Wednesday, January 14, 2009

இருட்டில் தொலைந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் (நாலு வார்த்தை-040)

அந்த ஷாட் அப்படியே புகைப்படம் மாதிரி மனதில் இருக்கிறது. அதேபோல் அந்த கேட்சும். மிட் விக்கெட் திசையில் பந்து சிக்ஸரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. டீப் மிட்விக்கெட்டில் பவுண்டரி எல்லையில் நிற்கும் ·பீல்டர் மிகச் சரியாக எம்பிக் குதித்து ஒற்றைக் கையால் பந்தைப் பிடித்து விடுகிறார். இந்த இரண்டிலும் சம்பந்தப்பட்டவர் எல்.சிவராமக்கிருஷ்ணன். அது 90களின் துவக்கம். சேப்பாக்கம் மைதானத்தில் TNCA முதல் டிவிஷன் லீக் போட்டி ஒன்றில் விவேக் ரஸ்டான் பந்து வீச, பின்காலில் சென்று நளினமாக ஒரு ஸ்கொயர் டிரைவ் அடித்தார் சிவா. பந்து, புல்தரையை முத்தமிட்டுக் கொண்டு அவ்வளவு அழகாக ஓடி வந்தது. அதே போன்றதொரு ஷாட்டை அசாரூதீன் அதே மைதானத்தில் அடிக்கக் கண்டேன் பின்னொருநாள். இந்திய கிரிக்கெட் சரித்திரம் எப்போதும் எல்.சிவாவை வீணடிக்கப்பட்ட திறனாளர் என்றே அடையாளம் காட்டும். ஒருமுறை "இவரளவு திறமை இருந்தால், உலகத்தையே என் காலடியில் கொண்டு வந்து விடுவேன்" என்று சொல்லி சிவாவைப் பாராட்டினார் கபில்தேவ். சமீபத்திய பேட்டி ஒன்றில் மனீந்தர்சிக்கும் அதையே குறிப்பிட்டிருந்தார். மனீந்தர்சிங்கும் அதே வரிசையில் வைக்கப்பட வேண்டியவர்தான். இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட் அணி தவறவிட்ட மாபெரும் திறனாளர்கள். எங்கு தவறு நிகழ்ந்தது?
17 வயதிலேயே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விட்டார் சிவராமக்கிருஷணன். 'நீங்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்' என்று பலரும் அவரைப் போற்றினார்கள். அந்தப் போற்றுதல் போதையளிக்கக் கூடியது. எல்லாம் எனக்கு எளிதாக வந்துவிடும் என்ற இறுமாப்பைத் தரக்கூடியது. சிவராமாக்கிருஷ்ணனுக்கு அப்படி ஏதும் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் சில சிகரங்களை, சில வேதனைக்குரிய தாழ்வாரங்களைத் தனது வாழ்க்கையில் சந்திக்கிறார். மனதிடமுள்ளவர்கள் மட்டுமே அந்தத் தாழ்வாரங்களில் இருந்து மீண்டு எழுகிறார்கள். மற்றவர்கள் அவநம்பிக்கையின் மடியில் வீழ்ந்து விடுகிறார்கள்.


