Friday, December 19, 2008

ஒரு செப்டம்பர் மாத காலையும், சில்க் ஸ்மிதாவும் (நாலு வார்த்தை-020)



1996ம் வருட செப்டம்பர் மாதக் காலை. தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆள்த்துகிறது. எனக்குள்ளும் அந்த அதிர்ச்சி பரவியது. எதிர்பாராமல் நிகழும் மரணங்கள் வாழ்க்கையின் நிலையின்மை குறித்தும், இருப்பு குறித்தும், முன்னுரிமை தர வேண்டிய செயல்கள் குறித்தும் மறுபார்வை செய்யத் தூண்டும் வலுவுள்ளவை. அந்த மரணங்கள் நம் பிரியத்திற்குள்ளவர்களுடையதாக அல்லது அபிமானத்திற்குள்ளதாக அமையும்போது அந்தத் தாக்கம் நீண்ட வடுக்களை விட்டுச் செல்கின்றன. 'சில்க் ஸ்மிதாவுடன் ஒரு கற்பனைப் பேட்டி' என்ற எனது கவிதைப் பதிவின் மீதான நண்பர் ஷானவாஸின் பின்னூட்டம், அந்த செப்டம்பர் மாதக் காலையை மீண்டும் ஞாபகப்படுத்தியது. ஒரு கவர்ச்சி நடனக்காரி என்ற அடையாளத்தையும் மீறி, சில்க் ஸ்மிதா பலரையும் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருப்பதை நம்மில் பலரும் உணர்ந்திருக்கிறோம். பெண்களும் அவரது அபிமானிகளாக இருப்பது ஆச்சரியத்தையும், அதற்கு என்ன காரணம் என்ற துணைக் கேள்வியையும் எழுப்புகிறது. விதவிதமான பிம்பங்களை சில்க் வெவ்வேறு மனிதர்களிடம் விட்டுச் சென்றிருக்கிறார். என்னுள் இருந்த சில பிம்பங்கள் ஒரு கவிதையாக வெடித்தது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இப்படி அமைந்தன...

/பகல், இரவு - இந்த இரண்டில் உங்களுக்குப் பிடித்தது எது? பகல் என் உடல் மீது வெப்பம் பொழிந்தது. இரவில் என் மனம் வேதனை வெப்பத்தால் உருகி வடிந்தது. எனவே, இரண்டின் மீதும் இச்சையில்லை எனக்கு./ /இச்சை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. கச்சை கட்டிய உங்களது கட்டழகு உடல் மீது இச்சை கொண்டு, காதல் பிச்சை கேட்டலைந்த காளையர்கள் பற்றி.... பச்சையாக சொல்வதென்றால், பரிதாபத்திற்குரியவர்கள்!/ /கற்பைக் பற்றி உங்கள் கருத்தென்ன? ஆண்களுக்கும் மிக அவசியமான ஒன்று./ /இன்னொரு பிறவியெடுக்கும் எண்ணம் உண்டா? உண்டு. ஆனால் அதில் ஆணாய் மட்டுமே அவதரிப்பேன்./ /ஏன்? அவர்களுக்குத்தானே சேலைகளும் கிடையாது... துகிலுரிப்பும் கிடையாது./ /எங்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல விரும்புகிறீர்களா? இது மேலோகம். இங்கு கிசுகிசுக்கள் கிடையாது!/ இவையெல்லாம் சில்க்கைப் பற்றி நானாக அவதானித்துக் கொண்ட பிம்பங்களின் பிரதிபலிப்புகள். விரும்பியோ, விரும்பாமலோ, அடுத்தவரின் தனிவாழ்க்கை, அந்தரங்கம் பற்றி நமக்குள் சில தீர்மானங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அந்த அடுத்தவர், ஒரு பிரபலப் புள்ளியாக இருந்துவிட்டால், அவரது அந்தரங்கத்தை ஆடையுரித்து நம் வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்து விடும் வேலையைச் செய்து விடுகின்றன ஊடகங்கள். சமீபத்திய தீவிரவாதம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள் அத்துமீறி நுழைவதுகூட தீவிரவாத மனோபாவத்தின் இன்னொரு முகம் என்ற எண்ணம் தோன்றியது. அப்படியென்றால், நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தில் சதா மூக்கை நுழைக்கும் வெகுஜனப் பத்திரிக்கைகளையும், சக ஊடகங்களையும் எப்படி வகைப்படுத்துவது?

பத்திரிக்கை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர் சில்க் ஸ்மிதா. தொடர்ந்து நிகழ்த்தப் பட்ட சிதைவுகளின் மொத்த விளைவாக முடிந்தது சாலிகிராமத்தின் 1996ம் வருட செப்டம்பர் மாதக் காலை. அந்தநாள் வருவதற்குள்...ஆந்திர மாநிலத்தின் இளிரு கிராமத்தில் பிறந்து, வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவாக உருவெடுத்த விஜயலக்ஷ்மி ஒரு நெடிய பயணத்தை முடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் சிலநூறு படங்களை நடித்து விட்டார். எல்லாப் படங்களும் அவரது கவர்ச்சியை முதலீடாக எடுத்துக் கொண்டாலும், சில படங்கள் நடிக்கவும் வாய்ப்பளித்தன. மூன்று முகம், மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் சில்க் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களை பலரும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். மூன்றாம் பிறையும், பொன்மேனி உருகுதே பாடலும் தமிழ்த் திரையுலகின் அழியாத சித்திரங்கள். மலையாளத் திரையுலகமும் சில்கிற்கு கவர்ச்சியும், நடிப்பும் சமஅளவில் கலந்த பாத்திரங்களை வழங்கியது. ஒரு பதின்ம வயது இளைஞன், தன்னை விட வயதுகூடிய பெண்களை விரும்பும் கதையம்சம் கொண்ட 'லயனம்' என்ற மலையாளப் படம் கேரளாவில் பெறு வெற்றி பெற்றது. 10 வருடங்களுக்குப்பின் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அங்கும் வசூலை அள்ளியது. அந்த வெற்றிக்கு ஆதாரமாக இருந்தது சில்கின் கவர்ச்சி. ஆனால், அந்தப்படத்தில் நடிந்த சில்க், அபிலாஷா, நந்து என்ற மூன்று நடிகர்களும் தற்கொலை செய்து கொண்ட துர்நிகழ்வை என்னவென்று சொல்வது?

சில்க் ஸ்மிதாவை தற்கொலைக்குத் தூண்டிய விஷயம் எதுவாகவும் இருக்கலாம்...அதைபற்றி ஊடகங்கள் போதுமான அளவில் அலசி ஆராய்ந்து விட்டன. அந்த அலசல்கள் திருப்பித் தரப் போவது எதுவுமில்லை - சில்க் மீதான ஞாபகங்களைத் தவிர. தமிழ்த் திரையுலகில் அவர் விட்டுச் சென்ற இடம் இன்றும்கூட நிரப்பப்படாத நிலையில், இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால்...என்ற யோசனை சில விநோத விடைகளைத் தருகிறது. அந்த 48 வயது சில்க் ஸ்மிதா ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக மாறி, ரஜினி கால்ஷீட்டிற்காக காத்திருக்கக் கூடும் அல்லது சின்னத் திரையில் ராடான் போன்றதொரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கக் கூடும் அல்லது இன்னும் கூட கவர்ச்சி நடிகையாகவே வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடும்... இப்படிப் பல கூடும்களுக்கு வழிவிடும் யூகம் இது. அடப் பாவமே...இருந்திருக்கலாமே என்று நினைக்க வைக்கும் யூகங்கள். சரிதானே, இருந்திருக்கலாமே ஸ்மிதா...

12 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

எனக்கு சில்க் ஸ்மிதாவை ரொம்பப் பிடிக்கும்.

விவரம் தெரியாத வயதில் அவர் பெயரை உச்சரிப்பதே பாபம் என்று சக வகுப்புத் தோழிகள் கூறிய காலம். எனக்கு அவர் யார் என்றே அப்போது தெரியாது. பின்னர் தெரிந்து கொள்ள முற்பட்ட போது ஏனோ அவர் முகம் மட்டுமே பதிந்து போனது. அழகாய் லக்ஷணமாய் நல்ல உடைகள் அணிந்திருந்தால், ஸ்ரீதேவி உட்பட பல நடிகைகளைத் தூக்கி சாப்பிடும் அழகு.

கிட்டத்தட்ட 15 அல்லது 16 வயதில், என் நினைவு தெரிந்த பின், முதன்முதலில் அவரை நான் பார்தது "அலைகள் ஓய்வதில்லை" என்ற படத்தில். அதன் பின் "கோழி கூவுது" இரண்டுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பொழுது பார்க்க நேர்ந்தது.

ஒரு முறை தொலைக்காட்சியில் (இதுவும் எனக்கு 16 அல்லது 17 வயது இருக்கும் போது)அபஸ்வரம் ராம்ஜி அவர்கள் சில்க் ஸ்மிதாவை பேட்டி கண்டார்.

ராம்ஜி: மேடம் உங்களுக்கு பிடித்த உடை

சில்க்: சேலை.

ராம்ஜி: என்னால் நம்ப முடியவில்லை. what?

என்று பேட்டி போய்க்கொண்டிருந்தது. அந்த பெண்மணியின் நிலையைக் கண்டு மனம் ஏனோ வலித்தது. எனக்கு சேலை பிடிக்கும் என்று சொன்னால் கூட, சுவாரஸ்யத்திற்காக அவரிடம் என்னவெல்லாம் பேசுகிறது சமூகம்!!!

அதன் பின், ஒரு சிறுகதை படிக்க நேரிட்டேன். சினிமாவில் நடனம் ஆடும் ஒருத்தியைப் பற்றி.

கிளுகிளு பேட்டி முடிந்தவுடன், அவள் தன் சிறுவயதை நினைவு கொள்கிறாள்....

"அம்மா எனக்கு இந்த கௌன் வேண்டாம். பின் போட்டா கூட கிளிசல் தெரியுது. எனக்கு இப்படி உடுத்த பிடிக்கலை. பாவாடை வாங்கி குடு. அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் வாங்கி குடு. முளுசா உடம்பை மறைக்கிற மாதிரி...."

அதன் பின் அவள் வறுமை..காலச்சக்கரம்...இன்று ?

அவள் மெதுவாய் விரக்தியாய் சிரித்தபடி படப்பிடிப்பை தொடர்வதாய் முடிதிருப்பார்கள்

ஏனோ இக்கதை சில்க் ஸ்மிதாவிற்காக எழுதப்பட்டதாய் நானே நினைத்துக்கொள்வேன்.

அதன் பிறகு கிட்டத்தட்ட 5 அல்லது 6 வருடங்கள் கழித்தே அவர் இன்னபிற படங்கள் பார்க்க நேர்ந்தது. அவரை நான் முதன் முதலில் பார்த்த படத்தில் அவருக்கு நல்ல பாத்திரம். அதனாலோ என்னவோ, சில்க் ஸ்மிதா என்றால் எனக்குப் பிடிக்கும். அவரை முன்னிருத்தி சினிமாவில் வரும் நடனக் காட்சிகள் மனதில் பதிந்ததில்லை. அதையும் தாண்டி அவர் முகம், புன்னகை, ஏனோ ஒரு அலாதி பிரியம்.

சில்க் ஸ்மிதா எனக்குப் பிடிக்கும் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு சிறுமையோ அவமானமோ கிடையாது.

பாலு மணிமாறன் said...

உங்களுடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சக்திபிரபா. சில்க் ஸ்மிதாவை பெரும்பான்மையான பெண்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதைப் பெரும்பான்மையான ஆண்கள் அறிந்தே இருக்கிறார்கள். உறுத்தாத அழகும், எப்போதும் ஒரு வித சோகத்தை வெளிப்படுத்தும் கண்களும் கொண்ட அவரைப் பிடிக்காதவர்கள் இருப்பது அபூர்வம். அவரைப் பிடித்தவர்கள் அல்லது அவரைப் பிடிக்கும் என்பதை வெளிப்படுத்தத் தயங்குபவர்கள் என்று இரண்டு பிரிவினர் மட்டுமே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஒருமுறை ரயிலில் சில்க்குடன், கோவையிலிருந்து சென்னைக்கு என் உறவினர் ஒருவர் தற்செயலாக பயணம் செய்ய நேர்ந்ததாம். அப்போது ஒரு அன்புமிக்க சகோதரியாக பரிணமித்து பல விஷயங்களையும் தனது பேச்சில் வெளிப்படுத்தினாராம் சில்க். அந்த உறவினர், சில்கைப் பற்றியும், அவரது பணிவுமிக்க பண்பு பற்றியும் பலமுறை என்னிடம் சிலாகித்துச் சொன்னதுண்டு. அந்தச் செய்திகள் சில்க் பற்றிய எனது பிம்பங்களைப் பெருமளவு மாற்றின.

