Wednesday, December 17, 2008

கோலிவுட்டின் கதவுகளைத் தட்டும் மலேசிய, சிங்கப்பூர் கரங்கள் (நாலு வார்த்தை-017)யோகி பி இசைக்குழு. சமீபகாலமாக கோலிவுட்டில் பலராலும் உச்சரிக்கப்படும் பெயர் இது. "மடை திறந்து ஓடும் நதியலை நான்" என்ற ரீமிக்ஸ் பாடல் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ்ச் சினிமா ரசிகர்களை கவர்ந்த இந்த மலேசியக்குழு, இசையுலகில் புதிய அலைகளை எழுப்பி வருகிறது. தங்களுக்கென்று சுய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர்களை கோலிவுட்டில் பலரும் மரியாதையோடு பார்க்கிறார்கள். இவர்களுக்கு முன்னோடி மலேசியா வாசுதேவன். 16 வயதினிலே படத்தில் தன் கலைப்பயணத்தைத் துவங்கிய அவர், தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்திருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் மனதில் கோலிவுட் கனவை விதைத்தது மலேசியா வாசுதேவனின் வெற்றிப் பயணம்.

சிங்கப்பூரிலிருந்து விமானம் ஏறிப் போய் கோலிவுட்டின் கதவுகளைத் தட்டியவர்கள் பலர். சிலருக்கு அதன் கதவுகள் திறக்கவும் செய்தது. முதல் மரியாதை திரைப்படத்தின் மூலம் 'அந்த நிலாவைத்தான் கையில பிடிச்ச' சிவரஞ்சனி கொஞ்சகாலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். முகமது ர·பி "ஜும்பலக்கா, ஜும்பலக்கா" என்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கலக்கியபோது, பலரும் அவரை நம்பிக்கையோடு அண்ணாந்து பார்த்தார்கள். ஆனால் அந்தப் பாடலோடு அவரது இசைப்பயணம் முடங்கிக் கிடக்கிறது. இடையில் என்ன நடந்தது? கோலிவுட்டில் சாதிக்க திறமையைத் தவிர வேறு சில விஷயங்களும் தேவைப்படுகிறதா? இன்றும் விடை சொல்லப்படாத கேள்வி இது. சிங்கப்பூர் பாடகர் இர்பானுல்லாவிடம், கோலிவுட் வாய்ப்புகளைப் பற்றிப் பேசும்போது அவரது குரலில் ஒரு வித விரக்தி வெளிப்பட்டதைப் பார்த்தேன். அந்த முயற்சிகள் சோர்வளிப்பதாகச் சொன்னார். சரோஜா படத்தில் மாடில்டா என்ற சிங்கப்பூர் பெண்ணுக்கு பாட வாய்ப்பளித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அது நம்பிக்கையளிக்கிறது.

அண்ணாமலை, சித்தி போன்ற தொடர்கள் மூலம் சின்னத் திரைக்குள் நுழைந்து சிங்கப்பூர் கலைஞர்கள் சார்பில் பிள்ளையார் சுழி போட்டவர் மஞ்சரி. 'கோலங்களில்' இவரது காலங்கள் கழிந்து விட்டது. பெரியதிரை இவருக்கு பிடிபடவில்லை. சிங்கப்பூர் ஊடகத்துறையில் பெற்ற அனுபவத்தை மூலதனமாக வைத்து தமிழகச் சின்னத்திரையில் நுழைந்து, இன்று தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் ஆனந்தக் கண்ணன். தமிழ் பேசுவது தப்பில்லை என்று சிரித்துச் சிரித்தே தமிழகத்திற்குச் சொல்லித் தந்து கொண்டிருக்கிறார் என்பது இவரது சிறப்பு.

ஒலி 96.8ன் மூலம் சிங்கப்பூர் நேயர்கள் பலரையும் கவர்ந்து, மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரனின் மனதையும் கவர்ந்து, தமிழகச் சின்னத்திரையில் நிகழ்ச்சி படைப்பாளராக வலம் வருபவர், மாலினி என்ற ஹேமாமாலினி.நடன அமைப்பாளர் மணிமாறன், நடிகர் ஜேம்ஸ் துரைராஜ் போன்றவர்கள் தமிழ்த்திரையில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தாலும், அந்த வேடங்களைப் பெறுவதற்குக்கூட அவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. தமிழகச் சின்னத்திரையில் மதியழகன் போன்ற சிங்கப்பூர் கலைஞர்களுக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தாலும், கோலிவுட் என்ற பெருங் கடலில் நீந்த முடியாமல் திரும்பி வந்தவர்களும், அதில் நீந்திக் கரை சேர முடியுமா என்று தயங்கி நிற்பவர்களும் பலர். சமீபத்தில் சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு நேரத்தை அதிகரித்துள்ள சூழலில், தமிழகத்தில் தங்களது திறன்களைக் கூர்தீட்டிக் கொண்ட கலைஞர்கள், சிங்கப்பூரில் அந்த திறன்களை வெளிப்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சிங்கப்பூர் ரசிகர்கள் மத்தியில் நிறையவே இருக்கிறது.

2 comments:

கோவி.கண்ணன் said...

உங்கள் நாலு வார்த்தைகல் பதிவுகள் அனைத்துமே கலக்கல்.

சிங்கப்பூர் - மலேசிய கலைஞர்களின் கோடம்பாக்க தாகம் பற்றிய இந்த பதிவும் அருமை. ஒருவரையும் விடுபடாது குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

சிங்கப்பூர் - மலேசியாவில் இருந்து திரை உலகிற்கு முயற்சிப்பவர்கள் பற்றி தெரிந்துவிடுவதால், அவர்கள் சாதிப்பவை, தடை ஆகியவை தெரிந்துவிடுகிறது. மற்றபடி இவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழகத்திலேயே திறமை இருந்தும், முயற்ச்சித்து முடங்கியவர்கள் பலர்.

பாலு மணிமாறன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி கோவி.கண்ணன்....

சிலருக்கு, சிங்கப்பூரர்கள் என்பதே கோலிவுட்டின் கதவைத் திறக்கும் சாவியாக இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.