Tuesday, December 30, 2008

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை - சில சிங்கப்பூர் கனவுகள் (நாலு வார்த்தை-030)

சிங்கப்பூரில் நிரந்தரவாசிகளாக இருக்கும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான கனவுகள் இரண்டு. 1.சிங்கப்பூரில் வீடு வாங்குவது. 2.இந்தியாவில் வீடு வாங்குவது. குழந்தை குட்டிகளோடு சிங்கப்பூரின் வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், சதா இந்திய நினைவுகளோடு துடித்துக் கொண்டிருக்கும் மனமே இரண்டாவது ஆசைக்குக் காரணமாகிறது. வேலை நிமித்தம் சிங்கப்பூரில் கால் வைத்த மறுநிமிடமே நிரந்தரவாசியாக வேண்டுமென்ற ஆசையும், அது கிடைத்ததும் கடனைக் கிடனை வாங்கி ஒரு வீட்டை வாங்கி விட வேண்டுமென்ற ஆசையும் பலரது மந்திலும் ரெக்கை கட்டிப் பறக்கத் துவங்குகின்றன. நிரந்தரவாசம்- சிலருக்கு சுலபமாகவும், சிலருக்கு மிகுந்த போராட்டத்திற்குப் பிறகும் கிடைக்கிறது. சிலருக்கு அது இறுதிவரை கிடைக்காமலே போவதும் உண்டு.

ஏன் கிடைக்கிறது, ஏன் கிடைக்கவில்லை என்பது பலருக்கும் புரியாத சிதம்பர ரகசியம். ஆனால், சிங்கப்பூரின் நீண்ட காலத் தேவைகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டே அவை வழங்கப்படுவதை பலரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்குக் கூட கிடைக்காத நிரந்தரவாசம் ITI படித்த எலக்ட்ரிஷியனுக்குக் கிடைத்து விடுகிறது. நிரந்தரவாசத்துக்காக, ஒரு விக்கிரமாதித்தியனைப் போல மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நம் குடும்பத்தில் யாராவது புண்ணியம் செய்திருந்தால் நம் வாழ்வில் அதிசயங்கள் நடக்கின்றன. இந்தியாவில் டிப்ளமா படித்த பையனொருவன், நான் பணியாற்றிய ஜப்பானியக் கம்பேனியில் Work Permit-ல் எலட்ரிஷியனாக வேலை செய்து கொண்டிருந்தார். பொறுப்பாக வேலை செய்வார். கஷ்டப்பட்டு வேலை செய்தால் மாதம் 700 வெள்ளி சம்பளம் கிடைக்கும். 1999ல் நானொரு அமெரிக்கக் கம்பேனிக்கு வேலை மாறினேன். அங்கு ஒரு எலக்ட்ரிக்கல் சூபர்வைஸர் உடனடியாகத் தேவைப்படுவதாகவும், 2000 வெள்ளி சம்பளம் தருவதாகவும் கூறினார்கள். இந்தப் பையனை சிபாரிசு செய்தேன். ஆனால் 4000 வெள்ளியாவது சம்பளம் தரவேண்டுமென்றேன். அவர்களின் அவசரம் எத்தகையதென்ற ரகசியம் எனக்குத் தெரிந்திருந்தது. அதே சம்பளத்தில் அந்தப் பையனுக்கு வேலை கிடைத்தது. சீக்கிரமே நிரந்தரவாசம் கிடைத்தது. கல்யாணமானது. இன்று அந்தப் பையன் மனைவி, குழந்தைகள், சொந்த வீடு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆண்டவனது அன்புக் கரங்கள் நம்மை எப்போது தொடுமென்று நமக்குத் தெரியாது. அது தொடும்போது, நிரந்தரவாசம் உட்பட எல்லாமே கிடைக்கும்!

சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் மறுவிற்பனைச் சந்தையில் வீடுகளை வாங்கலாம். சலுகை விலையில் கிடைக்கும் அரசாங்க வீடுகள் குடிமக்களுக்குக் கிடைக்கின்றன. 2 நிரந்தரவாசிகள் சேர்ந்துதான் வீடு வாங்க முடியுமென்பது விதி. அந்த இரண்டாம் நபர் பொதுவாக கணவரின் மனைவியாக இருக்கிறார்கள். 1997-98 ஆசிய நிதி நெருக்கடியின்போது, சிங்கப்பூரில் வீட்டு விலைகள் வெகுவாகக் குறைந்தன. 96ன் துவக்கமெல்லாம் peak period. அப்போது வீடு வாங்கியவர்கள் பெரும் விலை கொடுத்தார்கள். வாங்கி ஆறே மாதத்தில் வீட்டு விலை 10 -20 சதவீதம் குறைந்தால் அவர்களது மனநிலை எப்படி இருந்திருக்கும்? 1998-ல் இருந்து சிங்கப்பூர் வீவக வீடுகளின் (Housing Development Board) விலை கொஞ்சம் கொஞ்சமாக கூடியபடி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டது. அந்த விலையேற்றம் தற்போது ஒரு சமநிலையை எட்டியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் போகப் போகத்தான் தெரியும். ஆனால் அது வீடு வாங்க வேண்டுமென்ற நிரந்தரவாசிகளின் தாகத்தைக் குறைக்கவில்லை. இந்திய நிரந்தரவாசிகள் சிங்கப்பூரில் வீடுகளை வாங்கினார்கள்; வாங்குகிறார்கள்; இனியும் வாங்குவார்கள்!

வாங்கியாச்சா... உடனே இந்தியாவில் வீடு வாங்கும் அடுத்த கனவு துவங்கி விடுகிறது. "என்னதான் இருந்தாலும், பிள்ளைகள் வளர்ந்த பிறகு, ஊர்லதாங்க செட்டில் ஆகணும்" என்பது அவர்கள் தரும் விளக்கம். அப்படிச் சொன்னவர்களில் யாரும் ஊருக்குத் திரும்பியதாகத் தெரியவில்லை. "ஊர்த் தண்ணி பிள்ளைகளுக்கு ஒத்துக்கவே மாட்டேன்னுதுங்க...குண்டு, குண்டா இருக்க கொசுக்களைப் பார்த்து பிள்ளைங்க அலர்றாங்க.." இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிங்கப்பூரில் தொடரும் வாழ்க்கை. சிங்கப்பூர் மண்ணின் மகிமை அப்படி. மறுநடவு செய்யப்படும் மரங்களே இங்கு வலுவாக வேரூன்றி விடுகின்றன. ஆனாலும் ஊரில் வீடு வாங்கும் அல்லது கட்டும் கனவைப் பலரும் கைவிடுவதில்லை. வாங்கிக் கட்டி, வாடகைக்காவது விட்டு விடுகிறார்கள். சொந்தக்காரர்களை அனுபவிக்க விடுபவர்களும், விடுமுறையில் ஊருக்குப் போகும்போது வாடகைக்கு விட்ட வீட்டைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டுத் திரும்புபவர்களும் கூடிக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலத்தில், இந்திய வீட்டுமனைகளை விற்பனை செய்யும் சிங்கப்பூர் நிறுவனங்களும் கூடி இருக்கின்றன. வானொலியில் அவர்களின் கவர்ச்சியான விளம்பரங்களும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவை, ஊரில் வீடு வாங்கும் இந்தியக் கனவிற்கு எண்ணெய் வார்க்க... ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலுமாக அல்லாடிக் கொண்டிருக்கின்றன பல மனங்கள்!

14 comments:

Anonymous said...

Its true. R u in these too? :)

கோவி.கண்ணன் said...

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்.
// இந்தப் பையனை சிபாரிசு செய்தேன். ஆனால் 4000 வெள்ளியாவது சம்பளம் தரவேண்டுமென்றேன். அவர்களின் அவசரம் எத்தகையதென்ற ரகசியம் எனக்குத் தெரிந்திருந்தது. அதே சம்பளத்தில் அந்தப் பையனுக்கு வேலை கிடைத்தது. //

ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. உதவும் மனப்பான்மையுடையோர் தெய்வத்துக்கு சமானம் என்பார்கள். அந்த பையனுக்கு நீங்கள் அப்படித்தான் தெரிவீர்கள்.

கிரி said...

//ஆண்டவனது அன்புக் கரங்கள் நம்மை எப்போது தொடுமென்று நமக்குத் தெரியாது//

உண்மை தான் பாலு

//ஊர்த் தண்ணி பிள்ளைகளுக்கு ஒத்துக்கவே மாட்டேன்னுதுங்க...குண்டு, குண்டா இருக்க கொசுக்களைப் பார்த்து பிள்ளைங்க அலர்றாங்க.." இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிங்கப்பூரில் தொடரும் வாழ்க்கை//

:-))

//சிங்கப்பூர் மண்ணின் மகிமை அப்படி. மறுநடவு செய்யப்படும் மரங்களே இங்கு வலுவாக வேரூன்றி விடுகின்றன//

உண்மை. அதற்க்கு இவர்களின் மிக சிறந்த பராமரிப்பும் காரணம்

சி தயாளன் said...

