Saturday, January 17, 2009

அனைத்துலக அரங்கில் அமீர் (நாலு வார்த்தை-043)

சாங்கி விமான நிலையம். சுவராக நிற்கும் கண்ணாடிகளுக்குப் பின்னால் எஸ்கலேட்டர் தெரிகிறது. அதில் இறங்கி வந்த இயக்குனர் அமீரும், அவரது மூத்த சகோதரர் சுல்தானும் இமிகிரேஷன் கிளியரஸ்ஸிற்காக நிற்கிறார்கள். கண்ணாடிக்கும் இந்தப்புறம் நானும், அமீரின் மதுரை நண்பர்களும் பதட்டத்தோடு காத்திருக்கிறோம். அந்த பதட்டத்திற்குக் காரணம் அவர்களுக்கு இருக்கும் தாடி. செப்டம்பர் 11க்குப் பிறகு மாறி விட்ட உலகின் நியாயமான பதட்டம் அது. எந்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் இயல்பாக உண்டாகும் பதட்டம் . ஆனால், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இமிகிரேஷனை விட்டு வெளியே வந்தார்கள் அமீரும் அவரது சகோதரரும். முதல் பார்வையில் மனதில் பதிந்த விஷயம், அமீரின் நடையில் இருந்த springness. அந்த நடை முன்னாள் சர்வதேச வாலிபால் பிளேயரான தமிழகத்தின் சிவராமனை ஞாபகப்படுத்தியது. அடுத்தது - கண்களும் சேர்ந்து சிரிக்கும் நட்பார்ந்த புன்னகை. It makes you feel at home. அன்றுதான் அவரை முதல்முறை நேரில் பார்க்கிறேன். சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான 'வேறொரு மனவெளி' நூல் வெளியீடு + 'பருத்திவீரன்' படத்திற்கு கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரத்தை பாராட்டும் விதமாகவும் நிகழ்ச்சியொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்காகத்தான் அமீர் சிங்கப்பூருக்கு முதல்முறையாக வந்திருந்தார்.

முதல்நாள் முஸ்தபா ஷாப்பிங் சென்டருக்கு அருகில் உள்ள நியூ பார்க் ஹோட்டலில் தங்க வைத்தோம். அறை ஜன்னல் கதவுகளைத் திறந்து அந்தி நேர சிங்கப்பூரைப் பார்த்துக் கொண்டிருந்த அமீரின் கண்களில் பட்டென்று பட்டது இந்தியத் தொழிலாளர்கள்தான். எங்கள் பேச்சு அந்தத் தொழிலாளர்களைச் சுற்றி வந்தது ; அவரகளது கனவைச் சுற்றி வந்தது ; இந்தியாவைச் சுற்றி வந்தது; இறுதியில் இந்திய இளைஞர்களில் வந்து நின்றது. 'இந்திய இளைஞர்களின் மீதும், அவர்களால் உருவாகப் போகும் எதிர்கால இந்தியா மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது' என்று சொன்னேன். அமீரின் கண்களில் ஆழ்ந்த சிந்தனையோட்டம் வெளிப்பட்டது. அந்த ஸ்டேட்மென்டை அவர் மனதளவில் அலசி ஆராய்வது புரிந்தது. 'எனக்கு நம்பிக்கை இல்லை சார்' என்றார் அமீர். அதை நான் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ந்து விட்டேன். ஆனால், அந்த அவநம்பிக்கைக்கான காரணங்களை அவர் பட்டியலிட்டபோது, புரையோடிப்போன அரசியல் சூழல் பற்றிய கவலையே அதில் அதிகம் வெளிப்பட்டது. அதை, அசுத்தமாகி விட்ட, கூவம் போன்றதொரு அரசியல் கட்டமைப்பை மீறி இளைய தலைமுறை என்ன செய்ய முடியும் என்ற கவலையாகவே எடுத்துக் கொண்டேன். நான் நம்பிக்கை கொள்வதற்கான காரணங்களை எடுத்துச் சொன்னேன். கேட்டுக் கொண்டார். அது ஒரு நட்பார்ந்த, ஆரோக்கியமான கலந்துரையாடலாக இருந்தது. மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் அமீரின் பண்பு, அவர் மீதான மரியாதையைக் கூட்டியது. தற்போது, இந்திய இளைஞர்களைப் பற்றிய அவரது மதிப்பீட்டில் பெரும் மாற்றங்களை காலம் ஏற்படுத்தியுள்ளதையும் பார்க்கிறேன்.

