கவிதை படிக்கும்
உங்களால் உலகம்
ஒழுங்காகவே இருக்கிறது
6 comments:
அருமை.
kalakkal!
கடைசி வரிகள் மனதில் பதிந்தன. யாரோ ஒருவரின் சாயலை நினைவுறுத்துகிறீர்கள். மொழி என்பது எல்லோருக்கும் பொதுதானே... சாயலற்றதாக இருப்பது எப்படி இல்லையா?
கருத்துக்கு நன்றி இப்னு ஹம்துன்! எப்படி இருக்கீங்க?
நன்றி சர்வேசன்!!
எனது பழைய பதிவுகளிடை " சாயலற்ற சாயலில்" என்றொரு கவிதை உண்டு. அதன் கடைசி வரிகள் "சாயலற்ற கடவுளின் சாயலில்" என முடியும்.
சாயலற்றதாகவே இருக்க ஆசைப்படுகிறது எப்போதும் மனித மனம்!
உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்நதி!
/ஒரு கவிதை படிக்கும்
உங்களால் உலகம்
ஒழுங்காகவே இருக்கிறது!
ஒரு கவிதை வடிக்கும்
உங்களால்?
தவறாக நினைக்க வேண்டாம் தெரிந்கொள்ள கொள்ளை ஆசை.
கவிதையும் நன்றாக உள்ளது //
இது தம்பி பாண்டித்துரையின் ஆசை.
ஒரு கவிதை வடிப்பவன், பல கவிதைகளை படிப்பவனாகத்தானே இருக்கிறான்.. அவனாலும் உலகம் உருப்படத்தான் வேண்டும்.
ஒரு தனிப்பட்ட சந்திப்பில் "மனசில கொஞ்சமாவது ஈரம் இருக்கிறவன்தான் கவிதை எழுத முடியும்" என்று சொன்னார் பாரதிராஜா. எல்லாக் கவிஞனின் இதயமும் ஈரத்தோடுதான் இருக்கிறது பாண்டி ( நீங்கள் உட்பட )
Post a Comment