Friday, January 16, 2009

சுப்பிரமணியன் ரமேஷின் சித்திரங்கள் கரைந்த வெளி! (நாலு வார்த்தை-042)

காற்றினூடாக கரைந்து கிடக்கின்றன சித்திரங்களும், இசைக் குறிப்புகளும். அவை தங்களை வரைய, வாசிக்க இருக்கின்ற கரங்களை தேடியபடி இருக்கின்றன. கண்டடைந்து ஓவியமாகி, இசையாக காற்றினூடாகச் சிரிக்கின்றன. அந்தச் சிரிப்பு மலைமுகடுகளில் எதிரொலித்துக் கிடக்கிறது. பாலைவன வெளிகளில் மணல் மீது விழுந்து கிடக்கிறது. எல்லாப் புலன்களாலும் உணரக்கூடிய ஒன்றாக இருக்குமந்தச் சிரிப்பு. சுப்பிரமணியன் ரமேஷின் 'சித்திரங்கள் கரையும் வெளி'யில் அந்தச் சிரிப்பைக் கண்டேன். அது புகுந்து சிலிர்த்தது புலனுள். ஒரு அகதி வாழ்க்கையின் சுதந்திரநிலைகளில் பிறந்த கவிதைகள் நிறைந்த கவிதைத் தொகுப்பு 'சித்திரங்கள் கரையும் வெளி'.பிறந்த மண்ணை விட்டு வெளியேறி, புதுமண்ணில் முளை விடுவதை விபத்தென்றோ, வீரியமென்றோ, மனித நாடோடி வாழ்வின் இயல்பென்றோ கொள்வது அவரவர் மனநிலை சார்ந்தது. ஒப்பிட்டுப் பார்க்க அடுத்தவரது அனுபவங்கள் கிடைக்குமெனில் ஆறு வித்தியாசங்களுக்கு மேலும் அறிய முடியலாம். மனம் வரையும் எழுதாத கவிதைகளோடு ஒப்பிடக் கவிதைகள் தந்திருக்கிறார் ரமேஷ். பலருக்கும் எளிதில் கிடைக்காத அனுபவங்களும், கவிதாமனமும் ஆகி வந்து அவருக்கு/அதற்குக் கை கொடுக்கின்றன. எழுதி அழித்து, எழுதி அழித்து எழுதிய சித்திரங்களில் நாம் சிக்கிக் கொள்ள, இழுத்துச் செல்லும் பெருவெள்ளமாய் கவிதைகள்.


'ரமேஷ் நல்ல வாசகர்.நல்ல ரசிகர். நல்ல வாசகராகவும், நல்ல ரசிகராகவும் இருக்கிற ஒருவர், நல்ல படைப்பாளியாவது சாத்தியம்தான்' என்கிறார் விக்கிரமாதித்யன். சாத்தியமாதலின் சதவீதங்களே வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. தொண்ணூறு சதவீதம் கவிஞனாக வாய்ப்புள்ளவனின் வாழ்க்கையில் இருக்கும் பத்து சதவீதம் கொலைகாரனாகும் வாய்ப்பு அபாயகரமானது. பத்து சதவீதமா?, தொண்ணூறு சதவீதமா? என்ற ரகசியத்தைக் காலம் தன் கைகளுக்குள் ஒளித்து வைத்துக் கொள்வதே அதற்குக் காரணம். அதிர்ஷ்ட வசமாக, நல்ல சூழல் அவனைத் தத்தெடுத்துக் கொள்ளும்போது, கவிதை அவனைப் பெற்றெடுக்கிறது. சாத்தியமாதலின் சதிராட்டத்தில் சிக்கி, சிதறித் தெரிக்கின்றன கவிதைகள். 'இப்படித்தான் அமைந்து விட்டது வாழ்க்கை / பித்தர்களுக்கும் குடிகாரர்களுக்கும் இடையில்.../ பைத்தியமாகி இருப்பதைத் தொலைப்பதா? / குடிகாரனாகி தொலைந்ததில் இருப்பதா?' என்று கேள்வியோடு ஊசலாடுகிறார் ரமேஷ். எங்கு ஓடினாலும் தொலைக்க முடியாத குடிகாரர்களும், பைத்தியக்காரர்களும் நிறைந்த வாழ்வில், நம்மைப் தொலைப்பதே நடக்கிறது பலமுறை. தொலைக்கிறோம் ; பிறகு தேடிக் கண்டடைகிறோம். 'கரிசனத்தை இழந்து வாழ்வில் / அர்த்தமுள்ளதாய் எதையெல்லாம் பெறுவீர்கள் / புன்னகைக்கும் முகம் பார்க்க ஏங்கும் / என்னை என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்' இழக்கின்ற கரிசனங்கள் அக்கறையாய் வெளிப்படும் புன்னகைகளில் மட்டுமே காணக் கிடைக்குமென்று கண்டு கொள்கிறார் ரமேஷ்.


