Wednesday, December 31, 2008

டைரிகள் - எழுதியவை, எழுதாதவை, எழுத இருப்பவை (நாலு வார்த்தை-031)

1997ம் வருட டைரி ஒன்று என்னிடம் இருக்கிறது. தரமான தாளால் செய்யப்பட்டது. இன்று பார்த்தாலும் புதுசாக இருக்கும். அதன் தரமும், அதில் ஒரே ஒரு நாள் மட்டுமே நாட்குறிப்பு எழுதினேன் என்பதுமே அதன் புதுசான தன்மைக்குக் காரணமென்று நினைக்கிறேன். கவிப்பேரரசு வைரமுத்தை எனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்குமாறு கேட்டு மாமாவுடன் போய் சந்தித்தேன். அந்த ஒரு நாள் நிகழ்வு மட்டுமே டைரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குமேல் அந்த டைரியில் எதுவுமில்லை - ஒரு சில வரவு செலவு கணக்குகளைத் தவிர. இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது. எழுதிய சில பக்கங்கள்; எழுதாமல் பல பக்கங்கள். இதுதான் கடந்த வருடங்களில் நடந்தது. இனி வரும் வருடங்களிலும் நடக்கலாம்.

(சமீபத்திய புகைப்படம்)
என்னுடைய தந்தை தினமும் டைரி எழுதுவார். எண்ணூர் அனல்மின் நிலையத்தில் Turbine Maintenance பிரிவில் பணியாற்றிய காலத்தில், தினமும் அவர் வேலைக்கு டைரியோடு செல்வதை ஒரு சிறுவனாகப் பார்த்திருக்கிறேன். அந்த டைரிகளில் எந்திரங்களின் படங்களை dimension-களோடு வரைந்து வைத்திருப்பார். 1960கள் துவங்கி, இப்படிப்பட்ட பல பழைய டைரிகள் அவரிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். 1980களில் அவருக்கு தேக்கடி அணையின் அடிவாரத்தில், தமிழகப் பகுதியில் அமைந்துள்ள லோயர் கேம்பிற்கு பணிமாற்றலானது. அந்தப் புனல் மின் நிலையத்தில் அவர் ஏற்கனவே 1960களின் இறுதியில் பணியாற்றியவர். அந்த வேலை பற்றிய குறிப்புகளடங்கிய பழைய டைரியையும் எங்களிடம் புன்னகையோடு காட்டினார். தேக்கடி அணையிலிருந்து பென்ஸ்டாக் பைப்புகள் என்றழைக்கப்படும் பெரிய குழாய்களின் வழி தண்ணீர் புனல் மின் நிலையத்திற்கு வரும். செங்குத்தாக இறங்கும் அந்த பென்ஸ்டாக் பைப்புகள். அந்தக் குழாய்களின் வழி இறங்கி வரும் நீரை முறைப்படுத்த அதன் வழி நெடுக ஆங்காங்கே valveகளைப் பொருத்தி இருப்பார்கள். ஆனால், அந்த வால்வுகள் பல ஆண்டுகளாக திறக்கவோ, மூடவோபடாமல் ஒரே நிலையிலேயே இருந்து வர, ஆள் நடமாட்டமின்மையால், அவற்றைச் சுற்றி செடிகள் வளர்ந்து அவற்றை மறைத்து விட்டன. ஒரு முறை அந்த வால்வுகளைச் சோதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என் தந்தை ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, அங்கும் ஒரு 'வால்வு' இருக்கிறது என்று சொல்ல, மேலதிகாரிகள் இல்லையென்று திடமாக மறுத்திருக்கிறார்கள். கடைசியில் எல்லோரும் ஒரு குழுவாக ஜீப்புகளில் ஏறிப் போய் காட்டுப் பகுதியில் தேடினால்... அவர் சொன்ன இடத்தில் அந்த 'வால்வு' இருந்ததாம். அந்த துல்லியத்திற்கு உதவியது 60களில் எழுதப்பட்ட டைரிக் குறிப்புகள்.

(கீழிறங்கும் பிரமாண்ட குழாய்கள்)

ஒரு நாள் டைரி எழுதும் பழக்கத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, இப்படி ஒரு கவிதை மலர்ந்தது....

