Wednesday, March 28, 2007

குடிகாரர்களுக்கு மட்டும்




அதிகாலை மது மாதிரி
விருப்பும்போது குடிக்கலாம்
விரும்பாவிட்டால் தவிர்க்கலாம்

அதிகாலை மது மாதிரி
நாம் கூச்சல் போடாதவரை
அது அமைதியாகத்தான் இருக்கிறது


அதிகாலை மது மாதிரி
எப்போதும் தன் வாசனையை
மூடிகளுக்குப்பின் ஒளித்தே
வைத்திருக்கிறது

அதிகாலை மது மாதிரி
காலம் குடிக்கக் குடிக்க
தான் காலியாகிறது

அதிகாலை மது மாதிரி
அதை அருத்துபவர்கள் மட்டுமே
பறவைகள் ஆடுவதை
பார்க்க முடியும்


போதையுற்றதால் சொல்கிறேன்

அதிகாலை மது மாதிரி
விரும்பினால் குடிக்கலாம்
விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்

Sunday, March 25, 2007

இந்தியா தோற்றதற்கான பத்து காரணங்கள்

1. சரியான தயாரிப்பில்லை

மற்ற நாடுகளின் கிரிக்கெட் அணிகள் உலகக்கோப்பைக்குத் தங்களை முழுமையாக தயார் செய்து களமிறங்கிய நிலையில், இந்திய அணி கடைசி நிமிடம் வரை பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. "எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் திறனை வளர்க்கிறோம்" என்று காரணம் சொன்னார் சேப்பல். அப்படி வளர்த்தத் திறன், பங்களாதேஷை தோற்கடிக்கக்கூட பயன்படவில்லை என்பது பெரிய சோகம்.

2. எதிரணியை குறைத்து மதிப்பிட்ட குற்றம்

இந்த உலகக்கோப்பையில் பங்களாதேஷ் ஒரு அபாயகரமான அணியாக இருக்கும் என்பதை பலரும் உணர்ந்திருந்தார்கள். ஆனால்,"பங்களாதேஷ்தானே..ஜெயித்து விடலாம்" என்ற ஏளன மனப்போக்கு அனுபவமிக்க இந்தியா பேட்ஸ்மேன்களிடம் இருந்தது. அதற்கு அவர்கள் கொடுத்த மிகப்பெரிய விலை - தோல்வி!

3. அள்ளி வழங்கிய உபரி ரன்கள்

நூறு போட்டியில் விளையாடிய அனுபவம், இருநூறு போட்டியில் விளையாடிய அனுபவம் என்று பெருமைப்பட்டு என்ன பயன்? இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டியில் 16 உபரி ரன்களை வாரி வழங்கினார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள். அதை கட்டுப்படுத்தியிருந்தால், 220 ரன்களில் இலங்கை அணியை சுருட்டி இருக்க முடியும்.

4. டெண்டுல்கர் என்ற கேள்விக்குறி

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டெண்டுல்கரா? அல்லது லாராவா ? என்ற கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால் தயங்காமல் சொல்லுங்கள் - லாரா என்று. தனது அணி ஜெயிக்க வேண்டிய அல்லது தோல்வியை தவிர்க்க வேண்டிய சூழலில் சிறப்பாக விளையாடுபவர்தான் சிறந்த பேட்ஸ்மேன். டிராவிட், இன்சமாம், வாவ், லாரா போன்றவர்கள் இந்த இனத்தில் சேர்த்தி. யோசித்துப் பாருங்கள் - டெண்டுல்கர் ஜெயித்துத் தந்த முக்கிய போட்டிகள் எத்தனை?

5. உத்தப்பா என்ற பலவீனம்

உலகக் கிரிக்கெட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புத் திறமைகள் இல்லாதவர்கள் கூட பெயர் போட்டுவிட முடியும். ஆனால் பலவீனமுள்ளவர்களால் அது முடியாது.அவர்களது பலவீனத்தை எதிரணிகள் இரக்கமே இல்லாமல் தொடர்ந்து தாக்கி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுவதே அதற்குக் காரணம். உத்தப்பாவின் பலவீனம் விக்கெட்டுக்கு சற்று வெளியே விழுந்து எகிறும் பந்து.

6. செத்த பாம்பை அடிப்பது வீரமா?

கடந்த சில மாதங்களாகவே இந்திய அணிக்குப் பெரிய தலைவலியாக இருந்தவர் வீரேந்திர சேவாக். இந்த உலகக்கோப்பையிலும் அந்தத் தலைவலி தீர்ந்த பாடில்லை. அதுதான் பெர்மூடா அணிக்கு எதிராக சதம் அடித்தாரே என்றால், அதே சதத்தை இலங்கை அல்லது பங்களாதேஷிற்கு எதிராக அடித்திருக்க வேண்டியதுதானே? செத்த பாம்பை அடிப்பதா வீரம்?

7. தோல்வியைப் பற்றிய வெட்கமில்லை

இலங்கைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டி. இந்தியா டாஸ் ஜெயிக்க வேண்டுமென்று படபடக்கிறார் சிவராமக்கிருஷ்ணன். அதிசயிக்கிற மாதிரி ஒரு கேட்ச் அல்லது அதிசயிக்கிற மாதிரி ஒரு ரன் அவுட் என நூறுசதத்திற்கும் மேற்பட்ட திறனோடு இந்தியா விளையாட வேண்டுமென்று சொல்கிறார் ஆஸ்திரேலியரான டீன் ஜோன்ஸ். ஆனால் இந்திய அணியோ, பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று என்ற தொனியில் விளையாடியது. மிகப்பல வீரர்களிடம், வேகமில்லை, ஜெயிக்க வேண்டுமென்ற வெறியில்லை, தோற்றால் அவமானமே என்ற கவலையுமில்லை. தோற்றதில் கவலையில்லை, தோற்றவிதம்தான் அவமானமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் வெங்கட்ராகவன்.

8. துணி அழுக்காகி விடுமா?

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இளைஞர்களின் விளையாட்டு. இதில் பந்தடிப்பது, பந்து வீசுவது போன்றே, பந்தைத் தடுப்பதும் முக்கியம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைந்த இந்திய அணியின் ·பீல்டிங் திறன் மிகப்பரிதாபமாக இருந்தது. ரன்களை தடுப்பதைக் காட்டிலும், கீழே விழுந்தால் ஆடையில் அழுக்குப் படும் அல்லது கை,கால் பிசகிவிடும் என்ற கவலையிலேயே பலரும் நடமாடியதை பார்க்க முடிந்தது. இந்திய அணியின் எதிர்காலம் என்று கருதப்படும் முனாப், சேவாக் போன்றவர்கள் கூட ·பீல்டிங் திறனற்றவர்களாக இருப்பது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம்.

9. கை கொடுக்காத அனுபவம்

கங்குலி, டெண்டுல்கர், சேவாக், அகர்கார் போன்றவர்களது அனுபவம் இந்திய அணியை அடுத்த சுற்றுக்கு எடுத்துச் செல்ல தவறிவிட்ட நிலையில், அதைப் பற்றி பெருமை பேசி பயனில்லை. அகர்கார் போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் போதும். அவரைப் போன்றவர்கள் புதியவர்களுக்கு வழிவிடும் நேரம் வந்து விட்டது. கங்குலி இன்னும் ஒரு வருடம் விளையாடலாம். ஆனால், மரியாதைக்குரிய இன்றைய நிலையில் ஓய்வு பெறுவதே அவருக்கு நல்லது. சேவாக்கை குறைந்த பட்சம் ஒரு வருடமாவது உள்ளூர் போட்டிகளில் விளையாட வைத்து, அப்புறம் இந்திய அணிக்குள் கொண்டு வரலாம். ஒரு தேசத்தை விட எந்த வீரரும் உயர்ந்தவரில்லை. டெண்டுல்கரும் அவரது விளையாட்டைப் பற்றி மறு பரிச்சீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதென்றே தோன்றுகிறது. ஆனால் அவரைப் பற்றிய முடிவுகளை அவரிடமே விட்டு விடுவதே டெண்டுல்கருக்குத் தருகிற மரியாதை.

