Tuesday, January 13, 2009

இந்த மானிடக் காதலெல்லாம்... (நாலு வார்த்தை-039)

லட்சுமணன் இறந்து போய் 10 வருடமாவது இருக்கும். அவன் என்னோடு பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் படித்தான். படிக்கும்போது இறக்கவில்லை. படித்து முடித்து நாங்கள் பிழைப்புதேடி பல திசைகளில் பிரிந்தபிறகு ஒரு நாள், ஒரு செய்தியாகவே அந்த மரணம் என் காதுகளை எட்டியது. அந்த செய்தி மனதில் பெரிய அதிர்வை உண்டாக்கியது. ஒரு வித வெட்கம் கலந்த அவனது புன்னகை மறுபடி, மறுபடி மனதில் வந்து,"அதெல்லாம் பொய்ங்க மணி... நம்பாதீங்க" என்றது. லட்சுமணன் என்னை எப்போதும் 'வாங்க, போங்க' என்று மரியாதையாக அழைத்தாலும், நிஜத்தில் எங்களுக்குள் இருந்தது 'அவன், இவன்'னுக்கான நெருக்கம். பாலிடெக்னிக்கின் முதல் வருட படிப்பில் நானும், அவனும் வெவ்வேறு வகுப்புகள். எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை; ஆனால், எங்களுக்கிடையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நாங்கள் பாலிடெக்னிக் விடுதியில், ஒரேயிடத்தில் தங்கிப் படித்தோம் என்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். 1980களில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் ஒரு கல்லூரிக்கான சகல வசதிகளோடும் இருந்தது. மெக்கானிக்கல் லேப்பிற்குப் பக்கத்தில் புகை விடாத நீராவி எஞ்சினை பார்வைக்கு வைத்திருப்பார்கள். தரமான நூலகம் உண்டு. ஒரு கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள கேலரிகளைப் போல் தங்குவதற்கான விடுதியின் அறைகள் இரண்டு தளங்களாக கட்டப்பட்டிருந்தது. இடையிடையே குளியலறைகள் இன்ன பிற. கட்டிடத்தின் மத்தியில் பெரிதாக ஒரு வெட்டவெளி. சாப்பாட்டு மெஸ் விடுதிக்கு வெளியே தனி கட்டிடத்தில் இருந்தது. அங்கு வழங்கப்படும் ஊத்தாப்பத்தை சாப்பிட்டு விட்டு வகுப்பிற்குப் போனால், உறக்கத்திற்கு 100 சதவீத உத்திரவாதம்.

ஆங்கில வகுப்பு நடத்திய ஆசிரியை சற்று அழகாகவும், செழுமையாகவும் இருப்பார்கள். "அழகை ரசிக்கலாம் தப்பில்லை. ஆனால், அடைய ஆசைப்படக் கூடாது" என்று அவர் சொல்லும்போது, பல மாணவர்களுக்கும் அதன் பொருள் புரிந்திருந்ததால், பலமாக தலையை ஆட்டி ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்கள். எலெக்ட்ரானிக்ஸ் எடுத்த இன்னொரு ஆசிரியையோ அப்படியெல்லாம் சொல்ல மாட்டார். அவர் புதிதாக வந்தவர். இளமையானவர். அவர் ஒரு முறை அணிந்த சேலையை, மறுமுறை அணிந்து நாங்கள் யாரும் பார்த்ததில்லை. கடலோரக் கவிதைகள் அப்போதுதான் ரிலீஸாகி இருக்க, நெளிவான கூந்தலுடைய அவர், பலரது கண்ணுக்கும் ரேகாவாகத் தெரிந்ததில் ஆச்சரியமில்லையென்றால், அவரவர் மனதில் அவரவர் சத்யராஜாகிப் போனதும் அதிசயமில்லைதான்.லட்சுமணன் இதிலெல்லாம் மாட்டிக் கொள்ள மாட்டான். அவன் கராத்தேயில் பிளாக் பெல்ட். அவனது உடல் மிக இறுகி கல் போல இருக்கும். சிட் அப்ஸ் ஒரே மூச்சில் 200 கூட எடுப்பான். நாங்கள் சில சிட்டப்ஸில் மூச்சு மட்டும் வாங்குவோம். நாலைந்து நண்பர்களை மொட்டை மாடிக்குக் கூட்டிக் கொண்டு போய் ஆவேசமாக கராத்தே அசைவுகளை செய்து காட்டுவான். அதில் தற்காப்புக் கலைக்கு மேலான ஆவேசம் தென்படும். ஏதோ ஒன்று அவனை ஆட்க் கொண்டதுபோல் தோன்றும். ஏன் அப்படி என்று கேட்கத் தோன்றும். ஆனால், கேட்பதில்லை. என்னிடம் தன் சொந்த வாழ்வில் அந்தரங்கங்களைச் சிலமுறை பகிர்ந்து கொண்டபோது அந்த ஆவேசத்தின் அர்த்தம் புரிந்தது. அவனது தாய், அவனுடைய தந்தைக்கு இரண்டாவது மனைவி. அது அவனை பெரிதாக உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த உறுத்தலுக்குப் பின்னால் இருந்த சம்பவங்கள் அல்லது காரணங்களை லட்சுமணன் பகிர்ந்து கொண்டதில்லை. அவன் ஒரு பேரன்பிற்காக ஏங்குகிறான் என்று மட்டும் புரிந்து கொண்டேன்.

அங்கு படித்த மாணவ, மாணவிகளுக்கிடையில் அவ்வப்போது காதல்கள் அரும்பிக் கொண்டே இருந்தன. ஒரு ஜோடி பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நெகமம் எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவோடு திருமணம் செய்து கொண்டது. லட்சுமணன் கராத்தே வீரன். கட்டுடல்காரன். சில பெண்களுக்கு அவன் மேல் காதல் பற்றி எரிவதாக செய்திகள் காதில் வந்து விழுந்தன. பாலிடெக்னிக் முடிந்த மாலை நேரமே 'அன்னலும் நோக்கினாள்: அவனும் நோக்கினான்' நிகழும் காலம். பாலிடெக்னிக் காம்பவுண்ட் சுவருக்கு சற்று வெளியே உள்ள பஸ்ஸ்டாண்டில் எதிரெதிரே நின்று கொண்டு பார்வைப் பரிமாற்றங்கள் நிகழும். லட்சுமணன் எப்போதும் என்னையும் அங்கு இழுத்துக் கொண்டு செல்வான். அங்கு நிகழும் கூத்துகளுக்கு சாட்சியாக என்னை பக்கத்தில் வைத்துக் கொள்வான்.'அவ பாக்குறா... இவள் பார்க்கிறாள்' என்ற கூற்றுகளும், 'அவன் அவள் பின்னாடியே பொள்ளாச்சி போயிட்டான். இன்னேரம் ரெண்டு பேரும் மணிஸ்ல உட்காந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருப்பாங்க' போன்ற வர்ணனைகளும் கேட்கக் கிடைக்கும். லட்சுமணன் சிரித்தபடி வேடிக்கை பார்ப்பான். பார்ப்பதோடு சரி, மற்றபடி காதல் கீதல் எல்லாம் அவனுக்குள் வந்தபாடில்லை. அப்படி இருந்த அவனையும் ஒரு நாள், ஒரு பெண் சாய்த்து விட்டாள் - அவள் பெயர் அஜிதா. மலையாள மங்கை. கண்ணாடி அணிந்து அமைதியாக வகுப்புக்கு வந்து போகும் பெண். அந்தப் பெண் மேல் லட்சுமணனுக்கு அளவிடமுடியாத காதல் ஏற்பட்டு விட்டது. நான் ஓரளவு கவிதை எழுதுவேன். லட்சுமணன், அஜிதாவைப் பற்றி தானே எழுதிய கவிதையை என்னிடம் படித்துக் காட்டி மகிழ்வான். பலவகையிலும் அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், ஆனால், அவளிடம் ஒரு ரியாக்ஷனும் இல்லை என்றும் சொல்வான். இதுதான் விதி என்பது. பலர் அவன் மேல் காதலுடன் இருக்க, அவனோ சற்றும் நெகிழாத் பெண்ணின் காதலுக்கு அலைந்து கொண்டிருந்தான். கடைசியில், அஜிதா, அவனது காதலை நிராகரித்து விட்டாள்.

அன்றிரவு அவன் செய்த ஆர்பாட்டம் மறக்க முடியாதது. எங்கேயோ போய் எதையோ குடித்து விட்டு வந்து, அமைதியான ராத்திரியில் 'அஜிதா, என்னை ஏமாத்திட்டாடா' என்று பெருங்கூச்சலிட்டான். அத்தனை அறைகளிலும் விளக்குகள் ஒளிர்ந்தன. அவனை சமாதனப் படுத்தும் முயற்சிகள் தோல்வியுற்றன. ஒரு அறையில் வைத்துப் பூட்டினோம். அந்த அறையின் கதவை ஒரே அடியில் உடைத்து விட்டான். கடைசியில் எல்லோரும் சேர்ந்து அவனை தண்ணீர்த் தொட்டியில் போட்டு முக்கியெடுத்து... ஒரு வழியாக உறங்க வைத்தோம். இரண்டு நாள் கழித்து, என் அறை வாசலில் வந்து நின்றான்.'வா மணி... இன்னைக்கு ராத்திரி பழனிக்கு பாதயாத்திரை போவோம்' என்றான்.'ஏன்..எதுக்கு... எனக்கு ஒன்னும் வேண்டுதல் இல்லையே' என்றேன்.'எனக்கு இருக்கு. நீயும் வரணும். நம்ம பிரெண்ட்ஸ் 4 பேரும் வாரங்க.' என்றான். அஜிதாவின் மனம் மாற வேண்டுமென்பதே முருகனிடம் அவன் வைக்கவிருந்த விண்ணப்பம். சகமாணவர்கள் பார்த்திருக்க, பாலிடெக்னிக் முடிந்த ஒரு மாலையில் எங்கள் பாதயாத்திரை துவங்கியது. ஏறக்குறைய 58 கிலோமீட்டர் என்று நினைக்கிறேன். உடுமலைப் பேட்டை எல்லையை நெருங்குவதற்குள் என் கால் கதற ஆரம்பித்து விட்டது. நெஸாக லட்சுமணனுக்குத் தெரியாமல் உடுமலைப்பேட்டையில் பஸ் ஏறி, பழனிக்கு சற்று முன்னால் இறங்கிக் கொண்டு, மறுபடியும் நைஸாக அவன் பின்னால் போய் சேர்ந்து கொண்டோம், நானும், இன்னொரு நண்பனும். எந்தக் கடவுளிடம் வேண்டியும் அஜிதா மனம் மாறவில்லை. ஆனால், அப்போதுதான் புதிதாக அங்கு ஆரம்பிக்கப்பட்டிருந்த குமரகுரு காலேஜ் ஆ·ப் டெக்னாலஜியின் மாணவனொருவனை அவள் காதலிக்கிறாளென்ற செய்தி கிசுகிசுவாகப் பரவியது. அந்தத் தோல்விக்குப் பின் லட்சுமணன் யாரையும் காதலிக்கவில்லை. பாலிடெக்னிக் வாழ்க்கை நிறைவுற்றது. நான் சென்னையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு நாச்சிமுத்து பாலிடெக் நண்பர்கள் சிலரும் வந்து சேர, அவ்வப்போது சந்தித்துப் பேசிக்கொள்வோம். அந்தப் பேச்சில் எப்படியும் லட்சுமணது பெயர் வந்து விடும். கோயம்பத்தூரில் இருக்கும் அவன் எந்த வேலையிலும் நிலைக்க முடியவில்லை என்று கவலையாகச் சொன்னார்கள் நண்பர்கள். ஒரு முறை சென்னை வந்த அவனை சந்திக்க முடியாமல் போனது. அவனுக்கு முற்றிலும் வழுக்கை விழுந்து விட்டது என்றார்கள் நண்பர்கள். அங்கிருந்து நான் வேலை நிமித்தம் சிங்கப்பூர் வந்து விட்டேன். ஒரு வருடத்திற்குப் பிறகு சென்னை சென்றபோது,'லட்சுமணனுக்கு துபாயில் வேலை கிடைச்சிருச்சு. இன்னும் ரெண்டு மாதத்தில் கிளம்புறான்' என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ந்தேன். நிறைய ரணங்கள் நிறைந்த அவனது வாழ்க்கையில் ஒரு பாலைவன வசந்தம். அந்த நினைப்பை உடைத்தது ஒரு நண்பனின் தொலைபேசி அழைப்பு. 'லட்சுமணன் இறந்திட்டான்'. 'என்னது?' 'ஆமாம்.துபாய் போறதை ·பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு, ராத்திரி பஸ்ல வர்ரப்போ...அவன் போன பஸ், முன்னாடி போன லாரியில மோதி, ·பிரண்ட் சீட்ல உட்கார்ந்திருந்த லட்சுமணன் ஸ்பாட்லேயே இறந்திட்டான்.' அந்த செய்தி மனதில் பெரிய அதிர்வை உண்டாக்கியது. ஒரு வித வெட்கம் கலந்த அவனது புன்னகை மறுபடி, மறுபடி மனதில் வந்து,"அதெல்லாம் பொய்ங்க மணி... நம்பாதீங்க" என்றது.

2 comments:

பாண்டித்துரை said...

,"அதெல்லாம் பொய்ங்க மணி... நம்பாதீங்க" .....

பாலு மணிமாறன் said...

இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது தம்பி? :))