Saturday, December 13, 2008
கவிஞர் கருணாகரசின் "தேடலைச் சுவாசி" (நாலு வார்த்தை-013)
இரண்டு வருடங்களுக்கு முன்னைய நாளொன்றின் சிங்கப்பூர் ராத்திரி. பெக் கியோ சமூக மன்றத்தின் வாயில். பாலைவனச்சோலை சந்திரசேகரை நகலெடுத்த மாதிரி இருந்த ஒர் ஒடிசலான கருப்பு இளைஞர் தனது கவிதை தொகுப்பொன்றை என்னிடம் நீட்டுகிறார். "தேடலை சுவாசி" என்பது அதன் தலைப்பு. கருணாகரசு அவரது பெயர். பொருளாதார நிமித்தம் சிங்கப்பூர் வந்திருந்தாலும், தன்னையும், தமிழையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர். கவிதைத் தொகுப்பின் பின்பக்கத்தைப் புரட்டிப் பார்க்கிறேன். அதில் இருந்த கவிதை ஒன்று படாரென்று என்னைப் புரட்டிப் போடுகிறது. "உழுதவன் கண்ணீரை / அழுதே துடைக்கிறது / வானம்". என்னை மட்டுமல்ல, பலரையும் பாதித்த கவிதை அது என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.
மூங்கிலாய் நிமிர்ந்திருந்த அந்த கருப்பு இளைஞனுக்குள் ஏதோ ஒரு கோபம் தொடர்ந்து கனன்று கொண்டிருப்பதையும், அது கவிதை நெருப்புத் துண்டுகளாய் விழுவதையும் பக்கத்திலிருப்பவர்கள் உணர்ந்தார்கள். அந்த இளைஞனது கண்களிலோ, எப்போதும் நட்பு வெளிச்சமிருந்தது. அவர் தனது முன்னுரையில் தனது வேர்களைப் பற்றிச் சொல்லும்போது, "தமிழ்ப் பற்றுள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்ததுதான் நான் தமிழ்ப் பிடிப்போடு இருப்பதற்குக் காரணம் என்று எண்ணுகிறேன். பொதுவாக கவிஞர்கள்தான் கவிதை எழுதுவார்கள், ஆனால் ஒரு கவிதைதான் என்னைக் கவிஞாக்கியது" என்று எழுதியிருந்தார் ; அந்தக் கவிதைகளில் அடர்த்தியாய் இருந்த கோபத்தின், சோகத்தின் மூலம் புரிந்தது. "நீங்கள் / அனுசரிக்க வேண்டாம் / அன்னையர் தினத்தை. / மூடினால் போதும் / முதியோர் இல்லங்களை. /" என்று கட்டளையிடும் கவிதைக்கான காரணம் தெரிந்தது. அவள் மற்றும் அவள்கள் இல்லாமல் முழுமையடைந்த தொகுப்பு எது..."அவள் / கசிய விட்டதென்னவோ / ஒரு மெல்லிய / புன்னகையைத்தான் / உடைந்தது / என் மனத் தடாகத்தின் / கரைகள் / அங்கே / தத்தளிக்கின்றன / என் கவிதைகள்." என்றொரு அழகான வாக்குமூலம்.
எமது கிராமங்களில் தமிழ் வாழ்வின் பழைய அடையாளங்களோடு, பகடியும், எள்ளலும் இன்றும் காற்று வெளியிடை கலந்து கிடக்கின்றன. அப்பத்தா ரவிக்கை அணிந்து அவன் பார்த்ததில்லை. அத்தை மகள் அணிந்து பார்த்திருக்கிறான் ; இன்றும் பார்க்கிறான். அட.. அதைப் பார்த்து இந்தக் கவிதை ஏன் இப்படிக் கிழிகிறது? "சன்னல் வழி / அவளைப் பார்த்தேன் அன்று./ சன்னலையே / அவளிடம் பார்த்தேன் / இன்று. /" இந்த கிராமத்துச் சன்னல்தான் நம்பிக்கையை, நம்பிக்கை இன்மையை என்று எத்தனை எத்தனை விஷயங்களை விழிமுன்னால் விரித்து வைக்கிறது. இதழோரம் புன்னகை வழிய, கருணாகரசு இப்படிச் சொல்கிறார்..."நம்பிக்கை இழந்தவனை / நம்பி வாழ்கிறான் / ராசிக்கல் வியாபாரி"
தத்துவத் தளங்களிலும் தத்தளிக்கின்றன கவிதைகள். "நான் கருவறைக்குள் / இருளில்தானே / என்னைத் தொடங்கினேன்./" அறிவுரையாகவும் வழிகின்றன. "எதிரியிடம் / அடிக்கடி சிரித்துவை / அல்லது / அதுபோல் நடித்து வை./ இவை இந்தத் தொகுப்பு முழுவதும் சிதறிக் கிடக்கும் கவிதைகளின் சில துளிகள்தான். சுருக்கமாகச் சொல்வதும், சுருக்கென்று தைக்கும் விதத்தில் சொல்வதும் கருணாகரசுக்கு இயல்பாக வருகிறது. அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்தில் அமுங்கிப் போய்விடாமல் இவர் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார் பொன்.மகாலிங்கம். நமக்கும் அதே ஆசைதான். நிறைய எழுதுங்கள் கவிஞர் கருணாகரசு.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பதிவு நன்றாக இருக்கிறது பாலுணா.
இந்த நாலு வார்த்தையே போதுமானது கருணாகரசு அடுத்தடுத்து எழுதிச்செல்ல
தம்பி கருணாகரசு, கருப்பாக இருக்கும் நெருப்புக் கவிஞர். இன்றைய கவிதை - நவீன தளங்களையும் தாண்டியும் பயணித்துக் கொண்டிருப்பதை அறிந்து, தன்னை மேலும் மேலும் செழுமைப் படுத்திக் கொண்டாரானால்... காலம் கடந்து நிற்கும் கவிதைகள் பலவற்றை அவரால் படைக்க முடியும்!
எங்கள் கிராமத்தில் பனை மரக் காடுகள் அதிகம் ஊருக்கு செல்லும் போது பனைப் பாட்டம் (குத்தகை) எடுத்தவர், எங்களை
நொங்கு குடிக்க அழைத்து செல்வார், பல மரங்களை கடந்து சென்று "இந்த மரத்தில் நொங்கு இனிப்பாக இருக்கும்" என்று
சொல்லி பறித்துபோடுவார். "ஆகா இனிப்பாகத்தான் இருக்கும்!" அந்த அறிவு ஒரு அனுபவ அறிவு. பழகி பழகி அந்த தேர்வு நுட்பம்
அவருக்கு கை வந்து விட்டது. கருணாக் கரசு போன்ற இளம் படைப்பாளர்களை அடையாளம் காட்டும் தங்கள் பணி தொடரட்டும்
Shanavas Abdul Kader
//அந்த அறிவு ஒரு அனுபவ அறிவு. பழகி பழகி அந்த தேர்வு நுட்பம்
அவருக்கு கை வந்து விட்டது// அதே நுட்பம் உங்களுக்கும் இருக்கிறது... சீக்கிரமே நீங்கள் தீவிரமாக வலைப்பதிவு செய்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன். கருணாகரசைப் பற்றிய அறிமுகம் ஒரு துவக்கம்தான். இன்னும் அடையாலம் காட்ட்சப்பட வேண்டிய மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.
Post a Comment