Sunday, December 28, 2008

30 வெள்ளிக்கு வாங்கினால் 130 வெள்ளிக்குப் பேசலாம் - இது தொலைபேசும் காலம்! (நாலு வார்த்தை-028)

பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் சிங்கப்பூரிலிருந்து இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக் கட்டணம் மிக அதிகம். அந்த நாடுகளில் இருந்து வேலை நிமித்தமாக சிங்கப்பூர் வந்தவர்களுக்கு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை சொந்த பந்தங்களை அழைத்துப் பேசுவதே மிகுந்த செலவளிக்கும் விஷயமாக இருந்தது. பொரும்பாலானவர்கள் பொதுத் தொலைபேசிகளைத்தான் அதற்காகப் பயன்படுத்தி வந்தார்கள். என்ன கட்டணமாக இருந்தாலும் பரவாயில்லை, பாசத்திற்குரியவர்களின் குரலை கேட்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில், மாதச் சம்பளத்தில் 20 - 30 சதவீதத்தை அதற்காக செலவு செய்தவர்களும் உண்டு. அதில் அடியேனும் ஒருவன். இப்போது நிலமை மாறி விட்டது.இன்று ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தொலைபேசியாவது இருக்கிறது. நமது தேவையைப் பொறுத்து, ரசனையைப் பொறுத்து, கைத் தொலைபேசிகளும் வித விதமான வடிவங்களில், வசதிகளில் கிடைக்கின்றன. அலுவலகங்களில், வீதிகளில், பேருந்துகளில், எம்.ஆர்.டிகளில் என்று எப்போதும் கைத்தொலைபேசியோடுதான் வாழ்க்கை நடக்கிறது. ஒரே வீட்டில் வேறு வேறு அறைகளில் இருப்பவர்கள் கூட கைத் தொலைபேசியில் பேசிக் கொள்ளக் கூடிய நிலமை கூட இருக்கிறது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் தொலைதொடர்புத்துறையில் ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியும், அதன் காரணமாகக் குறைந்திருக்கும் தொலைதொடர்புக் கட்டணங்களும்தான்.

சிங்கப்பூரில், முன்பு சிங்டெல் நிறுவனம் மட்டுமே களத்தில் இருந்தது. இன்றோ ஸ்டார்ஹப், M1 போன்ற நிறுவனங்களும் அதற்குப் போட்டியாகக் களத்தில் இருக்கின்றன. சலுகைகளை அள்ளித் தெளித்து அவர்கள் அறிவிக்கும் புதுப் புதுத் திட்டங்களால், அதனால் குறைந்து கொண்டிருக்கும் கட்டணங்களால், வாடிக்கையாளருக்குத்தான் கொண்டாட்டம். அதா, இதா? எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் சராசரி வாடிக்கையாளர். தொலைதொடர்பு நிறுவனங்களுக்குள் நிலவும் ஆரோக்கியமான போட்டியால், ரொம்ப தூரத்தில் இருந்த நாடுகளும், ஊர்களும், சொந்தங்களும் குறைந்த செலவில் காதுக்கு மிக அருகில் வந்து விட்டன.வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் இந்த நிறுவனங்கள் விளம்பரங்கள் உட்பட புதுப்புது யுக்திகளைக் கையாளுகின்றன. இந்த நிறுவனங்களின் தயவில் தமிழகத்தின் திரை நட்சத்திரங்கள் சிங்கப்பூரிலுள்ள இந்திய ஊழியர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருகிறார்கள். தூரத்து நட்சத்திரங்களை, நிலா மாதிரி மிக அருகில் பார்ப்பதில் அவர்களுக்கும் மகிழ்ச்சிதான்.தினந்தோறும் வெளிநாட்டுத் தொலைபேசித் தொடர்பைப் பயன்படுத்தும் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். அதன் மூலம் கணிசமாக லாபம் பெறும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அந்த ஊழியர்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து முயலுகின்றன.


இப்போது இந்த பெரிய நிறுவனங்களோடு பல சிறிய நிறுவனங்களும் போட்டியில் குதித்து விட்டன. International calling cards என்று அழைக்கப்படும் சர்வதேச அழைப்பு அட்டைகள், call back cards என்று வெகு விலைக் குறைந்த, ஆனால் நீண்ட நேரம் பேசக் கூடிய அழைப்பு அட்டைகள் ஏராளமானவை இப்போது சந்தையில் கிடைக்கின்றன. 8 வெள்ளி கொடுத்து ஒரு அட்டை வாங்கினால் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இந்தியாவிற்குப் பேச முடியும் என்பதால், விவசாயம், பிள்ளைகளின் படிப்பு, குடும்பப் பிரச்சனைகள், கடன் என்று எல்லா விஷயங்களையும் நிதானமாகப் பேச முடிகிறது. பெரிய நிறுவனங்களும் இந்த போட்டியில் புது வியூகம் அமைத்துக் குதித்திருக்கின்றன. 28 வெள்ளிக்கு வாங்கினால் 128 வெள்ளிக்குப் பேசலாம், 30 வெள்ளிக்கு வாங்கி 130 வெள்ளிக்குப் பேசலாம் என்ற சொல்லும் விளம்பரங்களை சிராங்கூன் ரோடு முழுவதும் பார்க்க முடிகிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் அவற்றின் மேல் நடக்கவே முடிகிறது...