10. திராவிட் மற்றும் சேப்பல்

1995க்குப் பிறகு இந்தியா வெளிநாடுகளில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவிடவில்லை என்கிறார் சேப்பல். ஆனால் 1983க்குப் பிறகு இந்தியா இவ்வளவு அவமானகரமான தோல்வியை சந்தித்ததில்லை என்பதை அவர் உணர வேண்டும். சிறந்த ஆட்டக்காரர்கள் நிறைந்த இந்திய அணியை சூப்பர் எட்டு சுற்றுக்குக்கூட கொண்டு செல்ல முடியாத யாருமே சிறந்த பயிற்றுவிப்பாளராக இருக்க முடியாது - அது கிரேக் சேப்பலாக இருந்தாலும் கூட! திராவிட் புத்திசாலி கேப்டன். இந்த உலகக் கோப்பையில் அவர் சில தவறுகளை செய்திருக்கிறார் ( உதாரணம் : சேவாக் ). ஆனால் அவர் இன்னும் ஓரிரு வருடங்கள் தொடரலாம். எதுவரை என்றால், மகேந்திரசிங் தோனி முழுமையாகத் தயாராகும் வரை!

உனக்கென பறந்தவை


"எத்தனை அழகு
இந்த சுவரோவியம்..."
என்பதோடு நிறுத்தி இருக்கலாம்

சிரித்து விழி நோக்கினாய்

அருவமாகி விழிநுழைந்து
இருள்வெளி கடந்து
புழுதியின் சிதிலங்களுக்குப் பின்னிருந்து
உனதான ஓவியத்தை எடுத்து வந்தேன்

அதில்
ஒரு பழைய வீட்டைச்சுற்றி
பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன

Wednesday, May 03, 2006

கனிமொழி ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? 10 காரணங்கள்

1. இன்றைய தமிழக, இந்திய அரசியலுக்கு புரையோடிப்போன பழைய சிந்தனைகளில் இருந்து விடுபட்ட புதிய சிந்தனையாளர்கள் தேவை. கனிமொழி - புதுச்சிந்தனையாளர்

2. அரசியலுக்கு வரச் சரியான, இளமையின் உச்ச வயது அவருக்கு. இளமையின் வேகமும், இதுவரை பெற்ற அனுபவங்கள் தந்த விவேகமும் சரி விகிதம் கலந்த வயதில் இருக்கிறார். இதுவே சரியான சமயம்.

3. இந்தியப் பொருளாதாரம் புதுப் பாய்ச்சலில் போகத் துவங்கியிருக்கும் இன்றைய சூழலில், திறன்மிக்க நிர்வாகிகளைக் கொண்ட மாநிலங்களையே உலக நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன. கனிமொழிக்கு சிறந்த நிர்வாகியாகின்ற தகுதிகள் இருக்கிறது.

4. கனிமொழியை தங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக, புதுச்சிந்தனை சார் இளம் பெண்கள் பார்க்கிறார்கள். பெரியவர்களும் மதிக்கிறார்கள்.

5. கல்வியும், கவிதாச் சிந்தனையும், அடக்கமான பொருள் பொதிந்த பேச்சும், செயலும் வழக்கமான ஆரவார அரசியல்வாதிகளில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

6. அரசியல்வாதிகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந்திருப்பது, அவரது பலம். சிலர் அதை பலவீனமாகக் கருதலாம். ஆனால், அரசியல் செல்வாக்கை தனது சுயஆதாயத்திற்காக பயன்படுத்தினதாகச் சொல்லும் எந்த சுட்டுவிரலும் அவரை நோக்கி இல்லை.

7. அடக்கமானவர்தான், அமைதியானவர்தான். ஆனால் பலமற்றவரல்ல என்பதை கலைஞர் கருணாநிதி கைது சம்பவத்தின்போது உலகம் உணர்ந்து கொண்டது. தனது கருத்துகளுக்காக போராடும் போர்க்குணம் கனிமொழிக்கு இருக்கிறது.

8. வானில் பறப்பதற்க்கான வாய்பிருந்தும், தரையில் காலூன்றி நிற்கும் கனிமொழியின் இயல்பு, ஊழலற்ற நிர்வாகத்திற்குத் தேவையான அடிப்படை குணம். அது அவரால் ஊழலற்ற நிர்வாகத்திற்கு அடித்தளமிட முடியும் என்று உறுதியளிக்கிறது.

9. சில ஆண்டு சிங்கப்பூர் நிரந்தரவாசம், அவருக்கு உலகின் புதிய கதவுகளை திறந்து காட்டியிருக்கிறது. ஒரு தலைவன் திறமையானவனாக, திடமானவனாக இருத்துவிட்டால் எதுவெல்லாம் சாத்தியம் என்பதை கண்கூடாக பார்த்திருப்பதால், அது அவரது அரசியலில் எதிரொலிக்கும்.

10. ஒரு புகழ் பெற்ற தலைவரின் மகளாக இருந்தும், கனிமொழிக்கென்று ஒரு சுயம் இருக்கிறது. சுயம் உள்ளவர்களே வெற்றிகரமான தலைவராக விளங்கினாரகள், விளங்குகிறார்கள் என்பது சரித்திரம். வாய்ப்பிருந்தால், கனிமொழியும் ஒரு சரித்திரமாகலாம்!

Tuesday, May 02, 2006

எண்ண அலைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சம்பவம் - 1

அந்தப் பெண்ணின் பெயர் ஷீலா தங்கம். ரொம்ப யுனிக்கான பெயர். இந்தப் பெயருள்ள பெண்ணை அதற்கு முன்னும், அவரை அறிந்ததற்குப் பின்னும் நான் பார்த்ததேயில்லை. பெயருக்கேற்ற மாதிரியே ஷீலா, தங்கம் போல் தகதகவென ஜொலித்தார். ஒரு இளம்பெண் அப்படி ஜொலித்தால், என்ன நடக்கும்? அதிலும் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் மாணவர்கள் கல்வியிலும், காதலிலும் சிறந்தவர்கள்.

பல பேர் காதல் அம்பு விட்டாலும், செழியன் எய்த அம்பு மட்டுமே ஷீலா தங்கத்தை சரியாக தைத்தது. அவர்கள் காதலித்தார்கள். என்னைப் போன்றவர்கள் ராமாயணம், மகாபாரதம் ரேஞ்சில் அவர்களது காதல் கதையை பேசித் திரிந்தோம். யாருக்கு என்ன முடிகிறதோ அதைத்தானே செய்ய முடியும்?

நான் ஷீலா தங்கத்தின் முகத்தை தூரத்தில் பார்த்ததோடு சரி, பக்கத்தில் வந்தால் தலையைக் கவிழ்ந்து கொள்வேன். அப்படி ஒரு கூச்சக்காரப் பையன் அந்த காலகட்டதில். ஒவ்வொரு கால கட்டத்திலும் என் கூச்சத்தின் தன்மை மாறி வந்திருக்கிறது... அதை விடுங்க, இங்கு நான் சொல்ல வந்த முக்கியப் பாயிண்ட் என்னன்னா, அந்த ஷீலா தங்கத்துக்கும் எனக்கும் ஒரு மேட்டரில் தொடர்பு இருந்தது. அப்படி ஒரு மேட்டர் இருந்ததுன்ற விஷயமே ஷீலா தங்கத்துக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாதுன்குறதுதான் இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.

