Friday, December 12, 2008

ஒவ்வொரு வருடமும் வெடிப்பான் ஒரு 'பருத்தி' வீரன்! (நாலு வார்த்தை-012)



2008 இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தமிழ்சினிமா செய்த சாதனைகள் மற்றும் எதிர்க்கொண்ட சோதனைகளைப் பற்றிய அலசல் சீக்கிரமே துவங்கி விடும். பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம், சங்கர் போன்ற சாதனையாளர்களைத் தொடர்ந்து ஒரு புதிய தலைமுறை தன்னை வெகு தெளிவாக அடையாளப்படுத்தி இருக்கும் ஆண்டு என்பதால், 2008 தமிழ்ச் சினிமா சரித்திரத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படும். கார்ப்பரேட் கம்பேனிகளின் வருகையால் நேர்ந்த குட்டை குளம்பிய நிலையும் மெல்ல மாறி வருகிறது. இந்தச் சூழலில், திரைப்படங்களை மொத்தமாக விலைக்கு வாங்கி வெளியிடத் துவங்கியிருக்கிறது சன் டி.வி. இதைப் பற்றிய விவாதங்கள் உள்ளும், புறமும் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது எங்கு போய் முடியும் என்ற கேள்விக்கான விடை, 2009-ன் இறுதியில் கிடைக்கலாம்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இளைய தலைமுறை படைப்பாளிகளின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய வரவுகளில், அமீர், வெற்றிமாறன், ராம், வசந்தபாலன், விஷ்ணுவர்த்தன், கெளதம் மேனன், பாலாஜி சக்திவேல், செல்வராகவன், மிஷ்கின், சசிக்குமார், வெங்கட் பிரபு, சிம்புதேவன் போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையளிக்கிறார்கள். சமீபத்திய வரவென்றால் - கடந்த 5 அல்லது 6 ஆண்டுக்குள் என்று வைத்துக் கொள்ளலாம்... இவர்களைத் தவிர பாலா, முருகதாஸ், சேரன், சுசி கணேசன், லிங்குசாமி, தங்கர் பச்சன், சசி என்று இன்னொரு முக்கியமான பட்டியலும் இருக்கிறது. இவர்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தவர்கள்.

இன்றைக்கு படமெடுக்க வருகிற இயக்குனர்கள் பலருக்கும் கலை நுணுக்கமும், வடிவமும் எளிதில் கைவருவதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களில் பலருக்கும் கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லையே என்ற நியாயமான கவலையோடு இருக்கிறார்கள் தமிழ் மக்கள். 'சமூக அக்கறை, ஆலைச் சக்கரை என்று பேசுபவர்கள் பலரும், திருட்டு வி.சி.டியில் படத்தைப் பார்த்து விட்டு விமர்சிக்கும் ஆட்கள்' என்ற மறுவாதம் படைபாளிகளிடம் இருந்து வரக்கூடும். அதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. இன்றைய சினிமா, ஆயிரமாயிரம் கோடிகள் புரளும் வர்த்தகப் பொருளாகி விட்டது. இந்தியாவைப் பொருத்தவரை Cinena is not an art, but a bussiness என்ற தெளிவு நமக்கு வந்து விட்டால், படைப்பாளிகளைக் குற்றம் சொல்வதைக் குறைத்துக் கொள்ள முடியும்.அதனால்தான், வர்த்தக நிர்பந்தங்களை மீறி,'பருத்திவீரன்','காதல்','வெயில்'
'சுப்ரமணியபுரம்" போன்ற நல்ல படங்கள் வரும்போது, அந்தப் பெருமை முழுவதும் படைப்பாளிக்கும், அதன் தயாரிப்பாளருக்கும் போய்ச் சேருவது அவசியமாகிறது.

2009ம் ஆண்டு தமிழ்ச்சினிமா எப்படி இருக்கும்? உலகப் பொருளாதரச் சிக்கலின் தாக்கம் சினிமாவரைக்கும் நீளுமா என்று தெரியவில்லை. புதுப்படங்களில் கார்பரேட் கம்பேனிகள் மிகவும் யோசித்தே முதலீடு செய்வார்கள் என்று தோன்றுகிறது. சன் டி.வி 10 ~ 15 படங்களையாவது வாங்கி வெளியிடக்கூடும். 'சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும்' என்ற வியூகத்தை சில கம்பேனிகள் கையில் எடுக்கலாம். அந்தச் சூழலில் 'காதல்' போன்ற கதையம்சமுள்ள படங்கள் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. பல கம்பேனிகள் ஸ்டார் வேல்யூ உள்ள படங்களையே நாடக்கூடும். ஆனால், எல்லா சூழ்நிலைச் சிக்கல்களையும் மீறி, ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பருத்திவீரன் எப்படியாவது வெடித்து முளைத்து விடுவான் என்பதுதான் தமிழ்ச்சினிமா பெற்றிருக்கும் அதிசய வரம்!

No comments: