Thursday, April 28, 2005

பார்ப்பதற்கு மட்டுமான டைரிகள்

டைரிகள் - எழுதவதற்காக மட்டுமல்ல... எழுதாமல் இருப்பதற்கும்தான். எப்போதும் எழுதிய பக்கங்களை விட
எழுதாத பக்கங்களே ஏராளமாய் பேசுகின்றன என்னிடம்!


Image hosted by Photobucket.com

ஐந்தரை கண்விழிப்பு
ஐந்தைந்து நிமிடமாய்

எட்டிப்போகும் எழுகை...
ஏதேனும் மிக மறந்து
அலுவலக வாகனம் நாடி
அவசர ஓட்டம்...
அதை முடி, இதை முடி
அதிகார ஏவல்கள்
அது வேண்டும், இது வேண்டும்
தொழிலாளர் தேவைகள்...

அதை முடித்து இதை முடித்து
அதைச் செய்து இதைச் செய்து
எழுதாத டைரியோடு
ஓடியே போகும் ஒரு வாரம்!

ஞாயிற்றுக்கிழமை நடுநிசியில்
எதேட்சைக் கண்விழிப்பில்
ஏக்கக் கைநீட்டி என்மனம் துலாவும்
இன்னொரு சனிக்கிழமை சாயந்திரம் !


Wednesday, April 27, 2005

ஓவியங்களில் தொங்கிய சுவர்

மெளனம் ஓவென்று கூச்சலிடும் தருணங்களில் - கூச்சல்கூட கண்களுக்கு மெளனமாய்த் தெரிகிறது.ஒரு மெளனமிட்ட கூச்சல் வடிகிறது இப்படி.....

Image hosted by Photobucket.com

வார்த்தைக்கும் வரிகளுக்கும்
அர்த்தங்கள் வெகுசிலவே.
மௌனம் -
ஆயிரம் வகையில் அர்த்தப்படும்.

அதிகம் பேசுபவனிலும்
ஆழ்ந்து மெளனிப்பவனிடமே
அச்சம் வருகிறது.

மெளனமாய் இருப்பதால்தான்
மோனாலிசா ஓவியம் மதிக்கப்படுகிறது.
மெளனம் -
ஓவியங்களின் பொதுமொழி.

நாய்கூட
பிடிக்காதவர்களை மட்டுமே குரைக்கிறது.
பிடித்தவர்களோடு பேசும் அது
நக்கியபடி மெளனமொழி!

நம் ஊர் சாமிகளும் பேசியதேயில்லை.
சாமியாடிப் பேசும் நம்மைப்பார்த்து
மெளனமாய்...
புன்னகை மட்டுமே செய்கின்றன.

பதின்மவயதில் பார்த்த ஒரு பெண்
இறுதிவரைக்கும் மெளனித்தே போனதனால்
இன்றுவரை அவளுக்கு
ஆயிரம் குரல் பொருத்தி
அழகு பார்த்திருக்கிறேன்....

பலநூறு முறை பேசியதுண்டு அப்பா...
கடைசி நாற்காலியில்
மெளனித்த அவர் மட்டும்
இன்னும் நெஞ்சில் புகைப்படமாய்!

ஊர்விழிக்கா காலையில் விழித்த மனம்
வாழ்க்கை வருடுகையில்
சத்தமில்லா மெளனமே சந்தோஷம்.

இப்போதும்.....
என் ஜன்னலுக்கு வெளியே
விரிந்து கிடக்கிறது இரைச்சல்.
மனசுக்குள்
நிறைந்து கிடக்குது மெளனம்!

Tuesday, April 26, 2005

தமிழகத்திற்கு அப்பால் உதிர்ந்த ஒரு நட்சத்திரம்

இரங்கல் கூட்டமென்றால் சோகம் சொட்டச்சொட்ட உட்காரத்தான் வேண்டுமா?சிங்கப்பூரில் நடந்த உதுமான்கனிக்கான நினைவுக் கூட்டத்தில் இந்த பாரம்பரிய இந்திய மரபை உடைத்து "இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்" என்று அறிவித்தார் அருண்மகிழ்நன்.
Image hosted by Photobucket.com
புன்னகையோடு மேடையில் பேசும் உதுமான்கனியின் படம்

சுனாமி உலகைத் தாக்கிய அதேவேளை சிங்கப்பூர் தமிழர்களை சுனாமியாய் தாக்கியது உதுமான்கனியின் மரணச்செய்தி. ஒரு தொலைக்காட்சி போட்டிநிகழ்ச்சியில் நடுவராய் இருந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மாரடைப்பால் காலமானது பலராலும் நம்ப முடியாத விஷயமாக இருந்தது. அவர்கள் மனம் முழுக்க நிரம்பியிருந்த கேள்வி - " நேசத்திற்குரியவர்களின் மரணத்தை நம்பவே முடிவதில்லை. பாசத்திற்குரிய நீ எப்படிப் போயிருப்பாய்?". சில நல்லவர்களின் மரணத்தில்தான், மரணத்தின் வலிமை அடிக்கடி ஞாபகப்படுத்தப் படுகிறது. இப்போதெல்லாம் மாரடைப்பும் மரணமும் வயது பார்த்தா வருகிறது....

நம் வாழ்க்கை முழுக்க பவபேர் வந்து போனவண்ணம்தான் இருக்கிறார்கள்...ஆனான் ஒருசிலரால் மட்டுமே, வாழ்க்கை முழுக்க நினைத்து மகிழத்தக்க நினைவுகளை விட்டுச்செல்ல முடிக்கிறது. சிஙக்ப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாளராக இருந்து, மொத்த சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் இதயத்தில் இடம் பிடித்திருந்த புன்னகை மன்னன் , " உங்கள் அன்பன் " உதுமான்கனி அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.

கடந்த 13/04/05 அன்று சிங்கப்பூர் வுட்லாண்ட்ஸ் வட்டார நூலகத்தில் உதுமான்கனியை நினைவுகூறும் நிகழ்ச்சிக்கு அவரது நண்பர்கள் "வசந்தம் சென்ட்ரல்" முகம்மது அலி, "ஒலி 96.8" அழகியபாண்டியன் போன்றோர் முன்னெடுத்து ஏற்பாடு செய்திருந்தார்கள். நூலகவாயிலில் சின்ன வயதுமுதல் உதுமான்கனி எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய 2000 புகைப்படங்களைப்பார்த்து, அவற்றில் சரியான சிலவற்றை தேர்ந்தெடுத்து, அதை அழகான தொகுப்பாக்கி இருந்தார் நூலக அதிகாரியான "புன்னகை" புஷ்பலதா.

நவீன உலகின் சகல வசதிகளும் உள்ள அந்த நூலக அரங்கின் மையத்திரையில் "உங்கள் அன்பன்" உதுமான்கனி என்ற எழுத்துக்களோடு புன்னகையித்தபடி உதுமான்கனியின் பிரமாண்ட புகைப்படம். மேடையில் ஒரே ஒரு ரோஸ்ட்ரம் மட்டும் போட்டிருக்க எல்லோரும் கீழ் இருக்கைகளில் இருந்தார்கள்.

சிங்கப்பூர் media corp நிறுவனத்தைச் சேர்ந்த சபா முத்து நடராஜன் " எப்போதும் உண்மையை உரக்கப் பேசுபவர் : எல்லோரையும் சமமாக நடத்துபவர் " என்று உதுமான்கனியைப்பற்றி சொல்லிவிட்டு எழுத்தாளர் மா.அன்பழகனை பேச அழைத்தார்.

"நட்புக்கு இலக்கணம் வகுத்துப்பழகிய நண்பனே" என்று துவங்கிய அன்பழகனின் கவிதை, அவர்களுக்கிடையில் இருந்த நட்பு, சமூகத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் உதுமான்கனி கொண்டிருந்த நேசம், தேசங்களின் எல்லை கடந்து மனிதர்களைத்தொட்ட அவரது ஆளுமை என்று, உதுமான்கனியின் பலபரிணாமங்களையும் பற்றிப்பேசியது. மாலை நேரங்களில் நண்பர்களை சந்தித்து இலக்கியம் பேசி மனதை இலகுவாக்கிக் கொண்ட உதுமான்கனியின் உத்தியைச் சொன்ன அன்பழகனது கவிதையின் ஒருவரி, உதுமான்கனியின் ஆளுமையை முழுமையாகப் படம் பிடித்தது. அது - "ஆண்களும் அவரைக் காதலித்தார்கள்" என்ற வரி.

அவருக்கு அப்புறம் பேசவந்த அருண் மகிழ்நன்தான் " இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்" என்று சொன்னார்.அதற்கான காரணமும் சொன்னார். "இந்த இறப்பில் ஒரு பிறப்பு இருக்கிறது... ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியை நடத்தி, உதுமான்கனியின் பெயரில் பரிசு வழங்க முடிவாகி, அதற்கான நிதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.