அந்த மேட்டர் என்னன்னா - என் எண்ண அலைகள் ஏதோ ஒரு வகையில் ஷீலா தங்கத்தைப் பாதித்தது. நான் அதைத் தற்செயலாகத்தான் உணர்ந்தேன்.

ஒரு நாள் காலை ஏனோ அந்தப் பெண் இந்த நிற உடையில்தான் வருவார் என்று தோன்றியது. அட ஆச்சரியம் - அந்த நிற உடையில்தான் வந்தார். கொஞ்சம் அதிசயமாக இருந்தது. ஆனால் அந்த தற்செயலை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சீக்கிரமே மறந்து விட்டேன். ஒரு மாதம் போயிருக்கும். திடீரென்று ஒரு நாள், மறுபடியும் ஷீலா தங்கம் - சேலை நிற நினைவு - அட, அதே நிறம்! இப்போது நான் நிறைய யோசித்தேன். தற்செயல் ஒருமுறை நிகழலாம், மறுமுறை மறுமுறை நிகழுமா? நிகழ்ந்தது.

திடீரென்று ஏதாவது ஒர் இடத்தில், பஸ்ஸில், மணீஸ் கார்னரில், ஒரு முறை மருத்துவமனையில் கூட, அந்தப் பெண்ணை பார்க்கப் போகிறேன் என்று தோன்றும்... பார்த்து விடுவேன். துவக்கத்தில் இது எப்படி, ஏன் நிகழ்கிறது என்று குழப்பமாக இருந்தது. அப்புறம் அந்தக் குழப்பம் பழகி விட்டது.

ஏதோ ஒரு அலைவரிசையில் எப்படியோ ஒத்துப் போன எண்ண அலைகளின் விளையாட்டுதான் அது என்று அன்று நம்பினேன்... இன்றும் நம்புகிறேன்... நம்புவேன் இனிமேலும்!

(செழியன் - ஷீலாத்தங்கம் கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கான பின் குறிப்பு இது. செழியனுக்கும், ஷீலாத்தங்கத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது. செழியன் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். ஷீலாத்தங்கமும் இன்னொரு ஆணை மணந்து கொண்டார். எனவே, முடிவு -சுபம்!)


சம்பவம் - 2

இது ஷீலா தங்கம் சங்கதிக்கு வெகுமுன்னால், நான் ராயப்பன்பட்டி அலோசியஸ் ஹாஸ்டலில் படித்த காலத்தில் நிகழ்ந்தது.

அங்கு ஒரு பழக்கம். ராத்திரி ஸ்டடி நேரம் முடிந்ததும் தூங்கப்போவதற்கு முன்னால், ஜெபம் சொல்ல வேண்டும். எல்லோரும் எழுந்து நின்றதும், எங்கள் முதுகிற்குப் பின்னால் நிற்கும் வார்டன் யார் யார் ஜெபம் சொல்ல வேண்டுமென்று வரிசையாக பெயர் சொல்லுவார். அவர்கள் சொல்ல வேண்டும். அப்படி ஜெபம் சொல்ல வேண்டியவர்களின் எண்ணிக்கை 5 என்று நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

அப்போது வார்டனாயிருந்தவர் பிரதர் ராயப்பன்.

அந்த குறிப்பிட்ட நாளில், பிரதர் ராயப்பன் முதலில் சைமனைதான் ஜெபம் சொல்லச் சொல்வார் என்று தோன்றியது . பிரதர் அழைக்கிறார் ...

"சைமன் ஜெபத்தைத் தொடங்கு"

ஹை...இதென்ன நான் நினைத்த மாதிரி அழைக்கிறாரே.. சைமன் ஜெபம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முருகேசன் பெயர் மனதில் ஓடுகிறது.

"அடுத்து முருகேசன்"

என்னால் நம்ப முடியவில்லை.ஆனால் நம்ப வேண்டியிருக்கிறது. ஆக, அடுத்தது ராஜேந்திரன்தான் என்று மனதில் தோன்ற , பிரதர் ராயப்பனும் "ராஜேந்திரன்" என்கிறார்.

அது எப்படி நிகழ்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அடுத்து நான் நினைக்கும் பெயரைத்தான் பிரதர் ராயப்பன் அழைப்பார் என்பது தெளிவாக, விவேகானந்தனை நினைக்கிறேன்.

அவனையே ஜெபம் சொல்ல அழைக்கிறார்.

விவேகானந்தன் ஜெபம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இது தற்செயலாக நடக்கும் நிகழ்வுதான் என்று என்னை நம்ப வைக்க காரணங்கள் தேடுகிறேன். சரி, என் பெயரை நினைத்துக் கொள்கிறேன். அதை பிரதர் அழைக்காவிட்டால், இப்போது நடந்தது தற்செயலென்றாகி விடுமில்லையா?

" கடைசி - மணிமாறன்" என்கிறார் பிரதர் ராயப்பன். எனக்கு பேசமுடியாதபடி தொண்டை அடைத்துக் கொள்கிறது. மறுபடியும் பிரதர் பெயர் சொல்லி அழைக்கிறார். ஒருவாறு தட்டுத் தடுமாறி சொல்லி முடிக்கிறேன் ....

இந்த சங்கதி எப்படி நிகழ்ந்தது என்று அன்று எனக்குப் புரியவில்லை. ஷீலா தங்கம் விஷயம் நிகழ்ந்தபோதுதான் இதன் அர்த்தம் விளங்கியது. ஆனாலும், 200 பேர் இருக்கிற ஒரு ஸ்டடி ஹாலில் 5 பேர் நாம் நினைக்கிற வரிசைப்படி அழைக்கப்படுகிற சாத்தியப்கூறின் permutation and combination களைப் பற்றி யோசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

எது எப்படியோ, இப்போதெல்லாம் எனக்கு இந்தப்பிரச்சனைகள் கிடையாது. வாழ்க்கையைப் ப்ற்றி யோசிக்கவே நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் எந்திர வாழக்கையில் இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் எங்கிருக்கிறது நேரம்?

இப்போது எனது ஏண்ண அலைகள் என்ன சாதிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்றேனே .... இன்னும் ஐந்து நிமிடத்தில் பஸ் வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் நின்றிருப்பேன்... கால் வலிக்கும்... பஸ் வரவே வராது. முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரம் கழித்து சாவகாசமாக வந்து வெறுப்பேற்றும். இத்தகைய "வலிய சக்தியுடையவையாக" மாறி விட்டன எண்ண அலைகள். ஒருவேளை பஸ் டிரைவர்களுக்கும் நமக்குமான எண்ண அலைகள் ஒத்துப் போவதில்லையோ என்னவோ...

அடுத்தமுறை பஸ்ஸிற்காக காத்திருக்கும்போது நீங்களும் உங்கள் எண்ணங்களின் சக்தியை சோதித்துப் பார்க்கலாம். பாருங்கள்... பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்று சொல்லுங்கள்!!

Monday, May 01, 2006

வந்து போகும் பறவைகள்

ஓடியே போய்விட்டது ஒருவாரம்.

மதி எனக்கும் நட்சத்திர வாரம் கொடுத்தபோது நாட்களில்லை, தயார் செய்து கொள்ளுங்கள் என்றார். தயாராயில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்ல முடிந்தாலும், சோம்பல் முன்நிற்கிறது....