நானறிந்த வரை, எந்தப் பெண்ணும் சில்க் ஒரு அழகிய பெண் என்பதை ஒத்துக்கொள்வதிலோ, அவரைத் தங்களுக்குப் பிடிக்கும் என்பதை வெளிச்சொல்வதிலோ தயக்கம் காட்டியதே இல்லை... ஏன் தயக்க வேண்டும்?

பாண்டித்துரை said...

///
சில்க் ஸ்மிதா எனக்குப் பிடிக்கும் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு சிறுமையோ அவமானமோ கிடையாது.

////
Dear
Mr. Shakthiprabha

சில்க் ஸ்மிதாவை எல்லோருக்கும்மே ரொம்ப பிடிக்கும் நண்பா

பாண்டித்துரை said...

நான் சிலக் ஸ்மிதா ஆண்டி இறந்தப்ப

ஜீனியர் காலேஸ் படிச்சிகிட்டு இருந்தேன்.
நான் படித்த மாலை நேர டீயுசன் நிறுவனத்தில் எல்லா ஆசிரியர்களையம் துக்கம் தொற்றிக்கொண்டது.

ரவிந்திரன் ஆங்கில ஆசிரியர் இவளுக்காக அழணும்போல இருக்குடா என்றது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அன்று ஆண்டி இறந்துவிட்டார்கள் என்று எங்களுக்கு டியூசன் விடுமுறை என அறிவிக்கப்பட்டது

பாலு மணிமாறன் said...

//விவரம் தெரியாத வயதில் அவர் பெயரை உச்சரிப்பதே பாபம் என்று சக வகுப்புத் தோழிகள் கூறிய காலம்.//

சக்திபிரபா நிச்சயம் Mr.Sakthiparaba இல்லை பாண்டி!

:)))

பாண்டித்துரை said...

அப்போது நான் ஜீனியர் காலேஸ் படிச்சிக்கிட்டிருந்தேன்.
அன்று மாலை டீயுசன் நிறுவனத்திற்கு சென்றபோது அங்கிருந்த எல்லா ஆசிரியருக்குள்ளும் சோகம் படர்ந்திருந்தது.

ஆங்கில ஆசிரியர் ரவிந்திரன் இவளுக்காக அழத்தோன்றுகிறது என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் உள்ளது

அன்று ஆண்டி இறந்ததிற்காக எங்கள் எல்லோருக்கும் டியூசன் விடுமுறை அளிக்கப்பட்டது.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//சக்திபிரபா நிச்சயம் Mr.Sakthiparaba இல்லை பாண்டி! //

:)

____

//உறுத்தாத அழகும், எப்போதும் ஒரு வித சோகத்தை வெளிப்படுத்தும் கண்களும் கொண்ட அவரைப் பிடிக்காதவர்கள் இருப்பது அபூர்வம். //

ஆம்! அவரின் அழகிய பெரிய கண்களில் ஒரு வித சோகம் கலந்த ஏளனம்.

ஒரு முறை நடிகை குயிலி சில்க் ஸ்மிதாவைப் பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

"நாங்கள் எல்லாம் மெனக்கெட வேண்டும், எங்கள் கண்களை, உடலை நடையை மாற்றி கவர்ச்சியாய் செய்வதற்கு ப்ரயத்தனப் படவேண்டும்.

