அன்புள்ள கெளதம் வாசுதேவ் மேனன்... இன்றுதான் 'வாரணம் ஆயிரம்' பார்த்தேன். படம் வெளியாகி சில வாரங்கள் ஆகியும் சிங்கப்பூர் தியேட்டர்களில் கணிசமான கூட்டம் இருக்கிறது. அயல்நாடுகளின் கலெக்ஷனைப் பொறுத்தவரை கட்டாயம் இது வெற்றிப் படம்தான் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகள் உட்பட பல்வேறு ஊடகங்களும் பாராட்டுகளை பஞ்சமின்றி தெரிவித்திருக்கின்றன. சிங்கப்பூர் மக்களின் பாராட்டுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். கெளதம் மேனன் என்ற மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞரும், சூர்யா என்ற மிகச் சிறந்த நடிகரும் இணையும்போது இயல்பாக ஏற்படுகின்ற எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் படத்தை எடுத்திருக்கிறீர்கள். "அது யார்னு தெரியுதா" "எது" "அந்த வயசான ஆளு" "தெரியலையே" "அது சூர்யா..." "சூர்யாவா????!!!" பக்கத்து இருக்கையில் நான் கேட்ட டயலாக் இது. அங்கு தொடங்கியது உங்கள் அதிரடி ஆட்டம். நீங்கள் தைரியசாலிதான். சூர்யாவை துவக்க சீன்களிலேயே சாகடிக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்....நீங்கள் கிரிக்கெட் நன்றாக விளையாடுவீர்கள் என்று நினைக்கிறேன். தற்காப்பு ஆட்டமும், அதிரடி ஆட்டமும் சேர்ந்த கலவையாக அமைந்திருக்கிறது 'வாரணம் ஆயிரம்'.
படத்தை 10 segments ஆக பிரித்துச் செதுக்கி இருக்கிறீர்கள். ஒரு சிறுகதைத் தொகுப்பு மாதிரி என்று சொல்லலாம். ஒவ்வொரு segmentற்கும் ஒரு துவக்கம், ஒரு சிக்கல், ஒரு முடிவு. அந்த ·பார்முலாவை அடுத்தவர் அடையாளம் காண முடியாதபடி முடிச்சவிழ்த்திருக்கும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது. 1. முதியவர் சூர்யாவின் மரணத்திற்கு முந்திய நிமிடங்கள் 2. அவரது இளமைக் காலத் தருணங்கள் 3. மகன் சூர்யாவின் இளமை + கல்லூரி கால வாழ்க்கை 4. சமீரா ரெட்டியின் வருகையும், நீட்சியும் 5. சமீரா, சூர்யா - அமெரிக்க நினைவுகள் 6. சமிராவின் இழப்பும், சூர்யாவின் போதைத் தவிப்பும் 7. காஷ்மீரத் தேடல் + மோதல் 8. மேஜர் சூர்யா and his rescue operation 9. சூர்யா வாழ்க்கையில் வரும் மாற்றுப் பெண் 10. ஒரு மரணமும், ஜனனமும். பல சிறுகதைகள் பிரமாதம். சில சுமார் ரகம். ஒரு சில ஏதோ இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், பெற்றிருக்கும் மதிப்பெண்கள் கெளரவமாகத்தான் இருக்கின்றன.
சமீரா ரெட்டி - சூர்யா ஜோடி is a sweet cameo. திரும்பத் திரும்ப மெளனராகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கார்த்திக் attack is the best form of defense என்று நடித்திருப்பார்; But Surya has shown controlled aggression. அடுத்து அதிகம் ஈர்த்தது - அப்பா சூர்யா. குறிப்பாக மரணத்திற்கு முந்திய மாதங்கள். யாருக்கும் பாரமாகி விடக்கூடாது என்ற தவிப்பு. மகன் மேல் காட்டும் கடைசி நேரக் கரிசனம். நடிப்பில் இன்னும் சில படிகள் உயர்ந்திருக்கிறார் சூர்யா. 'You are my hero daddy' 'i am in love with u' என்று உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குன்றிய குரலில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தைகள், தெருவில் கரைந்துவிடும் ராப்பிச்சைகாரனின் வார்த்தைகளாய் சிதறி விடுகின்றன.
ஹாரிஸ் ஜெயராஜைப் பிரிகிறீர்களா? நிச்சயம் அது ஒரு இழப்புதான் எல்லோருக்கும். பின்னணி இசையில் அவர் செலுத்தியிருக்கும் செல்லுவாய்ட் கவனம் பிரமாதம் என்ற வார்த்தையில் அடக்க முடியாதது. கேமராமேன் ரத்னவேல் வழி நெடுக கவிதைகளைத் தவழ விட்டிருக்கிறார். ஆனால், ஒரு ஹைவேயில் பெருத்த இரைச்சலோடு பயணம் செய்திருக்க வேண்டிய படம், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிச்சலில் சிக்கி, பிரேக்கில் கால் வைத்தபடி பயணம் செய்திருப்பதன் காரணம் என்ன... சென்னையில் இன்னொரு மழைக்காலம் வரும் முன் இந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று நம்பும்... ஒரு தமிழ் நண்பன்!
7 comments:
:-)
உண்மை இன்னும் இங்கே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது
கோல்டன் வில்லேஜ் ல பார்த்தீங்களா!
உங்க விமர்சனம் நல்லா இருக்கு
2007ம் ஆண்டு சிவாஜி $1 மில்லியனும், பில்லா $500,000மும் சிங்கப்பூரில் கலக்ஷன் செய்தன. 2008 என்ன சொல்கிறது என்பது சீக்கிரமே தெரிந்து விடும். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
கோல்டன் வில்லேஜேதான். :)))
உங்கள் பாராட்டுக்கு நன்றி கிரி!
நீண்ட நாட்களுக்கு பிறகு என் மனதினை ஈர்த்த படம். 20 நண்பர்களுடன் சென்று கோல்டன் வில்லேஜில் பார்த்தோம் அதற்கு முன்பே இருமுறை குறுந்தட்டு வழியே பார்த்து விட்டேன்.
வாரணம் ஆயிரம்
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
சேரனின் அழுகாச்சி படைப்பான தவமாய் தவமிருந்து முன் கௌதம் வாசுதேவ் மேனனை எழுந்து நின்று ஆரத்தழுவ நினைத்திருக்கிறேன்.
எனக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது தம்பி. ஆனால், இன்னும் அழுத்தமாகச் சொல்லக்கூடிய திறன் கெளதம் வாசுதேவ்மேனனுக்கு இருக்கிறது...சொல்லி இருக்கலாம் ; சொல்லுவார்!
Post a Comment