போய் வருகிறேன் என்று சொல்லலாம். எங்கு போவது, எங்கு வருவது? இங்குதானே போவதும் வருவதும். உலகமெல்லாம் பரவிக்கிடக்கிற தமிழ் நெஞ்சங்களோடு கருத்துப் பகிரக் கிடைத்த வாய்ப்பாக நட்சத்திரவாரம் அமைகிறது.

அதற்கு காசி, மதி மற்றும் அவர்தம் குழுவினருக்கு அன்பு நன்றி!

பின்னூட்டமிட்டு உற்சாகமளித்த அன்பு நெஞ்சங்களுக்கு அடுத்த நன்றி!!

வாசித்த, என் வலைப்பூவில் வசித்த நேச உள்ளங்களுக்கும் நன்றி!!!

நேற்றுமுதல் சில சிக்கல்கள்.அதனால் புதுப்பதிவுகள் போட முடியவில்லை. எனினும், நிறைந்த மனதோடு விடை பெறுவது...

பாலு மணிமாறன்



Saturday, April 29, 2006

நாலு நாலாய் .. 16

பாதித்த நாலு விஷயங்கள் :

1. 1983 ல் படித்த எம்.எஸ்.உதயமூர்த்தியின் "எண்ணங்கள்"
2. கிரிக்கெட் - அதனால் கெட்டு குட்டிச்சுவரானவர்களில் - நானும் ஒரு சுவர்.
3. எனது கம்பேனியிலிருந்த 149 பேரும் சிங்கப்பூர் கனவில் சுற்றி கொண்டிருக்க, அதைப்பற்றி துளியும் நினைக்காமல் இருந்த 150வது என்னை கூப்பிட்டு சிங்கப்பூர் அனுப்பிய - spic - jel நிறுவன ரவீந்திரன்.
4 . 2000 வருடத்திய சிங்கப்பூர் காலையில் என்னை எழுப்பிய எனது தந்தையின் மரணச்செய்தி.


சமீபத்தில் படித்த நாலு புத்தகங்கள் :

1. கவிஞர் அறிவுமதியின் "நட்புக்காலம்"
2. Infosys நாராயணமூர்த்தி ரூ.10000 ரூ.100000000000 ஆன கதை என்.சொக்கன்
3. கவிஞர் நா.முத்துக்குமாரின் "பாலகாண்டம்"
4. மலேசிய எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வனின் "தெருப்புழுதி"


நாழிதழில் படிக்கும் முதல் நாலு விஷயங்கள் :

1. எந்த பத்திரிக்கையானாலும் முதல் மரியாதை க்குத்தான்.
2. அடுத்து பிசினஸ் சமாச்சாரங்கள் ... இப்போதெல்லாம் பிஸினஸ் மேட்டரே சிறுகதை ரேஞ்சில் எழுதுகிறார்கள்.
3. அடுத்து சினிமா, சினிமா! சிம்ரன் அம்மாவான செய்தியை மட்டும் கொஞ்சம் சோகத்தோடு படித்தேன். ஆயிரம் பெண்கள் அம்மாவாகலாம்...ஆனால் " ஆள் தோட்ட பூபதி " ஒரு சிம்ரனால் மட்டும்தானே முடியும்?
4. கடைசியா போனாப்போகுது என்று நம்மூர் அரசியலைப் படிப்பேன். ஏறக்குறைய வாந்தி வந்து விடும் . ஆனால் அவ்வப்போது ஒரே டமாஷாகவும் இருக்கும்.


சிங்கப்பூரில் எனக்குப் பிடித்த நாலு விஷயங்கள் :

1. அழவே அழாத சீனக் குழந்தைகள் ( எங்காவது அழுகை சத்தம் கேட்டால் அநேகமாக அது இந்தியக் குழந்தையாகத்தான் இருக்கும் )
2. நான் Access cardஐ உள்ளே திணித்து கைரேகையை காட்டியதும் கதவு திறந்து "போய் வா மகனே" என்று வழியனுப்பும் immigiration.
3. இணையத்தின் வழி சமர்பிக்க முடிகிற வருமானவரி கணக்கு, விவகாரங்கள் ,etc
4. சிங்கப்பூர் பணத்தில், அரசாங்க தகவல் பறிமாற்றங்களில் அதிகாரப்பூர்வ இடம் பெற்றிருக்கிற "நமது" தமிழ்!!!

சிங்கப்பூர், மலேசிய இலக்கியச்சூழல் இப்படித்தான்!

சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் புத்தகங்களின் வெளியீடு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை என்ற சூழல் மாறி வருகிறது. சமீபத்தில் கூட ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் ஒன்றாக வெளியீடு கண்டன. அதற்கும் முன் கவிஞர் க.து.மு.இக்பால், எழுத்தாளர் அன்பழகன் உட்பட மூவர் இணைந்து ஒன்றாக நூல் வெளியீடு செய்தார்கள்.

சிங்கப்பூர் நகைச்சுவை எழுத்தாளர் இமாஜானின் 30 நூல்களை மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு செய்தது.

எனது கவிதைத் தொகுப்பு "அலையில் பார்த்த முகம்" கடந்த ஜனவரியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் வெளியீடு கண்டது. அந்தப் புகைப்படங்களை நட்சத்திர வாரத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் வேறு எப்போது பகிர்ந்து கொள்வது? அதை இங்கு உங்களோடு பகிர்கிறேன்.

கவிஞர் மனுஷ்யபுத்திரனின் "உயிர்மைப் பதிப்பகமும்" சிங்கப்பூரில் இருக்கும் எனது நிறுவனமான "பாலு மீடியா"வும் சேர்ந்து " தங்கமீன் பதிப்பகம்" என்ற இணை பதிப்பகம் துவங்கி சிங்கப்பூர், மலேசிய எழுத்துக்களை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தரம், கட்டுபடியாகும் விலை, திட்டமிட்டு புத்தகங்களை அதன் மூலம் மலேசிய சிங்கப்பூர் எழுத்துகளை பரவலாக சந்தைப் படுத்துதல் என்பது அடிப்படை நோக்கு. சிங்கப்பூர், மலேசியா என பரவலான எனது வாழ்க்கைப் பயணமும், நட்பும் இதற்குத் துணை சேர்க்கும்.

முதல்படி எடுத்து வைக்கிறோம். எல்லைக்கோட்டை எட்டி விடுவோம் என்ற நம்பிக்கையில்தான் எல்லா அடிகளுமே எடுத்து வைக்கப்படுகின்றன. எங்கள் நம்பிக்கையும் அப்படிப்பட்டதுதான்!



இடம் : சிங்கப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் கல்யாண மண்டபம். குறுந்தாடியுடன் இருப்பது எனது சகோதரர் கென்னடி. வெள்ளை சட்டையில் - எழுத்தாளர் மா. அன்பழகன்



பாடகர் : குணசேகரன் நடனமணி :பிரமிளா பாடல் : வெள்ளிச் சலங்கைகள் ...

நூல் பெறுபவர் : திரு.நா.ஆண்டியப்பன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
நூல் தருபவர் : இயக்குனர் இமயம்
வேடிக்கை பார்ப்பவர் : இந்த வலைப்பூவுக்குச் சொந்தக்காரர்

அந்த மாலைக்கு அவர் தகுதியானவர்தான்... "எங்கள் ஊருக்குத்தானே இதுவரை சினிமா வந்திருக்கிறது. அட... இதென்ன எங்கள் ஊர் சினிமாவில் வருகிறதே" என்று 16 வயதினிலே பார்த்து வியந்ததாகக் கூறிய கவியரசு வைரமுத்துவின் வரிகளை இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.. தமிழரின் வாழ்க்கையை செல்லுலாய்டில் பதிவு செய்தவருக்கு அது ஒரு சின்ன மரியாதை! அருகில், தமிழ்ப்புரவலர் : போப் ராஜூ

உலகம் முழுக்க அறிமுகமான அந்த கரகரத்த குரலில் எனது கவிதைக்கான விமர்சனத்தைக் கேட்டதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்!

