இரங்கல் கூட்டமென்றால் சோகம் சொட்டச்சொட்ட உட்காரத்தான் வேண்டுமா?சிங்கப்பூரில் நடந்த உதுமான்கனிக்கான நினைவுக் கூட்டத்தில் இந்த பாரம்பரிய இந்திய மரபை உடைத்து "இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்" என்று அறிவித்தார் அருண்மகிழ்நன்.
புன்னகையோடு மேடையில் பேசும் உதுமான்கனியின் படம்
சுனாமி உலகைத் தாக்கிய அதேவேளை சிங்கப்பூர் தமிழர்களை சுனாமியாய் தாக்கியது உதுமான்கனியின் மரணச்செய்தி. ஒரு தொலைக்காட்சி போட்டிநிகழ்ச்சியில் நடுவராய் இருந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மாரடைப்பால் காலமானது பலராலும் நம்ப முடியாத விஷயமாக இருந்தது. அவர்கள் மனம் முழுக்க நிரம்பியிருந்த கேள்வி - " நேசத்திற்குரியவர்களின் மரணத்தை நம்பவே முடிவதில்லை. பாசத்திற்குரிய நீ எப்படிப் போயிருப்பாய்?". சில நல்லவர்களின் மரணத்தில்தான், மரணத்தின் வலிமை அடிக்கடி ஞாபகப்படுத்தப் படுகிறது. இப்போதெல்லாம் மாரடைப்பும் மரணமும் வயது பார்த்தா வருகிறது....
நம் வாழ்க்கை முழுக்க பவபேர் வந்து போனவண்ணம்தான் இருக்கிறார்கள்...ஆனான் ஒருசிலரால் மட்டுமே, வாழ்க்கை முழுக்க நினைத்து மகிழத்தக்க நினைவுகளை விட்டுச்செல்ல முடிக்கிறது. சிஙக்ப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாளராக இருந்து, மொத்த சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் இதயத்தில் இடம் பிடித்திருந்த புன்னகை மன்னன் , " உங்கள் அன்பன் " உதுமான்கனி அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.
கடந்த 13/04/05 அன்று சிங்கப்பூர் வுட்லாண்ட்ஸ் வட்டார நூலகத்தில் உதுமான்கனியை நினைவுகூறும் நிகழ்ச்சிக்கு அவரது நண்பர்கள் "வசந்தம் சென்ட்ரல்" முகம்மது அலி, "ஒலி 96.8" அழகியபாண்டியன் போன்றோர் முன்னெடுத்து ஏற்பாடு செய்திருந்தார்கள். நூலகவாயிலில் சின்ன வயதுமுதல் உதுமான்கனி எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய 2000 புகைப்படங்களைப்பார்த்து, அவற்றில் சரியான சிலவற்றை தேர்ந்தெடுத்து, அதை அழகான தொகுப்பாக்கி இருந்தார் நூலக அதிகாரியான "புன்னகை" புஷ்பலதா.
நவீன உலகின் சகல வசதிகளும் உள்ள அந்த நூலக அரங்கின் மையத்திரையில் "உங்கள் அன்பன்" உதுமான்கனி என்ற எழுத்துக்களோடு புன்னகையித்தபடி உதுமான்கனியின் பிரமாண்ட புகைப்படம். மேடையில் ஒரே ஒரு ரோஸ்ட்ரம் மட்டும் போட்டிருக்க எல்லோரும் கீழ் இருக்கைகளில் இருந்தார்கள்.
சிங்கப்பூர் media corp நிறுவனத்தைச் சேர்ந்த சபா முத்து நடராஜன் " எப்போதும் உண்மையை உரக்கப் பேசுபவர் : எல்லோரையும் சமமாக நடத்துபவர் " என்று உதுமான்கனியைப்பற்றி சொல்லிவிட்டு எழுத்தாளர் மா.அன்பழகனை பேச அழைத்தார்.
"நட்புக்கு இலக்கணம் வகுத்துப்பழகிய நண்பனே" என்று துவங்கிய அன்பழகனின் கவிதை, அவர்களுக்கிடையில் இருந்த நட்பு, சமூகத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் உதுமான்கனி கொண்டிருந்த நேசம், தேசங்களின் எல்லை கடந்து மனிதர்களைத்தொட்ட அவரது ஆளுமை என்று, உதுமான்கனியின் பலபரிணாமங்களையும் பற்றிப்பேசியது. மாலை நேரங்களில் நண்பர்களை சந்தித்து இலக்கியம் பேசி மனதை இலகுவாக்கிக் கொண்ட உதுமான்கனியின் உத்தியைச் சொன்ன அன்பழகனது கவிதையின் ஒருவரி, உதுமான்கனியின் ஆளுமையை முழுமையாகப் படம் பிடித்தது. அது - "ஆண்களும் அவரைக் காதலித்தார்கள்" என்ற வரி.