சிங்கப்பூரில் இருந்த அவரது நண்பர்கள், புலம் பெயர்ந்த பெரும்பாலான உலகத் தமிழர்களின் மத்திய தர வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நட்பை-பொருளாதாரம் சார்ந்து விரிவாக்கிக் கொள்ளும் சினிமாச் சூழலில் இருந்தாலும், பால்ய கால நண்பர்களின் ஆத்மார்த்தமான நட்பின் இதமே அவருக்குப் பிடித்திருந்ததைக் கண்டேன். பணத்தை மட்டுமே பெரிதாகக் கொள்ளாத தன்மை, இயற்கையில் ஏற்படுகிற, ரத்தத்தில் இருக்கிற பண்பு. அது கால ஓட்டத்தில் கூடலாம், குறையலாம் ; ஆனால், அழியாது. சினிமா சார்ந்த சில விஷயங்களை எந்தப் போர்வைகளுமற்றுப் பகிர்ந்து கொண்டார் அமீர். சிங்கப்பூரில் இருந்த நாட்களில் அவர் அழகு சூழ் சுற்றுலாத்தளங்களுக்குச் செல்லாதது ஆச்சரியம். தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் லாரியில் ஏறி பயணம் செய்தது அமீருக்கு மிக மகிழ்ச்சியளித்த விஷயமாக இருந்தது இன்னும் ஆச்சரியமளித்தது. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களைப் பற்றி பேச்சு வந்தபோது, 'நான் கதைகளைப் படித்து விட்டேன். ஆனால், ஒருவரைப் பற்றி குறிப்பிட்டு விட்டு, இன்னொருவரைப் பற்றிச் சொல்லாவிட்டால், அவர்களது மனம் கஷ்டப்படும். என்ன செய்யலாம்?' என்று கேட்டார். 'நீங்கள் சொல்வதும் நியாயம்தான். வேண்டுமானால், பொதுவாக பெண் எழுத்தாளர்களைப் பற்றி பேசுங்கள்.' என்று பதில் சொன்னேன். அப்படித்தான் வெளியீட்டு விழாவில் பேசினார்.

'எழுதுங்கள்...பெண்கள் அதிக அளவில் எழுதுவதே பெருமைக்குரிய விஷயம். அதுவும் சிங்கப்பூரில் 20 பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார். 'நான் அதிகம் படிப்பதில்லை. ஆனால் மனிதர்களைப் படிக்கிறேன்' என்று குறிப்பிட்டார். உண்மைகள் நிறைந்த அந்தப் பேச்சை அப்படியே ஏற்றுக் கொண்டோம். ராம், பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம், 'அனைத்துலக அரங்கில் அமீர்' என்ற பெருமைக்குரிய விஷயத்தை குறிப்பிட்டு பாராட்டு வழங்கினோம். 'நான் பொதுவாக யாரோடும் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியதில்லை. ஆனால், இந்த 20 சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்' என்று அமீர் சொன்னது, அந்தப் பெண் எழுத்தாளர்களின் மனதில் இன்னும் பலநூறு கதைகளுக்கான கனவை, எழுதமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கக் கூடும். அமீர் சிங்கப்பூர் மண்ணில் விட்டுச் சென்றது நம்பிக்கையையும், நல்லுணர்வையும். விமான நிலையத்தில் அவரை வழியனுப்பியபோது, சர்வதேசத் தரம்மிக்க தமிழ்ப்படங்களைத் தந்தவர் என்பதையும் மீறி, நல்ல நண்பரைப் பிரிகிறோம் என்ற உணர்வே மேலோங்கி நின்றது. அமீர் இன்னும் பல சர்வதேசத் தரமிக்கப் படங்களைத் தருவார் என்ற நம்பிக்கையோடு, 'யோகி' எப்போது வரும் என்று உலகத் தமிழர்களைப் போல, நாங்களும் காத்திருக்கிறோம் சிங்கப்பூரில்!

6 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பகிர்வுக்கு நன்றி!
எழுத்தாளர்களை ஒரே இடத்தில் கூட்டி நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்.
தங்கள் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகள்!

சி தயாளன் said...

பதிவுக்கு நன்றி..உங்கள் பணி தொடரட்டும்...

Noorul Ameen said...

"அந்த பதட்டத்திற்குக் காரணம் அவர்களுக்கு இருக்கும் தாடி. செப்டம்பர் 11க்குப் பிறகு மாறி விட்ட உலகின் நியாயமான பதட்டம் அது. எந்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் இயல்பாக உண்டாகும் பதட்டம்"

இது ஒரு stereotype comments போல் எனக்கு தோன்றுகிறது.

எப்படி சீக்கியர்கள் தாடியும் டர்பனும் வைத்திருப்பதுப்போல், முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது அவர்கள் தங்கள் மத வழிப்பாட்டிலிருந்து வரும் ஒரு இயல்பு. சிலர் வைத்திருப்பர், சிலர் தாடியில்லாமல் இருப்பர்.சிலர் தாடி வைக்கமுடியாமல் தவிப்பர். தாடி வளர்ப்பது அவரவர் விருப்பம்.

அதனால் எப்படி ஒவ்வொரு தாடி வைத்த முஸ்லிமை பொது இடங்களில் பார்த்தால் அவ்ர்கள் மக்கள் பதுகாப்பிற்கு இடையுறாக இருக்கக்கூடும் என் எண்ணுவது எந்த வகையில் நியாயம்?