எல்.சிவராமக்கிருஷ்ணனுக்கும் அதுதான் நிகழ்ந்தது. 1985ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த World Championship of Cricket போட்டிக்குப் பிறகு, மெல்ல, மெல்ல நிகழ்ந்தது சிவராமக்கிருஷ்ணனின் வீழ்ச்சி. அவர் போதைக்கு அடிமையாகி விட்டதாக, பெண்களிடம் வீழ்ந்து விட்டதாக (ஒருசமயம் குஷ்புவோடு கிசுகிசுக்கப்பட்டார்) பலவாறு வதந்திகள். வதந்திகள் என்றாலே உண்மையற்ற பொய்கள் என்றே அர்த்தப்படுகின்றன. மனீந்தர்சிங்கிற்கும் அதுதான் நிகழ்ந்தது. தனது திறமையைப் பற்றி நம்பிக்கையின்மை. பந்து வீசும்போது தனக்கிருந்த double jump-ஐ இழந்த பிறகு, தான் நம்பிக்கையிழந்துவிட்டதாகக் கூறுகிறார் மனீந்தர். துவக்கத்தில் வெறும் பந்து வீச்சாளராக மட்டும் இருந்த மனீந்தர்,பின்னாளில் தரமான ·பீல்டராகவும், பேட்ஸ்மேனாகவும் உருவெடுத்தார். இருந்தும் என்ன பயன்... இந்திய அணி வாய்ப்புகள் வந்தபாடில்லை. சித்துகூட இப்படி வீணாகி இருக்க வேண்டியவர்தான்...அளவுகடந்த மனஉறுதிதான் அவரைக் காப்பாற்றியது. சென்னையில் அவர் விளையாடிய முதல் கிரிக்கெட் டெஸ்டில், ஒழுங்காக ·பீல்டிங் செய்யத் தெரியாமல், கோழி பிடிப்பதுபோல் பந்தை விரட்டிக் கொண்டிருந்தார். அதே சித்துவின் வலுவான த்தோக்களுக்கு பின்னொரு காலத்தில் ஆஸ்திரேலியர்கள் கூட பயப்பட்டார்கள். இதே காலகட்டத்தில் நட்சத்திரமாக ஜொலித்த சதானந்த் விஸ்வநாத்தின் வீழ்ச்சி காலகாலமாக பேசப்பட்டு வரும் சோகக்கதை.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று வீழ்ந்தவர்கள் இவர்களென்றால், வாய்ப்பு கிடைக்காமலே வீழ்ந்தவர்கள் பலர். இன்று U-19 போட்டிகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. அதில் சிறப்பாக விளையாடும் விராட் கோலி போன்றவர்களுக்கு இந்திய அணியின் கதவுகள் பட்டென்று திறந்து கொள்கின்றன. 80களில், 90களில் கதை அப்படியல்ல. ஒரே ஒரு சச்சின் டெண்டுல்கரைத் தவிர மற்றவர்களுக்கு எல்லாக் கதவுகளும் மூடியே கிடந்தன. முறையான வாய்ப்புகள் இல்லாததால் வீணான திறனாளர் எம்.செந்தில்நாதன் என்ற தமிழக வீரர். அஜய் ஜடேஜா, வெங்கடபதி ராஜு போன்றவர்கள் எல்லாம் இவரது தலைமையில்தான் U-19 விளையாடினார்கள். உடுமலைப்பேட்டை என்ற சின்ன நகரத்தில் இருந்து முளைத்து, தனது திறமையால் உயர்ந்தவர். அந்தக் கால U-19 போட்டிகளில் சதமடிப்பது, இரட்டைச் சதமடிப்பது போன்றவை அவருக்கு சர்வசாதாரணம். இயான் பிஷப் போன்ற வேகப் பந்து வீச்சாளர்களையெல்லாம் 16 வயதிலேயா விளாசித் தள்ளியவர். வயது குறைவென்று தமிழக அணியில் இடம்தரவே மிகவும் யோசித்தார்கள்...சில, பல வருடங்களுக்குப் பிறகு வாய்ப்புகள் வந்தபோது... It was too late. இன்று MRF Pace Foundation பொறுப்பில் இருக்கிறார் செந்தில்நாதன். U-19 போட்டிகளில் பிரகாசித்து, சரியான வாய்ப்புகளின்றி சரிந்துபோன இன்னொரு தமிழக வீரர் முஜிபூர் ரஹ்மான். ஒரு முறை உள்ளூர் போட்டியொன்றில், கபில்தேவ் வீசிய முதல் பந்தையே முஜிபூர் ரஹ்மான் சிக்ஸருக்கு அடிக்க, அசந்துபோன கபில், அவருக்கு ஒரு பேட்டைப் பரிசளித்தாராம். அதுதான் முஜிபூர் பெற்ற அதிகபட்ச பரிசாக இருக்க வேண்டும். காரணம் - அதற்குப்பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்துப் போனது. இந்த இருவரது தோல்விகளுக்கும் , சரியான நேரத்தில் கிடைக்காத வாய்ப்புகளும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாத அவர்களின் lack of killer Instict-ம் தான் காரணம்.