அவருக்கு அப்புறம் பேசவந்த அருண் மகிழ்நன்தான் " இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்" என்று சொன்னார்.அதற்கான காரணமும் சொன்னார். "இந்த இறப்பில் ஒரு பிறப்பு இருக்கிறது... ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியை நடத்தி, உதுமான்கனியின் பெயரில் பரிசு வழங்க முடிவாகி, அதற்கான நிதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.
"மறைந்த எழுத்தாளர் நா.கோவிந்தசாமியின் பிரதான சீடர் உதுமான்கனி. ஆனால் நா.கோவிந்தசாமிக்கு 5ம் ஆண்டு இரங்கல் கூட்டம் நடத்தியபோது 'இறந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை' என்று சொல்லி அதற்கு வரமறுத்தவர் உதுமான்கனி. இப்படி தன்னைப்பற்றியும், தான் சார்ந்த சமூகம் பற்றியும் அவருக்கு தீவிரக்கருத்துகள் இருந்தது. பல்வேறு திறமைகள் உதுமான்கனிக்கு இருந்தது. ஆனால், ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளராக அவர் ஆற்றிய பணி பெரியது.சிங்கப்பூரில் அவரை மிஞ்சிய தொலைக்காட்சி அறிவிப்பாளர் யாரும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியும்" என்று குறிப்பிட்டார் அருண் மகிழ்நன்.
"என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் எல்லாம் நான் உதுமான்கனியிடம் ஆலோசனை கேட்கத்தவறியதில்லை" என்று சொல்லி தன் பேச்சைத்துவங்கிய சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியின் தலைவர் முகம்மது அலி, சிறுவயதில் தான் உதுமான்கனி என்ற பிரமாண்டத்தைப் பார்த்து வியந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
"டி.வி உலகம் ஒரு மாயை என்பதுதான் அவர் எனக்கு வழங்கிய முதல் அறிவுரை. என்னைப்பற்றி அவர் மற்றவர்களிடம் 'கனவுலகில் சஞ்சரிப்பவன்' என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.உண்மைதான். ஆனால் அந்த கனவுலகோடு அவரிடம் போகும்போது, அந்த கனவுலகை குலைத்துவிடாமல், நிதர்சனங்களை எடுத்துக் கூறுவார். என் வாழ்க்கையின் பல கட்டங்களில் நான் விரும்பிப்படித்த புத்தகம்- உதுமான்கனி. அவரிடம் நகைச்சுவை உணர்வு என்ற பெரிய சொத்து இருந்தது. அது பலரையும் அவரிடம் ஈர்த்தது. ஒரு போட்டியென்றிருந்தால், தான் மட்டுமல்ல, தன்னோடு சேர்ந்து மற்றவர்களும் ஜெயிக்க வேண்டுமென்று நினைக்கிற பரந்த மனதுடையவர் அவர். சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த இணைய எழுத்தாளர் வெங்கடேஷின் புத்தக வெளியீட்டில் பேசியபோது " உதுமான்கனி, அருண்மகிழ்நன் - இருவரும் இருக்கும் மேடையில் எனக்குப் பேசப்பிடிக்காது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டேன். ஆனால் அது அவரைக் காயப்படுத்தி விட்டதோ என்று இப்போது கலங்குகிறேன்... " என்று சொல்லி நிறுத்த, அவரது விழியோரம் துளிர்த்த கண்ணீர் , அந்த வார்த்தைகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து வருவதை சொல்லி நின்றது.
அதன்பின் சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரல் ஒளிபரப்ப இருக்கும் நிகழ்ச்சியை திரையிட்டுக் காட்டினார்கள்....