Friday, April 28, 2006

2007 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வெல்லுமா?

இன்னும் நாள் இருக்கிறது...ஆனால் அது கண்மூடித்திறப்பதற்குள் ஓடிவிடும். எனவே இப்போதே ஜோசியம் சொல்லுகிறேன் ... எங்கம்மா மகமாயி ஜக்கம்மா என் கனவில் சொல்லி விட்டாள்... 2007 கிரிக்கெட் உலகக் கோப்பையை ஜெயிக்கப் போவது இந்தியாதான், இந்தியாதான், இந்தியாதான்!

அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய் என்றால், அதற்கான காரணங்கள் பின்வருமாறு ( இதையெல்லாம் ஜக்கம்மா கனவில் சொல்லவில்லை. நாமா கணிச்ச விஷயம்) :


A. வலுவான பேட்டிங்

பேட்டிங்கில் இந்திய அணிதான் தற்போது உலகின் சிறந்த அணி என்று தைரியமாகச் சொல்லலாம். Its a nice mixture of youth and experience . Experienceக்கு திராவிட், சச்சின், சேவாக், கயி·ப் Youthற்கு தோணி, யுவராஜ், சுரேஷ் ரய்னா மற்றும் உத்தப்பா. மற்ற உலக அணிகளைப் பார்த்தால் இந்த nice blend கிடையாது. அப்படியே இருந்தாலும் அதில் ஒன்றிரண்டு, 'பூட்ட கேஸாக' இருக்கிறது. இந்த இந்திய வரிசைக்கு சரியான போட்டி கொடுக்கக்கூடியது ஆஸ்திரேலியாதான். ஆனால் ஆஸ்திரேலியாவைக் பொறுத்தவரை when it plays well, it plays really well. But when it plays bad, it plays really bad. அப்படி அவர்கள் மோசமாக விளையாடும் 2 நாள் தொடர்ந்து அமைந்து விட்டால் போதும், ஆஸ்திரேலியக் கனவுகள் முடிந்துவிடும். If my prediction is not wrong, Australians may not reach even the final.

சச்சினுக்கு இது கடைசி உலகக்கோப்பை.So, he will like to sign off in style. அவருக்காகவாவது இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்று மற்றவர்களும் நினைக்கக் கூடுமென்பது ஒரு கூடுதல் அனுகூலம். எனக்கென்னவோ சமீபத்தில் சரியாக விளையாடாதற்குகெல்லாம் சேர்த்து சேவாக் வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பையில் வெளுத்துக் கட்டுவார் என்று தோன்றுகிறது. சச்சின்-சேவாக் ஓபனிங் இறங்கும்போது, ஒருவர் விட்டாலும் மற்றவர் அதிரடிப்பார் என்ற கிலி மற்ற அணிகளுக்கு இருந்து கொண்டே இருக்கும். அதில் சற்று சறுக்கினாலும் The Wall மேலும் ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வார்.

யுவ்ராஜ்சிங் முழுமையான கிரிக்கெட்டராகத் தன்னை உருமாற்றிக்கொண்டு வருடம் ஒன்றாகிறது. சேப்பல் இந்திய அணி கோச்சானது யுவராஜின் வாழ்க்கையில் நிகழ்ந்த வசந்தம். பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டியில் 10 பந்துகளில் அவர் 20 ரன்களுக்குமேல் குவித்த விதம் He is the man for the occation என்று உணர்த்தியது. 2007ம் ஆண்டு உலகக்கோப்பை அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சமாக இருப்பினும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ரய்னா சற்று சிரமப்படக்கூடும் - ஆனால், முக்கிய கட்டங்களில், முக்கியமான ரன்களை எடுக்கிற ஆசாமியாக அவர் இருப்பார். கயி·பைப் பற்றி கணித்துச் சொல்ல முடியாத காலகட்டமிது. எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் அவர் சீக்கிரமே Formக்கு வருவது அவருக்கும், இந்திய அணிக்கும் நல்லது. தோணிதான் தற்போதைய சூப்பர் ஸ்டார். ஆனால் கடைசி சில போட்டிகளில் அவர் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது. உலக அணிகள் அவருக்கான வியூகத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி அவர் ஜெயிப்பார்... The reason why is , he is a superstar with freshness, rawness & ruggedness.

இந்தியக் கிரிக்கெட்டில் கங்கூலியின் கடைசி அத்தியாயம் எழுத்தப்பட்டு விட்டது என்பதுதான் கசப்பான உண்மை. ஒரு போராளிக்கு இன்னும் கூடுதல் மரியாதையோடு விடைதரப்பட்டிருக்க வேண்டுமென்று மனசு சொல்கிறது. Irfan Pathan may surprise everyone with his MORE THAN EXCELLENT batting. Expect for this unexpected thing to happen.


B. தரமான பெளலிங்

இர்பான் பதான் முதல் 5 ஓவர்களில் விக்கெட் எடுப்பது எப்படி என்ற வித்தையை கற்று வைத்திருக்கிறார். ஆனால் வேகம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இந்த வேகம் வெஸ்ட் இண்டீஸில் எடுபடுமா என்பது வரும் தொடரில் தெரிந்து விடும். But he is a clever cricketer and in the words of coach chappel "most improved cricketer" in the Indian team. ஸ்ரீஷாந்த் - இந்தியா கண்டெடுத்திருக்கும் புதிய தங்கவாத்து என்கிறார் இன்சமாம். இது- விக்கெட் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கிறது. மட்டையை தொடாமல் சென்று விடும் outswingerஐ வீசியதும் " என்னா மாமு, இதைகூட அடிக்க முடியல...நீயெல்லாம்..." என்பது மாதிரி அவர் பேட்ஸ்மேனைப் பார்க்கும் பார்வை சமீபத்திய சுவாரஸ்யம். இவர் வெஸ்ட்இண்டீஸில் ஜொலிப்பார்.

முனா·ப் படேலிடம் வேகம், விவேகம் இரண்டும் இருக்கிறது. ஆனாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்குத் தேவையான ஏதோ ஒன்று அவரிடம் மிஸ்ஸிங். என்ன அது? ம்... யோசிக்கணும். அதற்கு ஆர்.பி.சிங் பரவாயில்லை. பந்து பவுண்டரிக்குப் போனாலும் சரி... சிக்ஸருக்குப் போனாலும் சரி, ஒரே மாதிரி பார்வை, ஒரே மாதிரி bodu language , ஒரே மாதிரியான பந்து வீச்சு. I feel that as a third seamer in the team, he is going to be a key player. அகர்கார் எல்லா வருடங்களையும் போல் 2007லிலும் இந்திய அணியில் இடம் பெற்று டிரிங்ஸ் கொண்டு வருவார் என்று நினைக்கிறேன்.

ஸ்பின் பெளலிங்கில் சபாஷ் சரியான போட்டி. ஹர்பஜனா, ரமேஷ் பவாரா? இரண்டு பேருமே போராளிகள். பேட்டிங், பெளலிங் மற்றும் ·பீல்டிங்கில் (அபுதாபியில், தொப்பை தேய ரமேஷ் பவார் டைவ் அடித்த காட்சி இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது) ஏறக்குறைய equal. ஆனால் ஹர்பஜன் ஒரு புள்ளி கூடுதல் பெற்று அணியில் இடம் பெறக்கூடும். சில போட்டிகளில் இருவருமே விளையாடக்கூடும். யுவராஜ், சேவாக், டெண்டுல்கர் தேவைக்கடும் நேரங்களில் கைகளைச்சுற்றுவார்கள்.


