Saturday, January 10, 2009

தாத்தாக்கள் எப்போதுமே போற்றுதலுக்குரியவர்கள்! (நாலு வார்த்தை-037)

பலரையும் போல், தாத்தாவை எப்போதாவதுதான் நினைக்க முடிகிறது. அந்த நினைப்பு, குதூகலிக்கும் சிரிப்புடன் கூடிய அவரது முகத்தைத்தான் முதலில் கொண்டு வரும். உலகின் கவலைகள் மற்றும் களங்கங்களற்ற வெகுளித்தனமான சிரிப்பு அவருடையது. 90 வயதுக்கு மேல், இறக்கும் காலம்வரையிலும் அந்த சிரிப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார். அந்த வெகுளித்தனமான, கபடமற்ற குணத்தை ஒரு Charector Flaw-வாகப் பார்த்தவர்களும் உண்டு. அதில் முக்கியமான இருவர் - என்னுடை அப்பா மற்றும் சித்தப்பா. அப்பா நுணுக்கமான வார்த்தைகளால், சிறு பார்வைகளால் அதை வெளிப்படுத்துவார். சித்தப்பா எப்போதும் கோபத்தைக் கையிலெடுப்பார். தாத்தாவினுடைய களங்கமற்ற தன்மை கேள்விக்குள்ளாகும் போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் கோபமாக வெளிப்படும். "ஏம்பா...ஏய்...ஏம்பா இப்படி இருக்க?" என்பார். "யார்டா இவன்... எப்படியிருக்கேன்?" என்ற பதில் கேள்வி தாத்தாவிடமிருந்து வெளிப்படும். அடுத்த நிமிடம், சிறு குழந்தைகளிடம் கிண்டலும், கேலியுமாக விளையாடத் துவங்கி விடுவார். சின்னக் குழந்தைகளிடம் கிண்டலும் கேலியுமாக விளையாடுவது 90 வயதுக்கேற்ற செயலல்ல என்பது சித்தப்பாவின் நினைப்பு. தாத்தா எப்போதுமே தன் வயதை உணர்ந்ததில்லை. அப்படி உணர்ந்திருந்தால், 90 வயதுக்கும் மேல்கூட வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தோட்டத்து வேலைகளைச் செய்திருக்கவும் மாட்டார்; குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடி இருந்திருக்கவும் மாட்டார். முதுமைக் காலம்வரை தன்னிலிருக்கும் அப்பாவித்தனத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு மனிதனை அனுமதிப்பதில்லை இந்தச் சமூகம். அந்த அப்பாவித்தனத்தைக் கொலை செய்ய, வார்த்தை வாள்களோடு ஆவேசமாக அலைந்து கொண்டிருக்கிறது. ஆனால் எந்த வாளாலும் என் தாத்தாவின் வெள்ளேந்தித்தனத்தை அவரது மரணம் வரைக்கும் வெட்ட முடிந்ததில்லை.

