Sunday, December 14, 2008

சசிக்கலா மாலா, நீ விட்டதெல்லாம் பீலா...(நாலு வார்த்தை-015)

நீண்ட இடைவெளிக்குப்பின், மறுபடியும் பதிவுகளை இடத் துவங்கிய 10 நாட்களுக்குள், நான் வாழ்ந்திருந்த பழைய இடங்களைச் சார்ந்த இருவர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். எண்ணூரைச் சார்ந்த ஒருவர் இணையத்திலும், இராயப்பன்பட்டி அலோசியஸ பள்ளியில் படித்த ஒருவர் நேரிலும் என்னோடு பேசினார்கள். எண்ணூரைச் சேர்ந்தவர் ETPS கேம்பில் உள்ள திருவள்ளுவர் தொடக்கப்பள்ளியில் படித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். நானும் அங்கு 5ஆம் வகுப்பு படித்தேன். காயத்ரி டீச்சர் எனக்குப் பாடம் எடுத்தார். அதிகம் பேசமாட்டார். ஆனால், அவரிடம் இருந்த பிரம்பு பலமாகப் பேசும். என்னோடு படித்த பர்மா நகர் அழகர், இளங்கோ, சசிக்கலா, லதா, முருகன், முருகனது தங்கை அம்சா, குப்பத்தில் இருந்த தேசிங்குராஜன் ஆகியோர் பெயரளவிலும், இளம் பிம்பங்களாகவும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறார்கள். நண்பரது மின்னஞ்சல் அவர்களையெல்லாம் ஞாபகப்படுத்தியது. அந்த வயதில் நடந்த ஓரிரு சம்பவங்களை இப்போது நினைத்தால் கொஞ்சம் ஆச்சரியமாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட நபர்களில் அழகருக்கும், சசிக்கலாவுக்கும் ஆகவே ஆகாது. நான், சசிக்கலா, அழகர், லதா எல்லாம் கொஞ்சம் நன்றாகப் படிக்கிற சாதி. சசிக்கலாதான் கிளாஸ் லீடர். சர்வ அதிகாரம் படைத்த பெண். ஒருமுறை ஏதோ ஒரு தவறுக்காக டீச்சர் எல்லோருக்கும் கொட்டு வைக்கும்படி சொல்ல, வரிசையாக கொட்டிக் கொண்டு வந்த சசிக்கலா, அழகரை மட்டும் சும்மா டங்கென்று வலுவாகக் கொட்ட, வலி தாங்காமல் அழகர் சசிக்கலாவை பளாரென்று அறைய... பள்ளியே ரணகளமானது. ஏனென்ற காரணம் தெரியவில்லை; ஆனால், சசிக்கலாவைப் பிடிக்காத எதிரிகள் நிறையப்பேர் வகுப்பில் இருந்தார்கள். அவர்கள் சசிகலாவைப் பற்றி ஒரு பாட்டையே இயற்றி வைத்திருந்தார்கள். அந்தப் பாட்டு இதுதான் ... "சசிக்கலா மாலா... நீ விட்டதெல்லாம் பீலா" இந்த வரி பள்ளிச் சுவர்களில்கூட ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டதாக ஞாபகம். நான் சசிக்கலாவை சரியாக நிமிர்ந்து கூட பார்த்ததில்லை. அந்தக் காலத்தில் பெண்களென்றால் அப்படியொரு வெக்கம். முருகன், சசிக்கலா இருவரது தந்தைமாரும் என் தகப்பனாரோடு பணியாற்றினார்கள். முருகன் என்னைப் போல் வெட்கமெல்லாம் படமாட்டான். அந்த வயதிலேயே அவனுக்கு சசிக்கலாமேல் ஒருவித ஈர்ப்பு இருந்தது. ஒரு முறை சசிக்கலா சாமிக்கு மாவிலக்கு எடுத்து எண்ணூர் வீதிகளில் ஊர்வலம் போனபோது, கவசகுண்டலம் மாதிரி என்னையும் அவனோடு சேர்த்துக் கொண்டு சசிக்கலா பின்னால் சுற்றினான் முருகன்.

காலங்கள் மாறின, காட்சிகள் மாறின. முருகனுடைய அப்பா வேலையை ராஜினாமா செய்து விட்டு, அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போய்விட, அவனது குடும்பம் ஊட்டிக்கு ஜாகை மாறியது. நாங்கள், தேனி மாவட்டம் லோயர்கேம்பிற்கு இடம் பெயர்ந்தோம். சசிக்கலாவின் தந்தை எண்ணூரிலேயே இருந்தார். அந்தக் குடும்பத்தில் நாலைந்து பெண் பிள்ளைகள் என்று நினைக்கிறேன். எல்லோரும் இப்போது குழந்தை குட்டிகளோடு நன்றாக இருக்கக் கூடும். இருக்க வேண்டுமென்று கடவுளை வேண்டுகிறேன். இளங்கோவும், அழகரும் (அழகர் டவுசரில் பட்டன் இருந்தாலும் அதை மாட்டாமல், டிரவுசரின் காதுகளை இழுத்து முடிச்சாகத்தான் போடுவான்) அவர்களது தாயகமான பர்மா நகரில்தான் இருக்க வேண்டும்.

எண்ணூர் அனல் மின் நிலையத்தின் பல குடியிருப்புகளும் இப்படிப்பட்ட பலரையும் பார்த்தவை, பல கதைகளை சுமப்பவை. அதன் காற்றில் பல ஆன்மாக்களின் சுவாசங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. கத்திவாக்கம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு நேர் எதிரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் நாங்கள் குடியிருந்தோம். சிறுமிகளாக இருந்த என் தங்கைகள் கீழே விழுந்து விடக்கூடாது என்ற கவலையில் கூடுதலாக இரண்டு இரும்புக் குழாய்களை பால்கனியில் தடுப்பாக வைத்தார் என் தந்தை.அந்தக் குழாய்கள் இன்றும் அங்கிருக்கக் கூடும். அல்லது எங்களைப் போலவே அவையும் இடம் பெயர்ந்திருக்கக் கூடும்.அந்த வீட்டிற்குக் குடிபோன புதிதில் இரவு நேரத்தில் தூங்க மிகவும் சிரமப்பட்டோம். காரணம் இரவில் பெருத்த ஓசையோடு கடந்து போகும் ரயில்கள். குறிப்பாக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போகும்போது அந்தக் கட்டிடமே அதிரும். ஆனால், நாட்களின் ஓட்டத்தில் அது எங்களுக்கு பழகிப் போனது ; எங்களை உறங்க வைக்கும் தாலாட்டாகவும் ஆனது! இன்று அந்த நினைவுகளின் தாலாட்டில்.....

5 comments:

தேவன் மாயம் said...

கடந்தகால இனிமைகள் சுகமானவை!
நிறைய எழுதுங்கள்!!!!!

பாலு மணிமாறன் said...

மிக்க நன்றி thevanmayam!

இன்னும் இன்னும் நினைவுகளை எழுத ஆசை. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி!

Azarudeen said...

அன்பு நண்பர் பாலு,
தங்கள் வலைத்தளத்தைப் பார்த்தேன்.தவறவிட்ட பல செய்திகள் எனககு கிடைத்தன.
தங்கள் ஞாபக இடுக்குகளிலிருன்ந்து எழுதிய பத்திகள் காலத்தின் எண்ணற்ற முகங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான சம்பவங்களும் செய்திகளும் நம்மை கடந்து செல்லும்போது சிலவற்றறை மட்டுமே நாம் மறக்க இயலாமல்
பதிந்து கொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது அல்லவா?

தங்கள் ஞாபக அடுக்குக்களின் வலிமை நிதானமிழக்காத மனதும் பார்க்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக உள் வாங்கிக்
கொள்வதாலும் வாய்க்கப் பெற்றிருக்கலாம் நனவான கனவு கவிதை எழுதியதை நேரில் பார்த்தவன்.

Shanavas Abdul Kader

Azarudeen said...

நாலு வார்ததைகள் தான் வேறு தன் எழுத்து வேறு என்ற பேதங்களற்று இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான ஒரு விதமான
பாவனைகளைக் கடந்து மிகவும் சரளமாகவும் அதிகபட்ச இயல்புத் தன்மை கொண்டதாகவும் வந்து விழுகின்றன'
புனைவுப் படைப்புகளுக்கு ஒரு சுதந்திரம் உண்டு. எந்தக் கூற்றுக்கும் பொறுப்பபேற்க வேண்டியதில்லை. ஆனால் பத்திகளில்
பதிவு செய்யும்போது வரிக்கு வரி படைப்பாளி பொறுப்பேற்றுக் கொள்ளவவேண்டும்.
சொந்தக்கருத்தை வெளிப்ப்டையாக பதிவு செய்வதற்கு கூசி ஒதுங்கும் அறிவு ஜீவிகளை கொண்ட மொழி நமது!

Shanavas Abdul kader

பாலு மணிமாறன் said...

முதலில், உங்கள் வருகைக்கு நன்றி திரு.ஷானவாஸ்.

இரண்டாவது, கவிதை மிதக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.

ஞாபக அடுக்குகளில் இருப்பதை எல்லாம் எழுதிவிட முடிவதில்லை. முடிவதை எழுதுகிறேன். நான் மறந்து விட்டதாக நினைத்திருந்த பல விஷயங்களும் எழுதும்போது பேனா நுனிக்கு வந்து நின்று ஆச்சரியமளிக்கின்றன. நாலு வார்த்த ஒரு நீண்ட ஓட்டத்திற்குத் தயாராக நிற்கிறது... உங்கள் வார்த்தைகள் ஊக்க சத்தியாக வந்திருக்கின்றன. மீண்டும் நன்றி!