1978 துவங்கி உதுமான்கனி அறிவிப்பு செய்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், அவரைப்பற்றி மற்றவர்கள் சொன்ன கருத்துகள், பல்வேறு விஷயங்களைப் பற்றி உதுமான்கனியே பகிர்ந்து கொண்ட கருத்துகள் போன்றவை அத்தொகுப்பில் இடம் பெற்றிருந்தது. தற்போது தமிழகத்தின் SCVயில் பணியாற்றும் ஹேமாமாலினி, 'சின்னவயதில் எங்கள் வீட்டில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அதில் வரும் ஆடல், பாடலைப் பற்றி பேச மாட்டார்கள்.... உதுமான்கனியின் தமிழைப்பற்றிதான் பேசுவார்கள்.' என்று சொல்லியிருந்தார்.
இறுதியாகப் பேசிய சிங்கப்பூர் தமிழ் வானொலி 96.8ன் தலைவர் அழகிய பாண்டியன், நண்பர்கள் ஒன்று சேர்ந்து உதுமான்கனி நினைவு கட்டுரைப்போட்டிக்காக 15,000 சிங்கப்பூர் வெள்ளி நிதி சேர்த்திருப்பதாகவும், அது SINDA என்றழைக்கப்படும் Singapore Indian Development Assosaition கட்டுப்பாட்டில் இருக்குமென்றும் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட முயற்சிகள் புதிய புதிய உதுமான்கனிகளை சிங்கப்பூருக்கு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு வெளிவரும்போது, கண்ணில் பட்ட முகம்மது அலியிடம் " உதுமான்கனி விட்டுச்சென்றிருக்கும் வெற்றிடத்தை உங்களால் நிரப்ப முடியும் " என்று உளமாரச் சொன்னேன்...அப்போது அவரது கண்கள் மறுபடியும் கலங்கியது !
6 comments:
பதிவுக்கு நன்றி.
"ஆண்களும் அவரைக் காதலித்தார்கள்"
அது அனுபவபூர்வமான உண்மை. எனக்கு மிகவும் பிடித்தவர் திரு. உதுமான் கனி. அவரை நான் விலகியிருந்தே கவனித்து இருந்தாலும், அவருடைய ஈர்ப்பு என்றென்றும் உயர்ந்து வந்தது.
அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. இரங்கல்கூட்டத்தில் அன்று திரு. அருண் மகிழ்ணன் குறிப்பிட்டது போலவே - சிங்கை தமிழ் தொலைக்காட்சிக்கு அவருடைய மறைவு பேரிழப்பு.
அன்று நான் ஒலிப்பதிவு செய்த பேச்சுக்களை கூடியவிரைவில் இங்கே இடுகிறேன்.
நீங்கள் கூறியதுபோல், திரு. முகமது அலி அவர்களும் மிக கவனிக்கப்பட வேண்டியவர்.
திரு. உதுமான் கனியின் மறைவின்போது எழுதிய என்னுடைய பதிவு...
நன்றி அன்பு !
இன்னும் 20,30 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் தமிழ் எப்படி இருக்கப்போகிறது என்று நிர்ணயிக்கப்போகிற பெரிய பொறுப்பு அழகிய பாண்டியன், முகம்மது அலி, சித்ரா ராஜாராம் போன்ற திறன்மிக்க இளைய தலைமுறையின் கையில் இருப்பதைப் பார்க்கும்போது.... சிங்கப்பூரில் தமிழின் எதிர்காலம் வெளிச்சமிக்கதாகவே தெரிகிறது !!
அன்பு பாலுமணிமாறன்,
அமரர் உதுமான் கனிக்கு இரங்கல் கூட்டம் நடந்ததா? எப்போது ஐயா?
ஏன் இதையெல்லாம் தெரியப்படுத்தவில்லை. :-(
மிகுந்த வருத்தமடைகிறேன் நான்! எப்படி தவறவிட்டேன்? :-(
பதிவுக்கு நன்றி!
எம்.கே.
நமது சிங்கைமுரசு சரியாக சூழ் கொள்ளாத சூழலில் நடந்த நிகழ்வு அது... இனிமேல் இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை சிங்கைமுரசில் போட்டு விட மாட்டோமா என்ன... குமார்,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !
உதுமான் கனி பற்றி மேலும் சில விசயங்கள் அறிந்துகொண்டேன். ஏற்கனவே அன்புவின் பதிவையும் வாசித்டிருந்தேன். நன்றி பாலு & அன்பு.
நன்றி டி.சே.தமிழன் & பனசை.
பனசை... உதுமான்கனி பற்றி அதிகம் அறிந்தவர் நீங்கள்..நீங்களும் ஒரு பதிவு செய்யுங்களேன்..
Post a Comment