புறாக்களின் கால்களில் கடிதங்களைக் கட்டித் தூது விட்டது அந்தக்காலம். இப்போது பாசமுள்ளவர்கள் வளர்க்கவும், மாமிசப் பிரியர்கள் சமைக்கவும் மட்டுமே பயன்படுகிறது புறா. இன்றைய பொழுது, கால ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மற்ற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் முறைகள் நிறையவே மாறி விட்டன. அந்த வகையில் மனித குலத்தை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்வதில் தொலைதொடர்புத்துறை பெரிய பங்கு வகிக்கக்கூடும். தேசம் விட்டுத் தேசம் வந்தவர்கள் தமது உறவினர்களோடு குறைந்த தொடர்பு கொள்ள வாய்ப்பளித்திருப்பதன் மூலம் தொலைவை குறைத்திருக்கிறது தொலைத்தொடர்புத் துறை. சிங்கப்பூரிலிருந்து, சென்னையோ, மதுரையோ - எட்டத் தேவைப்படுவது, இப்போதெல்லாம் சில நொடிகளும், வெகு சில டாலர்களும்தான்!

9 comments:

சதங்கா (Sathanga) said...

//பாசத்திற்குரியவர்களின் குரலை கேட்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில், மாதச் சம்பளத்தில் 20 - 30 சதவீதத்தை அதற்காக செலவு செய்தவர்களும் உண்டு. அதில் அடியேனும் ஒருவன். //

ஆஹா ... அந்த நாட்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். அப்ப தான் நமக்கு பெண்பார்த்து மணநாள் குறித்த நேரம். அடுத்த சில மாதங்களுக்கு, சொன்னா நம்ப மாட்டீங்க மாதம் ஒன்றுக்கு 800 டாலர் சிங்டெல் பில் ...

ஹிம்ம்ம் இப்ப எல்லாம் சுளுவா போயிடுச்சு :)))) ஆனா நம்ம தான் ரொம்ப பேசுறது இல்ல ...

கிரி said...

//28 வெள்ளிக்கு வாங்கினால் 128 வெள்ளிக்குப் பேசலாம், 30 வெள்ளிக்கு வாங்கி 130 வெள்ளிக்குப் பேசலாம் என்ற சொல்லும் விளம்பரங்களை சிராங்கூன் ரோடு முழுவதும் பார்க்க முடிகிறது//

பாலு நீங்கள் சிங்டெல், ஸ்டார்ஹப் விளம்பரங்களை கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இதில் 28 வெள்ளி அயல்நாடும் மீதி 100 வெள்ளி உள்நாடும் கொடுக்கிறார்கள்.

நீங்கள் கூறுவது போல போட்டிகள் அதிகம் ஆகி விட்டன என்பது உண்மை தான். மேலும் கட்டண குறைப்பை எதிர்பார்க்கலாம்.

கோவி.கண்ணன் said...

முன்பெல்லாம் பத்துவெள்ளி அழைப்பு அட்டை வாங்கினால், அட்டையை சொருகி பேசவேண்டும், ஒரு தடவை சொருகிப் பேசினாலே லைன் கிடைத்தாலே 50 காசு வெட்டிவிடும், அட்டையில் புள்ளி வைத்து வைத்து 10 வெள்ளியை தீர்த்துவிடும், மாதம் 50 வெள்ளிவரை பேசினவர்களெல்லாம் உண்டு. அதெல்லாம் திரும்ப கிடைக்காது. இப்போது 90 விழுக்காடு சேமிப்பாகிறது.

பாலு மணிமாறன் said...

நாம ஒரே படகில பயணம் செஞ்சுருக்கோம் சதங்கா.. 90களில் மாதாமாதம் 300 வெள்ளியெல்லாம் கட்டிக் கொண்டிருந்தேன்

பாலு மணிமாறன் said...

அதேதாங்க கிரி... என்ன நான் கொஞ்சம் earlierஅ சிங்கப்பூர் வந்துட்டேன்.. அதன் மூலம் தொலைபேச நான் சில, பல ஆயிரங்களைக் கொடுக்க வேண்டியதாயிடுச்சு!

பாலு மணிமாறன் said...

50 வெள்ளியா?. பரவாயில்லை... உங்களுக்குத் தெரிந்தவங்களாவது சிக்கனமாக இருந்திருக்காங்களே கோவி.கண்ணன்! :))))))

பாலு மணிமாறன் said...

உங்கள் மூவரின் வருகைக்கும் , பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இங்கிருந்து சிங்கப்பூருக்கு land line க்கு ,சில நிறுவனங்கள் இலவசமாகவே தருகின்றன.

பாலு மணிமாறன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இங்கிருந்து சிங்கப்பூருக்கு land line க்கு ,சில நிறுவனங்கள் இலவசமாகவே தருகின்றன.//

Many will pray that it does happen in Singapore :)))