"மறைந்த எழுத்தாளர் நா.கோவிந்தசாமியின் பிரதான சீடர் உதுமான்கனி. ஆனால் நா.கோவிந்தசாமிக்கு 5ம் ஆண்டு இரங்கல் கூட்டம் நடத்தியபோது 'இறந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை' என்று சொல்லி அதற்கு வரமறுத்தவர் உதுமான்கனி. இப்படி தன்னைப்பற்றியும், தான் சார்ந்த சமூகம் பற்றியும் அவருக்கு தீவிரக்கருத்துகள் இருந்தது. பல்வேறு திறமைகள் உதுமான்கனிக்கு இருந்தது. ஆனால், ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளராக அவர் ஆற்றிய பணி பெரியது.சிங்கப்பூரில் அவரை மிஞ்சிய தொலைக்காட்சி அறிவிப்பாளர் யாரும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியும்" என்று குறிப்பிட்டார் அருண் மகிழ்நன்.

"என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் எல்லாம் நான் உதுமான்கனியிடம் ஆலோசனை கேட்கத்தவறியதில்லை" என்று சொல்லி தன் பேச்சைத்துவங்கிய சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியின் தலைவர் முகம்மது அலி, சிறுவயதில் தான் உதுமான்கனி என்ற பிரமாண்டத்தைப் பார்த்து வியந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

"டி.வி உலகம் ஒரு மாயை என்பதுதான் அவர் எனக்கு வழங்கிய முதல் அறிவுரை. என்னைப்பற்றி அவர் மற்றவர்களிடம் 'கனவுலகில் சஞ்சரிப்பவன்' என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.உண்மைதான். ஆனால் அந்த கனவுலகோடு அவரிடம் போகும்போது, அந்த கனவுலகை குலைத்துவிடாமல், நிதர்சனங்களை எடுத்துக் கூறுவார். என் வாழ்க்கையின் பல கட்டங்களில் நான் விரும்பிப்படித்த புத்தகம்- உதுமான்கனி. அவரிடம் நகைச்சுவை உணர்வு என்ற பெரிய சொத்து இருந்தது. அது பலரையும் அவரிடம் ஈர்த்தது. ஒரு போட்டியென்றிருந்தால், தான் மட்டுமல்ல, தன்னோடு சேர்ந்து மற்றவர்களும் ஜெயிக்க வேண்டுமென்று நினைக்கிற பரந்த மனதுடையவர் அவர். சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த இணைய எழுத்தாளர் வெங்கடேஷின் புத்தக வெளியீட்டில் பேசியபோது " உதுமான்கனி, அருண்மகிழ்நன் - இருவரும் இருக்கும் மேடையில் எனக்குப் பேசப்பிடிக்காது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டேன். ஆனால் அது அவரைக் காயப்படுத்தி விட்டதோ என்று இப்போது கலங்குகிறேன்... " என்று சொல்லி நிறுத்த, அவரது விழியோரம் துளிர்த்த கண்ணீர் , அந்த வார்த்தைகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து வருவதை சொல்லி நின்றது.

அதன்பின் சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரல் ஒளிபரப்ப இருக்கும் நிகழ்ச்சியை திரையிட்டுக் காட்டினார்கள்....

1978 துவங்கி உதுமான்கனி அறிவிப்பு செய்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், அவரைப்பற்றி மற்றவர்கள் சொன்ன கருத்துகள், பல்வேறு விஷயங்களைப் பற்றி உதுமான்கனியே பகிர்ந்து கொண்ட கருத்துகள் போன்றவை அத்தொகுப்பில் இடம் பெற்றிருந்தது. தற்போது தமிழகத்தின் SCVயில் பணியாற்றும் ஹேமாமாலினி, 'சின்னவயதில் எங்கள் வீட்டில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அதில் வரும் ஆடல், பாடலைப் பற்றி பேச மாட்டார்கள்.... உதுமான்கனியின் தமிழைப்பற்றிதான் பேசுவார்கள்.' என்று சொல்லியிருந்தார்.

இறுதியாகப் பேசிய சிங்கப்பூர் தமிழ் வானொலி 96.8ன் தலைவர் அழகிய பாண்டியன், நண்பர்கள் ஒன்று சேர்ந்து உதுமான்கனி நினைவு கட்டுரைப்போட்டிக்காக 15,000 சிங்கப்பூர் வெள்ளி நிதி சேர்த்திருப்பதாகவும், அது SINDA என்றழைக்கப்படும் Singapore Indian Development Assosaition கட்டுப்பாட்டில் இருக்குமென்றும் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட முயற்சிகள் புதிய புதிய உதுமான்கனிகளை சிங்கப்பூருக்கு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு வெளிவரும்போது, கண்ணில் பட்ட முகம்மது அலியிடம் " உதுமான்கனி விட்டுச்சென்றிருக்கும் வெற்றிடத்தை உங்களால் நிரப்ப முடியும் " என்று உளமாரச் சொன்னேன்...அப்போது அவரது கண்கள் மறுபடியும் கலங்கியது !

Friday, April 22, 2005

வார்த்தைச்சித்தரின் வார்த்தை விளையாட்டு

சுகிசிவம் தனது சமீபத்திய சன் டி.வி பேச்சில் - மருதூர் அரங்கராசன் அவர்கள் "ஒற்றுப்பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி" என விரிவாக எழுதியிருக்கும் இலக்கண நூலைப்பற்றி குறிப்பிட்டார்.

அந்தச்செய்தி - 1980களின் இறுதியில் சென்னை, புரசைவாக்கம், சர்.முத்தையாச் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மருதூர் அரங்கராசன் அவர்களிடம் நான் தமிழ் மாணவனாக இருந்தபோது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.

எங்கள் பள்ளிக்கு ஒருமுறை வார்த்தைச்சித்தர் வலம்புரிஜான் பேச வந்திருந்தார். அவர் "தாய்" வார இதழின் ஆசிரியராக இருந்த சமயம் அது. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர். எந்த ஊரில் அல்லது பள்ளியில் கண்டிப்பான தலைமையாசிரியரை மாணவர்கள் விரும்பியிருக்கிறார்கள்?

வலம்புரிஜானை அறிமுகப்படுத்திப் பேசிய தலைமை ஆசிரியர், அவரை " தாய்க்குத் தாய் " என்று பாராட்டாகச் சொல்லிவைக்க, அடுத்து பேசவந்த வலம்புரிஜான் " உங்கள் தலைமையாசிரியர் மிகவும் நாகரிகமானவர். எங்கே என்னை ஒரு பாட்டி அளவிற்கு வயதானவன் என்று சொன்னால் நான் மனம் வருந்தப்பட்டு விடுவேனோ என்று எண்ணி, "தாய்க்குத் தாய்" என்று நாசுக்காக அழைக்கிறார். அப்படியென்றால் அவர் நாகரிகமானவர்தானே?" என்று பேசி ஒரே வாராக வார...

மாணவர்கள் அடைந்தது - ஆனந்தம். தலைமையாசிரியர் முகத்தில் வழிந்தது - ......... ( அதை நீங்களே யூகிச்சுக்கங்க ! )

Thursday, April 21, 2005

எழுத ஏதுமில்லை

இரவுக்கு வெளிச்சம் தருவது நிலவு மட்டுமா....உறவுகளும் ஒளியூட்டலாம் நடந்து!

Image hosted by Photobucket.com

நேற்றிரவு பூங்கா....
நட்சத்திரங்கள், நான்
நிறையாத இருள்
விழி வருட நிலா
மனம் வருட அவள்..!

முடிந்து போயின வருடங்கள்....
கடந்தகால அவளை
கவிதையாக்கும் உத்தேசம்!

இறந்த காதலுக்கு
எதற்கு இனிக் கவிதை...
வருடம் ஒருமுறை வரும்
திவசமா அது?
யோசிக்கிறேன்.

இல்லாமல் போவது இறப்பு.
என்னிலிருந்து அவள்
இல்லாமல் போனதுண்டா?

நிலவில் நிலைக்குத்தும் விழிகள்
நடந்து நடந்து யோசிக்கும் மனம்.

எதுவும் எழுதாமல்
எழுந்து நடக்கின்றேன்...
நிழலோடு நடந்தது வெளிச்சம்!


இடைவெளிகள்

பயணம் போகின்ற பாதையில் படுகின்ற விஷயங்கள் எப்போதும்
இன்ன பிற சிந்தனைக்கு இட்டுச்சென்றே விடுகின்றன

Image hosted by Photobucket.com


கூர்ந்து கவனியுங்கள்...
கண்களில் அரும்பி
இடைவெளி விட்டு
இதழ்களில் பூக்கிற
புன்னகைதான் அழகு !

நட்புக்கும் இடைவெளிகள்
நல்லது.
அது
நல்லதை அசைபோட
அழுக்கை அகற்ற
அவகாசம் தருகிறது...

தெருவென்ற பெயரில்
இடைவெளிதான்
எதிரெதிர் வீடுகளுக்கிடையில்
காதல் கரம்நீள
காரணமாகிறது...

தொட்டுக்கொள்ளும்
தூரத்தில் இருந்தாலும்
இடைவெளி விட்டு
அமருவதுதான்
காதலில்கெளரவம்...

பெரிய இடைவெளிக்குப்பின்
பிறக்கின்ற கவிதையின்
நீள விரல்கள்
நெஞ்சம் தொடுவதை
கவனித்ததுண்டா?

