Sunday, January 04, 2009

ராகுல் டிராவிடின் இடத்திற்கு குறி வைக்கும் ஐவர் அணி! (நாலு வார்த்தை-034)எல்லா நல்ல விஷயங்களும் ஏதோ ஒரு நாள் முடிவுக்கு வரத்தான் செய்கின்றன. அந்த நல்ல விஷயத்தின் பெயர் ராகுல் டிராவிடாக இருப்பினும் கூட. அநேகமாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடரே அவர் விளையாடும் இறுதித் தொடராக இருக்கக் கூடும். அதில் சிறப்பாக விளையாடி, கங்குலி மாதிரி மதிப்பு, மரியாதையோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க வேண்டுமென்பதே டிராவிடின் விருப்பமாகவும் இருக்கலாம். பந்து எக்கச்சக்கமாக ஸ்விங் ஆகும் நியுஸிலாந்தில் டிராவிட் எவ்வளவு முக்கியம் என்பதை தோனி வலியுறுத்தி இருப்பதை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அந்த தேசத்தில் விளையாட அனுபவசாலிகள் அவசியம். இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் ஒவ்வொரு முறையும் மோசமாக மட்டுமே விளையாடி இருக்கிறது. இந்த முறை அந்த கெட்ட பெயரை போக்க சகல வாய்ப்புகளும் தென்படும் சூழலில், அனுபவமிக்க டிராவிட் மிக, மிக அவசியம் என்பதால்தான் அவரை வைத்திருக்கிறார்கள், இல்லையென்றால், இங்கிலாந்து தொடரோடு அவருக்கு 'டாட்டா' சொல்லியிருப்பார்கள் என்று சொன்னால், டிராவிட் ரசிகர்கள் உதைக்க வருவார்கள் - ஆனால், அதுதானே நிதர்சனம்! அதெல்லாம் இருக்கட்டும் சாமியோவ்... அவருக்கு பதிலா விளையாட யாரு இருக்காங்க சாமியோவ்... என்றால், 5 பேர் கை துக்குகிறார்கள்!

முதல் ஆள் நம்ம சுப்ரமணியம் பத்ரிநாத். ரஞ்சி டிராபி உட்பட எல்லா உள்ளூர்ப் போட்டிகளிலும் கலக்கி வருகிறார். ரன்கள், ரன்கள் மட்டுமே அவருக்கு சிபாரிசு செய்து கொண்டிருந்தன கடந்த 4 வருடமாய். இப்போது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வந்திருக்கிறார். அவரது ஆதரவிருக்குமெனில், பத்ரி, குறைந்தபட்சம் 4 வருடமாவது இந்திய டெஸ்ட் அணியில் இருக்க முடியும். அதற்கான எல்லாத் திறன்களும் அவரிடம் இருக்கின்றன. ஆனால், வழங்கப்படும் ஓரிரு வாய்ப்புகளிலேயே சோபிக்க வேண்டிய நிர்பந்தம் அவர் மேல் இருந்து கொண்டே இருக்கும். அடுத்தவர் - ரோஹித் ஷர்மா. ரவிசாஸ்திரியால் தொடந்து promote செய்யப்படுபவர். திறனாளர்களைச் சரியாக அடையாளம் காண்பதில் வல்லவர் சாஸ்திரி. பெரும்பாலான அவரது கணிப்புகள் சரியாகவே இருக்கின்றன. ரோஹித்திடம் ஒருவித lazy elegance இருக்கிறது. அழகான 30 ரன்களைவிட, கஷ்டப்பட்டு சேகரிக்கும் 100 ரன்களை ஒரு அணி விரும்பும். நின்று, நீண்ட நேரம் விளையாட முடியும் என்று நிருபிக்க வேண்டிய நிலையில் ரோஹித் இருக்கிறார். அவர் இந்திய அணியின் நீண்டகால நம்பிக்கை.

சுரேஷ் ரய்னா கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டும், நன்றாக விளையாடியும் வருகிறார். இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதும், வலுவும் அழகும் இணைந்திருப்பதும் ரய்னாவின் பலம். அற்புதமான ·பீல்டர் என்ற விஷயம் கூடுதலாக சில மதிப்பெண்களைப் பெற்றுத் தருகிறது. நீண்ட இன்னிங்ஸ் விளையாடக் கூடியவர் என்றும் நிருபித்திருக்கிறார். இத்தனை positive-களுக்குப் பிறகும், சுரேஷ் ரய்னா ஒரு நாள் விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவதன் காரணம் தெரியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டால் பட்டென்று பற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையளிப்பவர். பெங்கால்காரரான மனோஜ் திவாரி 'அச்சம் என்பது மடமையடா' என்று அடித்து விளையாடக்கூடியத் திறன் உள்ளவர். இவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து செய்தியில் இருந்தாலும் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. IPL போட்டிகளில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஏமாற்றினார் திவாரி. அது தற்காலிகமென்பதை சமீபத்திய ரஞ்சிப் போட்டி சதத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். Sweep shot-ஐ கடைசி நொடியில் ஸ்லிப் திசையில் late cutஆக மாற்றியடித்தது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அந்த ஒரு ஷாட்டே சொல்கிறது - அவர் நீண்ட தூரம் செல்வார். ஆனால் வாய்ப்பு எப்போது வரும்?

இந்தப் பட்டியலில் கொஞ்சம் சர்ப்ரைஸாகச் சேருபவர் முரளி விஜய். திடீரென அடித்தது டெஸ்ட் சான்ஸ். அதில் சரியாக விளையாடி இருக்காவிட்டால், மொத்த கேரியரே தொலைந்து போயிருக்கும். ஆனால், அலட்டிக் கொள்ளாமல் விளையாடினார் விஜய். அவரது அடிகளில் தெரிந்த timing வியப்பளித்தது. எல்லா திசைகளிலும் பந்தடிக்கக்கூடிய திறனுள்ளவர் என்பதை நிருபித்து விட்டார். துவக்க ஆட்டக்காரரான விஜய், மத்தியில் ஆடுமாறு சொல்லப்படலாம், காரணம், நிலையாகிக் கொண்டிருக்கும் துவக்க ஜோடியான சேவாக் - கம்பீர். இந்த ஐவரில் முதல்வர் யார் என்பது அடுத்த புத்தாண்டுக்குள் தெரிந்து விடும். இந்த அலசல் இப்போது தேவையா எனத் தோன்றலாம்... ஆனால், முப்பதைக் கடந்த டெண்டுல்கர், லக்ஷ்மண், டிராவிட்டில், யாராவது ஒருவர் இந்த வருடம் வெளியாகத்தான் வேண்டும். அது அநேகமாக டிராவிடாகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில்.... இந்த ஐவர் அணி உள்ளே வரத் தயாராக இருக்கிறது!

2 comments:

சி தயாளன் said...

அருமையான கிரிக்கட் அலசல்..பார்க்கலாம் இதில் யாரவது இடம் பிடிப்பார்களா என்று..

பாலு மணிமாறன் said...

Thanks ’டொன்’ லீ.

Changes are inevitable. Even if Yuvaraj singh has played well recently, he has to play well to prove himself. His place too is still vulnerable.

But, sure by this year end one or 2 from this list will be in Indian team!