ஆனால் சில்க் அப்படி அல்லை. இறைவன் அவரை மிக நளினமாய் கவர்ச்சியாய் படைத்துவிட்டான். அவரின் எல்லோரிடமும் எப்போதும் பழகும் இயல்பான நடை, சிரிப்பு, உடலசைவு, நளினம், பேச்சு, பார்வை என எல்லாமே கவர்ச்சியை எல்லா நேரத்திலும் வெளிப்படுத்தும். ரசிக்கக்கூடிய அழகான கவர்ச்சியை என்று முடித்தார்.

சில்க்-இன் கண்களிலோ ஏன் மிக மிக கவர்ச்சியாய் அவர் ஆடிய நடத்திலோ கூட கவர்ச்சி மட்டுமே அதிகம் சொட்டுமே தவிர, ஆபாசம் துளியும் இல்லை என்றே தோன்றும்.

அதுவே அவரின் மிகப் பெரிய வெற்றி.

அவர் இறந்தார் என்ற செய்தி, எனக்கும் வருத்தத்தை அளித்தது.

இன்னும் வாழ்ந்திருக்கலாம்.

கோவி.கண்ணன் said...

கவர்ச்சி நடிகையை ரசிக்கிறோம் என்பதை கூச்சமில்லாமல் சொல்லிக் கொண்டவர்களாகவே சில்க் ரசிகர்கள் இருந்தனர் என்பது வியப்பான ஒன்று. சில்க் ஸ்மிதாவிற்கு மட்டுமே இப்படி ஒரு பெருமை.

நீங்கள் சொல்வது போல் பெண்கள் மனதையும் கொள்ளை கொண்டவர் சில்க் என்பது உண்மைதான்.

கவர்ச்சி, நடிப்பு, குணச்சித்திரம் என அப்படி ஒரு பலதளங்களில் நடித்த நடிகையை தமிழ் திரைப்படங்களில் சில்க் கிற்கு பிறகு பார்க்க முடியவில்லை.

நல்ல பதிவு. உங்கள் நாலுவார்த்தையும் இந்த பதிவும் அருமை.

பாலு மணிமாறன் said...

//ஆனால் சில்க் அப்படி அல்லை. இறைவன் அவரை மிக நளினமாய் கவர்ச்சியாய் படைத்துவிட்டான்//

படைத்து விட்டான்... ஆனால் படைத்தவனே சீக்கிரம் எடுத்துக் கொண்டான் என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

பாலு மணிமாறன் said...

//கவர்ச்சி, நடிப்பு, குணச்சித்திரம் என அப்படி ஒரு பலதளங்களில் நடித்த நடிகையை தமிழ் திரைப்படங்களில் சில்க் கிற்கு பிறகு பார்க்க முடியவில்லை.//

சில்க் மறைந்து 12 வருடமாகிறது. 12 வருடத்திற்கு ஒரு முறை குறிஞ்சிப்பூ பூக்கும்... தமிழ்த் திரையுலகில் அப்படி ஒரு அபூர்வப் பூ பூக்குமா?

பாலு மணிமாறன் said...

//ரவிந்திரன் ஆங்கில ஆசிரியர் இவளுக்காக அழணும்போல இருக்குடா என்றது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அன்று ஆண்டி இறந்துவிட்டார்கள் என்று எங்களுக்கு டியூசன் விடுமுறை என அறிவிக்கப்பட்டது//

இந்த இரண்டு விஷய்ங்களும் , சில்க், கவர்ச்சி நடிகை என்ற எல்லையைக் கடந்து நம்மில் இடம் பிடித்திருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன. அதுதானே உண்மை!

Anonymous said...

இவர் வறுமையின் காரணமாய் நடிப்புத் துறைக்கு வந்ததாக ஒரு சஞ்சிகையில் படித்தேன்.எனக்கும் இவரை மிகவும் பிடிக்கும். வறுமை இருட்டைப் போக்க,தன் வாழ்வை.வாழ்க்கையை, தன் உடலை{நடிப்புக்காக}மூலதனமாக வைத்தார்,ஏனோ!உயிரைமூச்சை செலவு செய்தார்....?..?
ஆ பாச{ம்} நடிகை என்றாலும் பாசமுடன் பதிவிட்டமைக்கு என் நன்றி
பீஷான் கலா