ஐந்தரை கண்விழிப்பு/ ஐந்தைந்து நிமிடமாய் எட்டிப்போகும் எழுகை.../ஏதேனும் மிக மறந்து / அலுவலக வாகனம் நாடி / அவசர ஓட்டம்.../அதை முடி, இதை முடி / அதிகார ஏவல்கள் / அது வேண்டும், இது வேண்டும் / தொழிலாளர் தேவைகள்...

அதை முடித்து இதை முடித்து / அதைச் செய்து இதைச் செய்து / எழுதாத டைரியோடு / ஓடியே போகும் ஒரு வாரம்! /

ஞாயிற்றுக்கிழமை நடுநிசியில் / எதேட்சைக் கண்விழிப்பில் / ஏக்கக் கைநீட்டி / என்மனம் துலாவும் / இன்னொரு சனிக்கிழமை சாயந்திரம்!
என்னைப் பொருத்தவரை எழுதாத டைரியோடு ஓடிப் போகும் வாரங்களும், வருடங்களும் அதிகம்.

2009 வருகிறது. ஒவ்வொரு வருடமும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் புத்தாண்டு உறுதிமொழிகளும் கூடவே வந்து விடும். ஓரிரு வாரங்களுக்குள் அந்த உறுதிமொழிகள் மறந்து போவதும் வழக்கம்போல் நிகழக்கூடும். இது ஒரு pessimistic மனோபாவம் என்று தோன்றலாம். ஆனால், பெரும்பாலும் அப்படித்தானே ஆகிறது? இதுவரை படித்த பொன்மொழிகளிலேயே என்னுள் ஆழமாகப் பதிந்து போனது 'மனிதன் - பழக்கத்தின் அடிமை' என்பது. அதை ஆழமாக நம்புவதே அப்படி ஆழமாகப் பதியக் காரணம். இரவு எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை 5 மணிக்கு எழுவது ஒரு காலத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது பழகி விட்டது. அப்படியென்றால், டைரி எழுதுவதை ஒரு பழக்கமாக மாற்றி, அதற்கு அடிமையாவதும் சாத்தியம்தானே? அதைத்தான் இந்த வருடம் செய்வதாக உத்தேசம். அது மட்டுமே இந்த வருட உறுதிமொழியாகிறது. 2009 டிசம்பர் 31 பதிவில் இதைப் பற்றி எழுத முடிகிறதா... பார்ப்போம்! அனைவருக்கும் அனைத்து நலன்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் இந்தப் புத்தாண்டு!!

4 comments:

A N A N T H E N said...

//அனைவருக்கும் அனைத்து நலன்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் இந்தப் புத்தாண்டு//

அப்படியே ஆகட்டும்!!!

Anonymous said...

அன்பு நண்பரே,
அருமையான சிந்தனைத் தொகுப்பு.. நாட்குறிப்பு எழுதாத கவலை வேண்டாம், உங்கள் எழுத்துக்கு உரம் சேர்ப்பவை எழுதப்படாத உங்கள் நாட்குறிப்பின் உன்னதமான வரிகளே...! உதாரணம் தங்கள் தந்தையின் வாழ்வில் அந்த 'பென்ஸ்டாக் வால்வு' பெற்ற முக்கியத்துவம்.. புத்தாண்டுக்கும் உங்கள் புதுமுயற்சிக்கும் வாழ்த்தும்
அன்பும், இறை.மதியழகன்.

பாண்டித்துரை said...

என் தாத்தா டைரி எழுதிக்கொண்டிருக்கிறார். குட்டி டைரி அதில் குட்டி குட்டி எழுத்துகளாக.

2009 ல் நாலுவார்த்தை புதுத் தளத்தில் களத்தில் பொலிவுற வாழ்த்துகள் பாலுணா

பாலு மணிமாறன் said...

//A N A N T H E N said...

அப்படியே ஆகட்டும்!!!//

Thanks for being here and commenting ANANTHEN


அன்பு நண்பரே, இறை.மதியழகன்!
thanks for your comments and let this new year brings in all good luck to you too!

//பாண்டித்துரை said...
2009 ல் நாலுவார்த்தை புதுத் தளத்தில் களத்தில் பொலிவுற வாழ்த்துகள் பாலுணா//

Nandri Thambi! Wish you the same too!