C. மேம்பட்ட ·பீல்டிங்

விக்கெட்டின் ஒருபுறம் யுவராஜ்சிங், கயி·ப் மறுபுறம் ரய்னா, வேணுகோபால்ராவ் என்பது தரமான ·பீல்டிங்தான். இவர்களில் யாருமே சட்டையில் அழுக்குப்படும் என்று நினைப்பதில்லை. விழுந்து விழுந்து பந்தைத் தடுக்கிறார்கள். திராவிட், சச்சின், ஹர்பஜன், பதான் போன்றவர்கள் safe fielders இனத்தில் சேர்த்தி. சேவாக் சமயங்களில் மாஹாராஜா தானம் கொடுப்பதுபோல் பந்தைத் தடுக்கிறார்...ஆனால் அவர் ஒரு பிச்சைக்காரன் தேங்காய் பொறுக்குவதுபோல் பந்தைத் தடுத்துப் பழகுவது தவிர்க்க முடியாத தேவை. மொத்தத்தில் பார்த்தால், இந்திய அணி no nonsense team when it comes to fieldeing!

ஆகவே, கூட்டிக் கழித்துப் பார்த்ததில், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கான எல்லா சத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன. ஜக்கம்மா வேறு கனவில் சொல்லி விட்டார். நாட்டுப்பற்று வேறு "அப்படித்தான் நடக்குமுன்னு சொல்லு" என்கிறது... எனவே என் இனிய இந்திய மக்களே 2007 உலகக் கோப்பையை வெல்லப்போவது இந்தியாதான், இந்தியாதான்! அதைப்பார்த்து ஜொள்ளப்போவது இந்திய மக்கள்தான், மக்கள்தான் என்று கூறி முடிப்பதற்கு முன் கடைசியாக ஒன்று... என்னவென்றால்...

நான் கூறியது நடந்து விட்டால்...

நடந்து விட்டால்...

தமிழ்மணம் மக்களெல்லாம் சேர்ந்து குறைந்தது 10 பவுனில் எனக்கொரு தங்கச்சங்கிலி செய்து போட்டு விடுங்கள். ஒருவேளை நான் கூறியபடி நடக்காவிட்டால்...

நடக்காவிட்டால்.....

நடக்காவிட்டால்....





5 பவுனில் தங்கச்சங்கிலி செய்து போட்டால் போதும்!

Thursday, April 27, 2006

ஒரு மலேசிய பஸ் வானில் பறந்தபோது...

கிள்ளான் உறங்கத் துவங்கியிருந்த ஒரு ராத்திரி.

மனோகரன் நண்பனைச் சந்தித்துவிட்டு காப்பார் போக பஸ்ஸிற்காக காத்திருந்தான். ஐந்தடி இரண்டங்குல உயரம், சிவந்த நிறம், கொஞ்சம் வழுக்கை கொஞ்சம் தொப்பை இரண்டும் கலந்த கலவைதான் மனோ. இந்த மனோவின் இப்போதையத் தேவை காப்பார் போக ஒரு பஸ்.

ஓரமாய் ஒரு ஒற்றை சாப்பாட்டுக்கடை இருந்த அந்த நிறுத்ததில் அவனைத் தவிர யாருமே பஸ்ஸிற்கு காத்திருக்கவில்லை.இப்போதெல்லாம் மக்கள் சீக்கிரமே தூங்கி விடுகிறார்கள் என்று மனோ நினைத்துக் கொண்டான். அவனை மேலும் எதையும் நினைக்க விடாமல் ஒரு பஸ் அவனை உரசியபடி வந்து நின்றது.

"கோலாசிலாங்கூர்?" என்றார் கண்டக்டர். " இல்லை... காப்பார்" என்று சொல்லி அவன் உள்ளே ஏற டிரைவர் பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு ஒற்றை சாப்பாட்டுக் கடையில் தே தாரெக் (ஆற்றப்பட்ட தேனீர்) சாப்பிட இறங்கிப் போனார். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை வந்து டங்கு டங்குன்னு ஆடுச்சாம் என்றிருந்தது மனோவிற்கு.

பஸ்ஸின் உள்ளே ஒளிவிட்டுக் கொண்டிருந்த ஒற்றை டியூப் லைட் இருட்டை விரட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. ஏ.சிக் குளிர் திறந்த கதவுகளின் வழி வெளியே ஓடிக் கொண்டிருந்தது. யோசிப்பதற்கு வசதியாக பஸ்ஸின் பின்புறம் ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டான் மனோ. அவனைத் தவிர அந்த பஸ்ஸில் டிரைவர் சீட்டிற்கு சற்று பின்தள்ளி ஒரு சீனப்பெண் மட்டும் முதுகு காட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான் மனோ. முடிவில் சிரித்துக் கொண்டான். பத்து நிமிடங்களில் டிரைவரும், கண்டக்டரும் ஏறிக் கொள்ள பஸ் இரண்டே பயணிகளோடு புறப்பட்டது.

ஐந்து நிமிடம் கண்டக்டர் பங்களாதேசிகள் பற்றி டிரைவரிடம் பேசிவிட்டு மனோவிடம் வந்தார். " எங்க போறீங்க?"

"தோக்முடா"

இரண்டு ரிங்கிட் வாங்கி, டிக்கெட் தந்துவிட்டு மறுபடியும் பங்களாதேசிகள் பற்றிப்பேசப் போய்விட்டார். மனோவை ஏதோ ஒரு குழப்பமான உணர்வு தாக்கியது. யாரோ முதுகை தொடாமல் துளைப்பது மாதியான உணர்வு. திடீரென ஏன் இந்த உணர்வு? சட்டென்று திரும்பிப்பார்ததான் மனோ.

அங்கே...

கடைசி வரிசையில் மையமாக "அவன்" !

மனோவின் மனதில் அதிர்ச்சி அலைகள் ஓடி ஓய்ந்தது. யாரிவன்? எப்படி இங்கு வந்தான்? மனோ பஸ்ஸில் ஏறியபோது பின் இருக்கைகளில் அவனைத்தவிர யாரும் இருக்கவில்லை. அவன் அமர்ந்த பிறகு பின்பக்க அல்லது முன்பக்கக் கதவுகள் வழி எந்தப் புதுப் பயணியும் ஏறவில்லை. பிறகு எப்படி இவன்?

"அவன்" கடைசி இருக்கையில் அமர்ந்து மனோவை பார்வையால் துளைத்தான். மனோ சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். எப்படி வந்த்திருப்பான்? மனோவிற்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. அவன் கதவு வழியாக உள்ளே வரவில்லை.

மனோ மனதை திடப்படுத்திக் கொண்டு மறுபடியு திரும்பிப்பார்க்க முற்பட்ட தருணத்தில் அவன் கைக்கு எட்டும் தூரத்தில் நின்றிருந்தான். அவன் உடலில் இருந்து ஏதோ ஒரு மணம் வீசியது - சந்தன வாசம் மாதிரி!

" நான் உங்கள் பக்கத்தில் உட்காரலாமா?" என்று அவன் கேட்டபோது அந்தக்குரலில் மிகுந்த பெண்மைத்தனமும், வசிய வாசமும் இருந்தது.
இவ்வளவு இடம் வெற்றாக இருக்க ஏன் என்னை ஒட்டி உட்கார வேண்டும்? ஆனால் மனோவின் உதடுகள் கட்டுபாடு தளர்ந்து 'உட்காரலாம்' என்றது.