இரண்டு குழந்தைகளுக்கு
இடையில் மட்டுமல்ல -
புன்னகை, நட்பு
காதல், கவிதையென
பலவற்றிலும்
இடைவெளி என்பதே
இனிய விஷயம்..!


Wednesday, April 20, 2005

மரணம் பற்றி ஆதிகுமணன் சொன்ன நகைச்சுவை

மலேசிய தோட்டப்புறங்களில் யாராவது மரணமடைந்து விட்டால், கோலாலம்பூரில் இருக்கும் தமிழ் தினசரிகளின் தலைமை அலுவலகங்களை தொலைபேசியில் அழைத்து தகவல் தந்து விடுவார்கள். மறுநாள் இறந்தவரின் ஊர், பெயர், எந்த தோட்டத்தைச் சார்ந்தவர் என்பது உட்பட விரிவான செய்தி பத்திரிக்கையில் வந்து விடும்.

ஒருநாள் காலை ஆதிகுமணன் அவரது மலேசிய நண்பன் நாளிதழ் அலுவலகத்திற்கு போனபோது, ஒரு பெரியவர் அவரைப் பார்க்க நீண்ட நேரமாக காத்திருப்பதாகச் சொன்னார்களாம்.ஆதி அவரை சந்தித்து " நீஙக யாரு?" என்று கேட்டாராம். அதற்கு அந்தப் பெரியவர் " இன்னைக்கு பேப்பர்ல செத்துட்டதா செய்தி போட்டிருக்கீங்களே - ராமசாமி - அந்த ராமசாமி நாந்தேன் " என்றாராம். அதிர்ந்து போன பத்திரிக்கை ஆசிரியர் ஆதிகுமணன் நடந்த தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டதோடு, அந்த மன்னிப்பு கேட்கும் சங்கதியை மறுநாளே மலேசிய நண்பனில் வெளியிட்டு விடுவதாகச் சொன்னாராம்.

ஆனால் அந்தச் செய்தியோ இப்படி வெளியாகி விட்டதாம் " மிகவும் வருந்துகிறோம். ராமசாமி இறக்கவில்லை. இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்." !!

Monday, April 18, 2005

இந்த மானிட சாதிகளில்....

உங்கள் ஊரில் எத்தனை சாதி இருக்கிறது?

சிங்கப்பூரில் இருக்கிற இந்த சாதியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.... அந்த ஜாதி - ஊரில் நில,புலன்களை விற்றோ...கடன் வாங்கியோ, மனைவியின் தாலி உட்பட எல்லா நகைகளையும் அடகு வைத்தோ - சிங்கப்பூர் ஏஜெண்டிற்கு பணம் கட்டி, சிங்கப்பூர் வந்து இரவு,பகல், ஞாயிறு, திங்கள் பாராமல், உழைத்து உயிர் தேயும் நம்பிக்கையாளர்கள் சாதி!

அவர்களது நம்பிக்கை - ஒவ்வொறு நாளும் மேற்கில் அஸ்தமனத்தை மட்டுமே கண்டு வரும் எனக்கு, ஒரு நாள் எனக்கும் கிழக்கில் விடியும் என்பதே!

ஓரளவு பணம் சேர்த்து, நிலபுலம் வாங்கி, வீடு கீடு கட்டி, தொழில் கிழில் செஞ்சு, வாழ்க்கையில் நானும் நாலு பேர் மதிக்க வாழ வேண்டுமென்ற வைராக்கியத்துடன், கட்டிய மனைவியின் காதல் நினைவுகளுடன், சிரிக்கும் பிள்ளையின் சிந்தனையுடன் வாழும் இவர்களது வாழ்க்கை பயணத்தை துயரங்கள் மட்டும்தான் தொட்டுச் செல்லும் என்று யார் சொன்னது... அவ்வப்போது இப்படி சிரிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு இருக்கவே செய்கிறது......


Image hosted by Photobucket.com

போன தீபாவளியை இவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்று கேட்டேன்.அவர்கள் இப்படித்தான் கொண்டாடினார்களாம்...........

வீட்டுக்கு வெளித் தெரியும்
எதிர் புளோக் ஜன்னலில் எரியும்
எலக்ட்ரானிக் பல்புகளைத் தவிர
தீபாவளி சேதி சொல்ல ஏதுமில்லை
இவ்விடம்.


விடுமுறையில்லா உழைப்பு ஞாயிறுகள்
டாலராகி,ரூபாயாகி, பட்டாசாகி
வெடித்துச் சிதறுகையில்
பயந்து சிரிக்கும் பத்து வயது மகளின்
போன வருட முக ஞாபங்களோடு
சன் டி.வி முன்னால்
சத்தமில்லாமல்
எங்கள் தீபாவளி தினம் !

