Tuesday, December 16, 2008

Rags to Riches - ஒரு சிங்கப்பூர்த் தமிழரின் கதை (நாலு வார்த்தை-016)



திரு.அப்துல் ஜலீல். அவரது நிறுவனம் MES Group of Companies. இந்த இரண்டு பெயரும் சிங்கப்பூர் இந்தியர்கள் மத்தியிலும் மற்ற இனத்தவர்கள் மத்தியிலும் பிரபலமான ஒன்று. சிங்கப்பூரில் உள்ள ஆயிரமாயிரம் இந்தியர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது திரு.அப்துல் ஜலீலின் வாழ்க்கைக் கதை. ஒட்டுக்கடை என்றழைக்கப்படும் பெட்டிக்டையில்தான் இவரது வாழ்க்கை துவங்கியது. தாயும், சகோதரிகளும் இந்தியாவில் தங்கிவிட, இவரும், இவரது தந்தையும் சிங்கப்பூரில் தனிமையில். இளம்வயது அப்துல்ஜலீல், கடைகளை சுத்தம் செய்தார்; கார் கழுவினார்; வாசனைத் திரவியங்கள் விற்றார்; டிரைவராகப் பணிபுரிந்தார்; எந்திரங்களைப் பாதுகாக்கும் வாட்ச்மேனாகப் பணிபுரிந்தார். அந்த வாட்ச்மேன் வேலைதான் அவரது வாழ்க்கையை மாற்றியது. எந்திரங்களை maintenance செய்யும் காண்ட்ராக்ட் கிடைத்தது. Piling வேலை நடக்கும்போது சாக்கடைகளை அடைத்துக் கொள்ளும் மணலை அகற்றும் காண்ட்ராக்ட் கிடைத்தது. நிறைய ஆட்களை வேலைக்கு அமர்த்தினார். நிறுவனம் வேகமாக விரிவடைந்தது. சீக்கிரமே, 200 ஆட்கள் 2000 ஆட்களானார்கள். அவர்களை தங்க வைப்பதற்கு சரியான இடமின்றி சிரமப்பட்ட போதுதான் Dormitries தொழிலில் தற்செயலாகக் கால்பதித்தார் திரு.அப்துல்ஜலீல். இன்று அந்தத் தொழில் பரந்து விரிந்து உயர்ந்து, அவரையும் உயர்த்தி நிற்கிறது. இதெல்லாம், நான் அவரைப் பேட்டி காண வாய்ப்பு கிடைத்தபோது, திரு.அப்துல்ஜலீல் சொன்ன விஷயங்கள். அவர் மேலும் சில முக்கியமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்...

"நாங்கள் கட்டிய முதல் டார்மெட்ரியில் 3000 பேர் தங்க வசதியிருந்தது. அதற்கப்புறம் நிறைய டார்மெட்ரிகள். அந்தத் தொழில் வளர்ந்தது. இன்றும் கூட தொழிலாளர்கள் தங்குவதற்கு அவ்வளவு சுலபமாக இடம் கிடைப்பதில்லை. எங்களது தேவைக்காக தொடங்கிய ஒன்று, ஒரு தொழிலாக மாறி இருக்கிறது. இப்போது எங்களுடைய 4 டார்மெட்ரிகளில் 25000 தொழிலாளர்கள் தங்கியிருக்கிறார்கள். இன்னும் 25000 பேர் தங்க வைக்கக்கூடிய அளவு டார்மெட்ரிகளை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அபுதாபியில் BCAவோடு சேர்ந்து ஒரு டார்மெட்ரி கட்டிக் கொண்டிருக்கிறோம்.ஓமான் நாட்டிலிருந்தும் அழைப்பு வந்திருக்கிறது.ஆனால்,எனக்கு பெரிய ஆசைகளோ, தேவைகளோ கிடையாது. இப்போது இருப்பதே போதுமானது என்று நினைக்கிறேன்.

கடவுள் நம்பிக்கை முக்கியம். சுய ஒழுக்கம் மிக முக்கியம். ஆனால், சமூக சேவையில்தான் நிஜ திருப்தி கிடைக்கும் என்று நம்புகிறேன். என் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். இளம்வயதில், நான் தேர்ந்தெடுத்த நண்பர்களெல்லாம் என்னை விட வயது கூடியவர்கள். அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பேன். அதில் நிறைய அர்த்தமுள்ள விஷயங்கள் கிடைக்கும். இன்று - 50 வயதில், என்னை விட வயது குறைந்தவர்களோடு நட்பாக இருக்க ஆசைப்படுகிறேன். அப்போதுதான் இன்றைய உலக நிலவரங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். எந்த நிலையிலும், நாம் நாமாக இருப்பது முக்கியம். என் பழைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வியாபாரத்தில் சிலமுறை நாம் தோற்க நேரலாம். அதற்காக மனம் தளரக் கூடாது. ஒரு நல்ல வியாபாரிக்கு நஷ்டத்திலிருந்து எப்படி மீண்டு வருவதென்று நன்றாகத் தெரியும்.

இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ல, நான் எப்போதுமே தயார்.பிள்ளைகள் எதை விருப்புகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் அவர்களுக்கு அடிப்படை ஒழுக்கத்தைக் கற்றுத் தருவது அவசியம் என்று நினைக்கிறேன்.சிங்கப்பூரில் ஏராளமான வியாபார வாய்ப்புகள் உள்ளன. கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில் அதிலொன்று. நமது இளைஞர்கள் அதில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். நேரம்தான் சிறந்த மூலதனம்.எந்தத் தொழிலைச் செய்தாலும் நம் முழு மனதும் அதில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். நாம் சமூகத்திற்கு என்ன கொடுத்தாலும், கடவுள் அதைவிட பல மடங்கு நமக்குத் திருப்பிக் கொடுக்கக் காத்திருக்கிறார். சிலர் கொடுப்பதற்கான வரம் வாங்கி வந்திருக்கிறார்கள். நான் என்ன சம்பாதித்தாலும், இன்றும் கூட என் ஒரு நாள் செலவு 10 வெள்ளிதான்." பலநூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபரான திரு.அப்துல்ஜலீலிடம் பேசி விட்டுத் திரும்பியபோது, மூடிக்கிடந்த சில மனக்கதவுகள் பெருத்த ஓசையோடு திறந்து கொண்டன.அந்த கடைசி வரி, திரும்பத் திரும்ப மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

No comments: