மலேசியாவில் நம்பிக்கையளிக்கும் இளையதலைமுறை தமிழ் எழுத்தாளர்கள் பலர் உருவாகி வருகிறார்கள். அவர்களில் சிலர் இன்னும் 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடிக்க இருக்கிறார்கள். இது ஆருடமில்லை. ஏற்கனவே முன் வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களின் மேல் எழுப்பப்பட்டு வரும் நம்பிக்கை. இணைய வாசகர்களுக்குப் பரவலாக அறிமுகமான இளைஞர் கே.பாலமுருகன் அவர்களில் ஒருவர். இவரைப் போன்றவர்கள், ஒரு சராசரி வாசகராக உருவாகி, தொடர்ந்த தேடலில் தங்களது மொழித்திறனை மேம்படுத்திக் கொண்டு எழுத்தாளர்களாக உருமாறி இருக்கிறார்கள். வாசகன் என்ற முதல்படியை மிதிப்பதற்கான தளம் அமைத்துத் தர பல நாழிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மலேசியாவில் இருக்கின்றன. மலேசியத்தமிழ் வாசகர்களை எளிதாக இனம் பிரித்துவிடலாம் என்பது என் அனுபவம். தமிழ்மேல் அளவற்ற ஆர்வமும், மொழி சார்ந்த உறவுகள் மூலம் தமிழ் மொழியை தக்க வைத்துக் கொள்ளும் தீவிரமும் உள்ள சராசரி தமிழ் வாசகர்கள் பெரும்பான்மையான முதல் பிரிவினர். தமிழகச் சிற்றிதழ்களின் தொடர்பும், தீவிர இலக்கிய வாசிப்பும், சதா படைப்புகளின் மேல் விமர்சனப்பார்வை வீசும் மனபோக்கும் உள்ள சிறுபான்மையினரான இரண்டாம் பிரிவினர்.இந்த இரட்டைக் குதிரையில்தான் பயணம் செய்கிறது மலேசியத் தமிழ் இலக்கியம்.
நானறிந்தவரை, மலேசியத்தமிழ் வாசகர் வட்டங்கள் மலேசியா முழுவதும் பரவிக் கிடக்கின்றன.அவற்றுக்கு தன்னலமற்ற, ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கிறார்கள். தீவிர இலக்கியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. தமிழைப் பற்றி மட்டுமே கவலைப் படுகிறார்கள். தமிழ் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதை பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் உறுதி செய்வது ஒன்றே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. நாடு தழுவிய கட்டமைப்பு அவர்களுக்கென்று இல்லாவிடாலும், மலேசியா முழுவதும் இருக்கிற வாசகர் வட்டங்கள் புரிந்துணர்வும், இணக்கமான செயல்பாடும் இருக்கிறது. வாசகர் வட்ட நிகழ்வுகள் எங்கு நிகழ்ந்தாலும் நாடு முழுவதும் உள்ள வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் குழுவினரோடு காரை எடுத்துக் கொண்டு, டோலில் காசு கட்டி, தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துப் போய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்தும் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், அப்படி வரும் வெளியூர் வாசகர்களுக்கு வீட்டில் விருந்து சமைத்துப் போடுவதும் உண்டு. இந்த வாசகர் வட்ட நிகழ்ச்சிகள் ஆட்டம், பாட்டம், இலக்கிய உரைகள், புதிர் விளையாட்டுகள் என்று ஒரு திருவிழாவாகவே கலை கட்டுகின்றன. வேறுபட்ட ஆர்வங்கள் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் என எல்லோரையும் திருப்திபடுத்தும் அக்கறையை பெரும்பாலான நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் பார்க்க முடிகிறது. இப்படிப் பட்ட மாதாந்திர வாசகர் வட்ட விழாக்களை துவக்கி வைத்தவர் சூரியன் என்ற மாத இதழின் ஆசிரியர் ராமதாஸ் மனோகரன் என்று நினைக்கிறேன். வாசகர்களுடன் நேரடி தொடர்பு என்ற அவரது அணுகுமுறையை பின்னாளில் 'மன்னன்' மாத இதழ் ஆசிரியர் எஸ்.பி.அருணும், 'தென்றல்' வார இதழ் ஆசிரியர் வித்யாசாகரும் பின்பற்றினார்கள் ; இப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.
கிள்ளான் பாலகோபாலன் நம்பியார், பூச்சோங் எம்.கே. சுந்தரம், ஜோசப் செபாஸ்டியன் போன்ற பல குறிப்பிடத்தக்க வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி வருவார்கள். சிரம்பான் பகுதியிலிருந்து இயங்கி வரும் விகடகவியும் குறிப்பிடப்பட வேண்டியவர். இது புனைப் பெயர்தான். இதற்கு முன்பு அவரது புனைப்பெயர் உலகமகா துரோகி. அந்தப் புனைப் பெயரைப் பார்த்ததும் கோபப்பட்ட முன்னாள் மலேசிய நண்பன் ஆசிரியர் திரு.ஆதிகுமணன், 'முதலில் நீங்கள் இந்தப் பெயரை மாற்றுங்கள், அதற்குப் பிறகு உங்கள் படைப்புகளை வெளியிடுகிறேன்.' என்று சொல்லி விட்டாராம். மறுவாரமே, பெயரை 'அகில உலக மகா துரோகி' என்று மாற்றிக் கொண்டு படைப்பை அனுப்பினாராம் விகடகவி. அதே போல் அவரது எழுத்துப் பிழைகளும் பத்திரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் பிரபலம். வாவ்! என்று எழுத வேண்டிய இடங்களில் எல்லாம் 'வவ்! வவ்!!' என்று எழுதி அனுப்பி மலேசியத் தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்களை அலர வைப்பது அவரது வழக்கம். ஆனால், அவரது அன்பான பேச்சும் அணுகுமுறையும் வாசகர்கள் மத்தியில் பிரபலம். கடந்த சில வருடங்களாக 'தென்றல்' இதழ் அலுவலகத்தில் 'விருட்சமாலை' என்ற பெயரில் கவிதைப் பகிர்வு நடந்து வருகிறது. சை.பீர்முகம்மது போன்ற மூத்த எழுத்தாளர்களும் இதில் கலந்து கொண்டு வாசகர்களை கவிஞர்கள் என்ற நிலைக்கு உயர்த்துவதில் அக்கறை காட்டி வருகிறார்கள்.
தீவிர இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதில் பல ஆண்டுகளாக கெடா மாநிலமே முன் நிற்கிறது. மறைந்த எம்.ஏ.இளஞ்செல்வன், பேராசிரியர் ரெ.கார்த்திகேசு, புண்ணியவான், சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, மனஹரன் போன்றவர்கள் நவீன இலக்கியப் போக்குகளைத் தொடர்ந்து கவனித்து வருவதோடு, அவற்றுக்கு மேலும் ஒரு படி மலேசியத் தமிழ் இலக்கியம் மேம்பட வேண்டுமென்ற மனப்பூர்வமான ஈடுபாடு காட்டியுள்ளார்கள். அவர்களின் அடியொற்றி நம்பிக்கையளிக்கும் புதிய தலைமுறையும் உருவாகி உள்ளது. ஜாசின் தேவராஜன், கே.பாலமுருகன், மஹாத்மன், பா.அ.சிவம், மணிமொழி, ம.நவீன், யுவராஜன், தோழி உட்பட மிக நீண்டதோர் இளையதலைமுறை அது. டாக்டர் மா.சண்முகசிவா அவர்களின் பின்நிற்கும் ஊக்க சக்தியாக இருக்கிறார். அவரது 'கூத்தனின் வருகை சிறுகதையை இன்னும் 50 வருடங்களுக்காவது ஞாபகம் வைத்திருப்பேன். அவ்வளவு அற்புதமான கதை. இளைஞர்கள் சேர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் 'வல்லினம்' என்ற காலாண்டிதழ் இன்றைய மலேசிய இலக்கியச் சூழலில் முக்கிய பங்காற்றி வருகிறது. கே.பாலமுருகனின் முயற்சியில் வரத் துவங்கியுள்ள 'அநங்கம்' இதழ் அளிப்பதும் நம்பிக்கையே. ஆக மொத்தத்தில், சராசரி வாசகர்கள், தீவிர வாசகர்கள் என்ற இரட்டைக் குதிரையில்தான் மலேசியத்தமிழ் இலக்கியம் பயணம் செய்கிறது.இதில் எவருடைய பங்கும் எவருக்கும் குறைந்ததில்லை. இதை எல்லோரும் உணர்ந்திருப்பதால், மலேசிய வாசகர்கள் மத்தியில் இருப்பது நம்புக்கையும், நட்புறவும்!
3 comments:
//தீவிர இலக்கியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை.//
அதுதான் வேண்டும். நல்ல பதிவு. உலகம் உங்களுக்காகவும் காத்திருக்கிறது.
இரு பரிணாமாங்கள் கொண்ட மலேசிய வாசிப்பு தளத்தையும் அதன் வரலாற்று பின்னனியையும் நன்றாகவே ஆய்வு செய்துள்ளது கட்டுரை.
வாழ்த்துகள் பாளுமணிமாறன் அவர்களே.
தங்களின் இலக்கியப் பணி தொடரட்டும்
// அன்புமணி said...
//தீவிர இலக்கியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை.//
அதுதான் வேண்டும். நல்ல பதிவு. உலகம் உங்களுக்காகவும் காத்திருக்கிறது.//
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அன்புமணி...
// கே.பாலமுருகன் said...
இரு பரிணாமாங்கள் கொண்ட மலேசிய வாசிப்பு தளத்தையும் அதன் வரலாற்று பின்னனியையும் நன்றாகவே ஆய்வு செய்துள்ளது கட்டுரை.
வாழ்த்துகள் பாளுமணிமாறன் அவர்களே.
தங்களின் இலக்கியப் பணி தொடரட்டும்//
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரரே...அந்த இரு பரிணாமங்கள் பற்றிச் சொல்வதற்கு இன்னும் நிறைய இருப்பதகத் தோன்றுகிறது... உங்களைப் போன்றவர்கள் அதைப் பற்றி விரிவாக எழுத முடியும்...
Post a Comment