Thursday, December 11, 2008

உன் தலைமுடி உதிர்வதைக்கூடத் தாங்க முடியாது அன்பே...(நாலு வார்த்தை-010)

இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் நெப்போலியன். காதலின் விழுந்தேன் படத்தில் வரும் இந்தப்பாடல் தமிழக இளைஞர்களின் சமீபகால தேசியகீதம். யார் இந்த நெப்போலியன் என்ற கேள்வியோடு பலரும் புருவம் உயர்த்தி இருக்கும் நிலையில் - அவர் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கவிஞர் நெப்போலியன் எழுதிய பாடல் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் என்று அவர் வாய்ப்புகளுக்காக முனைப்பாக இருக்க வேண்டுமென்றுதான் ஒரு சராசரி ரசிகர் கற்பனை செய்திருப்பார். ஆனால் அவரது வாழ்க்கை சிங்கப்பூரின் கட்டுமானத் தளங்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. ஏன்?

நெப்போலியனை எனக்கு 1998 முதல் தெரியும். ஒரு துடிப்புமிக்க இளைஞராக அவரைப் பலரும் அடையாளம் கண்டார்கள். தொடர்ந்து தமிழ்முரசில் அவரது கவிதைகள் வரும். அந்தக் கவிதைகளின் கோணம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும். கவிமாலை போன்ற ஏதாவது சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். நிகழ்ச்சி முடிந்ததும், கூட்டமாக உட்கார்ந்து, கோப்பி சாப்பிட்டபடி கவிதையும், கதையும் பேசுவோம். சுற்றிலும் சீனச் சமையல் வாசனை நெடி மூக்கைத் துளைக்க, சீன, மலாய் மொழிப் பேச்சுக்களின் நெடி காதைத் துளைக்க, தமிழ் பேசியிருக்கும் சுகம் சிங்கப்பூரில் கிடைக்கும். அனுபவிப்போம். நெப்போலியன் தான் எழுதிய கவிதைகளை "நானும் என் கருப்புக் குதிரையும்" என்ற தலைப்பில் தொகுத்து சிறப்பாக வெளியிட்டார். நான் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், சில வருடங்கள் கழித்தும் சில நண்பர்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால், அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததை உணர முடிந்தது.

அங்மோ கியோ நூலகத்தில் ஒரு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, எம்.ஆர்.டி நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தபோதுதான் நெப்போலியன் பேச்சோடு பேச்சாகச் சொன்னார், "சென்னைக்குப் போறேன் பாலு, சினிமாவுக்கு பாட்டெழுதத்தான். எப்படியாவது எழுதிடுவேன்னு நினைக்கிறேன்." அவரது குரலில் தெரிந்த உறுதி, 'முடிகிற விஷயமா அது' என்ற என் மனக் கேள்வியை அசைத்துப் பார்த்தது. மெல்ல அசை போட்டதில், அவர் அதுவரை எடுத்து வைத்து வந்திருந்த அடிகள் தெளிவானவை என்பதும் புரிந்தது. "வாழ்த்துக்கள் நெப்போலியன்" என்று நான் அவரிடம் சொன்னபோது அந்தி, இரவுக்குள் நகர்ந்து கொண்டிருந்தது; விளக்கு வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருந்தன சாலைகள். அப்புறம் அவர் சென்னைக்குப் போனார். நாங்கள் அவரை மறந்து போனோம். எந்திரமாய் ஓடும் வாழ்க்கைச் சூழலில் சிலசமயம் அவரவர் வாழ்க்கையே மறந்து விடுகிறது.

அஞ்சப்பர் உணவகம் போகும்போது அவர் நினைவு வரும். அவரது நண்பரிடம் விசாரிப்பேன். "முயற்சி பண்ணிட்டு இருக்காருங்க. எப்படியும் எழுதிருவேன்னு சொல்றாரு" என்பார். ஆழ்கடலில், ஒரு மரத்துண்டை பிடித்தபடி நீந்தும் மனிதனின் பிம்பம் மனதில் வந்து போகும். எத்தனை பேர் மூழ்கிய கடல் இது? எத்தனைபேரை தாகத்தோடு பருகியிருக்கிறது அந்தக் கடல்? 'இருந்த நல்ல வேலையை விட்டுட்டு, ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் வெள்ளியை விட்டுட்டு, எதுக்குங்க இதெல்லாம்' என்று அவரைப் பற்றி கவலைப்பட்டார்கள் சில நண்பர்கள். ஆனால் 2007 ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் போன ஸ்டாலில் எல்லாம் அவரது கவிதைத் தொகுப்பைப் பார்த்தபோது, நெப்போலியன் சரியான திசையில்தான் போய்க் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். ஒருநாள் விஜய் டி.வியின் "விஜய் டைம்ஸ்" அவரைக் காட்டியது. அதில் அவர், தான் விஜய் ஆண்டனியின் இசைக்கு பாடல் எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது. நினைத்ததை சாதித்து விட்டார் நண்பர். சில நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் அவரை மறுபடியும் சந்தித்தேன். வேலையில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது "பாட்டு?"... என்றேன். "சம்பாரிக்கணும் பாலு. வாழ்க்கையையும் பார்க்கணும்" என்றார். ஆனால், போனமுறை பார்த்தபோது, 'வாய்ப்புகள் வருகின்றன, சென்னை போகணும்' என்றார். போவார் என்றுதான் தோன்றுகிறது. இசை ஜாம்பவான்களே... இந்த கவிதைப் படகு கரைசேர நீங்கள் துடுப்பாகக் கூடாதா?

2 comments:

பாண்டித்துரை said...

சிங்கப்பூரில் ஒலிப் பாடலில் நெப்போலியனின் பாடல் 10க்குள் வந்துவிட வாழ்த்துகள். இன்னும் சில பாடல்கள் இங்கிருந்தே எழுதுவதாக கேள்விப்பட்டேன்.

பாலு மணிமாறன் said...

Thats news to me Thambi. Let us all wish Good Luck to Nepolean!