'உங்கள் பெயர்'

'மனோ'

'மனோகரன்தானே?' மனோ திடுக்கிட்டான்.

'ஆ...ஆமாம்'

'எங்கே போகிறீர்கள்'

'தோக் முடா'

'தோக்முடா என்றால்...?'

'அது ஒரு இட்த்தில் பெயர்'

'நான் ஒன்று உங்களிடம் கேட்கலாமா'

'கேளுங்கள்'

'நீங்கள்...நீங்கள் எப்படிப் பிறந்தீர்கள்?'

மனோ சட்டென்று முகம் மாறினான்.ஆத்திரமாய் ஏதோ சொல்ல முற்பட..."அவன்" முகம் பார்த்ததும் கோபம் அடக்கி, 'என் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் செய்து கொண்டதால்'

'அம்மா அப்பா என்றால் என்ன.. கல்யானம் என்றால் என்ன?'

என்னய்யா கேள்வி இது.. மறை கழன்ற கேஸோ?

'அம்மா என்றால் என்னைப் பெற்றெடுத்தவர். அப்பா என்றால் என்னை வலர்து விட்டவர். கல்யாணம் என்றால் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்தச் செய்யப்படும் ஒப்பந்தம்'

'அப்படியென்றால் நீங்கள் மாத்திரைச் சேர்க்கையில் பிறக்கவில்லையா?'

'எ..ன்...ன..து?'

'மன்னிக்கவும். உளறி விட்டேன். வாழ்க்கை என்று சொன்னீர்களே அது எப்படி இருக்கும்?'

மீ கோரெங் போல இருக்கும் என்று சொல்ல வேண்டும்போல் ஆத்திரம் வர, மனோ அதை அடக்கிக் கொண்டான்.

'அதைச் சொல்ல முடியாது. அனுபவித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்'

'அப்படியா.. பரவாயில்லை. அந்த வாழ்க்கையில் என்னவெல்லாம் இருக்கும் என்று சொல்ல முடியுமா?'

'அதில் எல்லாம் இருக்கும். அன்பு, பாசம், உயர்வு, தாழ்வு, கோபம், சோகம், காதல், மோதல், பிரிவு...இப்படி எல்லாமே இருக்கும்'

'அன்பு என்றால் என்ன?' என்றான் அவன். மனோவிற்கு ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.'தெரியலடா நாயே' என்று பதில் சொன்னான்.

'நண்பரே...நீங்கள் என்னை மிருகத்தின் பெயர் சொல்லி அழைக்கிறீர்கள். சொல்லுங்கள்... அன்பு என்றார் என்ன?'

'என் தாய், நான் உறங்கியபின் கொசுக்கடிக்ககூடாது என்று போர்வை போர்த்தி விடுவாளே... அதற்குப் பெயர்தான் அன்பு'

'சரி, காதலென்றால் என்ன?'

'எனக்கு ஜோதிகா மேல் இருப்பது.. அவருக்கு சூரியா மேல் இருப்பது, என்மேல் இல்லாதது'

'புரியவில்லை...'

'காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படுவது'

'எதற்காக?'

'வேறு எதற்கு... தோல்வியடைந்தபின் கவிதை எழுதத்தான்'

'கவிதையா?'

'ஆமாம்...

காற்றிலே காயும் நிலவை
கண்டு கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை

விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி
அலை கரையைக் கடந்த பின்னும்
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

என்று சோகம் கொப்பளிக்கப் புலம்புவது!'

'நீங்கள் எழுதியதா?'

'நானெங்கே எழுத... 7G ரெயின்போ காலனி படத்துக்காக கவிஞர் நா.முத்துகுமார் எழுதியது'

'காதலிக்காமல் இதை எழுத முடியாதா?'

'முடியும்... ஆனால் அதில் உயிர் இருக்காது'

'அப்படியென்றால் நீங்கள் ஜோதிகாவைக் காதலித்து கல்யாணம் செய்து குழந்தை பெற்று அந்தக் குழந்தைக்கு கொசுக்கடிக்கும்போது ஜோதிகா அன்போடு போர்வை போர்த்திவிட்டு வாழ்வதுதான் வாழ்க்கை.சரியா?'

'அப்பாடா... ரொம்ப சரி'

'ஒருவேளை தோல்வியடந்தால் கவிதையென ஒன்று எழுதுவீர்கள்'

'வெரிகுட்.ரொம்ப ரொம்ப சரி. சரியாகப் புரிந்து கொண்டாய்'

'இதில் எனக்குப் புரியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. நீங்களும் ஜோதிகாவும் கல்யாணம் செய்து கொள்கிறீர்கள் சரி. ஆனால் குழந்தையை எப்படி உண்டாக்குகிறீர்கள். மாத்திரை மூலம் அல்ல என்று சொல்லி விட்டீர்கள்.அப்படியென்றால் எப்படி?'

கேலியாகப் பட்ட இந்தக்கேள்வியால் கோபப்பட்ட மனோ அவனை தீவிரமாக முறைத்தான்.'சொல்லுங்கள்...நீங்கள்.. குழந்தை...' மனோ கை நீட்டி அந்தப் பேச்சை நிறுத்தினான். ' என்னால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது'

"அவன்" விழிகளை உருட்டி மனோவை விநோதமாகப் பார்த்தான். இரவுப் பூனை மாதிரி அந்த விழிகள் பளபளத்தது.

'சரி.. அது கிடக்கட்டும். கோபம் என்றால் என்ன?'

'நான் உன்னை முறைத்தேனே... அந்த உணர்வுக்குப் பெயர்தான் கோபம்'

'புரிகிறது...நீங்கள் எத்தனை வருடத்துக்கு ஒரு முறை மாத்திரை சாப்பிடுவீர்கள்?'

'சாப்பிடுவோம்...காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு இப்படி சகலவிதமான நோய்கள் வரும்போதும் மாத்திரை சாப்பிடுவோம். வருடத்திற்கு நாலைந்து கிலோவாவது தேறும்'

'காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு என்றால்?'

'போச்சுடா...ஏய்...உண்மையைச் சொல்... உனக்குத் தெரியாது?'

'தெரியாது நண்பரே'

மனோ ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தான். இவன் யார்? நான் ஏன் இவன் கேட்டும் பைத்தியக்காரத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அவனிடமிருக்கும் எந்த விசை என்னை இயக்குகிறது. வேண்டாமென்று நினைத்தாலும் ஏன் வாய் பதில் பேசி விடுகிறது? பேசினான்.

'தலையென்றால், இதோ.. என் வாய் பேசுகிறதே அது இருக்கும் இடம் தலை. இதோ, சட்டை போட்டு மூடியிருக்கிறேனே இந்தப்பகுதியின் பெயர் வயிறு.போதுமா?'

'வலியென்றால்..'

'நான் உன்னை ஓங்கி அறைந்தால் உன் கன்னத்தில் சுர்ரென்று உறைக்குமே அதற்குப் பெயர் வலி. இந்த பஸ் ரோட்டில் ஓடுவதற்குப் பதில் உன்மீது ஓடினால் அப்போது ஏற்படுமே அதற்குப் பெயர் வலி.'

'ம்.. ஆக நீங்கள் மாத்திரை உணவு சாப்பிடுவதில்லை?'

'மடையா, மாத்திரையை உணவாக சாப்பிட முடியுமா? சாப்பிட நிறையப் பொருள்கள் இருக்கின்றன. மீ கோரெங், வடை, பாயாசம். கே எ·சி சிக்கன், நேசமிக்க பெண்ணின் அழகிய உதடுகள்...இப்படி!"