ஒரு மேசையில் மீந்திருந்த பெண்ணின் இதயம்!

என்னோடு பணிபுரிந்து பிரிந்த, ஒரு மலாய் இனப்பெண்ணின் மேசையை தற்செயலாக பார்த்தபோது கிடைத்த ஒரு மனப்பதிவு....

Image hosted by Photobucket.com

அவள்
பதிலற்ற சிந்தனைகளுக்குள்
தனித்திருப்பவளாகவும்
மெளனித்திருப்பவளாகவும் தோன்றுகிறாள்...


அவள்
ஆசைகளாலும் அச்சத்தாலும்
மெல்ல அடித்துச் செல்லப்படுபவளாய்
இருக்கிறாள்....


மெல்லிய சிறகுகளை விரித்து
கனவுகளின் நிழல்களைச் சுமந்தபடி
பறக்கும் அவள்...
முறிபடும்போது -
ஒரு துளிநீரை கடலுக்குத்தருபவளாய்
தெரிகிறாள்.


ஓவென்று கொட்டும் மழையாய்
சோகக்கண்ணீர்
அவளின் எண்ணங்களை
கழுவிச் செல்கிறது.
கொத்தான ஒளிக்கற்றை
அலைகளோடு இசைந்து வடிகிறது.


அதோ...
அங்கொருவன்
தனித்துமிருக்கிறான்...
மெளனித்துமிருக்கிறான்!



Tuesday, April 12, 2005

ஆதிகுமணன் என்றொரு மலேசியநண்பன்

மலேசிய மக்களின் நேசத்திற்குரிய மலேசிய நண்பன் நாளிதழின் ஆலோசனை ஆசிரியர் ஆதிகுமணன் மறைந்து விட்டார். தமிழ்உலகம் திறன்மிக்க தன் செல்லப்பிள்ளைகளில் ஒன்றை இழந்து நிற்கிறது.

இந்தியத்தமிழனான நான், 1996-97ம் வருடங்களில் மலேசியாவில் பணிபுரிந்தபோது ஆதிகுமணன் என்ற அற்புதமனிதரை அறிந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தது. உலகில் முதல் முதலாக தமிழ் எழுத்தாளர்களுக்கென்று தனியாக ஒரு கட்டிடம் வாங்கி, அந்தக்கட்டிடத்தின் திறப்பு விழாவை கோலாலம்பூர் பக்கமிருந்த பத்துகேவ்ஸில் நடத்தியபோது மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவரான ஆதிகுமணனை முதல்முதலில் பார்த்தேன்.

பளிச்சென்ற புன்னகை, சினேகம் ததும்பும் கண்கள், இளமை கொப்பளிக்கும் துள்ளல் நடையென வெள்ளை வேட்டி சட்டையில் நடந்துவந்த ஆதிகுமணன் சட்டென்று மனசுக்குள் போய் உட்கார்ந்து கொண்டார். அவரை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் வாய்த்திருக்கும். அந்த விழாவில் தெளிவான உறுதிமிக்க குரலில் அவர் பேசப்பேச, அந்த மனிதர் ஏன் வெற்றியாளராக, எல்லோராலும் விரும்பப்படுபவராக இருக்கிறார் என்ற உண்மை பிடிபடத் துவங்கியது.

ஆதிகுமணனின் இயற்பெயர் குமணபூபதி. அவரது தந்தை பெயர் ஆதிமூலம். அவரும் திராவிட இயக்கங்களில் பிடிப்புள்ள ஒரு தமிழ்த் தொண்டர்தான். தமிழ்நாட்டின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு மலேசியாவின் தமிழ்மலர் நாளிதழில் துணையாசிரியராக பணியில் சேர்ந்தபோது குமணபூபதி-ஆதிகுமணன் ஆனார். கொஞ்ச காலத்திற்குப்பின் வானம்பாடி என்ற வார இதழின் ஆசிரியராக பொறுபேற்றார். அந்த வார இதழின் விற்பனை சாதனை அளவை எட்டுவதற்கு கவர்ச்சிமிக்க ஆதிகுமணனின் எழுத்தும், அவரது அயராத போராட்ட உணர்வும் காரணமானது. ஒரு தமிழ் வார இதழ் 40 ஆயிரம் பிரதிகள் விற்றது இன்றும் மலேசியாவில் சாதனையாகக் கருதப்படுகிறது.

காலம் அவரை வானம்பாடியிலிருந்து வெளியேற்றி, தமிழ் ஓசையின் பொறுப்பாளராக்கியது. அதிகார வர்க்கத்தின் நிர்பந்தங்களுக்கு, கண்முன் கட்டி தொங்க விடுப்படும் ஆசை கேரட்களுக்கு சலனப்படாமல், நேர்மையான பத்திரிக்கையாளராக ஆதிகுமணன் சந்தித்த சோதனைகள் ஏராளம்.ஒரு கட்டத்தில் தமிழ்ஓசையும் இழுத்து மூடப்பட்டது. சோர்ந்தா விடும் சிங்கம்?

சிலிர்தெழுந்து ஆதிகுமணன் எழுப்பிய கோட்டைதான் " மலேசிய நண்பன் " நாளிதழ்.
அதன் துவக்ககாலம் முதல், இன்றுவரை மலேசியநண்பன் - மலேசியத்தமிழ் சமூகத்திற்காக, அதன் உரிமைகளுக்காக, விழிப்புணர்வுக்காக, வாழ்க்கை வளமைக்காக குரல் கொடுக்கும் போர்வாளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வார ஞாயிறும், ஆதிகுமணன் " ஞானபீடம்" என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். மலேசிய மக்களிடையே சின்னப்பொறியாக விழுந்து, காட்டுத்தீயாக பிரபலமடந்த பகுதி அது.

ஒரு தனிமனிதராக, தன்மீது பாசமுள்ள தம்பிகளின் துணையோடு தமிழ் சமூகத்திற்காக ஆதிகுமணன் சாதித்த விஷயங்கள் ஏராளம்.
ஒருமுறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் சரவணன் என்ற தமிழ் இளைஞர் பெருநடை ( long distance walking ) பிரிவில் மலேசியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்தார். அவர் தமிழர் என்ற காரணத்தாலோ என்னவோ, அரசில் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. பொங்கியெழுந்த ஆதகுமணன் தனது பத்திரிக்கையில் இது பற்றி எழுத, ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொடுத்தார்கள் நம் மக்கள். ஒரு தரமான காரை சரவணனுக்கு வாங்கித் தந்து, அதில் அவரை கோலாலம்பூர் வீதிகளில் பவனி வரச்செய்து அழகு பார்த்துதான் ஓய்ந்தார் ஆதிகுமணன்.

இன்னொரு சம்பவமும் நினைவில் இருக்கிறது.....

1997-ல் மலேசிய அரசாங்கம் சீனர், மலாய்காரர், இந்தியர் என பல இனத்தவரும் அடங்கிய குழு ஒன்றை எவரெஸ்டில் ஏற அனுப்பி வைத்தது. முதல் முறையாக நடக்கும் மலேசிய முயற்சி என்பதால், பத்திரிக்கைகள் அந்தக்குழுவின் ஒவ்வொரு அடியையும் விரிவாக எழுதி பரபரப்பூட்டின. மக்களும் ஆர்வமாக அந்தக்குழு எவரெஸ்டில் ஏறிவிடுமா என்று கவனித்து வந்தார்கள். உயரம் கூடக்கூட ஒவ்வொருவராக கழண்டு கொள்ள, குழுவின் அடர்த்தி குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் எவரெஸ்டை எட்டி மலேசியக் கொடியை நட்டது 2 பேர். மோகன் தாஸ் மற்றும் மகேந்திரன். இரண்டு பேருமே தமிழர்கள். எவரெஸ்டை எட்டி சாதனை செய்தது தமிழர்கள் என்ற விஷயம் தெரிந்ததும், மொத்த ஆர்பாட்டமும் அடங்கிப் போய்விட, அவர்களுக்கு விழா எடுத்து தங்கச்சங்கிலி போட்டு பாராட்டி அழகு பார்த்ததும் ஆதிகுமணன்தான்.

சமீபத்தில் இலங்கையின் கரையோரங்களை சுனாமி அரித்தபோது, சத்தமின்றி நீண்டது ஆதிகுமணனின் நேசக்கரம். எங்கெல்லாம், எப்போதெல்லாம் தமிழர்கள் துயர் அடைகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்காக துடித்தது ஆதிகுணனின் இதயம்.

ஒரு வருடத்திற்கு முன்பு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உலகப்பத்திரிக்கையாளர்களை சந்திக்க முடிவு செய்தபோது, மலேசிய நண்பன் சார்பில் சுகுமாரன் ( அக்கினி ) இலங்கை சென்றார். ( அவரை பிரபாகரன் தனித்து சந்திக்க வாய்ப்பளித்தது பற்றி சுகுமாரன் பின்னாளில் தன் கட்டுரையில் குறிப்பிட்டார் ).

மலேசியாவில் எந்த ஒரு தமிழ் நூல் வெளியீட்டு விழாவும் பெரும்பாலும் இரண்டு பேர் தலைமையில்தான் நடக்கும். ஒருவர் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரான டத்தோஸ்ரீ சாமிவேலு, இன்னொருவர் மக்களின் நேசத்திற்குரிய ஆதிகுமணன். இவர்கள் இருவருமே தலைமையேற்பதோடு நின்று விடாமல், கணிசமான தொகை தந்து தமிழ் நூல் அச்சிடும் செலவை ஈடுகட்டி தமிழைக்காக்கும் புரவலர்களாக இருந்தது மலேசிய இலக்கிய உலகம் அறிந்த ரகசியம்.

ஆதிகுமணனை மிக அணுகிப்பார்க்கிற வாய்ப்பு அவ்வப்போது எனக்கு வாய்த்ததுண்டு. ஒவ்வொருமுறையும் அவர் மீதான மரியாதையை அதிகரிக்க வைத்த சந்திப்புகள் அவை. எழுத்தின் மூலம் எனக்கும் அவருக்கும் பரிட்சயம் இருந்தாலும், சை.பீர்முகம்மதின் "பெண்குதிரை" மற்றும் " கைதிகள் கண்ட கண்டம்" நூல் வெளியீட்டு விழாவில்,ஆதிகுமணன் தலைமை தாங்கிய விழாவில், எனக்கும் இடம் கிடைத்தபோதுதான் - அது அணுக்கமானது. காப்பாரில் நான் முன்னின்று நடத்திய மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதந்திர சிறுகதைத் திறனாய்வில் அவரை மறுமுறை சந்தித்தேன். அதன்பின் எந்த நிகழ்வில் சந்தித்தாலும் என்னை பெயர் சொல்லி அழைத்து அன்பு பாராட்டினார் ஆதிகுமணன்.

1997ன் இறுதியில் கோலாலம்பூர் செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில் "எங்கே நீ வெண்ணிலவே" என்ற எனது சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஆதிதான் தலைமை தங்கினார். அன்று அவர் ஆற்றிய உரை இன்னும் என் ஞாபகத்தளங்களில் ஊடாடிக்கொண்டே இருக்கிறது.

பின்பு 1998ல் நான் பணி நிமித்தம் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்து இங்கு நிரந்தரவாசியாகி விட்டாலும், மலேசிய இலக்கிய உலகினுடனான உறவு நீடித்தே வந்தது. ஒருமுறை, ஒரு மலேசிய மாதஇதழுக்காக அவரை பேட்டி கண்டேன். பலருக்கும் கிடத்திராத வாய்ப்பு அது. அரசியல், இலக்கியம், தனி வாழ்க்கை என பரந்து விரிந்த அப்பேட்டியில் எதையும் ஒழித்துப் பேசவில்லை அவர். அந்தப்பேட்டி நெஞ்சுரமிக்க, நேர்மைத்திறன் மிக்க ஒரு பத்திரிக்கையாளரை எனக்கு அறிமுகப்படுத்தியது. ஆதிகுமணன் என்ற மனிதர்மீது எனக்கிருந்த மரியாதை இன்னும் அதிகமானது.

சிங்கப்பூரில் தங்கிவிட்டதால் சமீபகாலங்களில், ஆதிகுமணனனோடான தொடர்புகள் குறைந்து விட்டாலும், பத்திரிக்கைகள் வாயிலாக அவரைப்பற்றி தொடர்ந்து வாசித்தே வந்தேன்.சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது, ஆதிகுமணன் சீரியஸாக நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து மீண்டு விட்டதாகக் கூறினார். அப்பாடா என்ற உணர்வு ஏற்பட்டது. ஆதிகுமணன் இல்லாத மலேசியாவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்னால். ஆனால், விதியின் கரவலிமையை வென்றது யார்?

இன்று ஆதிகுமணன் என்ற சாதனை சரித்திரம் தன் பக்கங்களை நிறைவு செய்து கொண்டது. " விழுந்தாலும் விதையாக விழ வேண்டுமென்று " ஆதிகுமணன் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த அற்புத மனிதர் தான் விழுவதற்கு முன்பே ஏராளமாக விதைத்துவிட்டார் என்பதே உண்மை. அந்த விதைகள் தமிழ் இலக்கிய மலராக, செடியாக, கனி கொடுக்கும் மரங்களாக மலேசியாவெங்கும் பரவிக் கிடப்பதை வரலாறு பதிவு செய்து கொண்டிருகிறது....இனியும் பதிவு செய்யும். அந்தப்பதிவின் பக்கமெல்லாம் ஆதிகுமணன் பெயர் இருக்கும்!