Thursday, December 18, 2008

மலேசியப் பத்திரிக்கைகளும், ஒரு இலக்கியச் செடியும்!(நாலு வார்த்தை-018)

சமீபத்திய மலேசிய வலைப்பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றிய பதிவில், மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையொன்றின் மீதான விமர்சனத்தைப் பார்த்தேன். அது- மலேசியப் பத்திரிக்கைகளோடு எனக்கிருந்த பழைய தொடர்புகளை ஞாபகப்படுத்தியது. அமரர் ஆதிகுமணனின் முயற்சியில் உருவான மலேசிய எழுத்தாளர் சங்கக் கட்டிடத் திறப்புவிழாவின் போதுதான் அந்தத் தொடர்புகள் துவங்கின. ஆதிகுமணன், மலேசிய நண்பன் நாளிதழின் ஆசிரியராக இருந்தாலும், அதைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டது கவிஞர் அக்கினி என்ற சுகுமாரன்தான். இவர் பின்னாளில் இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்து, அந்த அனுபவங்களைத் தொடர் கட்டுரையாக எழுதினார். ஆதிகுமணன் தெளிவான சிந்தனையாளர். மலேசியத் தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர். எந்த நிர்பந்தங்களுக்கும் வளைந்து கொடுக்காதவர். ஆதி, மலேசிய நண்பன் ஞாயிறுப் பதிப்பில் 'ஞான பீடம்' என்ற தலைப்பில் கேள்வி - பதில் எழுதுவார். அதைப் படிப்பதற்காகவே பலரும் மலேசிய நண்பனை வாங்கினார்கள். 'சூரியன்' மாத இதழ், அப்போதும், இப்போதும் வாசகர்களை மையமாகக் கொண்டு, அவர்களோடு நேரடித் தொடர்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இயங்கி வருகிறது. அதன் ஆசிரியர் ராமதாஸ் மனோகரன் மீது வாசகர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நேரில் பார்த்திருக்கிறேன்.

மக்கள் ஓசையில் (இப்போது நாளிதழாக வெளி வருகிறது) குருசாமி ஆசிரியராக இருந்தபோது எழுத்தாளர்களுக்கு நிறைய சுதந்திரத்தை வழங்கினார். எழுத்தாளர்களும் அந்த சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தினார்கள். 96-97-ல் மக்கள் ஓசை இலக்கிய சர்ச்சைகளுக்கு நிறைய இடமளித்தது. அப்போது 'மண்ணும் மனிதர்களும்' தொடரை எழுதிக் கொண்டிருந்த சை.பீர்முகமது, விமர்சன வீச்சின் அனல் தாங்க முடியாமல் எழுத்து வனவாசம் போவதாக அறிவித்தார். எனக்கும், சிறுகதை மன்னர் எம்.ஏ.இளஞ்செல்வனுக்கும் கூட ஒரு இலக்கிய சர்ச்சை நடந்தது. அவரது தயவற்ற விமர்சனம் ஒன்றின் மீது, 'இலக்கியச் செடிகளின் வேர்களில் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை; தயவு செய்து வெந்நீர் ஊற்றாதீர்கள்' என்று நான் கருத்துரைத்தேன். தற்போதைய தென்றல் வார இதழின் ஆசிரியர் வித்யாசாகர் வரிந்து கட்டிக் கொண்டு இளஞ்செல்வனுக்கு ஆதரவாக எழுதினார்.'ஊனமற்ற எம்.ஏ.இளஞ்செல்வனுக்கு நீங்கள் ஏன் ஊன்றுகோலாக இருக்க ஆசைப்படுகிறீர்கள்' என்று அவருக்கு பதில் எழுதினேன். ஆனால், இதைப் போன்ற சின்னச் சின்ன சர்ச்சைகளை எல்லாம் மீறிய அன்பும், அன்யோன்யமும் எழுத்தாளர்களுக்கிடையில் இருந்தது. நாலைந்து வருடங்களுக்குப் பிறகு மலேசிய எழுத்தாளர் மு.அன்புச்செல்வனை சிங்கப்பூரில் சந்தித்தபோது,'அப்போ இருந்த துடிப்பும், உயிர்ப்பும் இப்ப இல்லைங்க' என்றார்.