காலத்திற்கேற்ற பதிவு.

அவரவர் தத்தமது தேவைகளை பொறுத்து முடிவெடுப்பது நல்லது என நினைக்கிறேன்..

அகலக்கால் வைப்பது எப்போதும் ஆபத்து தான்

வடுவூர் குமார் said...

இதில் பலவற்றை கடந்து வந்திருக்கேன்.96 இறுதியில் வீடு வாங்கி 65000 நஷ்டத்தில் விற்று...அந்த கதையெல்லாம் இருக்கு பத்திரமாக பதிவுக்குள்ளே.
என்ன தான் சொல்லுங்கள்...சிங்கை வாழ்கை குடும்ப முறையை அத்தியாவசியமாக்கி, வாழும் முறையை மேம்படுத்தியுள்ளது.
வாழ சிறந்த இடமாக எனக்கு தோன்றுகிறது.
நிரந்தர வேலை என்ற இலக்கு மட்டும் இருந்தால் போதுமானது.

Venkatramanan said...

//கூலுக்கும்//
கூழுக்கும்?!

Anonymous said...

மறுநடவு செய்யப்படும் மரங்களே இங்கு வலுவாக வேரூன்றி விடுகின்றன.
\மறுநடவு செய்யப்படும் மரங்களே இங்கு வலுவாக வேரூன்றி விடுகின்றன.
மறுநடவு செய்யப்படும் மரங்களே இங்கு வலுவாக வேரூன்றி விடுகின்றன.
மறுநடவு செய்யப்படும் மரங்களே இங்கு வலுவாக வேரூன்றி விடுகின்றன.

poruthamaana varikal

பாலு மணிமாறன் said...

//Anonymous said...
Its true. R u in these too? :)//

yes :)))

பாலு மணிமாறன் said...

//கோவி.கண்ணன் said...ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. உதவும் மனப்பான்மையுடையோர் தெய்வத்துக்கு சமானம் என்பார்கள் //

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிங்க கோவி.கண்ணன். எனக்கு வாய்ப்பு கிடைத்தது; அவரிடம் திறமியிருந்தது. நானில்லாவிட்டால், வேறொருவர் அவருக்கு உதவியிருப்பார்.

பாலு மணிமாறன் said...

//கிரி said...அதற்க்கு இவர்களின் மிக சிறந்த பராமரிப்பும் காரணம்//

உங்கள் கருத்துக்கு நன்றி கிரி. 'பராமரிப்பு' என்று நான் சொல்லாமல் விட்ட ஒன்றைச் சொல்லி நிறைவு செய்துவிட்டீர்கள்.

பாலு மணிமாறன் said...

//'டொன்' லீ said...அவரவர் தத்தமது தேவைகளை பொறுத்து முடிவெடுப்பது நல்லது என நினைக்கிறேன்..//

உங்கள் கருத்துக்கு நன்றி 'டொன்'லீ.இரண்டு தேசத்திலும் வீடு என்பது நல்ல முதலீடாக அமையும் வாய்ப்பும் இருக்கிறது.

பாலு மணிமாறன் said...

//வடுவூர் குமார் said...
இதில் பலவற்றை கடந்து வந்திருக்கேன்.96 இறுதியில் வீடு வாங்கி 65000 நஷ்டத்தில் விற்று...அந்த கதையெல்லாம் இருக்கு பத்திரமாக பதிவுக்குள்ளே.//


65000 வெள்ளி நஷ்டம் என்பதைக் பேட்கவே கஷ்டமாக இருக்குங்க வடுவூர் குமார். 'இதுவும் கடந்து போகும்' என்ற மனப்பான்மையே இப்படிப்பட்ட நஷ்டங்களில் இருந்து மீள உதவும். 2009 உங்களுக்கு சகல லாபங்களையும் கொண்டு வந்து சேர்க்க வாழ்த்துகள்!

பாலு மணிமாறன் said...

/// venkatramanan said...
//கூலுக்கும்//
கூழுக்கும்?! ///

தவறுக்கு மன்னிக்க வேண்டும் வெங்கட் சார். திருத்திக் கொண்டேன்!

பாலு மணிமாறன் said...

// yazh said...
மறுநடவு செய்யப்படும் மரங்களே இங்கு வலுவாக வேரூன்றி விடுகின்றன.//

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி yazh.