தீங்கு எப்படி வேண்டுமானலும் வரலாம், யாரு மூலமும் வரலாம்! அது காலம் சொன்ன உண்மை.

எடுத்துக்காட்ட வேணுமா?!
தற்ப்போது இதயமில்லா இஸ்ரேல் அரசாங்கம் ஹமாஸை அடியோடு ஓழிக்க வேண்டும் என்று அப்பாவி பாலிஸ்தன் மக்களுக்கு தீங்கு செய்கிறார்கள். அதுப்போல் தழிழ் ஈழ்த்திலும் இதுப்போன்ற நிகழ்வுகளே பரிதவமாய் நிகழ்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் மதம் சார்ந்த மக்களோ தனி நபரோ இல்லை சில 'மொள்ளமாறி' அரசாங்கம் செய்யும் அதன் அரச தந்திரங்கள் என வரலாறு புத்தகங்களைப் படித்துப்பார்த்தால் நமக்கே புரியும்.

(அண்ணா, இப்ப நான் நிறையே எழுதுறனா?!..=)..)

-அமீருக்கு 'பதிலாக' அமீன்

பாலு மணிமாறன் said...

ஜோதிபாரதி said...
இன்னும் நிறைய செய்ய ஆசை. பிப்ரவரி 22 அன்று தேசிய நூலகத்தில் மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமதின் புத்தக வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். நிச்சயம் அது ஒரு தமிழ் விருந்தாக இருக்கும். சிங்கப்பூரில் உள்ள வலைப் பதிவர்களை எல்லாம் அன்று ஒரு சேர சந்திக்க ஆசை.


நன்றி 'டொன்' லீ

Noorul Ameen said...
தம்பி உன் ஆதங்கம் புரிகிறது. நாம் விரும்பாமலே நிகழ்ந்து விட்ட சில சம்பவங்களில் பின் விளைவுகளில் நாம் எல்லோரும் சிக்கித் தவிக்கிறோம் என்பதே உண்மை. சிங்கப்பூரில் அப்படிப்பட்ட சிக்கல்கள் இல்லை என்பதை அவர்கள் சீக்கிரமே இமிகிரேஷனில் இருந்து வெளியே வந்து விட்டார்கள் என்ற வரிகளில் குறிப்பால் சொல்லியிருக்கிறேன். இமிகிரேஷனில் இருந்து நமது உறவினர்களோ, நண்பர்களோ வெளியே வருவதற்குள் நம் மனம் படும்பாடு பெரிய தமாஷ்தான். என் மனம் பட்ட பாட்டில் ( அப்படியாகி விடுமோ, இப்படியாகி விடுமோ என்று... ) அதுவும் ஒன்று. அவ்வளவுதான்.

அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் நம் சினிமாக் கலைஞர்கள் இமிகிரேஷனில் சிக்கிப் படும்பாடுகளை நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அப்படிப்பட்ட அனுபவங்கள் நமது நாட்டில் எந்த வெளிநாட்டினருக்கும் நிகழ்வதில்லை. நிஜத்தில், நல்ல பல விஷயங்களுக்கு நாம் பல நாடுகளுக்கும் உதாரணமாக இருக்கிறோம் என்பதே உண்மை!

Noorul Ameen said...

ஆஹா...

"அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் நம் சினிமாக் கலைஞர்கள் இமிகிரேஷனில் சிக்கிப் படும்பாடுகளை நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அப்படிப்பட்ட அனுபவங்கள் நமது நாட்டில் எந்த வெளிநாட்டினருக்கும் நிகழ்வதில்லை. நிஜத்தில், நல்ல பல விஷயங்களுக்கு நாம் பல நாடுகளுக்கும் உதாரணமாக இருக்கிறோம் என்பதே உண்மை!"

இந்த கருத்துடன் அதுப்போன்ற stereotypes பற்றி சிங்கப்பூர் மனப்போக்கு எப்படி உலகிற்கு உதாரணமாக இருக்குகிறது என்று சேர்த்து லாவாகமாக எழுதியிருந்தால் உங்கள் பதிவு மேலும் சுவைப்படயிருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

(இன்று நவரசம் promoவை பார்த்தேன். கொஞ்சம் கடுப்பு வந்தது...அதில் நம் 'குடும்பத்தின்' ஒரு முகம் கூடயில்லை. பெரும் அவமதிப்பாக நான் கருதுகிறேன்.)

பாண்டித்துரை said...

///(இன்று நவரசம் promoவை பார்த்தேன். கொஞ்சம் கடுப்பு வந்தது...அதில் நம் 'குடும்பத்தின்' ஒரு முகம் கூடயில்லை. பெரும் அவமதிப்பாக நான் கருதுகிறேன்.)///


என் முகம் தெரியுதுனு சொன்னாங்களே (நான் பார்க்கலை) அப்ப அது !