ஆதிகுமணனின் மூத்த சகோதரர் இராஜகுமாரன் தன்னை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத திறமைசாலி. தனது 'நயனம்' வார இதழைத் தரமாக நடத்தி வருபவர். சிங்கப்பூரின் இந்திரஜித் உட்பட பல நல்ல பத்திரிக்கையாளர்களை உருவாக்கியவர். சிங்கப்பூரின் இலக்கிய வரலாற்றிலும், தமிழ்க் கணினி வரலாற்றிலும் குறிப்பிடத்தக்கவரான அமரர் நா.கோவிந்தசாமியோடு ஆழமான நட்பும் அவருக்கு இருந்தது. ஆதிகுமணனின் மரணம் அனைத்து மலேசியத் தமிழர்களைப் போல அவருக்கும் பெரிய இழப்புதான். வடமாலை அவர்களால் நடத்தப்பட்டு வந்த 'அரும்பு' வார இதழ் ஆசிரியர் பி.கே.ராஜன் மறக்க முடியாத பெயர். 'அரும்பு' வாரஇதழ்தான் மலேசியாவில் நடந்த 'சரத்குமார் - நக்மா' சங்கதிகளை வெளிப்படுத்தியது. அதை அப்படியே வெட்டியெடுத்து அட்டைப் படமாக்கி பரபரப்பு கிளப்பியது குமுதம். எப்போதும் 'ஸ்டெடியான' மன்னன் மாத இதழ் பல வருடங்கள் மலேசிய இளைஞர்களின் நாடித் துடிப்பாக இருந்து வருகிறது. தனக்கென்று தனி பாணியை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருபவர் அதன் ஆசிரியர் எஸ்.பி.அருண். இவரது தலையங்கங்கள் வெகு தைரியமானவை. இந்திய சமூகத்தின் நாடித் துடிப்பாக இருந்தவை.அவரது கேள்வி-பதில் அங்கத்தைப் படிக்கையில் ஒரு முறையாவது சிரிக்காமல் இருக்க முடியாது. வலிமையும், இனிமையும் இணைந்த எழுத்துத் திறன் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?

தற்போது தமிழ்நேசன் ஞாயிறு பதிப்புக்கு பொறுப்பு வகிப்பவர் சந்திரகாந்தம். தமிழ்நேசன் நீண்ட பாரம்பரியமுள்ள நாளிதழ். டத்தின்ஸ்ரீ இந்திராணியின் பராமரிப்பில் இருக்கும் அதற்கென்று பிரத்தியேக வாசகர்கள் உண்டு. தினமும் சிங்கப்பூரில் விநியோகிக்கும் அனுமதி உள்ள ஒரே மலேசியத் தமிழ் பத்திரிக்கை இதுதான். மலேசியாவில் காலகாலமாக பல நாளிதழ்கள்,வார,மாத இதழ்கள் தோன்றியும், மறைந்தும் இருக்கின்றன.மறைந்தாலும்,தமிழ்மலர் போன்ற சில பத்திரிக்கைகள் சில சரித்திரத் தடங்களையும் விட்டுச் செல்கின்றன. மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் நம்பிக்கையளிக்கும் புதிய வரவுகளில் பலரும், இப்படிப்பட்ட பத்திரிக்கைகளின் ஊக்கத்தில் உருவாகி வந்திருப்பதுதான் மலேசியாவின் எதிர்காலத்திற்கு ஜே சொல்ல வைக்கும் முக்கிய அம்சம்..

2 comments:

Azarudeen said...

"தமிழகத்திற்கு அப்பால் உதிர்ந்த நட்சத்திரம்" திரு உதுமான் கனி அவர்களுடைய நினைவுக் கூட்டத்தின் பத்திகள் மிகவும் நேர்த்தியானவை

மரணமடைந்த 'சில்க்' பேட்டி அருமையான முயற்சி. தாங்கள் அதில் சிதறவிட்ட சில்லுகள் படிப்பவர்களின் தளத்தை விரிவு படுத்தும் தன்மை வாய்ந்தவை.(கோணல் பக்கங்களில் சாரு சில்க்கைப் பற்றி பல செய்திகள் சொல்லியிருப்பார்) நட்சத்திரங்களின் வெளிச்சங்கள் காண்பவருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் அதன் துயரமும் தனிமையும் தானே வெந்து தனியக் கூடியவை அல்லவா!

தங்கள் கவிதைகளையும், சிறு கதைகளையும் பற்றி எதிர்வினைகளும், பாராட்டுகளும் என் மனதில் அலைப்பாய்ந்த படி உள்ளன. விருப்பங்கள்தான் நம் உள்ளத்தை கட்டமைக்கின்றன.மனித ஆளுமைக்கும் அல்லது ஆளுமை குறைவுக்கு கூட அத்தகு விருப்பங்களே காரணமாக உள்ளன.M.K. குமார் தங்களிடம் கூறிய மாதிரி நானும் ஒரு இட்லிக் கடை திறந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட என்னுடைய முயற்சி 'ஸத்துகோஸாம் ஸத்து துளோர்' தங்களால் இடப்பட்ட விதைத்தான். அது படிப்பவர்களுடைய நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக எழுதி வருகிறேன்.

தங்களுடைய பத்திகள் பிரத்யோக நியதிகளைக் கொண்டிருக்கும் தனி உலகம். எங்களை போன்ற வாசகர்கள் பயனப்பட அவசியத் தேவை இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள்!

அன்புடன் ஸானவாஷ்

பாலு மணிமாறன் said...

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஷானவாஸ்.