Monday, December 29, 2008

கம்பன், நடிகர் சிவக்குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும்! (நாலு வார்த்தை-029)நேற்று இரவு, டேங்க் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில், கம்பராமாயணத்தை மீள் ஞாபகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை வழங்கியவர் நடிகர் சிவக்குமார். 'கம்பன் என் காதலன்' என்ற தலைப்பில் அவரது இலக்கியப் பேருரைக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. ஏறக்குறைய 800 பேருக்கும் மேல் அவரது உரையை 2 மணி நேரத்திற்கும் மேல் அமைதியாக ரசித்துக் கேட்டார்கள். அந்த அமைதிக்கும் ரசனைக்கும் சிவக்குமாரின் ஆளுமை மிக்க பேச்சே காரணமானது. "உண்மையிலேயே சொல்றேன்... உலகத்தில் எங்கேயும் உங்களைப்போல் ஒரு அருமையான கூட்டம் கிடைக்கவே கிடைக்காது." என்று பேச்சை முடித்ததும், இரண்டு முறை அழுத்தமாகக் குறிப்பிட்டார் சிவக்குமார். அது உதடுகளில் இருந்து உதிர்ந்த ஒப்பனை வார்த்தைகளல்ல; மனதின் ஆழத்திலிருந்து வடிந்த உண்மை வார்த்தைகள் என்பதை அரங்கிலிருந்த அத்தனை பேரும் உணர்ந்து கொண்டார்கள்.


சிங்கப்பூர் போன்றதொரு நவீன தேசத்தில், கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் இன்னும் இரண்டு தலைமுறைக்கு மேல் உயிர்ப்போடு இருக்குமா என்ற கேள்வியை அங்கிருந்த பலரது மனதிலும் இந்தப் பேச்சு எழுப்பியிருக்கக் கூடும். எதிர்மறை பதில்களே விடையாகவும் கிடைத்திருக்கக் கூடும். நிஜத்தில், நாம் இழந்து கொண்டிருக்கும் பண்பாட்டுக் கலாச்சார அடையாளங்களில் இதிகாசங்களும் ஒன்றாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். அதிகம் புழக்கத்தில் இல்லாத எந்த ஒன்றும் தனது முடிவைத் தானே தேடிக் கொள்ளும் என்ற இயற்கை நியதிக்குள் இதிகாசங்களும் அடங்கி விடுமோ என்ற அச்சம் பலரது மனதிலும் இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் இந்து அமைப்புகளும், அவை ஏற்பாடு செய்யும் இதிகாச உரைகளும் ஒரு சில தலைமுறைக்கு பலனளிக்கலாம்... அதற்கு அடுத்த தலைமுறைகள்? இளைய தலைமுறையின் தேவைகளும், தேடல்களும் வேறாக இருக்கின்றன. PSP விளையாட்டுகளும், MP3 இசையுலகும், ஆங்கிலத் திரைப்படங்களும், தொலைக்காட்சியும், கல்வி நிலையங்களும், விரைவு உணவகங்களும், நண்பர்களும் எடுத்துக் கொண்ட நேரத்திற்குப் பின் எங்கிருக்கும் இதிகாசத்திற்கான நேரம்? பதின்ம வயதின் இயல்பான பிரச்சனைகளைக்கூட பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத இடைவெளிகளோடு இருக்கும் ஒரு தலைமுறையிடம், பெற்றோர், இதிகாசங்களை எடுத்துச் செல்வது எப்படி?


இருட்டாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில்..புலம்பும் குரல்களை விட, விளக்கேற்றும் விரல்கள்தானே முக்கியம்? சிவக்குமாரின் பேருரை ஒரு விளக்காக அமைந்தது. அவர் கம்பராமாயணத்தில் 100 முக்கியப்பாடல்களை எடுத்துக் கொண்டு, இரண்டு மணி நேரம் சொற்பொழிவாற்றினார். கம்பராமாயணத்தை முதல்முதலாகக் கேட்பவர்களுக்கும் அதன் முழு சாராம்சத்தையும் புரிய வைத்த பேச்சாக இருந்தது அது. தங்கள் பிள்ளைகளோடு அந்த நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்கள், பின்னொரு நாளில் அந்தப் பிள்ளைகளிடம் அதைப் பற்றிப் பேசக்கூடும். இப்படியாக கம்பராமாயணம் இன்னொரு தலைமுறைக்கும் செல்லக்கூடும். பல பத்தாண்டுகளாக சிவக்குமார் ஒரு நடிகராக பெற்றிருக்கும் பயிற்சி, இந்த சொற்பொழிவிற்கு வெகுவாகப் பயன்பட்டதை உணர முடிந்தது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உடல் பாவனைகள், முக வெளிப்பாடுகள், சீற்றங்கள், சிணுங்கள்கள், காலகாலமாக நாமறிந்த சிவக்குமாரின் குரல் ஆளுமை - இவையெல்லாம் சேர்ந்து மகுடி ஊதிய ஒரு மாலையில், பாம்பாக படமெடுத்து நின்றது பார்வையாளர்களின் கவனம். தலைக்கு மேல கையுயர்த்தி கும்பிட்டு சிவக்குமார் தனது உரையை முடித்ததும் அங்கிருந்த அத்தனை பேரும் 5 நிமிடத்திற்கும் மேல் தொடர்ந்து கை தட்டினார்கள். அது - நான் இதுவரை பார்த்த சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் வேறு எந்த இலக்கியவாதிக்கும் கிடைக்காத பெரிய மரியாதை.