'சரி, மீ கோரெங், வடை, பாயாசம். கே எ·சி சிக்கன், நேசமிக்க பெண்ணின் அழகிய உதடுகள் போன்றவற்றைச் சப்பிட்டபிறகு என்ன செய்வீர்கள்?'

'ஓய்... அந்தக் கடைசி விஷயத்தை விட்டுவிடு. அது சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.'

'சரி, விட்டு விடுகிறேன். சொல்லுங்கள், என்ன செய்வீர்கள்?'

'சாப்பிட்ட பிறகுதானே? ஏதாவது வேலை செய்வோம்'

'வேலையென்றால்?'

'பெரிய்ய லொள்ளுய்யா உன்னோட. வேலையென்றால் தெருக்கூட்டுவது, தொழிற்சாலைகளில் காடி தயாரிப்பது, காய்கறி விற்பது, பஸ் நிலையங்களில் பெண்களை 'சரக்கு' என்று சொல்லி கிண்டலடிப்பது..இப்படி பல முக்கியமான வேலைகள்'

'எனக்குப் புரியவில்லை...'

'அதோ பஸ் ஓட்டுகிறாரே அவர் செய்வதுகூட வேலைதான்'

'சரி, எதற்காக வேலை செய்ய வேண்டும்?'

மனோ தவித்துப் போனான். வெளியே தெரு விளக்குகள் மனோவின் பரிதவிப்பைப் பார்த்து சிரித்தபடி நகர்ந்து கொண்டிருந்தன.

'வேலை செய்யாவிட்டால் பஸ்ஸில் போக ஒரு வெள்ளி அறுபது காசு, தே தரெக் குடிக்க காசு இதெல்லாம் யார் தருவார்? காசு வேண்டுமென்றால் உழைக்க வேண்டுமய்யா'

'உங்கள் தலைவர் தரமாட்டாரா?'

'எங்கள் தலைவர் வாய்ப்புகளைத்தான் தருவார்.அதைப்பயன்படுத்தி முன்னேற வேண்டியது எங்களது வேலை. அவனவன் திறமையைப் பொறுத்து, சம்பாத்தியத்தைப் பொறுத்து, ஸ்டார் தியேட்டரில் சினிமாவிற்கோ, ஷா ஆலம் ஸ்டேடியத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கோ போகலாம்.'

'இசையென்றால்?'

'ஐயோ, சாமி, இவன் இம்சை தாங்க முடியலையே' என்று மனோ கவுண்டமணி ஸ்டைலில் புலம்புவதைப் பார்த்துவிட்டு கண்டக்டர் 'என்னங்க, ஏதாவது பிரச்சனையா?' என்றார். 'பிரச்சனைதான், ஏதாவது ஒரு பாட்டுப் போடுங்க சார்.'

'சுட்டும் விழிச்சுடரே, சுட்டும் விழிச்சுடரே' என்று வடிந்தது இசை.

'இதோ, இதுதான் இசை, இதுதான் பாட்டு, போதுமா?' அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

'புரிகிறது.நீ என்ன கேட்கப் போகிறாய் என்று புரிகிறது. பாட்டு என்றால் என்ன? அதுதானே!'

அவன் ஆச்சரியமாக 'அதுதான்' என்றான்.மனோ கை கூப்பினான். 'ஐயா, இதற்குமேல் எனக்குப் பொறுமையில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடு'. அவன் ஏதோ சொல்ல முற்பட்டான். அதற்குள் காப்பார் வந்து விட்டது.

மனோ"அவன்" இறங்குவானா என்று ஆவலாய் கவனித்தான்.இறங்கவில்லை. ஒரு மலாய் இளைஞன் ஏறிக் கொள்ள பஸ் மறுபடியும் கிளம்பியது.
இன்னும் ஐந்து நிமிடத்தில் தோக்முடா வந்துவிடும். மனோ மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாகக் கேட்டான்.

' ஏதோ வேற்றுக்கிரகவாசி மாதிரி பேசுகிறாயே..உண்மையைச் சொல், நீ எந்த பைத்தியக்கார மருத்துவமனையைச் சார்ந்தவன்?'

'என்ன நண்பரே...'

'எந்த பைத்தியக்கார மருத்துவமனையில் இருந்து தப்பி வந்தாய் என்று கேட்டேன்'

அவன் கொஞ்ச நேர யோசனைக்குப்பின் சொன்னான், 'நண்பரே...உண்மையில் நான் ஒரு செவ்வாய்கிரகவாசிதான்'

'இதோ பார்யா..எல்லாம் என் நேரம். உன்னை மாதிரி ஒரு பைத்தியத்துகிட்ட மாட்டி நொந்து நூலாகனும்னு விதி.அப்படி இப்படி பேசி கடைசியில் என்னையே முழு பைத்தியக்காரனாக்கி விட்டாய்.'

'நம்புங்கள் நண்பரே.. உண்மையில் நான் ஒரு செவ்வாய்க்கிரகவாசிதான். சிலகாலமாக மனிதர்கள் எங்களுக்கு அனுப்புகிற செய்திகளும், எங்களது கிரகத்தைப் பற்றி அறியச் செய்கிற முயற்சிகளையும் பார்த்துவிட்டு எங்கள் தலைவர் ஒரு குழு அமைத்து மனிதர்கள் மீதான சோதனையை நடத்தி வருகிறார். நானும் அதில் ஒரு அங்கம். எனக்குக் கொடுக்கப்பட்ட பணி - மனிதப் பொறுமையின் எல்லையை சோதிப்பது.

இந்த சில நிமிடங்களில் நான் உங்களிடம் சேகரித்த செய்திகள் ஏராளம். சாதாரண மனிதப் பொறுமையிலும் மூன்று மடங்கு உயர்ந்தது உங்கள் பொறுமை.

உங்களோடு பேசியதில், பழகியதில் மகிழ்ச்சி. உங்களைப்பற்றி, ஜோதிகா பற்றி, நா.முத்துக்குமார் கவிதை பற்றி எங்கள் தலைவரிடம் எடுத்துச் சொல்வேன். ஜோதிகா மீதான உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள். வருகிறேன். மீண்டும் சந்திப்போம்' என்று "அவன்" சொன்ன அந்த விநாடி பஸ் தோக் முடாவில் நின்றது. மனோ அவனை விநோதமாகப் பார்த்தபடி கீழிறங்க முற்பட்டான்.

அப்போதுதான் அந்த் அதிசயம் நிகழ்ந்தது.

திடீரென பஸ்ஸின் கீழ்ப்பாகம் இரண்டாக பிளந்து கொள்ள உள்ளிருந்தவர்கள் உதிர்ந்து விழுந்தார்கள்...அந்த "அவன்" தவிர!

பஸ் மெல்ல மேல் எழத்துவங்கியது...தரையிலிருந்து ஒரு அடி, இரண்டு அடி, மூன்று அடி.... போதுமான உயரம் மேல் எழுப்பியதும் பிளந்த பஸ்ஸின் அடிப்பாகம் மறுபடியும் ஒட்டிக் கொள்ள, அந்த கோலாசிலாங்கூர் பஸ் ராக்கெட் வேகத்தில் ஆகாயத்தை நோக்கிப் பறக்கத் துவங்கியது.

அதை அந்த தோக்முடா இருட்டில் மனோ, ஒரு சீனப்பெண், ஒரு மலாய் இளைஞன், பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் அதிர்ந்து போய் வேடிக்கை பார்த்து நின்றார்கள் என்று நான் சொன்னால் தமிழ்மணம் வாசகர்ளாகிய நீங்கள் நம்பவா போகிறீர்கள்?