இவையெல்லாம் விபத்துகள். இந்த விபத்துகளில் சிக்கி பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சீரழிந்து போயிருக்கிறது. ஒரு சிலரை மட்டுமே குற்றம் சொல்ல இயலாத அளவு, பலநூறு காரணங்கள் இதன் பின்னணியில் பின்னிக் கிடக்கின்றன. இன்று நிலைமை மாறி விட்டது. BCCI என்ற பணம் கொழிக்கும் கட்டமைப்பில், கிரிக்கெட் வீரர்களின் பல தேவைகளையும் கவனிக்கும் சிற்றமைப்புகள் பல தோன்றி விட்டன. அவை வீரர்களின் நலனில் அக்கறை காட்டுகின்றன. திறமையுள்ளவர்கள் மறைக்க முடியாதபடி பத்திரிக்கைகள் அவர்கள் மேல் வெளிச்சம் வீசிக் கொண்டே இருக்கின்றன. அபிநவ் முகுந்த என்ற 18 வயது கறுப்பு இளைஞன் ரஞ்சி டிராபியில் எடுக்கும் ரன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாய்ப்புகளும் வருகின்றன. ஒரு கிரிக்கெட் வீரனின் விளையாடில் உள்ள குறைகளை நீக்கி, அவனை முழுமையாக்குவதில் நிஜமான அக்கறை காட்டப்படுகிறது. முனாப் படேலின் ·பீல்டிங் திறனை மேம்படுத்துவதில் ராபின் சிங் காட்டிய அக்கறை அதற்கொரு உதாரணம். இதுபோன்ற சின்னச் சின்ன பல விஷயங்களில் சேர்க்கையால் உலக டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணி என்ற பெரிய இலக்கை நோக்கி வேகமாகப் பயணித்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

7 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// முனாப் படேலின் ·பீல்டிங் திறனை மேம்படுத்துவதில் ராபின் சிங் காட்டிய அக்கறை அதற்கொரு உதாரணம்.//

விமர்சனம் யார் வேண்டுமாணாலும் எழுதலாம். ஆனால் இது போல் முற்றுப் புள்ளீ வைக்க தனிதிறமை வேண்டும்

சி தயாளன் said...

அடடா..இந்திய கிரிக்கட்டை (அதுவும் முதல் தர போட்டிகள் முதல் ) நல்லாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள்..:-)

பாலு மணிமாறன் said...

உங்கள் வருகைக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி SUREஷ்!

முனா·ப் படேல், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் முரட்டு குதிரை. நவநாகரிக உலகம் ஒட்ட முடியாத ஒன்றாக அவருக்குத் தோன்றலாம். மிகுந்த பொறுமையும், நிதானமான அணுகுமுறையும் அவரிடம் காட்டப்பட்டால், குறைந்த பட்சம் 200 டெஸ்ட் விக்கெட்டுகளாவது எடுக்கக்கூடிய திறன் அவருக்கு இருக்கிறது!

தமிழ் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

பாலு மணிமாறன் said...
This comment has been removed by the author.
பாலு மணிமாறன் said...

உங்கள் வருகைக்கு நன்றி திகழ்மிளிர். உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

பாலு மணிமாறன் said...

// ’டொன்’ லீ said...
அடடா..இந்திய கிரிக்கட்டை (அதுவும் முதல் தர போட்டிகள் முதல் ) நல்லாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள்..:-)//

25 வருடமாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன். சில விஷயங்கள் நினைவில் தங்கி விடுகின்றன.!