கம்பன் உயிரோடு இருந்திருந்தால் ஓடி வந்து சிவக்குமாரைக் கட்டிக் கொண்டு இந்த உரைக்காக நன்றி சொல்லியிருக்கக் கூடும். கம்பன் - சிங்கப்பூர் மக்களின் கரங்களில் நின்று ஓசையெழுப்பிக் கொண்டிருந்தான். மொத்தத்தில், இந்த நிகழ்ச்சி, சிவக்குமார் என்ற மனிதரைப் பற்றி சிங்கப்பூர் மக்கள் மனதில் இருந்த நல்ல பிம்பத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. சிவக்குமார் பேசிய பொழுதெல்லாம் அவருக்குள் இருக்கும் நடிகனும் அவரறியாமல் அவருடன் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். போதும் வண்ணத்திரை, போதும் சின்னத்திரை என்று முடிவெடுப்பதற்கும், அந்த முடிவில் உறுதியாக நிற்பதற்கும் திடமனதும், ஒழுங்கும் வேண்டும் - அதை சிவக்குமாரிடம் காண்கிறோம். ஒரு ஓவியராக, இலக்கியவாதியாக தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருக்கும் சிவக்குமாரிடம் அளவற்ற அர்ப்பணிப்பையும், தெளிவையும் கூடவே காண்கிறோம். திட்டமிட்டு செயல்படுவதற்கும், அதில் ஒழுங்கை தொடர்ந்து கடைபிடிப்பதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது சிவக்குமாரிடம்!

11 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந் நிகழ்வு பற்றிய செய்தியும் சிவகுமார் அவர்களில் குரற்குறிப்பும்.சிங்கப்பூர் ஓலி இணைய வானொலியில் கேட்டேன்.
தங்கள் விளக்கமான பதிவுக்கு நன்றி!
சிறு ஒலிப்பதிவு கூடக் கிடைக்கவில்லையா?

சி தயாளன் said...

இது பற்றிய செய்திக்குறிப்பை தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான், இந்த நிகழ்வை தவறவிட்டேனே என வருந்தினேன்..

பாண்டித்துரை said...

///கம்பன், நடிகர் சிவக்குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும்! (நாலு வார்த்தை-028) ///

நாலு வார்த்தை-029

கிரி said...

//நேற்று இரவு, டேங்க் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில்//

நான் தவற விட்டு விட்டேன்.

ரொம்ப நாள் ஆகி விட்டது கோவிலுக்கு சென்று.

//சிவக்குமாரிடம் அளவற்ற அர்ப்பணிப்பையும், தெளிவையும் கூடவே காண்கிறோம்//

உண்மை

பாண்டித்துரை said...

கண்ணதாசன் + சிவக்குமார் பதிவு வரக்கூடும் என்று நினைத்திருந்தேன்

வடுவூர் குமார் said...

ஒலிப்பேழை எங்காவது கிடைக்குமா?யாருமே ரிக்கார்ட் செய்யவில்லையா?
இவருடைய சொற்பொழிவை முன்பொரு முறை பத்ரி (நினைக்கிறேன்) பதிவில் கேட்ட ஞாபகம்.

பாலு மணிமாறன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...சிறு ஒலிப்பதிவு கூடக் கிடைக்கவில்லையா?//


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன் பாரிஸ் சார். ஏறக்குறைய 1 1/2 மணி நேர் ஒலிப்பதிவு என்னிடன் இருக்கிறது. சீக்கிரமே வலையேற்றுகிறேன்.

பாலு மணிமாறன் said...

//'டொன்' லீ said...
இது பற்றிய செய்திக்குறிப்பை தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான், இந்த நிகழ்வை தவறவிட்டேனே என வருந்தினேன்..//


கவலைப்படாதீர்கள். வசந்தம், வண்ணத்திரை இரண்டிலும் அவரது பேட்டியை ஒலிபரப்புகிறார்கள். தவறாமல் பாருங்கள்!

பாலு மணிமாறன் said...

// பாண்டித்துரை said... //

திருத்திக் கொண்டேன் தம்பி!

பாலு மணிமாறன் said...

//கிரி said...
நான் தவற விட்டு விட்டேன்.

ரொம்ப நாள் ஆகி விட்டது கோவிலுக்கு சென்று.//

நானும் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்றேன் - சிவகுமரனைப் பார்க்க! :))

பாலு மணிமாறன் said...

//பாண்டித்துரை said...
கண்ணதாசன் + சிவக்குமார் பதிவு வரக்கூடும் என்று நினைத்திருந்தேன்//

சிவக்குமாரின் கண்ணதாசனைப் பற்றிய உரையை நான் கேட்கவில்லை தம்பி!


// வடுவூர் குமார் said...
ஒலிப்பேழை எங்காவது கிடைக்குமா? //

நான் 1 1/2 மணி நேரம் ரெகார்ட் செய்திருக்கிறேன் வடுவூர் குமார். சீக்கிரமே வலையேற்றுகிறேன்!