விடுதியில் படிக்கும் தனிமை - சமயங்களில் சுவாரஸ்யமானது; சமயங்களில் கொடுமையானது. சகதோழனை உறவினர் பார்க்க வரும் ஞாயிற்றுக் கிழமைகள் நம் மனதுக்குள் துயரத்தைக் கொண்டு வந்து விடும். தூரத்து மைதானத்தில் விளையாடிக் கொண்டோ, வேடிக்கை பார்த்துக் கொண்டோ இருக்கையில், குழாய் ரேடியோவில் ஒலிக்கும், 'ஏம்மா, கருவாட்டு கூடை முன்னாடி போ' என்ற சிட்டுக்குருவிப் படப் பாடல் மனதுக்குள் இறங்கி, சோகக்கூடு கட்டிக் கொள்ளும். அப்பா, அப்பா, சகோதர, சகோதரிகளின் நினைவு கண்ணீராக வடிவாகி விடும். ராயப்பன்பட்டி விடுதியில் தங்கி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இது எனக்கு நேர்ந்தது. அடிக்கடி என்னைத் தேடி வந்து ஆறுதல் தருவது தாத்தாதான். அவரது வருகை எப்போது நிகழும் என்றே கணிக்க முடியாது. திடீரென்று பிரசன்னமாவார். என் சகதோழர்கள் பலருக்கும் அவர் பரிட்சயம். ஓடி வந்து "உன் தாத்தா வந்திருக்கார்" என்று சொல்வார்கள். 9 மணிக்கு மேல் பஸ் ஓடாத அந்தக் காலத்தில் அவர் இரவு 11 மணிக்கு விடுதிக்குள் வந்து சேருவார். நாங்கள் தூங்கிப் போயிருப்போம். நான் உறங்கும் அந்த பெரிய ஹாலின் நுழைவாயிலில் நின்று 'மணி...எங்கப்பா இருக்க' என்று குரல் எழுப்புவார். அங்கு படுத்திருக்கும் அத்தனை பேரும் விழித்துக் கொள்வார்கள். நான் கண்ணைக் கசக்கியபடி எழுந்துபோய் அவரிடம் பேசுவேன்.' எப்படி தாத்தா வந்தே...கடைசி பஸ் 9 மணிக்கே போயிருக்குமே" என்பேன்."உத்தமபாளையத்திலிருந்து நடந்தே வந்தேன்பா" என்பார். மனசுக்குள் பொசுக்கென்று கண்ணீர் பொங்கி விடும். 'சரி தாத்தா...இனிமேல் எப்படி ஊருக்கு போறது... இங்கேயே படுத்துத் தூங்கிட்டு. காலையில கிளம்பிப் போ." என்று சொல்வேன். "அடப் போடா புள்ளாண்டான்... நாலே எட்டுல ஊருக்குப் போயிடுவேன்" என்று சொல்லி, என் கையில் முருக்கு, அதிரசம் என்று எதைவாவது திணித்து விட்டு, விருவிருவென்று கிளம்பிப் போய் விடுவார். அர்த்த ராத்திரியில் நானும் என் நண்பர்களும் அதிரசத்தை தின்று கொண்டிருப்போம். தாத்தாவின் அந்த வெள்ளேந்தியான, முரட்டுத்தனமான பாசத்தைப் பற்றி எந்தச் சூழலிலும், யாரிடமும் நான் வெட்கப்பட்டதில்லை. எப்படியிருந்தாலும், Thats my thaththa!

அவர் அடிப்படையில் விவசாயி. நிலம் அவருக்குத் தாய். பூமிமாதா. படியளப்பவள். ஆடு, மாடுகளைக் கூட அவர், 'வாடி...இந்தப் புல்லை சாப்பிடு.' என்றும், சாப்பிடாவிட்டால், 'பாருடா பேராண்டி... சாப்பிடாம அடம் பிடிக்கிறதை... ரொம்பக் கோபக்காரி இவ' என்று பெண்ணாக உருவகித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். வெள்ளைக்காரன் ஆட்சியில் 'குற்றப்பரம்பரையினர்' கொடுமைக்கு உள்ளான காலத்திலும் அவரை வெள்ளைக்காரன் மரியாதையோடு நடத்தியதற்குக் காரணமாயிருந்த நேர்மையைப் பற்றி அவருக்குள் எப்போதும் இருக்கும் பெருமிதத்தையும் ஆர்வத்தோடு பார்த்திருக்கிறேன். அவருக்குத் தெரிந்ததெல்லாம் நேர்மையாக இருப்பது, கடுமையாக உழைப்பது, தன்வசமிருந்த வெள்ளேந்தித் தனத்தைக் சேதமில்லாமல் காத்திருப்பது மட்டும்தான். எங்கள் வயல், பெரியாற்றின் கரையோரம் இருக்கிறது. மழைக்காலத்தில் மொத்த வயலும், வெள்ளத்தில் நெல் மூழ்கிவிடும். மணல் நிரம்பி விடும். ஆனால், மறுபடியும் அந்த நிலத்தை சீராக்குவதிலோ, மறுபடியும் நெல் விதைப்பதிலோ, மறுபடியும் ஒரு வெள்ளம் வந்தாலும் சோர்ந்து போகாமல் இருப்பதிலோ, தாத்தா, கவலை கொண்டு கண்டத்தில்லை. "உங்க தாத்தன் ஒரே ஆள் போதும். மம்பட்டிய எடுத்தா மண்ணைப் போட்டு ஆத்தையே மூடீடுவாரு." என்று அவர் வயதையொத்த தோழர்கள் கேலி பேசும் போது அவரிடமிருந்து பளிச்சென்று ஒரு புன்னகைதான் வெளிப்படும். விளக்கற்ற இரவுகளில் அவர் தோட்டப் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும்போது பாம்புகள் கடந்து போகும். நான் அலறுவேன். "பயப்படாதப்ப... நாகராஜன்...நம்ம பய.. ஒண்ணும் செய்ய மாட்டன்.' என்பார். நாகராஜன் நம்ம பயலாகத்தான் இருந்திருக்க வேண்டும். 90 வயதுவரை அந்தத் தோட்டதிற்குள் சுற்றித் திரிந்த அவரை அவன் ஒன்றுமே செய்ததில்லையே...

