Monday, January 12, 2009

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தேடிய மைக்ரோ ·பிலிம் (நாலு வார்த்தை-038)

நா.ஆ.செங்குட்டுவன் மலேசியாவின் மூத்த எழுத்தாளர். பல வருடங்களுக்கு முன்பே மலேசியாவில் முழு நீளத் தமிழ் திரைப்படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். இவற்றிலெல்லாம் முக்கியமான விஷயம் - இவர் இப்போதும் இளமைத் துடிப்போடு எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதுதான். கிள்ளானிலுள்ள நண்பர் பாலகோபாலன் நம்பியார் மூலம்தான் அவர் எனக்கு அறிமுகமானார். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் அவர் மலேசியாவிலிருந்து தொலைபேசியில் அழைத்து ஒரு உதவி கேட்டார். "1965-ம் வருடம் சிங்கப்பூர் தமிழ்முரசில் ஒரு தொடர்கதை எழுதினேன். அதன் கையெழுத்துப் பிரதியோ, அந்தத் தொடர்கதை வெளியான தமிழ்முரசின் பிரதிகளோ என்னிடம் இல்லை. அது, சிங்கப்பூர் நூலகத்தில் "மைக்ரோ ·பிலிமாக" இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதானா என்று சோதித்துப் பார்த்துச் சொல்லுங்களேன். அதை நாவலாக வெளியிட ஆசைப்படுகிறேன்." என்ற அவரது குரலில், கிடைக்குமா என்ற ஆதங்கமும், கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலையும் ஒரு சேர ஒலித்தது."கவலைப்படாதீர்கள். அப்படி மைக்ரோ ·பிலிம் இருக்குமென்றால், மொத்தக் கதையும் உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்" என்று நம்பிக்கையளித்தேன். தேசிய நூலகத்தில் தேடியதில், அந்த முழுத் தொடர்கதையும் (ஓரிரு வாரங்கள் தவிர) மைக்ரோ ·பிலிமாக இருந்தது. நா.ஆ.செங்குட்டுவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அந்த ஆனந்தத்தை சாத்தியமாக்கியது, சிங்கப்பூர் தேசிய நூலகம்.

அந்தத் தொடர்கதையைத் தேடிய காலத்தில் சற்றே பழைய கட்டிடத்தில் இருந்த சிங்கப்பூர் தேசிய நூலகம், தற்போது விக்டோரியா ஸ்டிரீட்டில் உள்ள அதிநவீன கட்டிடத்திற்கு இடம் மாறி விட்டது. நூலகம் என்பதைத் தாண்டி, பல கலைகளும் கூடுமிடமாகவும், கருத்துக் கருவூலமாகவும், நகரின் மத்தியில் அமைதியை அடைகாக்கும் இடமாகவும், நவீன கட்டிட வடிவைப்பின் ஆச்சரியமாகவும் உரு கொண்டுள்ளது சிங்கப்பூர் தேசிய நூலகம். பெரும்பாலும் கண்ணாடியால் இழைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்திற்கு சமீபத்தில் இந்தியாவிவிருந்து வந்திருந்த உறவினர் ஒருவரை குடுப்பத்தோடு அழைத்துச் சென்றிருந்தேன். 14 அல்லது 15வது மாடி. லி·ப்டை விட்டு வெளியே வந்ததும், முழு உயரக் கண்ணாடித்தடுப்பு, அதற்கு அப்பால் நேர் கீழே அகன்ற பிராஸ் பாசாச் சாலை. அதில் வாகனங்களே எறுப்பாகத் தெரிய, என் உறவினரின் கை, கால்கள் நடுங்குவதை உணர முடிந்தது. சிங்கப்பூரில் இதை விட உயரமான பலநூறு கட்டிடங்கள் உண்டெனினும், 15வது மாடியின் சுவர்களற்ற விளிம்பில் நிற்கும்போது, நடுக்கம் எடுக்கத்தான் செய்யும். மொத்தம் 16 மாடிகள் கொண்ட இரண்டு பிளாக்குகள் உண்டு தேசிய நூலகத்திற்கு. ஒவ்வொரு தளத்திலும் உள்ள Bridge-கள் இரண்டு புளோக்குகளையும் இணைக்கின்றன. புத்தகங்களை இரவல் பெறும் Central Lending Library Basement 1-ல் இருக்கிறது. இங்கிருந்து ஆங்கில, சீன, மலாய் மற்றும் தமிழ் மொழிப் புத்தகங்கள் எது வேண்டுமானலும் தேடி எடுத்துக் கொள்ளலாம். e-kiosk-ல் நீங்கள் தேடும் புத்தகத்தின் / நூலாசிரியரின் பெயரைத் தட்டினால், அந்த நூலின் ஜாதகமே உங்கள் கையில் வந்துவிடும். 7வது தளத்திலிருந்து 13வது தளம் வரை Lee Kong Chian Reference Library இருக்கிறது. இந்தப் பிரிவில் உள்ள பலதரப்பட்ட புத்தகங்களையும் நீங்கள் பார்க்கலாம், ரசிக்கலாம்; ஆனால் வெளியில் எடுத்துச் செல்ல முடியாது.

ஒரு இடைச் செருகலாக, தேசிய நூலகத்தின் 3 ~ 5வது தளங்களை National Arts Council கையகப்படுத்தி, அங்கு உலகத் தரமிக்க நாடக அரங்குகளை அமைத்துள்ளது. நவீனத் தமிழ் நாடகங்களைக் கூட இங்குதான் வசதியாக அரங்கேற்றுகிறார்கள். 5வது தளத்தின் இன்னொரு புளாக்கில் Imagination and Possibility Rooms இருக்கின்றன. ஒவ்வொரு அறையிலும் 100 பேர் உட்காரலாம். தேவைப்பட்டால், இரண்டு அறைகளையும் இணைத்துக் கொள்வதும் சாத்தியமே.அதையொட்டி ஒரு அழகான திறந்தவெளித் தோட்டம் உள்ளது. இந்த இரண்டு அறைகளுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கவிஞர் நா.முத்துக்குமார், கவிஞர் மனுஷ்யபுத்திரன், இயக்குனர் அமீர் உட்பட பலரையும் அழைத்து வந்து தமிழ் நிகழ்வுகளை நடத்தும் வாய்ப்பை எனக்கு வழங்கியவை இந்த அறைகள்தான். அந்த திறந்தவெளி தோட்டத்தில், சூடான அல்வாவோடு, இலக்கியமும் பகிர்ந்து கொள்வது இனிப்பான விஷயமாகவே இருந்து வருகிறது. Reference Library -யில் 79,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பலதுறை சார்ந்தும் இருக்கின்றன. விஞ்ஞானம் தொழில்நுட்பம் சார்ந்த 24,000 புத்தகங்களும் இங்கு உண்டு. இந்த reference library-யில் தமிழ்ப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தபோது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் உறவினரின் புத்தகத்தையும் தற்செயலாக பார்த்ததில், ஒரு தற்செயல் சந்தோஷத்தையும் ஒரு முறை அனுபவித்தேன். பல அரிய, பழையத் தமிழ்ப் புத்தகங்கள் இங்குண்டு. திராவிடர் கழகம் கி.வீரமணி ஒவ்வொருமுறை சிங்கப்பூர் வரும்போதும், இந்த நூலகத்திற்கு வருவது வழக்கம் என்பது செவி வழிச் செய்தி.

11 மற்றும் 12வது தளங்களில் சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 240,000க்கும் மேற்பட்ட பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 24,000க்கும் மேற்பட்ட மைக்ரோ ·பிலிம்களும் பயன்படுத்தக் கிடக்கின்றன. இவையெல்லாம் இந்த நூலகத்தின் ஒரு சில சிறப்புகள்தான். இவை தவிர, இந்த சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு இருக்கும் சிறப்புகள் ஏராளமானவை. தமிழுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் தந்திருக்கும் இத்தகைய நவீன நூலகம் உலகில் வேறெங்கும் இல்லை என்று துணிந்து சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் சிங்கப்பூரில் நடக்கும் எழுத்தாளர் வாரத்தின் பேச்சுகள் பல இந்த நூலகத்தில்தான் நடக்கின்றன. போன வருடம் எஸ்.ராமக்கிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பலரும் ஆர்வமாக அவரது பேச்சைக் கேட்டார்கள். நடிகர் நாசர் போன்றவர்கள் இங்கு உரை நிகழ்த்தியதும் உண்டு. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தங்களது நூலகளை வெளியிடும் தளமாகவும் இருந்து தமிழ் வளர்க்கிறது சிங்கப்பூர் தேசிய நூலகம்!

4 comments:

Noorul Ameen said...

Vankham annaa,
I have started reading your blog entries. As usual your writings are intresting and never fail to inspire me.

In btwn wish you and your dear family, a happy pongal =)

b/rgds
ameen

வடுவூர் குமார் said...

சிங்கை நூலக கிளைகள் மூலம் நான் எடுத்து படித்து வளர்த்துக்கொண்ட அறிவு சொல்லில் அடங்காது.
உ-ம் : லினக்ஸ் மற்றும் கணினி மொழி அறிவு.

சி தயாளன் said...

தேசிய நூலகத்தில் reference புத்தகங்கள் தாரளமாக உண்டு..குறிப்பாக தமிழ் புத்தகங்கள் மேன்மேலும் வைக்கப்படல் வேண்டும்..அதற்கு நம்மவர்கள் நூலகங்களை அதிகமாக பாவிக்கவேண்டும்..:)

பாலு மணிமாறன் said...

Noorul Ameen said...

Thanks for dropping here thambi.. I wish you keep writing a lot in your block too!

//வடுவூர் குமார் said...
சிங்கை நூலக கிளைகள் மூலம் நான் எடுத்து படித்து வளர்த்துக்கொண்ட அறிவு சொல்லில் அடங்காது.
உ-ம் : லினக்ஸ் மற்றும் கணினி மொழி அறிவு.//

உங்கள் கருத்துக்கு நன்றி வடுவூர் குமார்! நேரமும், மனமும் இருப்பவர்களின் வாழ்வில் சிங்கப்பூர் நூலகங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் - நீங்கள் சொல்வது போல!


// ’டொன்’ லீ said...
தேசிய நூலகத்தில் reference புத்தகங்கள் தாரளமாக உண்டு..குறிப்பாக தமிழ் புத்தகங்கள் மேன்மேலும் வைக்கப்படல் வேண்டும்..அதற்கு நம்மவர்கள் நூலகங்களை அதிகமாக பாவிக்கவேண்டும்..:)//

நிறைய தமிழ் புத்தகங்கள் ஒருமுறை கூட படிக்கப்படாமல் நூலகத்தில் இருக்கின்றன என்பதுதான் சோகம். நூலகத்தில் வாங்கும் கவிதைத் தொகுப்பு பிரதிகள் எண்ணிக்கையை குறைத்து விட்டார்கள் - காரணம் அவற்றை எடுத்துப் படிப்பவர்களின் எண்ணிக்கை மிக, மிக குறைவு என்பதால்!