தாயாகவும், சேயாகவும் ஒரே சேர சிந்திக்கின்ற மனதின் மறுநிலைகளை துல்லியமாய் வெளிப்படுத்தும் கவிதைகள், மூளையின் செதில்களைக் கிள்ளிப் பார்க்கின்றன. 'தாயாக இருக்கும் நான், ஓர் நாள் சேயாக இருந்தேன், சமயங்களில் மீண்டும் சேயாகிறேன்' என சொல்லிச் சிரிக்கும் கவிதைகளில் முகம் பார்த்துக் கொள்கிறோம். 'நீயும் கை விட்டாய் எனை / சாரில் சாய்ந்து நிற்கும் / என் புகைப்படத்தைப் பார்க்கையில் / அடுத்த மாதம் கட்ட வேண்டிய / காருக்கான தவணைப் பணமோ / வாங்க வேண்டிய / வாகன நிறுத்தக் கூப்பன்களோ / உனக்கேனும் / என்னைப் போல / நினைவுக்கு வராதிருக்கட்டும் / அம்மா' என்று உலகின் கொடூரப் பிழியலிருந்து தப்பித்து தாயின் மடியில் இடம் தேடும் சேயின் தப்பித்தல் மனமும், 'உனக்கேனும்' என்ற அக்கறை விசும்பலும் ஒரு சேர ஒலிக்கும் சமவெளியை காட்டுகிறார் ரமேஷ். 'சீனச்சிறுமியின் / அழகிய புன்னகை / வார்த்தைகளற்ற / கவிதையை வீசிச் செல்லும் / எதையும் யாசிக்கா / நிரந்தர முழுமையுடன்' என வருடும் கவிதை விரல்களில் பிறக்கிறது முடிவற்ற புன்னகை ஊற்று. எத்தனை முறை அள்ளிக் குடித்தும் நீர் தீர்வதில்லை - தாகமும்தான். அங்கே, அர்சுனன் வில் அம்பாக, இனங்கள் கடந்து குவிகிறதோர் தாய்மனம். பிறிதொரு நேரம், தாயின் அன்பை சதா நோக்குமொறு மனம் 'அம்மாவாலும் அதே / அன்பாய் இன்னொரு முறை / ஊட்டி விடமுடியாது' என ஏங்கி வழியும்போது, 'அதே அன்பு', இழந்துவிட்ட எத்தனையோவற்றின் பிரதிநிதியாய் முகம்காட்டி, யாருமற்ற பெருவெளியில் வேதனை விம்மிக் கிடப்பதைப் பார்க்கிறோம். நீந்திக் கடக்க முடியாத இழப்பு நதியல்லவா அது!

'நான் யாருகேனும் எழுதும் / வரிகளில் உனக்கான / வார்த்தைகள் இருக்கும்' எனும் வாக்குமூலத்தோடு துவங்குகின்றன கவிதைகள். யாருக்காகவோ, எதற்காகவோ எழுதப்பட்ட கவிதைகள். எந்தக் கவிதையில் என் பிம்பம் தெரிகிறது என்ற தேடலுக்கு வழிவிடும் கவிதைகள். யாருக்கேனும் நாம் எழுத நினைத்த வரிகளில் வழி நெடுக வழுக்கி விழுகிறோம். ஒரு புள்ளியில் ஒன்றாகும் வாய்ப்பை வழங்கி, வழங்கிச் சிரிக்கிறார் ரமேஷ் கவிதையாக. இந்தக் கவிதைக்கு தோலுரித்துக் கொள்ளும் தன்மை இருப்பதைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது... 'நான் யாருக்கேனும் வாழும் வாழ்க்கையில் உனக்கான வாழ்க்கை இருக்கும், நான் யாருக்கேனும் பாடும் பாடலில் உனக்கான கீதம் இருக்கும்' - எப்படியும் தோலுரிக்க இயலுகிறதே இதை! நாம் எப்போதுமே ஏதோ ஒன்றின் சாயலாகவே இருக்கிறோம். "அப்பா சாயலில், அம்மா சயலில்...என் சிகையலங்காரம் அவனது சாயலில்... அவளது நடை அசின் சாயலில்... என் தோழியின் இடை சிம்ரன் சாயலில்...அவனைப் போல் படி மகனே.." இப்படி சுயம் என்பதை அறிய வாய்ப்பளிக்காத சாயல்கள். ஆனால் சுயம் எது, சாயல் எது என்று ஆராய்வதில் அழிவதற்கில்லை வாழ்க்கை. அது வாழ்வதற்கு மட்டுமே. சுப்பிரமணியன் ரமேஷின் 'சித்திரம் கரையும் வெளி' - அதை வாசிப்பவர்களுக்கு அவரவர் அடையாளத்தை ஆங்காங்கே காணும் வாய்ப்பை வழங்குகிறது. அது தரும் வியப்பிலும், சுகத்திலும் இருந்து விடுபடுவதற்குள் நாமறியாத, முற்றிலும் புதிதானதோர் அடையாளத்தையும் சட்டென்று நம்முன் அவிழ்த்து வைக்கிறது. அதன் பின்னிருந்து கவிதையாகச் சிரிக்கிறார் சுப்பிரமணியன் ரமேஷ். ஒரு கிராமம், சென்னை, சிங்கப்பூர் என நிலை கொள்ளும் இந்தத் தொகுப்பு, சிங்கப்பூர் கவிச்சூழலில் மிக முக்கியமானதாகும்!

2 comments:

பாலு மணிமாறன் said...

பாண்டிதுரை said...
தம்பி, உன்னுடைய பின்னூட்டம் எப்படியோ delete இருக்கிறது. தாத்தாவைப் பற்றிய அந்தப் பின்னூட்டம் மிக நெகிழ்வழிப்பதாக இருந்தது. நீ உனது தாத்தாவிற்கு எழுதிய வரிகளில், நான் எனக்கான வரிகளை எடுத்துக் கொண்டேன்.

சுப்பிரமணியன் ரமேஷால் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு எவ்வளவோ செய்ய முடியும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்

manathu.com said...

வணக்கம்
கவிதை வரிகளை கோடுபோட்டு அதன் வடிவத்தை நாமே வேரறுக்கலாமா?
வடிவத்தோடு விடுங்கள்
இல்லையெனில், கவிதயே வேண்டாம்