என் தந்தை சென்னையில் பணியாற்றிய காலத்தில், தாத்தா திடீரென்று வருவார்; ஓரிரு நாள் இருந்து விட்டு, திடீரென்று கிராமத்திற்கேத் திரும்பிப் போய் விடுவார்."அவரால தோட்டம், தொரவை விட்டு சும்மா இருக்க முடியாதுப்பா." என்பார் என் தந்தை. தாத்தாவால் 90 வயதுக்கு மேல் கூட சும்மா இருக்க முடிந்ததில்லை. எந்த மகன் வீட்டிலும் ஓய்வு கொண்டு தங்குவதற்கு அவரது மனம் அனுமதித்ததில்லை."மருமகள்கள் எல்லாம் நான் தோள்ல தூக்கிப் போட்டு வளத்த சொந்தக்காரப் பொண்ணுகதான். என்னை உள்ளங்கையில வச்சு தாங்குவாங்கதான். ஆனால்..." என்று சொல்லி நிறுத்திக் கொள்வார் தாத்தா. அந்த ஆனாலுக்குப் பிறகு வார்த்தைகள் எப்போதும் தொடர்ந்ததில்லை. அவரது உலகத்தில் கலெக்டர்களும், வெள்ளைக்காரர்களும்தான் மிக உயர்ந்தவர்கள் - சாமி கூட அதற்கு அடுத்துதான். யாராவது ஒரு பேரனைப் புகழ வேண்டுமென்றால், "அவன் யாரு...சும்மா கலெக்டர் மாதிரியில்ல" என்றுதான் சொல்லுவார். இல்லையென்றால், “சும்மா.. வெள்ளக்காரன் மாதிரி..." பலரது தாத்தாக்களைப் போலவே, இன்று எனது தாத்தாவும் உயிருடன் இல்லை. அவரது நினைவுகள் மட்டுமே அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. கூளையனூரில் மருத்துவனை கட்ட அவர் இலவசமாகக் கொடுத்த நிலமும், அந்த மருத்துவனையில் இருக்கும் அவர் பெயர் பதித்த கல்லும் உள்ளூர் மக்கள் மருத்துவச் சிகிச்சைக்காக வரும்போது கண்ணில் பட்டபடி இருக்கின்றன. அவரற்ற தோட்டத்தில் நாகராஜன்கள் நடமாடி மக்களிடம் அடிபட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள். அவரைப் பற்றிய பல விஷயங்கள் மறைந்து விட்டன. இருப்பினும், இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது - கடைசிவரை அவரோடு சேர்ந்திருந்த அந்த வெள்ளேந்தியான வெள்ளை மனம்!

8 comments:

jeevagv said...

படிக்க இதமாக இருந்தது பாலு மணிமாறன்!
மலரும் நினைவுகளாக, பழைய நினைவுகளை அசை போட வைத்தமைக்கு நன்றிகள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமையானப் பகிர்வு!
எனக்கும் எங்கள் தாத்தாவைப் பற்றி எழுதும் ஆசையைத் தூண்டுகிறது.

அன்புடன் அருணா said...

உங்க தாத்தாவையே நேரில் பார்த்தது போலிருந்தது உங்க பதிவு...
அன்புடன் அருணா

பாலு மணிமாறன் said...

உங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவா!

பாலு மணிமாறன் said...

உங்கள் பதிவை எதிர் பார்க்கிறேன் ஜோதி பாரதி! உங்கள் கருத்துக்கு நன்றி!

பாலு மணிமாறன் said...

உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா...

வடுவூர் குமார் said...

அவர் வெள்ளேந்தியாக இருந்தாரா என்னவோ! எனக்கு அவர் வெள்ளை மனதுடன் இருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

பாலு மணிமாறன் said...

// வடுவூர் குமார் said...
அவர் வெள்ளேந்தியாக இருந்தாரா என்னவோ! எனக்கு அவர் வெள்ளை மனதுடன் இருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.//

உங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி!